திருவாடானை --- 0988. ஊனாரும் உட்பிணியும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஊனாரும் உட்பிணியும் (திருவாடானை)

 

முருகா! 

பிறவி அதிருவருளைத் தந்து அருள்வாய்.

 

 

தானான தத்ததன தானான தத்ததன

     தானான தத்ததன ...... தனதான

 

 

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட

     லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்

 

ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி

     ஓயா முழக்கமெழ ...... அழுதோய

 

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது

     நாறா தெடுத்தடவி ...... யெரியூடே

 

நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி

     நாடா தெனக்குனருள் ...... புரிவாயே

 

மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு

     மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே

 

வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்

     வானோரு மட்டகுல ...... கிரியாவும்

 

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு

     மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்

 

ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்

     ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 

ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்திது

     நாறாதுடுத்து அடவி ...... எரிஊடே,

 

நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாதுனக்கு உன்அருள் ...... புரிவாயே.

 

மாநாக துத்திமுடி மீதே நிருத்தம் இடு

     மாயோனும்,மட்டு ஒழுகு ...... மலர்மீதே

 

வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும்,எண்திசையும்

     வானோரும்,அட்டகுல ...... கிரியாவும்,

 

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும்

     ஆலாலம் உற்ற அமுது ...... அயில்வோன் முன்

 

ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை உருள்

     ஆடானை நித்தம் உறை ...... பெருமாளே.


பதவுரை

 

            மா நாக துத்திமுடி மீதே நிருத்தம் இடு மாயோனும்--- பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் ஆகிய திருமாலும்

 

            மட்டு ஒழுகு மலர்மீதே வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும்--- தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமதேவனும்

 

            எட்டிசையும் வானோரும் அட்டகுல கிரி யாவும்--- அட்டதிக்குப் பாலகர்களும்தேவர்களும்சிறந்த எட்டுக் குலமலைகளும்,

 

            ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க--- கடல் கடைந்தபோது அங்கு நீங்காது இருந்த அரக்கர்களுடன்வானவர்கள் யாவரும் பிழைக்கும்படியாக

 

            வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன்--- பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான்,

 

           முன்--- முன்னொரு காலத்தில்,

 

            ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்--- ஆசாரத்துடனும்பக்தியுடனும் கேட்கஅவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருள்புரிந்து

 

            ஆடானை நித்தம் உறை பெருமாளே--- திருவாடானை என்ற திருத்தலத்தில் எப்போதும் வீற்றிருப்பவனுமான பெருமையில் மிக்கவரே!

 

            ஊன் --- புலாலும்,

 

            ஆரும் உட்பிணியும் மானா கவித்த உடல்--- அதன்  உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் 

 

            ஊதாரி பட்டு ஒழிய உயிர்போனால்--- வீணாக அழியும்படி உயிர் போய்விட்டால்

 

            ஊரார் குவித்து வர ஆஆ எனக் குறுகி--- ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கி

 

            ஓயா முழக்கம் எழ அழுது ஓய--- ஓழிவில்லாத கூச்சலிட்டு அழுதுஓயவும்,

 

            நானா விதச் சிவிகை மேலே கிடத்தி--- பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்தி,

 

            அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே --- அப்பிணம் தீநாற்றம் வீசும் முன்பு,எடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் நெருப்பின் இடையிலே

 

            நாணாமல் வைத்து விட நீறு ஆம் என--- கூசாமல் வைத்து விட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள 

 

            இப்பிறவி நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே--- இந்தப் பிறவி அடியேனுக்குக் கிட்டாதபடிக்கு உமது திருவருளைத் தந்தருள்வாயாக. 

 

பொழிப்புரை

 

 

     பெரிய நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம் செய்த மாயவன் ஆகிய திருமாலும்,  தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமதேவனும்,  அட்டதிக்குப் பாலகர்களும்தேவர்களும்சிறந்த எட்டுக் குலமலைகளும்கடல் கடைந்தபோது அங்கு நீங்காது இருந்த அரக்கர்களுடன்வானவர்கள் யாவரும் பிழைக்கும்படியாக,  பாற்கடலில் எழுந்த ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான்,முன்னொரு காலத்தில், ஆசாரத்துடனும்பக்தியுடனும் கேட்கஅவருக்கு சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து அருள்புரிந்தவரும்,  திருவாடானை என்னும் திருத்தலத்தில் எப்போதும் வீற்றிருப்பவருமான பெருமையில் மிக்கவரே!

 

            புலாலும்,அதன்  உள்ளே நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல் வீணாக அழியும்படி உயிர் போய்விட்டால்ஊரார்கள் கூட்டமாக வந்து ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில் நெருங்கிஓழிவில்லாது கூச்சலிட்டு அழுதுஓயவும்பலவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் மேலே பிணத்தைக் கிடத்திஅப்பிணம் தீநாற்றம் வீசும் முன்புஎடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் நெருப்பின் இடையிலேகூசாமல் வைத்து விட அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள இந்தப் பிறவி அடியேனுக்குக் கிட்டாதபடிக்கு உமது திருவருளைத் தந்தருள்வாயாக. 

 

விரிவுரை

 

ஊன் ஆரும் உட்பிணியும் மானா கவித்த உடல் --- 

 

ஊன் --- புலால்மாமிசம்விடக்கு.

 

            இந்த உடம்பானதுஇரதம்உதிரம்எலும்புதோல்இறைச்சிமூளைசுக்கிலமாகிய விந்து என்னும் ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. மாயையின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடம்பு தோன்றிநின்று அழியும் தன்மை உடையது. இது நெடுநாளைக்கு நிற்பது என்றும்மிகவும் சிறந்தது என்றும்புனிதமானது என்றும்இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைதல் கூடாது.

 

            இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல.தோல் எலும்பு உதிரம் முதலியவைகளால் ஆனது என அறிவுறுத்தினார் அடிகளார்.

 

     "ஊன் உடுத்திஒன்பது வாசல் வைத்துஒள்எலும்பு தூணா உரோமம் மேய்ந்துதாம் எடுத்த கூரை" என்றார் அப்பர்.

 

என்பினால் கழிநிரைத்து இறைச்சிமண் 

     சுவர் எறிந்த இதுநம் இல்லம்,

புன்புலால் நாறுதோல் போர்த்துபொல்- 

     லாமையால் முகடு கொண்டு,

முன்பு எலாம் ஒன்பது வாய்தலார் 

     குரம்பையின் மூழ்கி டாதே

அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம் 

     மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.--- திருஞானசம்பந்தர்.

 

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடி

ஒழுக்குஅறா ஒன்ப துவாய் ஒற்றுமை ஒன்றும்இல்லை

சழக்குஉடை இதன்உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய

அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.   --- அப்பர்.

                                        

கால்கொடுத்து இருகை ஏற்றிக்

     கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து 

தோல்படுத்து உதிர நீரால்

     சுவர்.எடுத்து இரண்டு வாசல் 

ஏல்வுடைத்தா அமைத்து அங்கு 

     ஏழு சாலேகம் பண்ணி 

மால்கொடுத்து ஆவி வைத்தார்

     மாமறைக் காடனாரே.                 --- அப்பர்

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"   --- திருப்புகழ்.

                                                                                                            

தோல்,எலும்பு,சீ,நரம்பு,பீளை,துன்று கோழை,பொங்கு

     சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து,நான் மெலிந்து

     சோரும்ந்த நோய் அகன்று,...... துயர்ஆற--- திருப்புகழ்.

 

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற

     தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு

     வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்...--- திருப்புகழ்.

 

தோலால் சுவர்வைத்து,நால்ஆறு காலில் சுமத்திஇரு

காலால் எழுப்பி,வளைமுதுகு ஓட்டிகைந் நாற்றிநரம்-

பால் ஆர்க்கை இட்டு,தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்,

வேலால் கிரி தொளைத்தோன் இரு தாள்அன்றி வேறில்லையே. --- கந்தர் அலங்காரம்.

                                    

ஊதாரி பட்டு ஒழிய உயிர்போனால் --- 

 

ஊதாரி --- பயனில்லாது கழிவதுவீணாவது.

 

உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண்.       --- ஔவையார்.

 

     ஒருவன் பெற்றுள்ள செல்வத்தைதேடிய செல்வத்தை நல்ல வழியில் பயன்படுத்திஉயிருக்கு ஆக்கம் தருகின்ற நன்மைகளைத் தேடிக் கொள்ளாமல்தவறானவேண்டாத வழிகளில் செலவழித்தால்அதை ஊதாரித்தனம் என்பர் உலகோர். பயனற்ற வழியில் செலவழிப்பது ஊதாரித்தனம் எனப்படும்.

 

     இந்த உடம்பைப் பெற்றதன் பயனைத் தேடிக்கொள்ளாமல்தவறான வழிகளில் சென்றுஉடம்பினை வீணாக அழித்துக் கொள்ளுதல் கூடாது. நிலையான பொருளாகிய உயிரைநிலையில்லாத உடம்பில் இறைவன் புகுத்தியதுநிலையில்லாத பிறவித் துன்பத்தில் இருந்து நீங்கிநிலையான பேரின்பத்தைப் பெறுவதற்கே ஆகும். ஊதாரித்தனமான வழிகளில் உடம்பைச் செலுத்துதல் கூடாது. பூக்களைக் கையில் கொண்டு இறைவன் திருவடியைப் போற்றவேண்டும். நாக்கைக் கொண்டு இறைவன் திருநாமத்தை உச்சரிக்கவேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் ஊன் உடம்பை வளர்ப்பதற்காக உணவைத் தேடி உண்டுஇறுதியில் காக்கைக்கு இரையாகிப் போவார்கள்.

 

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.      ---- அப்பர்.

 

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,

    தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,

ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்,

    உண்பதன்முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்,

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்,

    அளி அற்றார் பிறந்தவாறு ஏதோஎன்னில்,

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்

    பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.      --- அப்பர்.

 

ஏட்டிலே வரை பாட்டிலே,சில

        நீட்டிலே இனிது...... என்றுதேடி,                            

ஈட்டு மாபொருள் பாத்து உ(ண்)ணாதுஇகல்

        ஏற்றமான கு.....  லங்கள்பேசிக்

காட்டிலே,இயல் நாட்டிலேபயில்

        வீட்டிலேஉல......கங்கள் ஏசக்

காக்கை நாய்நரி பேய்க் குழாம் உ(ண்)ண

        யாக்கை மாய்வது......  ஒழிந்திடாதோ?     --- திருப்புகழ்.

 

ஏட்டின் விதிப்படியே கொடு, மாபுர

     வீட்டில் அடைத்து, இசைவே கசை மூணதில்

     ஏற்றி அடித்திடவே, கடல் ஓடம் ...... அதுஎன ஏகி,

 

ஏற்கும் எனப் பொருளாசை பெணாசை, கொ-

     ளா, து எனத் திரியா, பரியா தவம்

     ஏற்றி இருப்பிடமே அறியாமலும் ...... உடல்பேணி,

 

பூட்டு சரப்பளியே, மதனாம் என

     ஆட்டி, அசைத்து இயலே திரி நாளையில்,

     பூத்த மலக் குகையோ பொதி சோறுஎன ......கழு, காகம்

 

போற்றி நமக்கு இரையாம் எனவே கொள

     நாட்டி, லொடுக்கு எனவே விழு போதினில்,

     பூட்டு பணிப் பத மா மயிலா! அருள் ...... புரிவாயே.   --- திருப்புகழ்.

                                         

வாட்டி எனைச் சூழ்ந்த வினை,

     ஆசைய முஆசைஅனல்

     மூட்டி உலைக் காய்ந்த 

     மழுவாம் என விகாசமொடு

     மாட்டி எனைப் பாய்ந்து

     கடவோடுடமொடு ஆட விடு ......விஞ்சையாலே

 

வாய்த்த மலர்ச் சாந்து புழுகு

     ஆன பனி நீர்களொடு

     காற்று வரத் தாங்குவன,

     மார்பில் அணி ஆரமொடு

     வாய்க்கும் எனப் பூண்டு 

     அழகதாக பவிசோடு மகிழ் ...... வன்பு கூரத்

 

தீட்டு விழிக் காந்தி

     மடவார்களுடன் ஆடிவலை

     பூட்டிவிடப் போந்து

     பிணியோடு வலி வாதம் என

     சேர்த்துவிடப் பேர்ந்துவினை 

     மூடி,அடியேனும் உனது ...... அன்பு இலாமல்,

 

தேட்டம் உறத் தேர்ந்தும் 

     அமிர்தாம் எனவெ ஏகிநமன்

     ஓட்டிவிடக் காய்ந்துவரி 

     வேதன் அடையாளம் அருள்

     சீட்டுவரக் காண்டுநலி 

     காலன் அணுகாநின் அருள்...... அன்பு தாராய். --- திருப்புகழ்.

 

ஊரார் குவித்து வர ஆஆ எனக் குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய--- 

 

உடம்பை விட்டு உயிர் பிரிந்ததுநேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் செய்தி அறிந்துஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடிவந்துவாய்க்கு வந்த்தை எல்லாம் பேசி முழக்கம் இட்டும்அழுதும்ஓய்ந்து போவார்கள்.

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி--- 

 

பலவிதமாகப் பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்ட பாடையின் மீது பிணத்தைக் கிடத்துவார்கள்.

 

அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே,நாணாமல் வைத்து விட நீறு ஆம் என --- 

 

பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும் இந்த உடலைத் தான் பிரியமுடன் வளர்க்கின்றோம். இறைவன் திருவடியில் பிரியம் வைக்கவில்லை. பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர்பாடையில் கிடத்திசுடலைக்குக் கொண்டு சென்று,தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது,மாய உடம்பு இது" என்றார் அடிகளார்.

 

இப்பிறவி நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே---

 

பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம்அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்துஉண்மைப் பொருளை உணராமல்உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும்அதை உணரும் பக்குவம் இன்மையால்தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

 

உணர்த்தும் உனை உணராமல்,உணர்ந்தவையே நாடி

இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.

                                         --- தாயுமானார்.

     கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்துபிறவி பொய் எனவும்வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருகபிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும்.

 

     ஆராய்ந்து பார்த்துநாட விரும்பாததான  இந்தப் பிறவித் தொழிலானது முடியாதோ என்று எண்ணிஇறைவன்பால்  முறையிட்டு ஓலமிட்டு அலறும் ஆன்மாவின் அலறலை இறைவன் திருச்செவி சாத்தி அருளுவான். பிறவி எப்போது அறும் என்றால்அனுபவத்துக்கு எடுத்து வந்த வினையின் போகம் முடிந்த பிறகே. அதுவரையில் பிறவி அறவேண்டும் என்று ஆன்மா அலறுவதும் அதன் வினையின் பயனே ஆகும்.

 

மா நாக துத்திமுடி மீதே நிருத்தம் இடு மாயோனும்--- 

 

மாநாகம் --- பெரிய பாம்பு.

 

துத்தி முடி --- பாம்பின் படப்பொறி.

 

     யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. பகவான் கண்ணன் அங்கு சென்று மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்துபாம்பினுடன் போர் புரிந்து வென்று,அப்பாம்பின் படத்தின் மீது திருவடிவைத்து நடனம் புரிந்தருளினார்.

 

     காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்கள் என்னும் ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்கனை அடக்கி அறிவு என்ற கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.

 

மட்டு ஒழுகு மலர்மீதே வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும்--- 

 

மட்டு ஒழுகு மலர் --- தேன் ஒழுகும் தாமரை மலர்.

 

வேதா --- பிரமதேவன்.

 

எட்டிசையும் வானோரும் அட்டகுல கிரி யாவும்--- 

 

எட்டிசை --- எண் திசை.

 

அட்ட குல கிரி ---எட்டுக் கொலமலைகள்.

 

 

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க,வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன்--- 

 

ஆனா அரக்கர் --- நீங்காத அரக்கர்கள்.

 

அமுதம் வேண்டி தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போதுஅரக்கர்களும் ஒரு புறம் இருந்து கடைந்தனர். அருதம் வேண்டும் என்னும் ஆசையால்அங்கு இருந்த அரக்கர்களோடுவானவர்களும் பிழைக்க வேண்டி,பெருங்கருணை கொண்டு,சிவபரம்பொருள் பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டு அருளினார்.

 

முன்ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்--- 

 

     அத்தகைய சிவபரம்பொருளுக்குமுன்னொரு காலத்தில்குமாரக் கடவுள்மெய்ப்பொருளை உபதேசித்து அருளினார்.

 

     குருமுகமாக ஒன்றை அறிந்து கொள்ள முற்படும்போதுஆசாரத்துடனும்உண்மையான பத்தி உணர்வுடனும் இருந்து கேட்டல் வேண்டும். அவ்வாறு கேட்கும்போதுசிறியவர் பெரியவர் என்ற வேறுபாடு எல்லாம் இருக்கக் கூடாது. 

 

     சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

 

     திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வணங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து,பிரணவப் பொருளை வினாவிஅதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

 

     பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுபுன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

 

     "அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல்உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும்அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய்எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையதுஅறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

 

     எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறுஅங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

 

     சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்னகுன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து,முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

 

மைந்த! நீ அதன்பொருள் வல்லையேல்ரைஎன,

முந்தும் எப் பொருள்களும் முறைஅன்றி அருள்செயா

 என்தை! அப் பொருள் பொழுது இடம் அறிந்துயல்பு உளித்

 தந்திடத் தக்கது அன்றே எனச் சாற்றினான்.

 

முற்று ஒருங்கு உணரும் ஆதிமுதல்வகேள் உலகம் எல்லாம்                          

பெற்றிடும் அவட்கு நீ முன் பிறர் உணராத வாற்றால்

சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாரும் கேட்ப                                     

இற்றென இயம்பல் ஆமோ மறையினால் இசைப்பது அல்லால்.         --- தணிகைப் புராணம்.                             

 

     கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனைஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறதுநீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டுபிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்றுதம் புரிசடைத் தூங்கவேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

 

     கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர் வேலண்ணல் தோன்றலும்ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டுசீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.

 

என்றலும் நகைத்து,மைந்த! 

     எமக்கு அருள் மறையின் என்னாத்

தன் திருச் செவியை நல்கச் 

     சண்முகன் குடிலை என்னும்

ஒன்று ஒரு பதத்தின் உண்மை

      உரைத்தனன்,உரைத்தல் கேளா,                                     

நன்று அருள் புரிந்தான் என்ப 

     ஞான நாயகனாம் அண்ணல்.   --- கந்தபுராணம்.                                     

 

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.   --- தணிகைப் புராணம்.

                                                                                              

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

                                                                                    

 “நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 

 

தமிழ்விரகஉயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”  --- (கொடியனைய) திருப்புகழ்.

                                                                                   

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

சிவனார் மனம் குளிஉபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...         --- திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாததுஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.                                                                  

 

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும்தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

 

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.   ---  தணிகைப் புராணம்.

                                   

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                        

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                         

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.

                                     

ஆடானை நித்தம் உறை பெருமாளே--- 

 

      திருவாடானைபாண்டி நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 45கி.மீ. தொலைவிலும்சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் வழியாக சுமார் 50கி.மீ. தொலைவிலும் திருவாடானை உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடிசிவகங்கை மற்றும் தேவகோட்டையில் இருந்து இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்திலிருந்தும் இங்கு வர சாலை வசதி உள்ளது.

 

இறைவர்: ஆதிரத்தினேசுவரர்ஆடானை நாதர்,

இறைவியார்  : அம்பாயிரவல்லி.

தல மரம்          : வில்வம்.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

     இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும்தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானைத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும்சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும்வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

 

      வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர்வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆகதவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்கசூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.

 

      பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீலநிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

 

     முருகப்பெருமான ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. 

 

கருத்துரை

 

முருகா! பிறவி அதிருவருளைத் தந்து அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...