பயனில்லாத சொற்களைப் பலர் முன்னிலையில் பேசுதல் கூடாது

 

பயனில்லாத சொற்களைப் பேசுதல் கூடாது

-----

 

             திருக்குறளில் "பயனில சொல்லாமை" என்னும் ஓர் அதிகாரம்.

 

            அறப்பொருள்செல்வப்பொருள்,  இன்பப்பொருள் ஆகிய மூன்று பொருள்களுள் ஒன்றின் பயனையும்தமக்கும் பிறர்க்கும் உதவாத சொற்களைச் சொல்லாது இருத்தலை இந்த அதிகாரம் குறிக்கும். 

 

             வாக்கில் உண்டாகும் பாவங்கள் நான்கு என்பர். அவைபொய் சொல்லுதல்கோள் சொல்லுதல்கடும்சொல் சொல்லுதல்பயனில்லாத சொல்லைச் சொல்லுதல் என்பன. அவற்றுள் முதலில் கூறிய பொய் என்பதுநான் எனது என்னும் பற்று அற்றுமனத் துறவினை அடைந்த துறவிகளுக்கே நிச்சயமாக நீக்கக் கூடுமே அல்லாதுஇல்லறத்தோரால் நீக்கமுடியாது. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி உண்டாவதாகிய பொய்யைத் துறவறத்தார்க்கு அல்லாதுஇல்லறத்தார்க்கு முற்றும் ஒழித்தல் கூடாது. எனவேஅப் பொய்யினை ஒழிந்த மற்ற மூன்று வாக்கின் குற்றங்களையே இல்லறத்தார் ஒழித்தல் கூடும் என்றும்அம் மூன்றின் உள்ளும்குறளை என்னும் கோள் சொல்லுதலை, "புறங்கூறாமை" என்னும் அதிகாரத்தாலும்கடுஞ்சொல்லை "இனியவை கூறல்" என்னும் அதிகாரத்தாலும் விலக்கி விட்டார் நாயனார். இவை இரண்டும் ஒழிந்து நின்ற "பயனில் சொல் சொல்லாமை" என்னும் வாக்கின் குற்றத்தை இந்த அதிகாரத்தால் விலக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

 

            கடும்சொல்பொய்புறங்கூறல்பயனில சொல் என்னும் இந்நான்கும் வாக்கின் வழி உண்டாகும் அசுப கருமங்கள். வாக்கினால் பெரும்பான்மையும் அசுப கருமத்தைச் செய்தால்பறவை அல்லது மிருகமாய்ப் பிறக்கின்றான்" என்பது மனுதரும சாத்திரத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம்.

 

"படிறும் பயனிலவும் பட்டி யுரையும்

வசையும் புறனும் உரையாரே யென்றும்

அசையாத உள்ளத் தவர்".

 

என்பது ஆசாரக் கோவை.

 

இதன் பதவுரை ---

 

     என்றும் --- எக்காலத்தும்அசையாத --- ஒழுக்கத்தினின்றும் தவறாதஉள்ளத்தவர் --- மனம் உடையோர்படிறும்--- வஞ்சனைச் சொல்லையும்பயனிலவும் --- பயனற்ற சொல்லையும்பட்டி உரையும் --- நாவடக்கம் இல்லாத சொல்லையும்வசையும் --- பழிச் சொல்லையும்புறனும் --- புறங்கூறுதலையும்உரையார் - சொல்லார்.

 

            இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறள், "பயன் இல்லாத வெற்றுச் சொற்களைஅறிவுடையார் பலரின் முன்னிலையில் ஒருவன் சொல்லுவது,தனது நண்பர்களிடத்தில் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்வதிலும் தீயது" என்கின்றது.

 

            சொல்லல் என்பதால்பயனில என்பது பயன் இலவாகிய சொற்கள் என்பதும்செய்தல் என்பதால்நயனில என்பதுவிருப்பம் இல்லாத செயல்கள் என்பதும் பெறப்பட்டது.

 

"பயன்இல பல்லார்முன் சொல்லல்நயன்இல

நட்டார்கண் செய்தலின் தீது".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

            பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர்

சொல்லார் ஒருவரையும் உள்ஊன்றப் - பல்லா

நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்

உரைத்தால் உரைபெறுதல் உண்டு.     ---பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

             பலவாகிய பசு க்கூட்டங்களைக் காத்து நின்ற நெடியோன் ஆகிய திருமாலே ஆனாலும்சபையில் ஒருவனை இகழ்ந்து பேசினால்தானும் அவனால் இகழ்ச்சியை அடைதல் உண்டு. ஆகையால் பலரும் கூடி இருக்கின்ற சபையிலேநன்னெறியில் ஒழுகி வரும் சான்றோர்கள்ஒருவரையும் அவர் மனம் வருந்தும்படினாய சொற்களைச் சொல்லி இகழமாட்டார்கள்.

 

            இனிய சொல் சொன்னால் இனிய சொல் கிடைக்கும். கடுஞ்சொல் சொன்னால் அதுவே திரும்பக் கிடைக்கும். 

 

புன்சொல்லும் நன்சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்

வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?

புன்சொல் இடர்ப்படுப்பது அல்லால்,ஒருவனை

இன்சொல் இடர்ப்படுப்ப தில்.           --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     புன்மையான சொற்கள் ஒருவனைத் துன்பத்தில் கொண்டு விடும். இனிமையான சொற்கள் ஒருபோதும் துன்பத்தில் கொண்டு விடுவதில்லை. புன்மையான சொற்களும்நன்மையான சொற்களும் தருகின்ற பயனை உணர்ந்தவர்கள்வன்மையான சொற்களைப் பேசுகின்றவர்களாக வாழமாட்டார்கள்.

 

     வன்சொல்லானது,தன்னை உடையானை இடர்ப்படுத்துதல் என்பதால்அவன் சொல், "புன்சொல்" எனப்பட்டது.

 

     "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்குவதுஎன்னும் திருக்குறளோடு இதனையும் வைத்து எண்ணலாம்.

 

"சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம்மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம்ஞெண்டிற்குத் பன்பார்ப்பு,

நாவிற்கு நன்று அல் வசை".     --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

            சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையே சாக்காட்டைக் கொடுக்கும். நீண்ட தமது கொம்புகள் துன்பம் கொடுக்கும். ஆதலால் விலங்கிற்கும் அவையே கூற்றம். வெற்றி இல்லாத கவரிமாவிற்குஅதன் மயிரே கூற்றம். நண்டிற்கு அதன் குஞ்சே கூற்றம்.  ஒருவனது நாவிற்குப் பழியைக் கொடுக்குமாதலால் பிறரை நன்று அல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம்.

 

            பயனில்லாத சொற்களைப் பலரும் மனம் நோகும்படிஅரசவையில் பேசிய துரியோதனனைப் பார்த்து"நீ செய்தவை எல்லாம் அறத்திற்கு மாறான செயல்களே. என்றாலும்சொல்லத் தகாத சொற்களை நீ சொல்லாமல் இருந்தாலே கற்பகாலம் உயிரோடு வாழ்வாய்" என்றுவிதுரர் அறிவுறுத்துகின்றார்.

 

"அறந்தரு மைந்தன் தன்னை

            அறன்அலாது இயற்றிநம்பி

திறந்தரு செல்வம் யாவும் 

            தீமையில் கவர்தல் உற்றாய்,

மறந்தரு வலியும் அன்று

            மணந்தரு வாழ்வும் அன்று

  திறந்தரு புகழும் அன்று,

            நெறிதரு மதியும் அன்றே".   ---  வில்லிபாரதம்சூதுபோர்ச் சருக்கம்.

                                                            

இதன் பதவுரை ---

 

            (விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுவான்);- 'நம்பி --- சிறந்தவனே! அறம் தரு மைந்தன் தன்னை --- அறக்கடவுள் பெற்ற புதல்வனாகிய தருமபுத்திரனைஅறன் அலாது இயற்றி --- தரும விரோதமாகிய சூதாடுதலைப் புரியும்படி செய்துதிறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய் --- (அவனது) பலவகைப்பட்ட செல்வங்களையும் தீய வழியால் கவரத் தொடங்கினாய்; (இவ்வாறு நீ தொடங்கியது)மறம் தரு வலியும் அன்று --- வீரத்தைத் தருகிற சாமர்த்தியமும் அல்ல(இது சுத்த வீரர்க்குச் சிறிதும் தகாது)மணம் தரு வாழ்வும் அன்று ---மங்களகரமான வாழ்க்கையும் அல்ல;திறம் தரு புகழும் அன்று --- பெருமையைத் தருகிற புகழும் அல்லநெறி தரு மதியும் அன்று --- தரும சாத்திரங்களில் கூறிய புத்தியும் அல்ல.

 

     'நீ மாயச் சூதாட்டத்தில் வென்றதையே மிகவும் பாராட்டுகிறாய்இது வீரத்திற்கும் புகழுக்கும் நீதிநெறிக்கும் முற்றும் மாறுபட்டதாய்உனது நாசத்திற்கே காரணமாயுள்ளதுஎன்று கூறி விதுரன் துரியோதனனுக்கு அவனது செயல் தகாதது என எடுத்துக் காட்டினன்.

 

"திருத்தக மொழிந்த எல்லாம்

            செய்தனை எனினும்செவ்வி

மருத்தகு தெரியல் மாலை

            மாசிலாமன்னர் முன்னர்

உருத்தகு கற்பினாளை உரை 

            அலாது உரைக்கும் மாற்றம்

கருத்தினில் நினையல் கண்டாய்,

            கடவுளர் கற்பம் வாழ்வாய்".   ---  வில்லிபாரதம்சூதுபோர்ச் சருக்கம்.

                                                            

இதன் பதவுரை ---

 

            (விதுரன் மேலும் துரியோதனனுக்கு அறிவுறுத்தியது) திரு தக --- (உனக்குச்) சிறப்பு உண்டாகும்படி,மொழிந்த எல்லாம் --- (நீ எனக்குக் கட்டளையாகக்) கூறியவற்றை எல்லாம்செய்தனை எனினும் --- செய்து முடித்தாயானாலும்செவ்வி மரு தகு தெரியல் மாலை --- அழகையுடைய நறுமணம் வீசுகிற விளங்குகின்ற மாலையை அணிந்தமாசு இலாமன்னர் --- குற்றமற்ற அரசர்கட்கு எதிரில்உருத் தகு கற்பினாளை --- அழகிய உருவத்தையும் சிறந்த பதிவிரதா தருமத்தையும் உடையவளான பாஞ்சாலியைக் குறித்துஉரை அலாது உரைக்கும் மாற்றம் --- சொல்லத்தகாத சொற்களைச் சொல்லுதலை மாத்திரம்கருத்தினில் நினையல் --- மனத்தில் எண்ணாது இருப்பாயாக; (அவ்வாறு இருப்பாயாயின்)கடவுளர் கற்பம் வாழ்வாய் --- தேவர்களது ஆயுள் அளவும் அழியாது நீடுழி காலம் நீ வாழ்ந்திருப்பாய்.

 

    தருமபுத்திரனது எல்லாப் பொருள்களையும் நீ கைப்பற்றினாலும்மகா பதிவிரதையாகிய திரௌபதியைக் குறித்து இழிசொற்கள் கூறுதலை மாத்திரம் தவிர்ந்திடு. இதனால்உனக்கு மிக்க நன்மை உண்டாகும் என்று விதுரன் துரியோதனனுக்கு அறிவு கூறினன்.

 

            உருத் தகு கற்பினாள் --- (கண்டவர்) அஞ்சத்தக்கமிக்க கற்பை உடையவளான பாஞ்சாலி. கற்பாவது --- கணவனைத் தெய்வமாக மதித்து அவனை வழிபட்டு நடக்குந் தன்மை: கன்னிகையாய் இருக்கும் போது தாய் தந்தைமுதலியோராலும்,திருமணம் ஆன பின்னர்க் கணவன் முதலியோராலும் கற்பிக்கப்படுவதால் இது கற்பு ஆயிற்று என்றும் கொள்ளலாம்.

 

     பயன் இல்லாத சொற்களைப் பலரும் கூடியுள்ள இடத்தில் பேசுவது என்பதுதம்மிடத்தில் நட்புக் கொண்டவரிடத்தில் நன்மை இல்லாத செயல்களைச் செய்வதிலும் தீமை தருவது ஆகும். 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...