அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வழக்குச் சொற்பயில் (ஒடுக்கத்துச் செறிவாய்)
முருகா!
விலைமாதர் மீது வைத்த ஆசையை ஒழிக்க அருள்வாய்.
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ......யொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்
அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ......கிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன்
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வழக்குச் சொல் பயில்வால் சளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்,
வளைத்துச் சித்தச சாத்திரக் களவு ...... அதனாலே,
மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள்,
சுகித்துத் தெட்டிகள், ஊர்த் துதிப்பரை
மருட்டி, குத்திர வார்த்தை செப்பிகள், ...... மதியாதே
கழுத்தைக் கட்டி அணாப்பி நட்பொடு,
சிரித்துப் பல்கறை காட்டி, கைப்பொருள்
கழற்றி, கல் புகர் மாற்று உரைப்பது ...... கரிசாணி
கணக்கிட்டுப் பொழுது ஏற்றி வைத்து, ஒரு
பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள்,
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ......ஒழியேனோ?
அழல் கணப் பறை மோட்டு அரக்கரை
நெருக்கி, பொட்டு எழ நூக்கி, அக்கணம்
அழித்திட்டு, குறவாட்டி பொன் தன ......கிரிதோய்வாய்!
அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன்,
அலைக்குள் கட்செவி மேல் படுக்கையில் ......உறைமாயன்,
உழைக்கண் பொன்கொடி, மாக் குலக்குயில்,
விருப்பு உற்றுப் புணர் தோள் க்ருபைக் கடல்!
உறிக்குள் கைத்தலம் நீட்டும் அச்சுதன் ...... மருகோனே!
உரைக்கச் செட்டியனாய்ப் பன்முத்தமிழ்
மதித்திட்டுச் செறி நால் கவிப்பணர்,
ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்துஉறை ...... பெருமாளே.
பதவுரை
அழல் கண் --- புறத்தில்நெருப்புப் போன்ற கண்களும்,
தப்பறை --- அகத்தில் பொய்யும், சூதும் கொண்டுள்ள,
மோட்டு அரக்கரை நெருக்கி --- மூர்க்கர்களாகிய அரக்கர்களை நசுக்கி,
பொட்டு எழ நூக்கி--- பொடி ஆகும்படி முறித்துத் தள்ளி,
அக்கணம் அழித்திட்டு --- போர்க்களத்தில் எதிர்ந்த அந்தக் கணத்திலேயே அழித்து,
குறவாட்டி பொன் தனகிரி தோய்வாய்--- குறமகள் வள்ளிநாயகியின் அழகிய,மலை போன்ற மார்பகங்களைத் தழுவுபவரே!
தமிழ் தேர்த்த வித்தகர் அகப்பட்டு --- தமிழில் தேர்ந்த அறிவு உடைய அறிஞர்களின் வசப்பட்டு,
சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன்--- அவர்கள் யாத்துப் பாடிய பாடல்களில் விருப்பம் கொண்டவரும்,
அலைக்குள் --- திருப் பாற்கடலில்,
கண்செவி மேல் படுக்கையில் உறை மாயன்--- ஆதிசேடன் என்னும் பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமால் (சிவமுனிவர் உருவில் வந்தபோது)
உழைக் கண் --- மானின் இடத்தேதோன்றிய
பொன்கொடி மாக்குலக் குயில் விருப்பு உற்று புணர் தோள் க்ருபைக் கடல்---அழகிய கொடி போன்றவளும்,சிறந்த குயிலைப் போன்று இனிய குரல் உள்ளவளும் ஆகிய வள்ளிநாயகியின் மீது காதல் கொண்டு,அவளை அணைந்த திருத்தோளை உடைய கருணைக் கடலே!
உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே--- உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடி உண்ட) கண்ணனின் திருமருகரே!
உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர்--- உண்மைப் பொருளைத் தெரிவிக்க உருத்திர சன்மன் என்னும் செட்டி மகனாக, பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, நிறைந்த நால்வகைக் கவிகளிலும் வல்ல கவிவாணர்களுடன் கூடி மகிழ்ந்து,
ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை பெருமாளே --- ஒடுக்கத்து செறிவாய்என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
வழக்குச் சொல் பயில்வால் --- வழக்காடுதல் போலச் சொற்களைப் பிரயோகப்படுத்தப் பயின்றுள்ளதால்,
சளப்படு --- வஞ்சனையாக,
மருத்துப் பச்சிலை தீற்றும் மட்டைகள்--- மருந்துகளையும் பச்சிலைகளையும் சுருட்டி, சுண்ணம் முதலியவற்றால் அடைத்து,ஊட்டுகின்ற பயலினிகள்,
வளைத்து --- வருகின்ற ஆடவர்களைத் தம்மிடத்தே வளைத்து வைத்து,
சித்தச சாத்திரக் களவு அதனாலே --- மன்மத சாத்திரத்தில் கூறியுள்ளபடி வஞ்சகமாகப் பேசி,
மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள்--- தம்மிடம் வந்தவர்களின் கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்குவதில் வல்லவர்கள்,
சுகித்துத் தெட்டிகள் --- சுகத்தைக் கொடுத்து வஞ்சிப்பவர்கள்,
ஊரத் துதிப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்--- ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த சொற்களைப் பேசுபவர்கள்.
மதியாதே கழுத்தைக் கட்டி --- மதிப்பு வைக்காமலே தமது கழுத்தைக் கட்டி,
அணாப்பி --- ஏமாற்றி,
பல்கறை காட்டி நட்பொடு சிரித்து --- நட்பு கொண்டவர் போல, வெற்றிலைக் கறைகொண்ட பல்லைக் காட்டிச் சிரித்து,
கைப்பொருள் கழற்றி--- கையிலே உள்ள பொருளைப் பறித்து,
கல் புகர்,மாற்று உரைப்பு அது கரிசு ஆணி கணக்கிட்டு --- இரத்தினக் கல்லானால் அதன் ஒளியையும், தங்கமானால், அதன் மாற்றினை உரையாணியால் உரைத்துப் பார்த்துக் கணக்கிட்டுப் பார்த்து,
பொழுது ஏற்றி வைத்து --- பொழுது ஏறுமாறு காலம் தாழ்த்தி,
ஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள்--- ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்துத் தம்மிடத்தில் வந்து பொருள் தந்தவரோடு) பிணக்கம் கொண்டு சண்டை இடுகின்ற விலைமாதர்களின்,
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ--- புணர்ச்சிக்கு உரிய காரணங்களிலேயே உழலுகின்ற எனது பாழான புத்தியை நான் ஒழிக்கமாட்டேனா?
பொழிப்புரை
புறத்தில்நெருப்புப் போன்ற கண்களும், அகத்தில் பொய்யும், சூதும் கொண்டுள்ள மூர்க்கர்களாகிய அரக்கர்களை நசுக்கிப் பொடி ஆகும்படி முறித்துத் தள்ளி, போர்க்களத்தில் எதிர்ந்த அந்தக் கணத்திலேயே அழித்து,குறமகள் வள்ளிநாயகியின் அழகிய,மலை போன்ற மார்பகங்களைத் தழுவுபவரே!
தமிழில் தேர்ந்த அறிவு உடைய அறிஞர்களின் வசப்பட்டு, அவர்கள் யாத்துப் பாடிய பாடல்களில் விருப்பம் கொண்டவரும், திருப் பாற்கடலில், ஆதிசேடன் என்னும் பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமால் சிவமுனிவர் உருவில் வந்தபோது, மானின் இடத்தேதோன்றியஅழகிய கொடி போன்றவளும்,சிறந்த குயிலைப் போன்று இனிய குரல் உள்ளவளும் ஆகிய வள்ளிநாயகியின் மீது காதல் கொண்டு,அவளை அணைந்த திருத்தோளை உடைய கருணைக் கடலே!
உறிக்குள்ளே கையை நீட்டிய வெண்ணெய் திருடி உண்ட கண்ணனின் திருமருகரே!
உண்மைப் பொருளைத் தெரிவிக்க உருத்திர சன்மன் என்னும் செட்டி மகனாக, பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, நிறைந்த நால்வகைக் கவிகளிலும் வல்ல கவிவாணர்களுடன் கூடி மகிழ்ந்து,ஒடுக்கத்துச் செறிவாய்என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
வழக்காடுதல் போலச் சொற்களைப் பிரயோகப்படுத்தப் பயின்றுள்ளதால்,வஞ்சனையாக மருந்துகளையும் பச்சிலைகளையும் சுருட்டி, சுண்ணம் முதலியவற்றால் அடைத்து,ஊட்டுகின்ற பயலினிகள்,வருகின்ற ஆடவர்களைத் தம்மிடத்தே வளைத்து வைத்து, மன்மத சாத்திரத்தில் கூறியுள்ளபடி வஞ்சகமாகப் பேசி, வந்தவர்களின் கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்குவதில் வல்லவர்கள். சுகத்தைக் கொடுத்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த சொற்களைப் பேசுபவர்கள்.மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி அணைத்து,ஏமாற்றி, நட்பு கொண்டவர் போல, வெற்றிலைக் கறைகொண்ட பல்லைக் காட்டிச் சிரித்து,கையிலே உள்ள பொருளைப் பறித்து, இரத்தினக் கல்லானால் அதன் ஒளியையும், தங்கமானால், அதன் மாற்றினை உரையாணியால் உரைத்துப் பார்த்துக் கணக்கிட்டுப் பார்த்து, பொழுது ஏறுமாறு காலம் தாழ்த்தி, ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்துத் தம்மிடத்தில் வந்து பொருள் தந்தவரோடு) பிணக்கம் கொண்டு சண்டை இடுகின்ற விலைமாதர்களின், புணர்ச்சிக்கு உரிய காரணங்களிலேயே உழலுகின்ற எனது பாழான புத்தியை நான் ஒழிக்கமாட்டேனா?
விரிவுரை
வழக்குச் சொல் பயில்வால் ---
வழக்காடுதல், ஊடுதல்போலச் சாகசங்களைப் புரிந்து, விதவிதமாகப் பேசி,வந்தவர்களை மயக்கிப் பொருள் பறிப்பவர்கள் விலைமாதர்கள்.
சளப்படு ---
சளப்படுதல் --- வஞ்சனையாகப் பேசுதல்,நடத்தல்.
மருத்துப் பச்சிலை தீற்றும் மட்டைகள்---
தீற்றுதல் -- உண்ணத் தருதல், உண்பித்தல்.
மட்டைகள் --- மூடர்கள், பயனற்றவர்கள்.
மருந்துகளையும் பச்சிலைகளையும் சுருட்டி, சுண்ணம் முதலியவற்றால் அடைத்து,வந்தவர்க்கு ஊட்டி, அவர் தம்மிடத்திலேயே மயங்கி இருக்குமாறு செய்பவர்கள்.
சித்தச சாத்திரக் களவு அதனாலே மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள் ---
சித்தசன் --- மனத்தில் பிறப்பவன், மன்மதன்.
மன்மத சாத்திரத்தில் கூறியுள்ளபடி, மாகச் செயல்களை வஞ்சகமாகப் புரிந்து, தம்மிடத்து வந்தவர்களின் கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்குவதில் வல்லவர்கள்,
சுகித்துத் தெட்டிகள் ---
தெட்டித்தல் --- வஞ்சித்தல்.
சுகத்தைக் கொடுத்து வஞ்சிப்பவர்கள்,
குத்திர வார்த்தை செப்பிகள்---
குத்திரம் --- வஞ்சகம், இழிவு, ஏளனம்,
அணாப்பி ---
அணாப்புதல் --- ஏமாற்றுதல்.
கைப்பொருள் கழற்றி, கல் புகர்,மாற்று உரைப்பு அது கரிசு ஆணி கணக்கிட்டு---
கல் --- இரத்தினக் கல். புகர் --- ஒளி, நிறம்.
கையிலே உள்ள பொருளை வலியப் பறித்து, அணிகலன்களில் உள்ளவை இரத்தினக் கற்களாயின், அவற்றின் நிறத்தையும் ஒளியையும், சோதித்துப் பார்த்து,தங்கத்தை ஆணியால் உரைத்து மாற்றுப் பார்த்துக் கணக்கிடுவார்கள்.
பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள் ---
சிலுகு --- சண்டை.
பட்டிகள் --- விலைமாதர்கள்.
பொருள் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளதால், வஞ்சகமான செயல்களை ஒவ்வொன்றாக மேற்கொண்டு பொருளைப் பறித்த பின்னர்,பொழுது ஏறுமாறு காலம் தாழ்த்தி, ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்துத் தம்மிடத்தில் வந்து பொருள் தந்தவரோடு) பிணக்கம் கொண்டு சண்டை இடுகின்ற விலைமாதர்கள்.
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ---
கலை --- புணர்ச்சிக் கலையில் விருப்பம்.
தப்பறை ---
பொய், சூது, கெட்ட செயல்.
மோட்டு அரக்கரை நெருக்கி ---
மோட்டன் --- மூர்க்கன்.
தமிழ் தேர்த்த வித்தகர் அகப்பட்டு சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன் ---
ஆத்தம் --- விருப்பம்.
தமிழ்ப் பாடல்களில் விருப்பம் மிக்கவர் திருமால். திருமால் மட்டும் அல்ல. சிவபெருமானும், திருமுருகப் பெருமானும் தமிழில் விருப்பம் உள்ளவர்கள்.
"வண்தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" என்று அருணகிரியார் திருமாலைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.
நாராயணமூர்த்தி தமிழ் மொழியின் இனிமையில் மிகவும் அன்புடையவரான படியால் தெளிவுடைய செந்தமிழைப் பயில்வாரது பின்னே,அவர் பாடும் தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிகின்றனர்.
இப்பொழுதும் திருமால் ஆலயங்களில் வடமொழி வேதபாராயணம் அவருக்குப் பின்னே தொடர்ந்து வர,அவருக்கு முன் தமிழ் மொழியிலுள்ள நாலாயிரப் பிரபந்த பாராயணம் போக,அதனைத் தொடர்ந்து நாராயணர் செல்லுகிறார்.
இது தமிழின் பெருமையைக் காட்டும். உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலைசிறந்தது தமிழ் மொழியே ஆம். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆம். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும்,இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை நற்புணையாக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.
தமிழ் பாடுவோர்பால் திருமால் ஆத்தம் கொண்ட வரலாறு
திருமழிசையாழ்வார் காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாளைச் சேவித்துக் கொண்டு தங்கியிருந்த நாளில்,ஓர் அன்பர் அவருக்குப் பால் கொண்டு வந்து கொடுக்க, அதனை ஆழ்வார் பருகினார். அப்பாத்திரத்தில் எஞ்சி நின்ற பாலை அந்த அன்பர் பிரசாதமாக நினைத்து,தம் மனைவிக்குத் தர, அதனை அவ்வம்மையர் உண்டனர். அதன் காரணமாக அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் தோன்றினான். அப்புத்திரனுக்கு கணிக்கண்ணன் என்று பெயர் சூட்டினர். அக்குமாரன் இளம் பருவம் முதல் திருமழிசை ஆழ்வாருக்குத் தொண்டாற்றி வந்தனன். ஒருநாள் கணிக்கண்ணர் கச்சி வரதருடைய திருவாலயம் சென்று வரதராஜரைச் சேவித்து, கண்ணுங் கருத்தும் மகிழ்ந்து ஆலயத்தை வலம் வந்து திரும்புங்கால், அத் திருவாலயத்தில் கைங்கரியம் புரிந்து கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டனர். அக்கிழவி மிகவும் வயது சென்று,உடல் தள்ளாடி நடுக்குற்றிருந்தும் சுவாமி கைங்கரியத்திலுள்ள பக்தியால் தன் சிரமம் நோக்காது திருப்பணி செய்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் கணிக்கண்ணருக்கு கருணை மேலிட்டது. இக்கிழவி உடல் தளர்ந்து துன்புறுகின்றனளே? இளமைப் பருவத்தை அடைந்தாளேயானால் இன்னும் பெருமாள் கைங்கரியத்தில் நன்கு ஈடுபடுவாள். “காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள கமலக்கண்ணா! இவ்விருத்தைக்கு நின் திருவருள் உண்டாக வேண்டும்” என்று கூறித் தன் அருமைத் திருக்கரத்தால் கிழவியின் முதுகைத் தடவினார். உடனே அவள் கிழத் தன்மை மாறி இளமைப் பருவமடைந்து, கட்டிளங் குமரியானாள். கரத்திலிருந்த ஊன்றுகோலை எறிந்தனள். கணிக்கண்ணரை வாயார வாழ்த்தினள். அங்கிருந்தோர் அனைவரும் இவ் வதிசயத்தைக் கண்டு இரும்பூதுற்று கணிக் கண்ணரைப் புகழ்ந்தனர். கணிக்கண்ணர் குருமகாசந்நிதியை அடைந்தனர். கணிக்கண்ணர் கிழவியைக் குமரியாக்கின செய்தி காட்டுத் தீப்போல் ஊரெங்கும் விரைவிற் பரவியது.
அக்காலத்து காஞ்சி மாநகரத்தை அரசாண்டு கொண்டிருந்த பல்லவராயனுக்கு இச்செய்தி தெரிந்தது. வியப்புற்றவனாகிக் கணிக்கண்ணரை அழைத்து “எனக்குக் கிழத் தன்மை அடைந்திருக்கிறது. அதனை நீக்கி குமரனாகச் செய்யும்” என்றனர். கணிக்கண்ணர் நகைத்து, “மன்னா! கிழத் தன்மையை அகற்றி இளமைப் பருவத்தை அளிக்க என்னால் ஆகாது” என்றனர். மன்னன் “ஐயா! ஆலயத்தில் ஒரு கிழவியை நீ முதுகைத் தடவிக் குமரியாகச் செய்தாய் என நகரெங்கும் கூறுகின்றனர். இப்போதுமுடியாது என்கிறாய். என் முதுகையும் தடவி எனக்கு உள்ள மூப்புத் தன்மையை நீக்கி இளமைப் பருவத்தை அளிப்பாய்” என்றனன். கணிக்கண்ணர் “அரசே! என்னே நின் மதி?இக்கிழவியை நானா குமரியாக்கினேன்? என்னால் அணுக் கூட அசையாது. எல்லாம் ஈசன் செயல். வரதனுடைய கருணையினால் அச்செயல் நிகழ்ந்தது. ஆதலால் நீயும் வரதனை வேண்டுதல் புரிந்து நின் விருப்பத்தைப் பெறுவாயாக” என்றனர். அதனைக் கேட்ட பல்லவராயன் முனிவுற்று, “என்னே நின் செருக்கு? பிச்சை எடுத்துத் திரியும் நினக்கு இத்தனை அகங்காரமா? இக்கணமே இந்த நகரத்தை விட்டுச் செல்லுதி” என்றனன். கணிக்கண்ணன் முறுவல் புரிந்து, “அறிவிலியே! உன்னை நம்பியோ என்னை இவ்வுலகில் கடவுள் படைத்தார்? இந்த நகரம் ஒன்று இல்லையேல் யான் உயிர் வாழ முடியாதோ? ஏனைய நகரங்களை எல்லாம் கடல் தன்னகத்தே கொண்டு மறைத்ததா?இக்கணமே இந் நகரத்தை விட்டு நீங்குகிறேன்” என்று கூறி, அரசவையை விட்டகன்று தனது குருநாதராகிய திருமழிசை ஆழ்வார்பால் வந்தனர். குருமூர்த்தியின் திருவடிமேல் வீழ்ந்தனர். நிகழ்ந்தது கூறி “அடியேன், அரசன் ஆக்கினைப்படி,இந்நகரத்தை விட்டு நீங்குகிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று அவர்பால் விடைபெற்றுப் புறப்பட்டார்.
தம் சீடராகிய கணிக்கண்ணர் சென்றவுடனே அவர் பிரிவை ஆற்றாத திருமழிசை ஆழ்வார் எழுந்து சீடர் பிறகே செல்வாராயினார். அக்கால் கச்சி வரதரைக் கண்டு,
“கணிகண்ணன் போகின்றான்,காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன்,நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
என்ற திருப்பாசுரத்தை அருளிச்செய்தனர். இதனைக் கேட்டவுடனே வரதராஜப் பெருமாள்,ஆழ்வார் கூறிய வண்ணமே ஆதிசேடனாகிய பாயலைச் சுருட்டிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார். பெருமாள் செல்ல அவர் பின் மகாலட்சுமியும் சென்றனள். காஞ்சிபுரத்தில் சீதேவி அகல,மூதேவி வந்து சேர்ந்தனள். நகரம் பொலிவிழந்தது. நகர மாந்தர்கள் ஓ என்றலறி அரசன்பால் வந்து, “கொற்றவா! என்ன செய்தாய்? அடியாரிடத்தில் அபசாரப்பட்டனையே. நமது நகரத்திற்கு அழிவு நேர்ந்தது. கணிக்கண்ணரை நகரத்தை விட்டு நீங்குதி என்றனை. அவர் நீங்க அவருடைய குருமூர்த்தியாகிய திருமழிசையாழ்வாரும் அவர் பிறகே சென்றனர். ஆழ்வார் போக,அவர் பிறகே கச்சி வரதரும் சென்றனர். வரதர் பிறகே வரலட்சுமியும் சென்றனள். காஞ்சிமா நகரத்திற்கே அழிவு தேடினாய்” என்று ஓலமிட்டனர். அது கேட்ட மன்னன் நடுநடுங்கி “என் செய்தோம்; பெரியோரிடத்தில் பிழை இழைத்தோமே” என்று மனம் வருந்தி மந்திரிமார்களுடன் சென்று வரதரையும் சீதேவியையும் தொழுது திரும்பி வருமாறு வேண்டினன். அவர்கள் ஆழ்வார் திரும்பினாலொழிய நாம் திரும்போம் என்றனர். அரசர் ஆழ்வாரிடம் சென்று அவர் பாதமலரில் வீழ்ந்து “எந்தையே! நீர் திரும்புவீரேயாமாகில் வரதரும் சீதேவியும் திரும்பி வருவார்கள். ஆதலால் கருணை கூர்ந்து வரவேண்டும்” என்றனன். ஆழ்வார் நகைத்து “மன்னா! நமது சீடன் வந்தால் அன்றி நாம் திரும்போம்” என்றனர். மன்னன் கணிக்கண்ணர் கால்மேல் வீழ்ந்து “ஐயனே! நின் பெருமையை உணர்ந்தேன். அடியேன் புரிந்த பிழையை மன்னித்தருளல் வேண்டும். நீர் திரும்பினால்தான் அவர்கள் திரும்புவார்கள். கருணை செய்து நகரத்திற்கு எழுந்தருள வேண்டும்” என்று குறையிரந்தனன். கணிக்கண்ணர் கருணை கூர்ந்து குருநாதர்பால் வந்து மன்னனை மன்னிக்க வேண்டுமென்று கூறி நகரத்திற்கு திரும்பினர். சீடன் திரும்பவே ஆழ்வாரும் திரும்பினார். உடனே ஆழ்வார் வரதரை நோக்கித் தான் கூறிய வெண்பாவைத் திருப்பிப் பாடினார்.
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்-துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன்,நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று பாடியவுடனே பெருமாள் சீதேவியுடனே சென்று ஆலயத்தில் பன்னகப் பாயலை விரித்தமர்ந்தனர்.
இதனால் பெருமாளுக்குச் “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்று ஒரு திருநாமம் வழங்குகிறது. வடமொழியில் “யதோத்தகாரி” என்பர்.
இவ்வாலயத்தை காஞ்சீபுரத்தில் இன்றும் காணலாம். பெருமாளும் ஆழ்வாரும் கணிகண்ணரும் போய் ஓரிரவு தங்கியிருந்த ஊருக்கு "ஓரிரவிருக்கை" என்று பெயர். இவ்வூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது. இதனைக் குமரகுருபர சுவாமிகளும், தாம் பாடி அருளிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில்,எடுத்து வியந்துள்ளார்.
“பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப்
பணைத்தோள் எருத்து அலைப்பப்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே”
“இனிய பாவலன் உரையினில் ஒழுகிய கடவுள்” ---(முருகுலாவிய) திருப்புகழ்.
அலைக்குள் ---
அலை --- அலைகளை உடைய திருப் பாற்கடல்.
கண்செவி மேல் படுக்கையில் உறை மாயன்---
கண்செவி --- கண்ணையே செவியாக உடையது பாம்பு. இங்கே ஆதிசேடனைக் குறித்தது.
உழைக் கண் ---
உழை --- மான்.
உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர்---
செட்டியனாய் --- செட்டி மகனாக.
நால் கவிப் பணர் --- ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளை இயற்றுவதில் வல்ல புலவர்கள். இது இருத்திரசன்மர் வரலாற்றைக் குறிக்கும். அது வருமாறு....
காலக் கோட்பாட்டினால் தமிழில் இருந்த பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்தது. அது கண்டு பாண்டியன் வருந்தினான். சோமசுந்தரக் கடவுள் அவனுடைய அலக்கண் தீர்ப்பான் வேண்டி பொருள் இலக்கணமாக இறையனார் அகப்பொருள் என்ற அறுபது சூத்திரங்கள் அடங்கிய அரிய நூலை அருளிச்செய்து வழங்கினார்.
அந்நூலுக்குச் சங்கப் புலவர்கள் வேறு வேறு உரைகள் செய்தார்கள். தாம் தாம் செய்த உரையே உயர்ந்தது என அவர்கட்குள்ளேயே கலகம் பிறந்தது. எல்லோரும் சோமசுந்தரப் பெருமான் திருமுன் சென்று “ஐயனே! எங்கள் கலகந் தீர்த்து உலகமுய்ய அருள் செய்வாய்” என்று வேண்டி நின்றார்கள்.
சொக்கலிங்கத்தினின்று இறைவன் ஒரு புலவர் வடிவில் தோன்றி, "புலவர்களே! நீவிர் வருந்தற்க. இம்மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தனபதி என்பானுக்கும் குணசாலினிக்கும் தவத்தால் தோன்றிய ஒரு தெய்வப் புதல்வன் இருக்கின்றான். அவன் ஊமை. அத் திருமகன்பால் உமது உரைகளை உரைமின்; அவன் எது உயர்ந்தது என உறுதியாக அறுதியிட்டு அறிவிப்பான்” என்று அருளிச் செய்தனர்.
புலவர்கள், “பெருமானே! ஊமை மகன் எங்ஙனம் உரைப்பான்?” என்று ஐயுற்று வினவினார்கள். இறைவன், “புலவீர்காள்! நீவிர் சென்று கேண்மின் அவன் சொல்லாழமும் பொருளாழமும் நன்குணர்ந்து நிறுத்து நுனித்து உணர்த்துவான்” என்றருளிச் செய்தனர். சங்கப் புலவர்கள் மேளம் தாளம் குடை விருது சாமரை பல்லக்கு முதலிய வரிசைப் பொருள்களுடன் சென்று உருத்திரசன்மர் என்ற அந்த செட்டிக் குமரனைப் பணிந்து, செஞ்சந்தனம் பூசி, செம்பட்டு ஆடையும், செம்மலர் மாலையும் புனைவித்து, பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப் பலகைமீது எழுந்தருளச் செய்து, சுற்றிலும் அமர்ந்து, தத்தம் உரைகளை உரைப்பாராயினார்கள்.
சிலர் கூறும் உரைகளைக் கேட்டு அந்த ஊமைச் சிறுவன் முகத்தைச் சுளித்தனன்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு உதட்டை அசைத்தனன்;சிலர் கூறும் உரைகளைச் சில இடத்தில் ஆமோதிப்பான் போல் சிறிது தலையை அசைத்தான்; சிலர் கூறும் உரைகளைக் கேட்டு கண் மலர்ந்து பார்த்தனன்.
நக்கீரன், கபிலன், பரணன் என்ற முப்பெரும் புலவர்களது உரைகளைக் கேட்டு அடிமுதல் முடிவரை உடல் புளகிதமுற்று, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, சிரம் அசைத்து கரந்தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்து ஆமோதித்தானன்.
நுழைந்தான்பொருள் தொறும் சொல்தொறும் நுண் தீஞ்சுவை உண்டே
தழைந்தான் உடல்,புலன் ஐந்தினும் தனித்தான்,சிரம் பணித்தான்,
குழைந்தான்விழி, வழிவேலையுள் குளித்தான்,தனை அளித்தான்,
விழைந்தான் தவபேற்றினை, விளைத்தான்,களி திளைத்தான்.
இவ்வாறு அப் புலவர்கள்பால் விளைந்த கலகந் தீர்த்து உலகம் உய்ய அருள் புரிந்தான். முருகவேள் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருந்தகை, "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கின்றார் அருணகிரிநாதர்.
"பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று அருணை அடிகள் அருளியவாற்றால்,முருகப் பெருமான் ஒரு தாய்வயிற்றில் பிறந்தார் என்பது சற்றும் பொருந்தாது.சுப்பிரமணிய சாரூபம் பெற்றவர்கள் பலர். அவர்கள் அபர சுப்ரமண்யர் எனப்படுவர். அவருள் ஒருவர் உருத்திரஜன்மராக வந்தனர். முருகவேளது அருள் தாங்கி வந்தபடியால் முருகனே வந்ததாக அருணகிரியார் கூறுகின்றார் எனத்தெளிக.
“ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய ஊமர்போல வணிகரில்
ஊடாடி யாலவாயில் விதிசெய்த
லீலா விசார தீர வரதர குருநாதா” --- (சீரான) திருப்புகழ்.
ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை பெருமாளே ---
இத் தலத்தைப் பற்றி அறியக் கூடவில்லை.
கருத்துரை
முருகா! விலைமாதர் மீது வைத்த ஆசையை ஒழிக்க அருள்வாய்.
No comments:
Post a Comment