பிழை பொறுத்துல் பெரியவர் கடமை
-----
திருக்குறளில் "பழமை" என்னும் ஓர் அதிகாரம். பலகாலும் நண்பராகப் பழகியவரின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் பற்றிக் கூறப்பட்டது. ஆராய்ந்து நட்புச் செய்யப்பட்டவரிடத்தும் பிழையானது அவரது செயலாலும் உண்டாகும். ஊழ்வினை காரணமாகவும் நண்பரிடத்தில் பிழை உண்டாகலாம். அவ்விதக் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுவதே தகுதி ஆகும் என்று அறிவுறுத்துகின்றார் நாயனார்.
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தாம் வெறுப்புக் கொள்ளத்தக்க செயல்களைத் தமது நண்பர் செய்வாராயின், அதற்குக் காரணம் அவரது அறியாமை என்றோ அல்லது மிகுந்த உரிமை என்றோ கொள்ளுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.
தம்மால் நட்புக் கொள்ளப்பட்டவர்,ஒரு தொழிலை நன்றாக முடியாதபடி செய்வாரானால், அதனைத் தமது ஊழின் பயனாகக் கொள்ளுதல் வேண்டும். அல்லாமல் தமக்குத் துன்பத்தைத் தருவதற்காகச் செய்தார் என்று கொள்ளுதல் கூடாது. தாமே செய்து தமக்கு நேரவேண்டிய துன்பமானது, ஊழின் பயனாக, தமது நண்பர் மூலமாக அவருக்கும் தமக்கும் உள்ள ஒற்றுமை உணர்வு காரணமாக வந்தது என்று அறிவுடையோர் கொள்ள வேண்டுமே அல்லாது, நம்மிடத்தில் அன்பு இல்லாமையால் அவ்வாறு செய்தார் என்று கொள்ளுதல் கூடாது.
"ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்" என்று "நட்பு ஆராய்தல்" என்னும் அதிகாரத்துள் காட்டினார் நாயனார். ஒருவனுக்கு நற்பலன் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி, அவரைக் கைவிடுதலாகும் என்று முந்திய அதிகாரத்தில் காட்டி, "அறிவில்லாதவர் நட்பைக் கைவிடுக" என்று சொல்லினார். அது சிறிது காலமே பழகிய தொடக்க கால நட்பு. தம்மால் நண்பராகக் கொள்ளப்பட்டவர் அறிவில்லாதவர் என்று தெரிந்ததுமே அவரது நட்பைக் கைவிடவேண்டும் என்றார்.
இங்கு,பெருங்கிழமை (பழமை) உடையோர், அதாவது நெடுங்காலம் பழகிய நண்பர் செய்யும் செயல் பேசப்படுகிறது. ஆதலால் அவர் வருந்தும் செயலைச் செய்தாலும் பொறுத்துக் கொள்க என்றார். இரண்டுக்கும் முரண்பாடு இல்லை என்பதை அறிக.
"பேதைமை ஒன்றோ, பெரும் கிழமை என்று உணர்க,
நோ தக்க நட்டார் செயின்".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"நம்பன்அமர்க்கு ஏன்றவாணற் புரந்தான் தொன்மைஉன்னி
மொய்ம்பு தொலையாமல்,முருகேசா! - அம்புவியில்
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்".
இதன் பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, நம்பன் --- சிவபெருமான், தொன்மை உன்னி --- பழமையை நினைந்து, மொய்ம்பு தொலையாமல் --- வலிமை கெடாமல், அமர்க்கு ஏன்ற வாணன் புரந்தான் --- போர் செய்ய வேண்டுமென்று எதிர்த்த வாணாசுரனைக் காப்பாற்றி அருளினார். அம்புவியில் --- அழகிய நிலவுலகத்தில், நோதக்க --- வருந்தத் தக்க செயல்களை, நட்டார் செயின் --- நட்புக் கொண்டவர்கள் செய்வார்களானால், பேதைமை ஒன்றோ --- அதனை அறியாமை என்றோ, பெருங்கிழமை என்று உணர்க --- மிக்க உரிமை என்றாவது அறிந்து கொள்க.
சிவபெருமான் போர் செய்ய வேண்டுமென்று எதிர்த்த வாணாசுரனைப் பழமையை நினைத்து வலிமை குலையாமல் காத்தார். வருந்தத் தக்க காரியங்களை நண்பர்கள் செய்வார்களாயின் அதனை அறியாமை என்றாவது,உரிமை என்றாவது கொள்ளவேண்டும்.
வாணாசுரன் கதை
வாணாசுரன் என்பவன் நாள்தோறும் ஆயிரம் சிவலிங்கங்களை வழிபட்டு வந்தான். அதனால் சிவபிரான் அவனுக்குக் காட்சி கொடுத்தருளினார். அப்பொழுது அவன் குடமுழா முழக்கினான். சிவபெருமான் மகிழ்ந்து ஆயிரம் கைகளும் அவன் விரும்பியவாறே தீக் கோட்டையும் அளவற்ற பொருளும் பேராற்றலும் பிறவும் கொடுத்து அருளினார். அவன் திருமால் முதலிய தேவர்களை வென்று நாள்தோறும் திருக்கயிலைக்குச் சென்று வழிபாடு செய்து வந்தான். ஒருநாள் சிவபெருமான் திருக்கூத்துக் காட்சி தந்தருளும்போது,ஆயிரம் கைகளாலும் குடமுழா முழக்கி அப்பெருமான் உமாதேவி பொருந்திய திருவோலக்கத்தோடு தனது வாயிலில் நாள்தோறும் காட்சி தந்து வீற்றிருக்க வரம் பெற்றான். அவ்வாறே வீற்றிருக்கும் காலத்தில் ஒருநாள் பெருமானைப் பார்த்து, "திருமால் முதலிய தேவர்களும் தோற்றுவிட்டார்கள். என்னுடைய தோளின் தினவு நீங்குமாறு தேவரீரோடு போர் செய்ய எண்ணினேன்" என்று கூறினான். பெருமான் தம்மிடம் கொண்ட பழைய அன்பை எண்ணித் தாம் அவனைத் தண்டித்தல் தக்கதல்ல என்று முடிவு செய்தார். அவனைப் பார்த்து, "முன்பு தோற்ற திருமால் இப்போது கண்ணனாகத் தோன்றியுள்ள பிறப்பில் உபமன்னியுவால் ஆற்றல் மிகுந்து இருக்கிறார். அவரோடு போர் செய்வாயாக" என்று அறிவுறுத்தினார். கண்ணபிரான் போருக்கு வந்தபோது வாணாசுரனுடைய கைகளில் நான்கைத் தவிர மற்றவைகளை எல்லாம் அறுத்து வீழ்த்தினார். பிறகு சிவபிரான்,வாணாசுரனைப் பார்த்துத் "தோளின் தினவு நீங்கியதா" என்று உசாவினார். முன்போலவே கைகளைக் கொடுத்துத் திருக்கயிலைக்குச் சென்றார். இங்கு வாணாசுரன் தம்மை எதிர்க்க விரும்பியதை இறைவன் அறியாமை என்றோ,உரிமை என்றோ கொண்டார்.
நட்புக் கொண்டு ஒழுகும் இருவருள்,ஒருவராவது பொறுமை மேற்கொண்டு ஒழுகுதல்,நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும்.இருவரும் பொறுமை இல்லாதவராக இருந்தால், நட்பு நீடித்து நிற்காது. இருவருள் ஒருவராவது பொறுமை பூண்டிருத்தல் இன்றியமையாதது. பின்வரும் பாடல்களைக் காண்போம்...
தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொறை இருவர் நட்பு. --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே! நண்பர்களாகப் பழகியவரில், ஒருவர் பொறுத்துக் கொள்ளும் பொறுமையானது, இருவரின் நட்புக்கும் உதவியாக இருக்கும். நண்பராகப் பழகிய ஒருவருக்குத் தம்மால் தீங்கு ஏதும் விளையாது இருக்கையில், தமக்கு நண்பர்கள் தீங்கு செய்வார்களானால், "இது எனது தீவினைப் பயனால் வந்தது" என்று எண்ணி, நண்பர் செய்த தீமையைப் பாராட்டாது பொறுத்துக் கொள்ளுதல் நட்புக்கு அழகு ஆகும்.
நட்பில் பிழை பொறுத்தல் இல்லாதபோது, அந்த நட்பு நீடிக்காது என்பதால், "ஒருவர் பொறை இருவர் நட்பு" என்ற பழமொழி உருவானது. இருவரில் ஒருவர் பொறுமை காத்தல், பொறுத்துக் கொள்ளுதல் நல்லது.
"இறப்பவே தீய செயினும், தம் நட்டார்
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ ; - நிறக்கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறை இருவர் நட்பு". --- நாலடியார்.
இதன் பொருள் ---
தம்மோடு நட்புக் கொண்டவர்,மிகவும் தீங்குகள் செய்தாலும்,அவற்றைப் பொறுத்து ஒழுகுதல் தகுதியானது ஒன்று ஆகும். கோங்க மலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!ஒருவரின் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்தே இருவரின் நட்பும் ஆமையும்.
பொறுத்தலால் நட்பு வளர்தலாலும், அது ஒரு பெருந்தன்மை ஆதலாலும் நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும்.
"கண்போல்வார்க் காயாமை,கற்றார் இனம்சேர்தல்,
பண்போல் கிளவியார்ப் பற்றாமை,- பண்போலும்
சொல்லார்க்கு அருமறை சோராமை,சிறிதெனினும்
இல்லார்க்கு இடர்தீர்த்தல் நன்று". --- ஏலாதி.
இதன் பொருள் ---
கண் போன்றவராகக் கருதப்பட்ட நண்பரை, அவர் தவறு செய்தபோது சினம் கொள்ளாமையும், கற்று வல்ல பெரியார் கூட்டத்தைச்சேர்ந்து இணங்குதலும், யாழிசை போன்ற மொழிகளை இசைக்கின்ற பெண்களைப் பின்பற்றாமையும்,
இசைபோலும் மொழியை உடைய மாதர்க்கு அருமையான இரகசியங்களை மறந்தும் சொல்லாமையும், சிறிதளவேனும் இல்லை என்பார்க்குக் கொடுத்து, அவரது துன்பத்தை நீக்குதலும் நல்லவாம்.
பிழையைப் பொறுப்பது பெருந்தன்மை ஆகும். "பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே" என்றார் கம்பர். பிழை செய்வது அறிவில் சிறியவர் இயல்பு. அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியவர் சால்பு. "பிழைத்தது எல்லாம் பொறுத்து அருள் செய் பெரியோய்" என்றார் அப்பர் பெருமான். "பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான். பொறுப்பவர் பெரியவர் என்பதனால், பிழை செய்தவர் சிறியர் என்பது பெறப்படும். இதற்கு மேலும் ஒருபடி சென்று, "பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ?பிறைசேர் சடையாய்! முறையோ என்று அழைத்தால், அருளாது ஒழிவதே? அம்மானே உன் அடியேற்கே" என்றும் பாடி அருளினார் மணிவாசகப் பெருமான்.
பிழை செய்தல் மனிதத் தன்மை. பொறுத்துக் கொள்ளுதல் இறைத் தன்மை.
No comments:
Post a Comment