கதைகளும் கருத்துக்களும்

 


கதைகளும் கருத்துக்களும்

-----

 

     சிறுவயதில் நாம் இருந்தபோதுபள்ளியில் ஆசிரியர்களோ,அல்லது வீட்டில் பெரியவர்களோ சில கதைகளைச் சொல்வார்கள். அவை கட்டுக் கதைகள் தான். ஆனால் பொருள் பொதிந்தவை. உதாரணத்திற்குமரத்தடியில் வடை சுட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பாட்டி. ஒரு காகம் வந்துஅவளை அறியாமல்ஒரு வடையை வாயில் கவ்விச் சென்றது. காகத்தின் வாயில் இருந்த வடையைப் பார்த்து ஆசை கொண்ட நரி ஒன்று, "நீ மிகவும் அழகாக இருக்கிறாய். வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாடேன்" என்றது. நரியின் புகழ்ச்சியில் மயங்கிய காகம் தனது வாயைத் திறந்து "காகா" என்று கத்தியது. காகத்தின் வாயில் இருந்து வடை நழுவிக் கீழே விழுந்தது. இது உண்மை நிகழ்வே அல்ல. இந்தக் கதை ஏன் கட்டப்பட்டதுபிறர் பொருளுக்கு ஆசைப்படுவது நட்டத்தில்தான் முடியும் என்பதை அறிவுறுத்த. அடுத்துகிணற்றில் இருந்து ஆமையும்அந்தக் கிணற்றில் தவறி வந்து விழுந்த கடல் ஆமையும் பேசிக் கொண்டதாக ஒரு கதை. இப்படிப் பல கதைகள். இந்தக் கதைகளை அப்போது கேட்ட நம்மில் ஒவ்வொருவரும் நமது வீட்டுக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். 

 

     இம்மாதிரியான கட்டுக் கதைகள் குழந்தைகளுக்குத் தான் சொல்லப்படுகின்றன என்று எண்ண வேண்டாம். வளர்ந்தவர்கள் கூடியுள்ள சபையில் பேசுகின்ற சொற்பொழிவாளர்களும்தமது கருத்துக்கு உருவகம் கொடுத்துக் கட்டுக் கதைகளைச் சொல்வதைக் காணலாம். கேட்டும் இருக்கலாம்.

 

     நரி பேசுமாஆமை பேசுமாஇப்படிப் பொய்யான கதைகளைச் சொல்லலாமா என்றெல்லாம் யாரும் விமரிசனம் செய்வது இல்லை. ஆனால்நமது நாட்டில் காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணங்களைப் பற்றிச் சொன்னால்அவற்றைப் பொய் என்றும்புனைவு என்றும்குருட்டு நம்பிக்கை என்றும் சகட்டுமேனிக்குப் பேசுவதைக் காணலாம்.

 

     புராணம் என்ற வடசொலுக்குபழமையும்புதுமையும் உடையது என்று பொருள். பழமைக்குப் பழமையாக உள்ள புராணங்கள்புதுமைக்கும் புதுமையானஎக்காலத்திலும் பொருந்துகின்ற அரிய கருத்துக்களை உள்ளடக்கியவை. எனவேதான்அவை காலத்தால் அழியாமல் இன்றும் நிலைத்து இருக்கின்றன. காலத்தால் பழமையானவை என்றாலும்மக்களுக்குகாலத்திற்கேற்ற பயனை வழங்குவதால்புதுமையை உடையனவே. காலத்தால் பழையவை. கருத்தாலும்விளைகின்ற பயனாலும் புதியவை என்று சொல்லவேண்டும்.

 

     சில பொருள்கள் பழமையாக இருந்தாலும்பயனால் எக்காலத்தும் புதுமையாக உள்ளவை. கதிரவன் எப்போது தோன்றினான் என்று தெரியாது. ஆனால்நாள்தோறும் தோன்றி மக்களுக்குப் பயனைத் தந்துகொண்டு இருக்கின்றான். எனவே, "தினமணி" என்ற பெயர் உண்டாயிற்று. இறைவன் எப்போது தோன்றினான் என்று சொல்ல முடியாது. அவனைக் காட்டிலும் பழைய பொருள் ஒன்று இல்லை. உயிர்கள் எப்போது தோன்றின என்றும் சொல்ல முடியாது. இறைவனைப் போலவேஉயிர்களும் மிகமிகப் பழமையானவையே. ஆனாலும்எக்காலத்தும் வாழ்கின்ற உயிர்களுக்குகாலத்திற்கேற்ற புதுமையான நலங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டு இருப்பதால்புதுமைக்குப் புதுமையாக வருகின்ற எவற்றுக்கும்பின்னும் புதுமையானவனாக இறைவன் இருக்கின்றான். இந்த உண்மையை மணிவாசகப் பெருமான் எவ்வளவு அழகாக நமக்குக் காட்டி உள்ளார் பாருங்கள்...

 

"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!

 பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!"

 

திருவாசகத்தில் வரும் திருவெம்பாவையை அறியாதார் இருக்க வாய்ப்பு இல்லை. உணராதார் இருக்கலாம்.

 

     இறைவன் நிலத்தின் கீழ் உள்ள வேரைப் போல இருக்கின்றான். வேரில் இருந்து மரம் வளர்ந்துபூக்கின்ற பூக்களைப் போல் புராணங்கள் இருக்கின்றன். வேர் இல்லாமல்மலர் இல்லை. அதுபோலவேபல அரிய உண்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவையே இறைவனை உணர்ந்த அருளாளர்களால் பாடப்பட்ட புராணங்கள்.

 

     கோயிலுக்கு ஒரு அம்மையார் தனது தோழியுடன் செல்கின்றார். கோயிலை வலம் வரும்போது அழகான ஓர் அம்மையாரைக் கண்டார். அந்த அம்மையாரின் நெற்றியிலே திருநீறுகுங்குமத் திலகம். வாயிலே அருமையான தேவாரம். கண்டவுடன் பரவசமானார். உடன் வந்திருந்த தோழியோ, "அந்த அம்மையார் உடுத்திருந்த புடவையைப் பார்த்தாயாஎவ்வளவு அழகாக உள்ளது?" என்றார்.

 

     இதுபோலத் தான்புராணக் கதைகளைப் பிறர் சொல்லுகின்று போது உள்ளன்போடு கேட்டு உணர்பவர்களும்கதைகளை மட்டுமே கேட்டுஅவைகளில் பொதிந்துள்ள கருத்துக்களைச் சிந்தையில் கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.

 

     தனக்கு வேண்டிய பொருள் ஒன்று உள்ள கடையைத் தேடிச் சென்று ஒருவன் வாங்கிக் கொள்கின்றான். அதைப் போலதிருக்கோயிலுக்குத் தானே சென்று மூலமூர்த்தியை வணங்குகின்றான் ஒருவன். கடைக்கு வராதவர்களும் உள்ளது போலவேதிருக்கோயிலுக்கு வராதவர்களும் உண்டு. கடைக்கு வராதவர்களை நாடிச் சென்று பொருள்களைக் கூவி விற்பது உண்டு. கடையில் இருக்கின்ற வரையில்கடைக்காரருக்கு மிக அலங்காரமான உடை தேவையில்லை. ஆனால்வெளியில் வரும்போது கொஞ்சம் அலங்காரம் தேவைதானே. ஏன்நாம் கூட வீட்டில் இருந்து வெளியில் புறப்படுகின்ற போதுவீட்டில் அணிந்திருந்த உடையோடு செல்வதில்லை. வெளியில் செல்வதற்கேற்ற ஆடைகளை அணிந்துதான் செல்லுகின்றோம். கோயிலுக்குத் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு அருள் புரிகின்ற மூலமூர்த்திகோயிலுக்கு வராதவர்களுக்கும் அருள்புரிய வேண்டிதானே அவர்களுடைய இருப்பிடம் தேடிச் செல்கின்றான். அப்படிப் போனால்எப்படிப் போகவேண்டும். அலங்காரத்துடன் தானே. எனவேஉற்சவ மூர்த்தியாக அலங்காரத்துடன் திருவீதியில் எழுந்தருளுகின்றார்.

 

நையாத மனத்தினனை

    நைவிப்பான் இத் தெருவே

ஐயா! நீ உலாப் போந்த

    அன்றுமுதல் இன்றுவரை

கையாரத் தொழுதுஅருவி

    கண்ணாரச் சொரிந்தாலும்

செய்யாயோ அருள் கோடைத்

    திரைலோக்கிய சுந்தரனே.

 

என்று திருவிசைப்பாவில்திருமாளிகைத் தேவர் பாடியருளிய பாடல் இது.

 

     இறைவனை எண்ணி நைந்த உள்ளத்தை உடையவர்கள்திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள். நையாத உள்ளத்தை உடையவர்களும் ஈடேறவேண்டுமே என்னும் பெருங்கருணை காரணமாகஅவர்கள் இருக்கும் இடம் தேடிஅலங்காரமூர்த்தியாகச் செல்கின்றான் இறைவன். காது உடையவன்வாத்திய ஓசையைக் கேட்டுவீட்டிலிருந்து வெளியே வருகின்றான். கண் உள்ளவன் காண்கின்றான். வாய் உடையவன் அது பற்றிஅறிந்த பிறரைக்கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றான். உற்சவரைப் பார்த்து விட்டுபழையபடி உள்ளே போகின்றவர்களும் உண்டு. உற்சவமூர்த்தியைக் கண்ணாரப் பார்த்துஅவனது பெருமையைப் பிறரிடம் கேட்டு,ஈர்ப்பு கொண்டுபிறகு தானே திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் பயன் பெறுகின்றவர்களும் உண்டு.

 

     இறைவனுக்குச் செய்துள்ள அலங்காரத்தைப் பார்த்துஅவனைப் பற்றிக் கேட்டு உள்ளம் நைந்தவர்பிறகு தானே சென்று வழிபட்டுப் பயன்பெறுவது போலபுராணக் கதைகளால் உள்ளம் கவரப் பெற்றவர்புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைத் தெளிந்து அறிந்து பயன் பெறுவர்.

 

     பழைய பொருள் என்று அதை அப்படியே காட்சிப் பொருளாக வைத்துப் பாதுகாப்பது ஒன்று. அது நமக்குப் பயன்படும் வழியில் அறிந்து கடைப் பிடிப்பது ஒன்று. 

 

     கண்ணுக்குக் காட்சிப் பொருளாக அலங்காரம் செய்துகொண்டு உற்சவமூர்த்தி வெளிவருவதுமூலப் பொருளாக உள்ள மூலமூர்த்தியை மறந்த மக்களுக்கு நினைவூட்டுவதற்காக. உணவகம் என்று சொன்னாலேஅங்கே உள்ள சுவை மிக்க உணவு வகைகள் கண் முன்னர் தோன்றுவது போலபலப்பல நினைவுகளால் உழன்றுகொண்டு இருக்கின்ற மக்களுக்குதிருக்கோயில் என்று சொன்னவுடன்இறைவன் நினைவு உண்டாகின்றது. இறைவனுடைய நினைப்பை உண்டாக்குகின்ற இடமாகக் கோயில் இருப்பதால்அங்கே இறைவன் இருக்கின்றான் என்கின்றோம். மற்ற இடங்களில் இறைவன் இல்லையாஎன்பவர்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் கோயிலுக்குச் சென்று அறியாதவர்கள். மற்ற இடங்களில் இறைவனைப் பார்க்கவோஉணரவோ ஆற்றல் நமக்கு இல்லாமையால்மற்ற இடங்களைப் பார்க்கிலும்இறைவனது நினைப்பை மிகவும் உண்டுபண்ணுகின்ற இடம் கோயில் என்கின்றோம்.

 

     திருவாசகத்தில்மணிவாசகப் பெருமான், "கோயில் சுடுகாடு" என்றார். சுடுகாடு எப்படிக் கோயில் ஆகும்என்றால்கோயிலாக உணர்பவர்க்கு அது கோயில்தான். கோயிலுக்குச் சென்றால் இறை உணர்வு உண்டாவது போலஉலகப் பொருள்களின் நிலையாமை பற்றியோபிறவற்றைப் பற்றியோ அறியாத ஒருவன் தனக்கு வேண்டியவர் இறந்த போதுசெத்த பிணத்தோடுஇனிச் சாகும் பிணமாக அவனும் சுடுகாட்டுக்குச் செல்கின்றான். சாத்திர ஞானம் இல்லாத அவனுக்கும்அங்கே நிலையாமை உணர்வு உண்டாகின்றது. தன்னை அறியாமல் இறைவனை நினைக்கின்றான். இறைவனது நினைப்பை உண்டாக்குகின்ற இடம் கோயில் என்றால்சுடுகாடும் கோயில் தானே. எண்ணிப் பாருங்கள்.

 

     புறத்திலே காணுகின்ற காட்சியில் இறைவன் நினைப்பை உண்டாக்குவது கோயில். கருத்து அளவிலே அகத்திலே காணுகின்ற மனக் காட்சியில் இறைவனது நினைப்பை நன்றாக உள்ளத்தில் பதிய வைப்பது புராணம். கண்ணால் இறைவனைக் கண்டதும் எப்படிஅருள் தாகம் உண்டாகின்றதோஅதுபோலவேசொல்லினால் அமைந்த புராணங்கள்அலங்காரமான பாடல்களாலே இறைவனிடத்தில் ஈடுபாட்டை உண்டாக்குகின்றன.

 

     புராணத்தில் சொல்லப்பட்டுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்பவர்க்கு நன்கு பயன்படும். புரிந்து கொள்ளாதவர்க்கு உண்மை விளங்காது. விளங்காமல் போகவேஅவற்றைப் பொய் என்று சொல்லுதல் கூடாது. "கடவுள் உனக்குத் தோன்றாமையால்கடவுளே இல்லை என்று சொல்லாதே" என்றார் இராமகிருஷ்ணர். பகல் பொழுதில் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் கண்ணுக்குப் புலனாகவில்லை என்பதற்காகநட்சத்திரங்களே இல்லை என்று சொல்லுதல் தகாது. புராணங்களில் உள்ள உண்மைகள் விளங்கவில்லை என்பதற்காகஅவற்றில் உண்மை இல்லை என்று சொல்லுதல் தகாது. ஒருவர் சொல்லுவது விளங்காமல் இருக்கலாம். இல்லை என்பதற்கும்புலனாகவில்லை என்பதற்கும் வேறுபாடு உண்டு. புராணத்தில் உள்ள உண்மை விளங்கவில்லை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

 

     சில ஏதுக்களால்இறைவனது இருப்பை உணர்ந்து கொள்ளலாம். அழகிய கட்டிடம் ஒன்றைக் கண்டால்அதைச் செய்தவன் யாராக இருக்கலாம் என்று வியப்புறுகின்றோம். அழகிய அணிகலன்களைக் கண்டால்இவ்வளவு அழகாக ஒருவன் செய்திருக்கின்றானே என்று எண்ணுகின்றோம். நல்ல ஆடையைக் கண்டால்இதை இவ்வளவு அழகாக ஒருவன் நெய்து அளித்து இருக்கின்றானே என்று மகிழ்கின்றோம். அதுபோலவேஇந்த உலகத்தையும்உலகப் பொருள்களையும் கண்ணுறும்போதுஇதை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகவேண்டும். அவன்தான் இறைவன்.

 

மண்டபம் ஆதி கண்டோர்,

     மயன்உளன்என்னல் போலும்;

குண்டலம் முதல் கண்டோர்பொற்- 

     கொல்லன் உண்டுஎன்னல் போலும்;

ஒண்துகில் கண்டோர்,நெய்தோன் 

     ஒருவன் உண்டுஎன்னல் போலும்;

அண்டம் மற்று அகண்டம் செய்தோன் 

     உளன் எனஅறிவாய் நெஞ்சே.       --- நீதிநூல்.

 

     புராண கதைகளைப் பற்றிஅருளாளர்கள் அனைவரும் பாடி உள்ளார்கள். இந்தப் புராண வரலாறுகள் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வருகின்றன என்று வரையறை செய்யமுடியாது.

 

     புராணங்களின் உண்மையை உணர்ந்து கொள்ளாதவர்களை "மூடர்கள்" என்கின்றார் திருமூல நாயனார். புராணங்கள் உண்மையில் நிகழ்ந்தவையாஇல்லையாஎன்பது திருமூலருடைய நோக்கம் அல்ல. புராணக் கருத்துக்களைத் தெரிந்து கொண்டோமா என்பதுதான் நோக்கம்.

 

     சிவபெருமான் திரிபுர தகனம் செய்தான் என்று சிவனடியார்கள் சொல்லுவதில் தவறு இல்லை. சொல்லியவர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல. சொல்லிய அளவிலேயே நின்று விடுபவர்களைஅதற்குமே சிந்தித்து உணராதவர்களை "மூடர்கள்" என்கின்றார். இப்படியும் சொல்லலாமாசிவனடியார்களைஇன்னொரு சிவனடியார் இப்படிச் சொல்வது அபராதம் அல்லவாஎன்று தோன்றலாம். பயைழபடிகாகம்நரி பற்றிய கதைக்குச் செல்வோம். இந்தக் கதை ஏன் வந்தது என்பதை உணராமல் போனால்கதையால் என்ன நன்மைகதையை எதற்குச் சொல்லுகின்றோம் என்று உணராமல்வெறும் கட்டுக்கதையைச் செல்வது அவசியம்தானாஎன்ற வினாக்கள் எழும். அதுபோலத் தான்சொல்லிய பாட்டின் உள்ளே பொதிந்து உள்ள பொருளைஅது எதற்காக உண்டானது என்பதன் உண்மையை உணர்ந்து நலம் பெறவேண்டும். அதுதான்புராணத்தின் பயன். பயனில்லாத ஒன்றை ஏன் கைக்கொள்ள வேண்டும்?

 

     திரிபுரங்களைச் சிவபெருமான் எரித்தது ஒரு புராணக் கதை. இதை எப்படிப் பார்க்கவேண்டும்மூன்று மலங்களோடு சம்பந்தப்பட்டு உயிர்கள் பிறரைத் துன்புறுத்திதானும் துன்புறுவதற்கான வழியை நாடுகின்றன. எனவேதுன்பத்திற்குக் காரணமான மூன்று மலங்கள் என்று சொல்லப்படும்மூன்று புரங்களை அழித்தான் இறைவன். அதில் உள்ள தலைவர்களை அழிக்கவில்லை. மூன்று மலங்களும் அழிந்த பிறகு,முப்புராதிகள் இறைவனுக்குத் தொண்டர்களாக மாறிவிட்டார்கள். முப்புரங்களோடு திரிந்து கொண்டு இருந்தபோதுஅரக்கர்களாக இருந்தவர்கள்அவற்றை விட்டு நீங்கிய பிறகுஇறைவனுக்கு அருகில் இருக்கும் பேற்றினைப் பெற்றார்கள்.

 

     ஆணவம்மாயைகன்மம் என்னும் மும்மலங்களால் பிணிக்கப்பட்டு உயிர்கள் நிலைபேறு இல்லாமல் பிறவியில் உழன்றுகொண்டே இருக்கின்றன. அதனால்தனக்கும் துன்பம்பிறருக்கும் துன்பம். இறைவன் திருவருளால்மூன்று மலங்களும் அழிந்துபோன பிறகுஉயிர்கள் இன்புற்று இருந்தன. இந்தக் கருத்தைத் தான் திரிபுர தகனம் சொல்லுகின்றது. இதை உணராமல்வெறும் கதையையே சொல்லிக் கொண்டு உழல்பவர்களை "மூடர்கள்" என்றார்.

 

பாடலைப் பார்ப்போம்....

 

அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்,

முப்புரம் ஆவது மும்மல காரியம்,

அப்புரம் எய்தமை யார் அறிவாரே.

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் வாயிலாகக் கூறக் கேட்கின்றபோதுஅறிவில்லாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டுஅவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்து ஒழிகின்றனர். அந்தப் புராண வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் மிகச் சிலரே."இரும்புவெள்ளி,பொன்" என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையேஉயிர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கும்"ஆணவம்மாயை,கன்மம்என்னும் மும்மலங்களைக் குறிப்பன.சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கினான்என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத்துஉயிர்களுக்கு அருள் புரிகின்றான்" என்னும் உண்மையையே இந்த வரலாறு சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

 

     நாம் முப்புரங்களோடு (மூன்று மலங்களோடும்) திரியும் அரக்கர்களாக இருக்கின்றோம். இறைவனது அருட் பார்வை நம் மீது படுமானால்நம்மிடத்தில் உள்ள மும்மலங்களும் அழிந்து போய்அவனுக்குத் தொண்டுபட்டுஇன்புற்று இருப்போம் என்னும் ஆர்வமானது இந்த வரலாற்றின் மூலமாகப் பெறப்படவேண்டும். இதை விரித்து உணர்த்தவே இந்தக் கதை சொல்லப்பட்டது. திரிபுர தகனம் உண்மையில் நிகழ்ந்ததாஇல்லையாஎன்பது பொருள் அல்ல. உண்மையா இல்லையா என்பதுஅந்தப் பக்குவம் வரும்போது தன்னால் விளங்கும். சொன்னால் மட்டும் விளங்காது. ஐந்து வயது குழந்தைக்குதிருமணம் என்று சொன்னால் விளங்காது. திருமணப் பருவம் வந்தால் சொல்லாமலே விளங்கும்.

 

"திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை

அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா,

புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்,

பரிவொடு நின்று பரிசு அறிவானே".        --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உழன்று கொண்டு வரும் முப்புரங்களைச் செம்மை செய்யும் பொருட்டுச் சிரித்து எரித்தவன் சிவபெருமான். அவனை அணுகுவதற்கு அருமையானவன் என்று நினைத்து யாரும் மனத்தளர்வு கொள்ளுதல் வேண்டாம். பேரன்பாகிய காதல் உடையார்க்கு அவர் வேண்டியவாறு திருவுருக் கொண்டு வந்து அருள் புரிவதில் ஒருபோதும் தவற மாட்டான். அழியாச் செல்வம் நிறைந்த ஆண்டவன் ஆகிய அவன்,அன்புடன் உயிர்க்கு உயிராய் நின்றுஉயிர்கள் வேண்டுவனவற்றை அறிந்து,ஆங்காங்கு அவ்வப்பொழுதே அருள் செய்வான்.

 

     இப்படியே எல்லாப் புராணங்களிலும்இதிகாசங்களிலும் பல வாழ்வியல் உண்மைகள் பொதிந்து உள்ளன. அவற்றைக் கதையாகச் சொல்வதும்கேட்பதும் ஒழிந்துதக்க சான்றோர் வாயிலாக உண்மைப் பொருளை அறிந்து கொள்ளுதல் நலம்.

     

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...