திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 039 --- இறைமாட்சி
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "இன்சொல் கூறி,கொடுத்துக் காக்க வல்ல அரசனுக்குத் தன் புகழோடு பொருந்தி, அவனது கட்டளைகளால், இந்த உலகம் தான் கருதியது போலவே அமையும்" என்கின்றார் நாயனார்.
இன்சொல் --- கேள்வியாலும், தொழிலாலும் இனிமையாகிய சொல்.
ஈதல் --- வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்.
அளித்தல் --- காத்தல். அது, மனுநீதிச் சோழன் பற்றி,தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டியது போல.
மாநிலம்கா வலன்ஆவான்
மன்உயிர்காக் கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ. --- பெரியபுராணம்.
தனது ஆளுகைக்கு உட்பட்ட பெரிய நிலவுலகத்தினைக் காக்கின்ற பொறுப்பில் உள்ள அரசனானவன், தான் அரசாட்சி புரிந்து, நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்து, அந்த உயிர்களுக்குத் தன் காரணமாயகவும், தனது ஆளுகையின் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள் மட்டுமல்லாது, அரசனது சுற்றத்தார் காரணமாகவும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாகவும், கள்வர் காரணமாகவும், விலங்கு முதலிய பிற உயிர்கள் காரணமாகவும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவனாக இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட அரசனுக்குத் தான் நினைத்தவை எல்லாம் உண்டாகும்.
திருக்குறளைக் காண்போம்...
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு, தன் சொலால்
தான் கண்டு அனைத்து இவ் உலகு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு--- இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு,
இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து--- இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவு படாமல் காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)
பின் வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்தள்ளமை காண்க...
இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?
இதன் பதவுரை ---
(ஓர் அரசன்) இனிய சொல்லினன் --- (கேட்டார்க்கு) இனிமை பொருந்தச் சொல்லும் இன்சொல் உடையவன்; ஈகையன் --- நல்ல கொடைத்திறம் உள்ளவன்; எண்ணினன் --- ஆராய்ச்சி உடையவன்; வினையன் --- முயற்சி உடையவன்; தூயன் --- தூய்மையானவன்; விழுமியன் --- சிறந்தவன்; வென்றியன் --- வெற்றி உடையவன்; நினையும் நீதிநெறி கடவாதவன் --- ஆராய்ந்து அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன்;எனில் --- என்றால்; அனைய மன்னற்கு --- அப்படிப்பட்ட அரசனுக்கு;அழிவும் உண்டாம் கொலோ? --- கேடும் உண்டாகுமோ?’ (உண்டாகாது).
No comments:
Post a Comment