040. கல்வி --- 09. தாம் இன்புறுவது

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தாம் இன்பத்தை அடைவதற்குக் காரணமான கல்வியால் உலகமானது இன்புறுவதைக் கண்டுஅதன் சிறப்பை நோக்கி,கற்று அறிந்தவர்,பின்னும் அதனையே விரும்புவர்" என்கின்றார் நாயனார்.

 

     தாம் இன்புறுதலாவதுதாம் கற்ற கல்வியால் நிகழ்காலத்தில் சொற்பொருகள்களின் சுவையை அனுபவித்தல். அதனால் புகழும்பொருளும்சிறப்பும் பெறுதல். எதிர் காலத்தில்அறத்தையும்வீட்டின்பத்தையும் பெறுதல். 

 

     உலகம் இன்புறுதலாவதுஇப் பெரியாரோடு கூடியதால்நாம் இதுவரையில் அறியாதவைகளை அறிந்தோம் என்று மகிழ்ச்சி கொள்ளுதல்அதனால் உள்ளமும் உடலும் பொலிவு பெற,நரைதிரை இல்லாமல் இருத்தல்.

 

     பொருட்செல்வமாக இருந்தால்அதனைச் சம்பாதித்தல்காப்பாற்றுதல்இழத்தல் ஆகியவற்றால் துன்பத்தை அடைதலும்பல்லாரது பகையைக் கொள்ளுதலும் உடையது எனத் தெரிந்து,அதனை விரும்பாமையால், "கல்வியைக் கற்று அறிந்தார்" என்றார். 

 

     கரும்பு தின்னக் கூலியும் பெறுவதுபோதாம் இன்பம் அடைவதோடு,உலகமும் இன்பம் அடைவது கல்வியால் அன்றிமற்றொரு வழியாலும் கூடாது என்பதால்அந்தக் கல்வியையே ஒருவர் விரும்புவார் என்பதற்குக் "காமுறுவர்" என்றார்.

 

திருக்குறளைக் காண்போம்... 

 

 

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு,

காமுறுவர் கற்று அறிந்தார்.                 

 

இதற்குப் பரிமேலகழர் உரை ---

 

     தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு--- தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி

 

     கற்றறிந்தார் காமுறுவர்--- கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.

 

            (தாம் இன்புறுதலானதுநிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும்புகழ் பொருள் பூசை பெறுதலானும்எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும்அதனான் இடையறாத இன்பம் எய்துதல்.உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல்.


‘யாண்டுபல ஆக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடுமக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்வேந்தனும்
அல்லவை செய்யான்காக்கஅதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் 
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.

 

            நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாய் இருக்க,  நரை இல்லை ஆகுதல் எப்படி ஆயினீர் எனக் கேட்பீர் ஆயின்என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய மனைவியுடனேபுதல்வரும் அறிவு நிரம்பியவர். யான் கருதிய அதனையே செய்வர் என்னுடைய ஏவல் செய்வாரும். அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும். அதற்குமேலே யான் இருக்கின்ற ஊரின்கண்நற்குணங்களால் அமைந்து பணியவேண்டும் உயர்ந்தாரிடத்துப் பணிந்துஐம்பலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர் பலராதலால்.

 

     செல்வமாயின்ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும்பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்துஅதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்என்றும்கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

இறைவரும் கைவிடார் எடுஅவர்பால் சென்ற

பிறரும் அறிந்து இன்பம் பெறலால், ---  அறிதொறூஉம்

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர்கற்று அறிந்தார்.  

 

            இறைவர் --- சிவபெருமான். திருப்பெருந்துறையில் திருவாதவூரருக்குக் காட்சி அளித்தபோதுசிவபெருமான் தம் கையில் சிவஞானபோதச் சுவடியை வைத்து இருந்தார் என்ற செய்தியை உள்ளத்தில் கொண்டுஇறைவரும் கைவிடார் ஏடு என்றார். பிறரும் என்றது திருவாதவூரரை உள்ளிட்ட மாணவர் குழாத்தினரை.

                                    

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாகபெரியபுராணத்தில் வரும் ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் வரலாற்றை வைத்துகுமார பாரதி என்பார் பாடி அருளிய"திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்... 

 

நாடல்அரும் நற்பதிகள் நண்ணிநல் வெண்பாஆய்ந்து

ஆடல்அரனுக்கு அளித்தார் ஐயடிகள் -- காடவர்கோன்

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.              

 

இதன் பொருள் ---

 

            ஐயடிகள் காடவர்கோன் நாயனார் தொண்டை மண்டலத்திலே காஞ்சிபுரத்திலே பல்லவர் குலத்தில் அவதரித்தவர். சைவத் திருநெறி வாழும்படி அரசு இயற்றியவர். எல்லா உயிர்களும் இம்மை இன்பத்தையும்மறுமை இன்பத்தையும் பெற்று வாழ்ந்து முத்தியின்பத்தை அடைதல் வேண்டும் என்னும் எண்ணம் நிறைந்தவர். பிறநாடுகளையும் தம் அரசின்கீழ் வைத்து உயிர்கள் இன்புறச் செய்தார். சிலகாலம் செல்ல அரசாட்சியும் துன்பமயம் எனக் கருதினார். வெறுத்தார். தனது மகனுக்கு அரசுச் சுமையை ஏற்றினார். சிதம்பரம் முதலிய சிவத்தலங்கள் தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பணிகளை இயற்றினார்.  தலங்களுக்கு ஒவ்வொரு திருவெண்பா பாடினார். இவ்வாறு நெடுங்காலம் வாழ்ந்திருந்து சிவபதத்தை அடைந்தார்.  

 

            தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கிகற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர் என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...