நல்லவர்க்கு நல்லவனாக இரு
பொல்லாதவர்க்குப் பொல்லாதவனாக நடி
----
"வெந்நீரில் தண்ணீர் தெளித்தல்" என்பது ஒரு முதுமொழி.வெந்நீர் அதிக வெம்மையாக இருந்தால், அதில் தேவைக்கு ஏற்ப,தண்ணீரைக் கலந்து பயன்படுத்துவோம். வளாவுதல் என்று இது சொல்லப்படும். பதமாக்குதல் என்றும் சொல்லப்படும். வெந்நீரில் தண்ணீர் கலந்து பதமாக்கிக் கொள்ளுதல் போல, மனிதர்களும் அவரவர்க்குத் தக்கவாறு ஒழுகி, காரியத்தை ஆற்றிக் கொள்ளவேண்டும்.
கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த நல்லாரோடு பழக நேர்ந்தால், அவரிடத்தில் தமது அறிவை வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில், கற்றாரைக் காற்றரே காமுறுவர். அவரிடத்து உள்ள அறிவினைக் கொண்டு, தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாறாக, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறவாதார் உள்ளத்தில் கரவு உடையவராக இருப்பார்கள். கரவு என்றால், வஞ்சனை, பொய், களவு என்று பொருள். இப்படிப்பட்ட குணம் உள்ளவரிடத்தில், பொறாமை மிகுந்து இருக்கும். எப்படியாவது பிறரை வஞ்சித்து வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் இவர்கள். இவர்கள் வன்மையான நெஞ்சம் படைத்தவர்கள். ஆனால்,தமது வன்மையை வெளிக்காடிக் கொள்ள மாட்டார்கள். நல்லவர்கள் போலவே இவர்களது தோற்றமும், நடவடிக்கைகளும் இருக்கும். பழகப் பழகத் தான் உண்மை தெளியவரும். இவர்களிடத்தில் இறைத் தன்மை எள்ளளவும் இருக்காது. இறைவன் இவர்களை அணுகவே மாட்டான்.
"கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை, கரவார்பால் விரவாடும் பெரியானை" என்றார் அப்பர் பெருமான்.
இறைவனை ஒரு பொழுதும் நினையாமல் மறந்து, வஞ்சனையும், பொய்யும், சூதும் உள்ளத்தில் வைத்து, உலக இன்பங்களில் திளைத்து இருக்கும் வன்மையான உள்ளத்தை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாகவும், வஞ்சனை இல்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து மகிழ்பவனாகவும் இறைவன் உள்ளான். உள்ளத்தில் கரவு வைத்து உள்ளவர்களுக்கு என்றே, கடுமையான நரகங்களை இறைவன் வகுத்து வைத்து உள்ளான் என்பதை, "கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்" என்று காட்டினார் அப்பர் பெருமான். வஞ்சனை இல்லாத மனத்தவராகிக் கையால் (கை --- ஒழுக்க நெறி) தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்பவன் இறைவன் என்பதால்,
"கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவு நின்று எரியதாடி இன்னருள் செய்யும் எந்தை"
என்றார்.
எனவே, உள்ளத்தில் கரவு என்னும் வஞ்சனை உடையாரிடத்தில், உள்ளத்தால் விரவி இருத்தல் கூடாது என்பது புலப்படும்.
உலகத்தில் நல்லவர்களும் பொல்லாதவர்களும் விரவியே இருப்பார்கள். நல்லவர்களோடு கூடி இருந்தால் நன்மை உண்டாகும். தீயவர்கள் என்று புறந்தள்ளினால்,அவர்களால் தீமை உண்டாகும். என்ன செய்வது? என்றால், வெந்நீரில் தண்ணீர் கலந்து வளவுவது போல் இரு என்றனர் சான்றோர்.
உள்ளத்தில் கரவு உடையவரிடத்தில், அவரை விட நாமும் உள்ளத்தில் கரவு உடையவராகவே ஒழுக வேண்டும். அவரிடத்தில் நாம் செம்மை உடையவராகக் காட்டிக் கொண்டால்,அது தமது அறியாமை என்று கொண்டு மகிழ்வார்கள். திருந்தவும் வழி இருக்காது. எனவே, அவரை விடவும் நாம் வஞ்சனை உள்ளவர் என்பது போலக் காட்டினால் தான் பாதுகாப்பு. இவன் நம்மை விடப் பொல்லாதவன் என்று எண்ணி,நம்மிடம் இருந்து விலகியே இருப்பார். அப்படி விலகி இருக்க, அவரால் நமக்குத் தொந்தரவு உண்டாகாது.
ஆனால், அன்பு உள்ளம் கொண்டவர் இடத்தில், அவரைப் போலவே அன்பு கொண்டு ஒழுகவேண்டும். இதனால் இருபுறத்தும் நன்மை உண்டாகும்.
"பழமொழி நானூறு" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் இது சொல்லப்பட்டு உள்ளது.
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந்நீர் அவரவர்க்குத் தக்காங்க் ஒழுகுபவே,
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.
தமது காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள், செம்மையான தன்மையை உடையவரைப் போன்று தோன்றி,உள்ளத்தில் ஒருவரது காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும், பொய்ம்மையான தன்மை உடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ளம் உடையார்க்கும், மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளுதல் போல, அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம்ஒழுகவேண்டும்.
காரியத்தில் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவும் இருந்து தம் கருத்தை நிறைவேற்றுவார் என்பது இப் பாடலின் கருத்து.
இடம் அறிந்து ஒழுகுதல் வேண்டும் என்பதைக் காட்ட, "அவை அறிதல்" என்னும் அதிகாரத்தினைத் திருவள்ளுவ நாயனார் வைத்தார். இந்த அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளில், "அறிவு சான்ற பெரியோர் எதிரில் தாமும் அறிவில் சிறந்து விளங்கவேண்டும். அறிவில்லாதவரது சபையில், அவர் மதிக்கும் விதமாக,தாமும் வெண்சுண்ணம் போலப் பேதையர் ஆகவேண்டும்" என்கின்றார் நாயனார்.
"நல் தாமரைக் கயத்தில் நல்ல அன்னம் சேர்ந்தால் போல,கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்று ஔவைப் பிராட்டியார் சொன்னது போல், கற்றவர்கள் கற்றவர்களைத் தான் விரும்புவார்கள். அறிவு இல்லாதவராக என் நடிக்க வேண்டும் என்றால், "கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்" என்றார் ஔவையார். கல்வி அறிவு இல்லாதவர்க்கு, தம்மைப் போன்று கல்வி அறிவு இல்லாதவர்கள்தான் நல்லவர்களாகத் தோன்றுவார்கள் என்பதை, "கல்லாத மூடர்க்கு, கல்லாதார் நல்லராம்" என்றார் திருமூல நாயனார்.
"ஒள்ளியார்" என்னும் சொல் "ஒளியார்" என வந்தது. ஒண்மை அறிவுடைமை. ஒள்ளியார் என்றது தம்மில் மிக்காரையும், தம்மோடு ஒத்தாரையும் குறிக்கும்.
வயிரம் இல்லாத மரத்தை "வெளிறு" என்பது பற்றி, அவை அறியாத புல்லரை "வெளியார்" என்றார். வெளிறு என்னும் சொல்லுக்கு, பயனின்மை, அறியாமை, குற்றம் என்று பொருள்.
"ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல், வெளியார்முன்
வான் சுதை வண்ணம் கொளல்".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
எனவே, நல்லவர்களிடத்தில்நல்லவனாகத் தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டாலும், நாளடைவில் அவர்களது தொடர்பே ஒருவனை நல்லவன் ஆக்கிவிடும். அப்படி இல்லாவிட்டால் அது பாவம். பொல்லாதவர்களிடத்தில் பொல்லாதவன் போலக் காட்டிக் கொள்ளவேண்டும். பொல்லாதவர்களிடம் சேர்ந்து பொல்லாதவனாகவே ஆகிவிட்டால் அதுவும் பாவம்.
No comments:
Post a Comment