அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஏகமாய் பலவாய் (பொது)
முருகா!
மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாய்.
தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏக மாய்ப்பல வாய்ச்சிவ
போக மாய்த்தெளி வாய்ச்சிவ
மீதெ னாக்குரு வார்த்தையை ...... யுணராதே
ஏழு பார்க்கும்வி யாக்கிரன்
யானெ னாப்பரி தேர்க்கரி
யேறு மாப்பிறு மாப்புட ...... னரசாகி
தோகை மார்க்கொரு காற்றொலை
யாத வேட்கையி னாற்கெடு
சோர்வி னாற்கொடி தாக்கையை ...... யிழவாமுன்
சோதி காட்டவ ராச்சுத
நாத னார்க்கருள் போற்றிய
தூரி தாப்பர மார்த்தம ...... தருள்வாயே
நாக மேற்றுயில் வார்க்கய
னான பேர்க்கரி யார்க்கொரு
ஞான வார்த்தையி னாற்குரு ...... பரனாய
நாத நாட்டமு றாப்பல
காலும் வேட்கையி னாற்புகல்
நாவ லோர்க்கரு ளாற்பத ...... மருள்வாழ்வே
வேக மேற்கொ ளராப்புடை
தோகை மேற்கொடு வேற்கொடு
வீர மாக்குலை யாக்குல ...... வரைசாய
மேலை நாட்டவர் பூக்கொடு
வேல போற்றியெ னாத்தொழ
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஏகமாய், பலவாய், சிவ-
போகமாய், தெளிவாய், சிவம்
ஈது எனாக் குரு வார்த்தையை ...... உணராதே,
ஏழு பார்க்கும் வியாக்கிரன்
யான் எனா, பரி தேர்க் கரி
ஏறு மாப்பு இறுமாப்பு உடன் ...... அரசாகி,
தோகைமார்க்கு ஒருகால் தொலை-
யாத வேட்கையினால், கெடு
சோர்வினால், கொடிது ஆக்கையை ......இழவாமுன்,
சோதி காட்ட, வர அச்சுத
நாதனார்க்கு அருள் போற்றிய,
தூரிதா பரமார்த்தம் அது ...... அருள்வாயே.
நாக மேல் துயில்வார்க்கு, அயன்
ஆன பேர்க்கு, அரியார்க்கு, ஒரு
ஞான வார்த்தையினால் குரு ...... பரன் ஆய
நாத! நாட்டம் உறா, பல-
காலும் வேட்கையினால் புகல்
நாவலோர்க்கு அருளால் பதம் ...... அருள்வாழ்வே!
வேக மேல் கொள் அராப் புடை
தோகை மேல்கொடு, வேல்கொடு,
வீரமாக் குலையாக் குல ...... வரைசாய,
மேலை நாட்டவர் பூக்கொடு,
வேல போற்றி, எனாத் தொழ
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.
பதவுரை
நாகம் மேல் துயில்வார்க்கு---ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளுகின்ற திருமாலுக்கும்,
அயன் ஆன பேர்க்கு அரியார்க்கு--- பிரமதேவனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு,
ஒரு ஞான வார்த்தையினால் குருபரன் ஆய நாத--- ஒப்பற்ற ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கிய தலைவரே!
நாட்டம் உறா --- நாட்டத்தை உமது திருவடியில் வைத்து,
பல காலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு--- உள்ளத்தில் கொண்ட வேட்கை காரணமாகப் பலகாலும் உமது திருப்புகழைப் பாடுகின்ற புலவர்களுக்கு,
அருளால் பதம் அருள் வாழ்வே--- திருவருள் புரிந்து திருவடிப் பேற்றினை அருள் புரிகின்ற செல்வமே!
வேகம் மேற்கொள் அராப் புடை தோகை மேல் கொடு--- வேகமாகச் செல்லும் பாம்பைப் புடைக்கின்றமயிலின் மேலு இருந்து,
வேல் கொடு--- வேலாயுதத்தால்
வீர மாக் குலையா--- கடல் நடுவில் வீரம் மிக்க பெருமரமாக நின்ற சூரபதுமன் அழியவும்,
குலவரை சாய--- (அதற்கு முன்பாக) கிரவுஞ்ச மலை அழியவும்,
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றி எனாத் தொழ--- மேல் உலகத்தவர்கள் மலர் மாரி பொழிந்து,"வேலாயுதரே! போற்றி" எனத் தொழுது வணங்க,
வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே--- கடல் கலங்கி ஓலமிட, வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
ஏகமாய்--- ஒன்றாய்,
பலவாய்--- பலவுமாய்,
சிவபோகமாய் --- சிவபோகமாகி,
தெளிவாய்--- தெளிவு தரும் பொருளாகி,
சிவம் ஈது எனா--- மங்கலப் பொருளாக உள்ளது இதுவே என்று உணர்த்திய
குரு வார்த்தையை உணராதே--- குருநாதரின் உபதேசத்தைத் தெளியாமல்,
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யான் எனா--- ஏழு உலகங்களுக்கும் புலியைப் போன்றவன் நானே என்று,
பரி தேர்க் கரி ஏறும் மாப்பு--- குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறுவதில் மிகுந்து,
இறுமாப்புடன் அரசாகி--- செருக்குக் கொண்டுஅரசுரிமையைச் செலுத்தி,
தோகைமார்க்கு ஒரு கால் தொலையாத வேட்கையினால்--- மாதர்களிடத்தே ஒருபோதும் நீங்காத காம இச்சையால் உண்டான
கெடு சோர்வினால்--- அழிவைத் தருகின்ற தளர்ச்சியால்,
கொடிது ஆக்கையை இழவா முன்--- கொடுமையான வழியிலே இந்த உடம்பை இழந்து போகாத முன்னம்,
சோதி காட்ட--- உண்மைப் பொருளை அடியேன் தெளிந்து உய்யுமாறு,
வர அச்சுதனார்க்கு அருள் போற்றிய--- திருஞானசம்பந்தராய் வந்து, சிவசாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் புரிந்த,
தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே --- மேலான பொருளை அடியேனுக்கு விரைந்து உபதேசித்து அருள்வாயாக.
பொழிப்புரை
ஆதிசேடன் என்னும் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்ளுகின்ற திருமாலுக்கும், பிரமதேவனுக்கும் அரியவரான சிவபெருமானுக்கு, ஒப்பற்ற ஞான உபதேசம் செய்த காரணத்தால் குரு மூர்த்தியாய் விளங்கிய தலைவரே!
நாட்டத்தை உமது திருவடியில் வைத்து, உள்ளத்தில் கொண்ட வேட்கை காரணமாகப் பலகாலும் உமது திருப்புகழைப் பாடுகின்ற புலவர்களுக்கு, திருவருள் புரிந்து திருவடிப் பேற்றினை அருள் புரிகின்ற செல்வமே!
வேகமாகச் செல்லும் பாம்பைப் புடைக்கின்றமயிலின் மேல் இருந்து, வேலாயுதத்தால் கடல் நடுவில் வீரம் மிக்க பெருமரமாக நின்ற சூரபதுமன் அழியவும், அதற்கு முன்பாக கிரவுஞ்ச மலை அழியவும், மேல் உலகத்தவர்கள் மலர் மாரி பொழிந்து,"வேலாயுதரே! போற்றி" எனத் தொழுது வணங்க, கடல் கலங்கி ஓலமிட, வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!
ஒன்றாய், பலவுமாய்,சிவபோகமாகி, தெளிவு தரும் பொருளாகி, மங்கலப் பொருளாக உள்ளது இதுவே என்று உணர்த்திய குருநாதரின் உபதேசத்தைத் தெளியாமல், ஏழு உலகங்களுக்கும் புலியைப் போன்றவன் நானே என்று, குதிரை, தேர், யானை இவற்றின் மீது ஏறுவதில் மிகுந்து, செருக்குக் கொண்டு அரசுரிமையைச் செலுத்தி, மாதர்களிடத்தே ஒருபோதும் நீங்காத காம இச்சையால் உண்டானஅழிவைத் தருகின்ற தளர்ச்சியால், கொடுமையான வழியிலே இந்த உடம்பை இழந்து போகாத முன்னம், உண்மைப் பொருளை அடியேன் தெளிந்து உய்யுமாறு, திருஞானசம்பந்தராய் வந்து, சிவசாரூபம் வேண்டி வரம் கிடந்த திருமாலுக்கு அருள் பரிந்த மேலான பொருளை அடியேனுக்கு விரைந்து உபதேசித்து அருள்வாயாக.
விரிவுரை
ஏகமாய், பலவாய், சிவபோகமாய், தெளிவாய், சிவம் ஈது எனா குரு வார்த்தையை உணராதே---
இறைவன், சொரூப நிலையில், ஒப்பற்ற ஒரு பொருளாகவும்,
உலகத்தை நோக்கி நின்று அதனைச் செயற்படுத்தும் பொது நிலையில் அநேகன் ஆகவும் உள்ளான்.
"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க" --- திருவாசகம்.
"ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்,கழல்சேர்வார்
நன்று நினைந்து நாடற்கு உரியார்" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.
"ஒன்றாய் அரும்பி,பலவாய் விரிந்து,இவ்வுலகு எங்குமாய்
நின்றாள்,அனைத்தையும் நீங்கி நிற்பாள்" என்பது அபிராமி அந்தாதி.
இறைவனது சொரூப தடத்த நிலைகளையும், அவனை அறிய வேண்டிய ஆன்மாவினது நிலையையும், இறைவனை அறிய ஆன்மாவின் அறிவு விளங்கவொட்டாமல் தடுக்கின்ற பாசத்தினது தன்மைகளையும் குருநாதர் விளக்கி, தெளிவுபடுத்தி, உபதேசம் செய்து வைப்பார். குருநாதர் மனித உரு எடுத்த தெய்வம். குருநாதனை மனிதனாக எவன் எண்ணுகின்றானோ அவன் நற்கதி அடையான். "குருவே சிவம் எனக் கூறின்ன் நந்தி" என்பது திருமூலர் வாக்கு. ஆதலால் குரு வார்த்தைக்கு மறுவார்த்தை நினைக்கக் கூடாது. அவர் அருளிய உபதேசப் பொருளை உணர்ந்து, மெல்லத் தெளிந்து அறிந்து சிவயோகியாக வேண்டும். "குருநாதன் சொன்ன நீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகள்" என்றார் அடிகளார்.
ஆன்மாவின் அறிவுக்கு அறிவாய் இருந்தும், அவ் ஆன்ம அறிவால் அறியப்படாத இறைவனே உலகில் குருவடிவாக எழுந்தருளி வந்து பக்குவ ஆன்மாக்களுக்கு அருள் புரிவர். "அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை" என்பது மணிவாசகம்.
உயிரானது பல பிறவிகளையும் எடுத்து எடுத்து இளைத்து, கொடிய நரகபோகமான துன்பங்களையும், சொர்க்கம் முதலிய உலகங்களில் அநுபவிக்கப்படும் எல்லாப் போகங்களையும் அநுபவிக்கச் செய்து, இவ்வகையில் ஆன்மாக்கள் அடையும் மலபரிபாகத்தால் முத்தி அடைதற்கு ஏதுவான நல்ல புண்ணியம் சிறிது பொருந்திய அளவில், தத்தம் சமயமே சிறந்தது என, வாதம் புரிதற்கு ஏதுவாக இயற்றப் பெற்று உள்ள பழமையான நூல்களை உடைய புறச்சமயங்கள் தோறும், அவ் அச்சமய நூல்களே வீட்டுநெறி கூறும் உண்மை நூல் என்று அறிந்து, அவற்றில் மனம் அழுந்துமாறு செய்து, அதன்பின், புறச் சமயங்களில் இருந்து அகச் சமயத்துள் புகுத்தி, முற்பட்ட நூல்களாகிய வேத சிவாகமங்களில் கூறியுள்ள விரதங்கள் முதலிய பலவகைப்பட்ட உண்மைத் தவத்தின் பயனாக மெய்ந்நெறியினை உணர்த்தும் சிவாகமத்தில் கூறிய சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சார்பு கொள்ளச் செய்து,அவற்றின் வாயிலாகத் திருவருள் மிக்குப் பெருகா நின்ற சிவசாலோகம், சிவசாமீபம், சிவசாரூபம் என்ற மூன்று பரமுத்திகளையும் அநுபவிக்கச் செய்து, நான்கு வகைப்பட்ட சத்திநிபாதங்களை அளித்தற்கு ஏதுவாகிய இருவினை ஒப்பு உண்டாகும் காலம் தோன்றிப் பாசத்தைத் தருதற்கு மூலகாரணமான ஆணவமலம் ஒடுங்குதற்குரிய பக்குவகாலம் வரும் வரையில்,பலகாலமாக உயிர்கள் இறைவன் அருள் நோக்கி வருந்திக் கொண்டு இருத்தலை நோக்கி அருள் செய்து, தனது கருணைத் திருவுருவான குருவடிவத்தை மேற்கொண்டு எழுந்தருளி, தனது அருட் பார்வையினால், ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம் உடைய சகலராகிய ஆன்மாக்கள், பல பிறவிகளிலும் ஈட்டி வைத்து உள்ள பழைய வினை - சஞ்சித வினை முழுவதையும் நீக்கி, தூல சூக்கும உடல் கருவிகள் அறுபத்து எட்டும், முலாதாரம் முதலிய எழு நிலங்களும், மந்திராத்துவா முதலிய ஆறு அத்துவாக்களும் அடியோடு விட்டு நீங்க, ஆணவமலம் என்கின்ற நோயாகிய திரையைக் கிழித்து, ஆன்ம அறிவால் காண முடியாத மெய்ஞ்ஞானக் கண் ஒளியைத் தந்து அருளி, இறைவன் திருவடிகளை அறிய மேற்கொள்ளும் அன்பாகிய திருவடி ஞானத்தால் பரம்பொருளாகிய தன் நிலையையும் - பதிப் பொருளையும், ஆன்ம நிலையையும் - பசுப் பொருளையும், அறியும்படி செய்வான்.
– வெந்நிரய
சொர்க்க ஆதி போகம் எலாம் துய்ப்பித்து, பக்குவத்தால்
நல்காரணம் சிறிது நண்ணுதலும், - தர்க்கமிடும்
தொல்நூல் பரசமயம் தோறும், அதுஅதுவே
நல்நூல் எனத் தெரிந்து, நாட்டுவித்து, - முன்நூல்
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மை,
சரியை கிரியா யோகம் சார்வித்து, - அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து,
ஆலோகம் தன்னை அகற்றுவித்து, - நால்வகையாம்
சத்தி நிபாதம் தருதற்கு, இருவினையும்
ஒத்து வரும் காலம் உளஆகி, - பெத்த
மலபரிபாகம் வரும் அளவில், பல்நாள்
அலமருதல் கண்ணுற்று, அருளி, - உலவாது
அறிவுக்கு அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்த நிலை நீங்கி, - பிறியாக்
கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு, – திருநோக்கால்
ஊழ்வினையைப் போக்கி, உடல் ஆறுபத்து எட்டு, நிலம்
ஏழும், அத்துவாக்கள் இருமூன்றும் - பாழ்ஆக,
ஆணவமான படலம் கிழித்து, அறிவில்
காணஅரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டி, - பூணும்
அடிஞானத்தால் பொருளும் ஆன்மாவும் காட்டி,
கடிஆர் புவனம் முற்றும் காட்டி, - முடியாது
தேக்கு பரமானந்த தெள்அமுதம் ஆகி, எங்கும்
நீக்கம் அற நின்ற நிலை காட்டி,...
எனவரும் கந்தர் கலிவெண்பாப் பாடல் வரிகளை நோக்குக.
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யான் எனா பரி தேர்க் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி---
வியாக்கிரன் --- புலி.
ஊக்கத்தில் மிக்கது புலி. நான் என்னும் முனைப்பு காரணமாக இந்த ஏழுலகுக்கும் தானே தலைவன் என்னும் இறுமாப்பு மிக்கு எழுந்தது.
வர அச்சுதனார்க்கு அருள் போற்றிய---
அச்சுதன் --- திருமால்.
தனக்கு சிவசாரூபம் வேண்டித் திருமால் வரங்கிடந்தார். முருகப் பெருமான் திருஞானசம்பந்தர் வடிவில் வந்து, திருமாலுக்கு இலிங்க வடிவத்தை அருளினார் என்று காஞ்சிப் புராணம் கூறும்.
முன்னாளில் திருமால் சிவசாரூபம் பெற அத் தளியில் தவம் செய்தார். சிவபிரான் அவர்முன் தோன்றி, ‘நீ விரும்பிய பேற்றை வைவச்சுத மனுவந்தரத்து இருபத்தெட்டாம் கலியுகத்தில் சீகாழிப் பதியில் அவதரிக்கும் நம் அடியவனாகிய திருஞானசம்பந்தன் அருள் செய்வான். அதனளவும் அங்கே தவஞ்செய்திருப்பாய்’என்றருளி மறைந்தனர். அங்ஙனமே, திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தால் திருமால் சிவசாரூபம் பெற்ற இடம் அத்தலம். திருஞானசம்பந்தர் பதிகத்திற்கு உருகிய திருமால் சிவலிங்கவடிவாய் ஓதஉருகீசர் என்னும் சந்நிதியிலும், சிவபிரான் திருமேற்றளிநாதர் என்னும் சந்நிதியிலும் விளங்குகின்றனர். தெருவின் கீழைக் கோடியில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியுள்ளனர். அவர் பாடலைக் கேட்ட முத்தீசர் சந்நிதியும் உள்ளது. திருஞானசம்பந்தர், பிள்ளையார் என்னும் பெருமையால் காஞ்சிபுரத்தில் மேலைப் பகுதி முழுவதும் "பிள்ளையார்பாளையம்" எனப் போற்றப் பெறும். உதியமரம் இருத்தலின் ஒதியடிமேடை என்பது பிரசித்தமாக வழங்கும் இடம் அதுவாகும்.
தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே ---
பரம + அர்த்திகம் = பரமார்த்திகம். மேலான உண்மைப் பொருள். மெய்ப்பொருள்.
நாகம் மேல் துயில்வார்க்கு அயன் ஆன பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குருபரன் ஆய நாத---
நாகம் --- பாம்பு. இங்கு திருமால் அறிதுயில் கொள்ளும் ஆதிசேடனைக் குறித்தது.
அயன் --- பிரமதேவன்.
திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய வரலாற்றை இது குறிக்கின்றது. பின்வரும் திருமந்திரப் பாடல்களைச் சிந்திக்கவும்.
பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றி நின்றாரே.
பொருள் --- பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனல் பிழம்பாய் ஒளி வீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.
சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.
தானக் கமலத்து இருந்த சதுர்முகன்
மானக் கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் அண்மையது ஆமே.
தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி தியானிக்கத்தக்க பெரும்பொருளாகிய சிவபெருமான், அவர் தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!
இந்த வரலாற்றின் உட்பொருள் வருமாறு ....
(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது இராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை. இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.
(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர். இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.
(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும்,"எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.
(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது. தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".
(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி, அன்பு என்னும் வலை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.
(7) பிரமன் - வாக்கு. திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன் என்கின்றது மணிவாசகம்.
(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே" என்று திருப்புகழிலும், இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே" என்று கந்தர் அலங்காரத்திலும்அடிகளார் அருள் உள்ளது அறிக. மேலும், "இராப்பகல் அற்ற இடத்தே இருந்து,பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி, இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டு இடத் தேனே" எனத் திருமூலர் அருளியதையும் சிந்திக்கவும்.
திருமால் அயனுக்கு அரியவர் ஆகிய பரம்பொருளான சிவபிரானுக்கு ஞானவார்த்தையை அருளியவர் முருகப் பெருமான். முருகப் பெருமான் சொன்ன ஞானவார்த்தையை அறியாதவரா சிவபரம்பொருள் என்னும் ஐயம் எழலாம். அது அவசியம் அற்றது. அவ்வாறு பொருள் கொள்ளுதல் பிழை ஆகும்.
சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் "தணிகைப் புராணம்" கூறுமாறு காண்க.
திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து,முறையினால் கழறவல்லேம்” என்றனர்.
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.
எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க,அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா... --- திருப்புகழ்.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே. --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்
.
தேவதேவன் ஆகிய சிவபெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.
உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.
என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.
நாட்டம் உறா பல காலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே ---
திருவருளில் நாட்டம் கொண்டு பலகாலும் தணியாத வேட்கை மீதூர, இறைவனை வழிபாடுவோர்க்கு இறைவன் திருவருள் புரிவான்.
வேகம் மேற்கொள் அராப் புடை தோகை ---
வேகமாகச் செல்லுகின்ற பாம்பினைப் புடைக்கின்ற மயில்.
தோகை என்பது, தோகையினை உடையமயிலை உணர்த்தியது.
கருத்துரை
முருகா! மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாய்.
No comments:
Post a Comment