பெரியோர் சிற்றினத்தை அஞ்சுவர்

 


பெரியோர் சிற்றினத்தை அஞ்சுவர்,

சிறியோர் சுற்றமாகச் சூழ்வர்

-----

 

            சிற்றினம் என்பது சிறிய இனமாகும். சிறிய இனமாவதுநல்வினையின் பயனாகச் சுகமும்தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்,பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்,உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

            அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடுசிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

            திருக்குறளில், "சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தில், "பெருமை உடையோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சுவர்சிறுமை உடையோர் அச் சிற்றினத்தைத் தமது சுற்றமாகச் சூழ்ந்து உறவு கொள்ளுவர்" என்கின்றார் நாயனார்.

 

            தமது அறிவும்சிற்றினத்தார் அறிவும் வேறுபடும் விதத்தையும்அதனால் வரக் கூடிய தீங்கையும் எண்ணிஅறிவுடையார் சிற்றினத்தாரோடு கூட அஞ்சுவர். அற்பர்கள் அறிவானது ஒன்றுபட்டு நிற்பதால்,சிற்றினத்தார் சுற்றத்தார் போல ஒழுகுவர்.

 

"சிற்றினம் அஞ்சும் பெருமைசிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்".    

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.  

 

            இத் திருக்குறளுக்கு விளக்கமாகபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

"துன்னு சகுனிகன்னன் சொல்கேட்டு அரவு உயர்த்தோன்

என்னபயன் பெற்றான்இரங்கேசா! --- மன்னிய

சிற்றினம் அஞ்சும் பெருமைசிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்".              

 

இதன் பொருள் ---  

 

            இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!  அரவு உயர்த்தோன் --- பாம்புக் கொடியோனாகிய துரியோதனன்துன்னு சகுனி கன்னன் சொல் கேட்டு --- தனக்கு நட்பினராகப் பொருந்திய சகுனி மாமன்கர்ணன் முதலியோருடையசொல்லைக் கேட்டு(அதன்படி நடந்து)  என்ன பயன் பெற்றான் --- என்ன பலனை அடைந்தான்?(ஒரு பலனையும் அடையவில்லை. ஆகையால்இது) பெருமை --- பெரியோர் தன்மைசிறு இனம் அஞ்சும் --- அற்பர் உறவை அஞ்சி நீங்கும்சிறுமை --- சிறியோர் இயல்பு,  (அற்பர் உறவு உண்டானபோதே அதைச்) சுற்றம் ஆக --- உண்மை உறவாக,சூழ்ந்து விடும் --- எண்ணித் துணியும் (என்பதை விளக்குகின்றது).

 

            கருத்துரை --- மூடரை மூடர் கொண்டாடிச் சேர்வார்கள். கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்.

 

            பீஷ்மர்,  துரோணர்கிருபர்,அசுவத்தாமன்விதுரன் முதலிய பெரியோரினத்தைச் சேர்ந்து இருந்தும்அவர்கள் சொல்லைக் கேளாமல்சகுனிகர்ணன்துச்சாதனன் முதலிய சிறியோர் சொல்லைக் கேட்டுச் சீரழிந்தான் துரியோதனன் என்பது பாரதத்தில் யார்க்கும் தெரிந்தது. இப்படிக் "கேடு வரும் பின்னேமதி கெட்டு வரும் முன்னே" என்றபடிமதிகெட்டுச் சிற்றினத்தவரோடு அஞ்சாது சேர்ந்துஅநியாயம் செய்து வந்த துரியோதனனுக்குபின்னே வந்த கேடு பெருங்கேடாய் முடிந்தது. உறவினரும் சுற்றத்தாரும் மாண்டது மட்டும் அல்லாமல்,அவனும் மாண்டு மடிந்துஎன்றும் அழியாப் பழிக்கு ஆளானான். ஆகையால், "சிறுமைதான் சுற்றமாய்ச் சூழ்ந்துவிடும்" என்றார். "என்ன பயன் பெற்றான்" என்னும் உடன்பாட்டு வினாஒரு பயனும் பெறவில்லை என்கிற எதிர்மறை விடை தருவது காண்க.

 

            பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...                             

 

"இழுக்கல் இயல்பிற்று இளமைபழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும்

செறுவொடு நிற்குஞ் சிறுமை,இம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்".              --- திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

            இளமைப் பருவமானது வழுவுதலை இயல்பாக உடையதுஅறியாமை என்பதுஅறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதலில் வல்லது. ஈனத் தன்மை (சிறுமை) என்பது  எக்காலத்தும் எல்லோருடனும் பகை உணர்வோடு நிற்பது. ஆதலால் இம் மூவகையினையும்மேல் விளைவை அறியும் அறிவினை உடையவர் நெருங்கார்.

 

             இளமைப் பருவமானது நெறியில் இருந்து வழுவுகின்ற இயல்பை உடையது என்று உணர்ந்த அறிவுடையோர்வழுவுதலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்வார். அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைத் தாமும் விலக்கிநன்னெறியில் ஒழுகி உயர்வு பெற நினைப்பார் அறிவுடையோர். உயிருக்கு ஈனத் தன்மையை விளைவிக்கும் சினத்தைக் கைக்கொண்ட சிற்றினத்தை ஒழித்து வாழ்வர் அறிவுடையோர்.

 

"நல்தா மரைக்கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்,

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்; --- கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்".             ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

            குளத்தில் மலர்ந்து இருக்கும் நல்ல தாமரைப் பூவை அக் குளத்தில் உள்ள நல்ல அன்னப் பறவை சேர்ந்து இருப்பது போலகல்வி உடையோரைக் கல்வி உடையோரே விரும்பிச் சேர்ந்து இருப்பர்.சுடுகாட்டில் உள்ளபிணத்தைக் காக்கை விரும்பும்.அதுபோல் கல்வியில்லாத மூடரை மூடரே விரும்புவர்.

 

"ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சநெஞ்சப்

பேயரொடு கூடின் பிழைகாண் பராபரமே".   --- தாயுமானவர்.

 

பொருள் ---

 

             பலநூல்களைக் கற்று அவற்றின் உண்மைப் பொருளை உணராதுதிறம்படப் பேசுவது மட்டும் கைவந்தவர்,அளவில்லாமல் பேசினாலும்அவர் வஞ்ச நெஞ்சத்தை உடையவரே ஆவர். அத்தகைய பேயரோடு இணங்குதல் பெரும்பிழை கும்.

 

            தன்னை நாடி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்வது குறித்துசுக்கிரீவன் சொன்னவற்றைக் கேட்ட இராமபிரான்அளவில்லாத கேள்வியில் மிகுந்த சாம்பவானைப் பார்த்து, "வீடணனை ஏற்றுக் கொள்வதில் உனது கருத்து யாது?" என்று கேட்டான். அதற்கு சாம்பவான்"விபீடணனைப் போன்றவர்களை நம்முடன் சேர்த்துக் கொண்டால் வெற்றி தேடித் தரலாம்.நமக்குத் தேவையான யோசனைகளையும் கூறுவர்.நமது காரியங்களை  முடித்தும் தருவர்.  வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதை மாற்றி நலம் புரிவர்ஆனால்முன்பிருந்தே நம்முடன் பெரும்பகை உடையவர் இந்த அரக்கர் குலத்தவர். அதுவும் அல்லாமல்;  இவர்களை ஒத்த சிற்றினத்தவருடன் சேர்தல் சிறப்பு உடையது ஆகாது" என்றான்.

  

'வெற்றியும் தருகுவர்வினையம் வேண்டுவர்,

முற்றுவர்உறு குறை முடிப்பர்முன்பினால்-

உற்றுறு நெடும் பகை உடையர். அல்லதூஉம்,

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ --- கம்பராமாயணம்வீடணன் அடைக்கலப் படலம்.


         சிற்றினத்தவரால் ஒருக்கால் நன்மை விளையும் என்றாலும், அது தீமையிலேயே முடியும் என்பதால் வேண்டாம் என்றான் சாம்பவான்.

          "நீதி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல் உண்டு. நூறு பாடல்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. விளம்பரம் இல்லாமலே அரிய செயல்களைநமது நன்மை கருதிச் செய்துவிட்டுசொல்லாமலே போய்விட்டார்கள். 

"கொம்பு உளதற்கு ஐந்துகுதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, --- வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி".

 

            கொம்பு உள்ள மாடு முதலிய விலங்குகளுக்கு அருகில் போனால் அவை நம்மை முட்டும். எனவேகொம்பு உள்ள விலங்குகளைக் கண்டால் ஐந்து முழத் தொலைவில் உடனே சென்று விடவேண்டும். குதிரைக்குப் பத்து முழத் தொலைவில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும்,சினம் கொண்ட யானைக்கு ஆயிரம் முழத் தொலைவில் விலகி இருக்கவேண்டும். ஆனால்கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களில் படும்படி நேர்ந்தால்அவர்கள் கண்காணமுடியாத தொலைவில் விலகி இருப்பது நல்லது.(காரணம் தீயவர்களைக் காண்பதே தீமையாய் முடியும்)

 

     தீயவர்களோடு வாழ்தல் கொடிய நரகத் துன்பத்தைத் தரும். எனவேஅவர் இருக்கும் இடத்தைச் சேராது நீங்கிவிடவேண்டும் என்னும் கருத்தில், "தருமதீபிகை" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்..

 

"நெஞ்சம் கொடிய நெடுமூர்க்கரோடு உறைதல்,

நஞ்சம் கொடிய நரகமே --- தஞ்சம் என

எவ்வழியும் அன்னார் இருக்கும் இடம் சேராதே,

வெவ்வழி நீங்கி விடல்".

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சத்தால் கொடிய குணம் படைத்த மூர்க்கரோடு சேர்ந்து வாழ்தல் கொடிய நரகத் துன்பத்தையே தரும். எந்த வகையிலும் அவர் இருக்கும் இடத்தை ஆதவராகக் கருதி அடைதல் கூடாது. வெகுதொலைவில் விலகி விடவேண்டும்.

 

     நெஞ்சத்தில் உள்ள கொடுமைநெடுமூர்க்கத் தனத்திற்குக் காரணமாக நின்றது. நெஞ்சு பாழ்பட்ட அவர் யாருக்கும் எக்காலத்தும் நன்மை செய்யமாட்டார். எனவேஅவரைக் கண்டால்கண்ணுக்கு எட்டாதபடி கால்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

 

     நல்லதன் நன்மையும்தீயதன் தீமையும் உணராதுதாம் கருதியதையே செய்து முடிப்பதில் கருத்தாக இருக்கும் அறிவில்லாதவர்கள்வஞ்சகம் பொருந்திய உள்ளத்தவர் ஆவர். அவர்களோடு பொருந்தி இருப்பது எக்காலத்தும் தீமையே தரும் என்பதை உணர்ந்த அறிவுடையவர்கள்அவர்களை உள்ளதால் சாராது விலகியே இருப்பர் என்பதால், "சிற்றினம் அஞ்சும் பெருமை" என்றார். "கல்லாத மூடரைக் காணவும் ஆகாதுகல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று" என்று திருமூல நாயனார் அறிவுறுத்தியபடிகல்லாத மூடர்களிடம் இருந்து விலகியே இருப்பர். அவர் சொல்வதையும் பொருட்படுத்த மாட்டார்.

 

     அறிவில்லாத மூடர்க்கு ஆயிரம் புத்தி கூறினாலும்தமது இயல்பான குணமே அவர்களிடத்தில் மேம்பட்டு விளங்கும். அறிவுடையோர் சொல்வதை அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள். "கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்" என்று திருமூல நாயனார் அறிவித்தபடிகல்வி அறிவு இல்லாத மூடர்களுக்குஅவரைப் போன்று கல்வி அறிவு இல்லாத மூடர்களே நல்லவர்களாகத் தோன்றுவர். அதனால்தம்மைப் போன்ற அறிவில்லாதவர் இனத்தோடு அவர்கள் கூடி இருப்பர் என்பதைக் காட்ட, "சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்" என்றார் நாயனார்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...