அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆகத்தே தப்பாமல் (காமத்தூர்)
அகத்துறைப் பாடல் --- நற்றாய் இரங்கல்.
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதானா
ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் ...... கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் ...... பிறையாலே
போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் ...... கருகாதே
போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் ...... புணராயே
தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் ...... கொடியோனே
பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் ...... குமரேசா
பாரிற் காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு
ஆர்கைத் தேறல் ...... கணையாலே,
ஆலப் பாலைப் போலக் கோலத்து
ஆயக் காயப் ...... பிறையாலே,
போகத்து ஏசற்றே தன் பாயல்
பூவில் தீயில் ...... கருகாதே,
போதக் காதல் போகத் தாளைப்
பூரித்து ஆரப் ...... புணராயே.
தோகைக்கே உற்று ஏறித் தோயச்
சூர் கெட்டு ஓடப் ...... பொரும்வேலா!
சோதிக் காலைப் போதக் கூவுஅத்
தூவல் சேவல் ...... கொடியோனே!
பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப்
பாரித்து ஆர் நல் ...... குமரேசா!
பாரில் காமத்தூரில் சீலப்
பாலத் தேவப் ...... பெருமாளே.
பதவுரை
தோகைக்கே உற்று ஏறி--- மயிலின் மேல் பொருந்த ஏறி இருந்து,
தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும் வேலா--- கடலில் எழுந்த சூரபதுமன் அழிந்து ஓடும்படி போர் புரிந்த வேலாயுதரே!
சோதிக் காலைப் போதக் கூவு --- கதிரவன் காலைப் பொழுதில் உதிக்கும்படி கூவுகின்ற,
அத் தூவல் சேவல் கொடியோனே--- அந்த இறகு உடைய சேவலைக் கொடியாக உடையவரே!
பாகு ஒத்தே சொல் பாகத்தாளை --- பாகு போன்ற சொற்களை உடைய வள்ளியம்மையை,
பாரித்து ஆர் நல் குமரேசா--- விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமாரக் கடவுளே!
பாரில்--- இந்த உலகத்தில்,
காமத்தூரில் --- காமத்தூர் என்னும் திருத்தலத்தில்எழுந்தருளிய,
சீலப் பாலத் தேவப் பெருமாளே--- தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே.
ஆகத்தே தப்பாமல் சேர்--- உடம்பிலே வந்து தப்பாமல் தைக்கின்ற,
இக்கு ஆர் கை தேறல் கணையாலே--- கரும்பு வில்லில் இருந்து புறப்படுகின்ற தேன் நிறைந்த மலர்களாகிய கணைகளினால்,
ஆலப் பாலைப் போல--- விடம் போலக் காய்கின்றதும், பாலைப் போல வெண்மையாக உள்ளதும் ஆன நிலவால்,
போகத்து ஏசற்றே --- புணர்ச்சி இன்பத்தில் விருப்பம் மிகுந்து,
தன் பாயல் பூவில் தீயில் கருகாதே --- தனது படுக்கையில் நெருப்பிலே பட்ட பூவைப் போலக் கருகி வாடாமல்,
போத --- அறிவு மிகுந்து,
காதல் போகத்தாளை --- காதல் கொண்டுள்ளஇன்ப அனுபவத்துக்கு உரிய எனது மகளை
பூரித்து ஆரப் புணராயே--- மகிழ்வோடு கூடி அருள்வாயாக.
பொழிப்புரை
மயிலின் மேல் பொருந்த ஏறி இருந்து, கடலில் எழுந்த சூரபதுமன் அழிந்து ஓடும்படி போர் புரிந்த வேலாயுதரே!
கதிரவன் காலைப் பொழுதில் உதிக்கும்படி கூவுகின்ற, அந்த இறகு உடைய சேவலைக் கொடியாக உடையவரே!
பாகு போன்ற சொற்களை உடைய வள்ளியம்மையை, விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமாரக் கடவுளே!
இந்த உலகத்தில், காமத்தூர் என்னும் திருத்தலத்தில்எழுந்தருளிய,தூய குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே!
உடம்பிலே வந்து தப்பாமல் தைக்கின்ற,கரும்பு வில்லில் இருந்து புறப்படுகின்ற தேன் நிறைந்த மலர்களாகிய கணைகளினால், விடம் போலக் காய்கின்றதும், பாலைப் போல வெண்மையாக உள்ளதும் ஆன நிலவால்,புணர்ச்சி இன்பத்தில் விருப்பம் மிகுந்து,தனது படுக்கையில் நெருப்பிலே பட்ட பூவைப் போலக் கருகி வாடாமல், அறிவு மிகுந்து உம் மீதுகாதல் கொண்டுள்ள, இன்பத்துக்கு உரிய எனது மகளைமகிழ்வோடு கூடி அருள்வாயாக.
விரிவுரை
ஆகத்தே தப்பாமல் சேர்---
ஆகம் --- உடம்பு. மனதில் தோன்றும் அனுபவத்துக்கு இடமாக உள்ள உடம்பு.
இக்கு ஆர்கை தேறல் கணையாலே---
இக்கு --- கரும்பு.
தேறல் --- தேன். கணை --- அம்பு.
கரும்பினை வில்லாக உடையவன் மன்மதன்.
கரும்பு வில்லில் தேன் நிறைந்த மலர்க்கணைகளைக் கோத்து எய்வது மன்மதன். அவனது மலர்க்கணைகள் தைப்பதால், காதலர் உள்ளம் வருந்தும்.
ஆலப் பாலைப் போல---
ஆலம் --- விடம்.
விடத்தைக் கக்குவது போன்று வெண்மையான ஒளிக் கிரணங்களை சந்திரன் வீசுகின்றான். குளிர்ந்த நிலவொளியானது,காதலர்க்குத் துன்பத்தை விளைக்கும்.
போகத்து ஏசற்றே ---
போகம் --- புணர்ச்சி இன்பம். ஏசறுதல் --- விருப்பம் மிகுதல்.
போதக் காதல் போகத்தாளை ---
போதம் --- அறிவு. இறைவனைப் பற்றிய அறிவார்ந்த காதல் மிகுந்து உள்ளது. அந்து அனுபவத்துக்கு உரியவள் தனது மகள் என்பதால், "போகத்தாளை" என்றார் தாயார்.
பூரித்து ஆரப் புணராயே---
பூரித்தல் --- உள்ளம் மகிழ்தல்.
ஆரப் புணர்தல் --- மனம் நிறைவடையுமாறு கூடி மகிழ்தல்.
தோகைக்கே உற்று ஏறி---
தோகை என்பது தோகை உடைய மயிலைக் குறிக்கும்.
தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும் வேலா---
தோயம் --- கடல்.
கடலில் புதிய மரமாக நின்ற சூரபதுமன் உடைல இருகூறாகப் பிளந்து அழியுமாறு சங்காரம் செய்தவர் முருகப் பெருமான்.
சோதிக் காலைப் போதக் கூவு அத் தூவல் சேவல் கொடியோனே ---
முருகன் விடுத்த வேலாயுதம் சூரனது உடலை இருகூறாகப் பிளந்த போதில், ஒரு கூறு, கதிரவன் உதிக்கின்ற அதிகாலைப் பொழுதில் கூவுகின்ற இறகுகளை உடைய சேவலாக நின்றது. அதனைத் தனது கொயிடில் வைத்து உயர்த்தினார் முருகப் பெருமான்.
பாகு ஒத்தே சொல் பாகத்தாளை ---
பாகு போன்ற இனிய சொற்களை உடைய, பக்குவம் அடைந்த ஆன்மாவாகிய வள்ளிநாயகியை.
"பாகு கனிமொழி மாது குறமகள்" என்று, "பாதிமதி" எனத் தொடங்கும் திருப்புகழில், அடிகளார் வள்ளிநாயகியைப் பற்றிக் குறித்துள்ளது காண்க.
பாரித்து ஆர் நல் குமரேசா---
பாரித்தல் --- விரும்புதல்.
காமத்தூரில் சீலப் பாலத் தேவப் பெருமாளே ---
காமத்தூர் என்னும் திருத்தலத்தைக் குறித்து அறியக் கூடவில்லை.
No comments:
Post a Comment