திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், " தாமே தம்மை அறிந்த பெரியோர் கூடியுள்ள சபையில் சென்று ஒன்றையும் சொல்லாமல் இருப்பாராயின்,நூல்களைக் கற்று அறியாதவரும் மிக நல்லவரே" என்கின்றார் நாயனார்.
கல்லாதவர் தம்மைத் தாம் அறியும் அறிவு இல்லாதவர் என்பதால், அவர் சொல் அறிவார்ந்ததாக இராது,அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்;
தன்னை அறி(து அறிவாம்;அஃது அன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே.
தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்,
தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே.
என்னும் திருமந்திரப் பாடல்களால், "தன்னை அறிவதுவே அறிவு" என்பது தெளிவாகும்.
திருக்குறளைக் காண்போம்...
கல்லாதவரும் நனி நல்லர், கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கல்லாதவரும் நனி நல்லர்--- கல்லாதவரும் மிக நல்லராவர்,
கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின்--- தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
(உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத் தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
புத்தர்மிக வாது புகன்றதுபோய் வாதவூர்ச்
சித்தர்முனே தான் ஆர்,சிவசிவா! --- ஒத்தநெறி
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
புத்தர் --- யாழ்ப்பாணத்தில் இருந்து வாதுக்கு வந்த புத்த குருமார்.
வாதவூர்ச் சித்தர் --- திருவாதவூரில் அவதரித்த மணிவாசகர்.
"போதவூர் நாடுஅறியப் புத்தர்தமை வாதில் வென்ற
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ?"
என்றார் தாயுமான அடிகளார்.
மணிவாசகர் புத்தர்களை வாதில் வென்ற வரலாறு
மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில் சிவனடியார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கி இருந்தது. சிவனடியாரின் இயல்பைக் கண்ட சிலர்,அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தார். அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ் வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து "தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால், 21,600 தடவை திருவைந்தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்" என்று கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன்,சிவனடியார் கூறுவதைக் கேட்டுச் சினந்து "திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்" என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்து அரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையை அடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலை அடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு "யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம்" என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது. அவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி "தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவம் இயற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; கவலற்க" என்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் "அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்" என்று அழைத்தார்கள்.
வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி, அவனருள் பெற்று, புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீது என்றெண்ணி,அவர்களுக்கு எதிரே ஒரு திரையிடச் செய்து, தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும், புலவர்களும் அவ்வவையில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, "புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்து என் கடமை" என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து,"வந்த காரியம் என்ன?" என்று வாதத்தைத் தொடங்கினார். வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏறவில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவநிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி "சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை" என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன் வாதவூரரை வணங்கி "அடிகளே! எனது மகள், பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படிச் செய்தால் நான் தங்களுக்கு அடிமை ஆவேன்" என்று கூறினான். வாதவூரர் அதற்கு இசைந்து அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, "பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு" என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள். அந்த வினா - விடைகள், திருவாசகத்தில், "திருச்சாழல்" என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவம் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து, புத்த குருவும், மற்றவர்களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டுமென்று வேண்டினான்.
மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப் பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மணிவாசகரும் திருக்கோயிலுக்குள் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
நார்முற் றிடாநின்ற கல்லாதவரும் நனிநல்லர் கற்
றார்முன் சொல்லாது இருக்கப்பெறின் என்பது அகத்தில் எண்ணெண்
சீர்முற்றுங் கற்றவர் கல்லான் பொல்லான் எனச் செப்பும் எனைப்
பார்முற்றும் காப்பவன் காப்பான் புல்லாணிப் பதியினின்றே.
இதன் பொருள் ---
தாமே தம்மை அறிந்த பெரியொர் கூடியுள்ள சபையில் சென்று ஒன்றையும் சொல்லாமல் இருப்பாராயின்,நூல்களைக் கற்று அறியாத, குற்றம் நிறைந்தவரும் மிக நல்லவரே என்று சொல்லப்பட்டது. என்னவென்றால், அறுபத்து நான்கு கலைகளையும் கற்று உள்ளத்தில் உணர்ந்தவர், என்னைக் கல்லாதவன் பொல்லாதவன் என்று கூறுபவர்முன் நான் ஒன்றும் சொல்லாது இருக்க, திருப்புல்லாணிப்பதியில் எழுந்தருளி இருப்பவனும், இந்த உலகம் முழுதையும் காப்பவனும் ஆன பெருமான் என்னைக் காத்து அருளுவான்.
நார் முற்றிடா நின்ற --- குற்றம் நிறைந்த. கல்லான் --- கல்வியறிவில்லான். பொல்லான் --- தீயவன். பார் முற்றும் காப்பான் --- உலகங்களை எல்லாம் காப்பவன்.
இத் திருக்குறளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காணலாம்...
கற்பன ஊழ்அற்றார் கல்விக் கழகத்து,ஆங்கு
ஒற்கம் இன்று ஊத்தை வாய் அங்காத்தல்,--- மற்றுத்தம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லுரு அஞ்சுவ போல். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
கற்க வேண்டிய நூல்களைக் கற்பதற்கான நல்வினை இல்லாதவர்கள், கல்வி பயிலும் புலவர்கள் வீற்றிருக்கும் அவையில்,வாயடக்கம் இல்லாமல் தனது அழுக்குப் படிந்த வாயைத் திறந்து பேசுதல், விலங்குகளும் பறவைகளும் தோட்டத்தில் வைக்கப்படிருக்கும் புல்லினால் செய்த பொய் உருவத்தைக் கண்டு அஞ்சுவது போல, தம்முடைய பெரிய உருவத்தைக் கண்டு அஞ்சாதீர்கள் என்று தானே சொல்லுவதை ஒக்கும்.
கல்லாதான் ஊருங் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன்இன்னா;
இல்லார்வாய்ச் சொல்லின் நயம்இன்னா;ஆங்குஇன்னா
கல்லாதான் கோட்டி கொளல். --- இன்னா நாற்பது.
இதன் பொருள் ---
கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா --- (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன் ஏறிச் செலுத்தும் மனம் செருக்கிய குதிரை(அவனைச்) சுமந்து செல்லுதல் துன்பமாம்; வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா --- கல்வி அறிவு இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம்; இல்லார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா --- செல்வம் இல்லாதவருடைய வாயிலிருந்து வரும் சொல்லினது நயமானது துன்பமாம்; ஆங்கு --- அவ்வாறே, கல்லாதவன் கோட்டி கொளல் இன்னா --- கல்வியில்லாதவன் கற்றவர் அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாம்.
No comments:
Post a Comment