"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்
இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
வாழ்ந்தாலும் என்உண் டாமே?"
இதன் பொருள் ---
மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
வனங்கள் தோறும் எட்டிமரம் பழுத்தாலும் என் உண்டாம் - காடுகள் எங்கும் எட்டிமரம் பழுப்பதனாலும் என்ன பயன் உண்டாகும்?
ஈயாதார் வாழ்ந்தாலும் என் உண்டாம் - (நாடுகள் எங்கும்) கொடைப் பண்பு இல்லாத உலோபிகள் வாழ்வதனாலும் என்ன பயன் உண்டாகும்?
கட்டு மாங்கனி வாழைக் கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் - (பழுப்பதற்காகக்) கட்டி வைக்கும் மா, வாழை, பலா ஆகிய இவற்றின் பழங்கள் (மற்றவர்க்குப்) பயன்படும்;
அவ்வணம் சிட்டரும் தேடும் பொருளையெல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - (அதுபோலவே) நல்லோரும் தாம் (பாடுபட்டுத்) தேடும் பொருள் முழுதையும் (புதைத்து வைத்துக் கேடு கெட்டுப் போகாமல்) இல்லை என்று வந்து இரப்போர்க்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.
விளக்கம் ---
‘எட்டி பழுத்தால் என்? ஈயாதார் வாழ்ந்தால் என்?' என்பன பழமொழிகள். உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற்கொள்கிற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைப்பதில்லை. ஒருவன் சிறந்த செல்வனாக இருக்க, மற்றொருவன் கையில் உள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்பு, பொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால், எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. பொருள் குவிவதும், அழிவதும் அவரவருடைய முன்னைவினைப் பயனால் நிகழ்கின்றது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த முன்னை வினைப்பயனை நமக்கு ஊட்டுவது இறைவன். எனவே, ஒருவன் பெற்ற செல்வம் இறையருளால் வந்தது.
"பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை, பிறந்து மண் மேல்
இறக்கும் போது கொண்டு போவது இல்லை, இடை நடுவில்
குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே"
என்கின்றார் பட்டினத்து அடிகளார்.
ஆகவே, நாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறது என்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவியாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறது என்ற நினைவு வந்தால், இந்தப் பொருள் நாம் ஈட்டியது அல்ல என்ற நினைவு உண்டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்து, அவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அனுபவத்தைக் கூட்டி வைத்து, அருள் செய்கிற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால், நம்முடைய நெஞ்சம் கசியும். பரம்பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான உள்ளம் உடையவர்களாக இருந்தாலும், இறை அன்பு முதிர முதிர அவர்கள் உள்ளம் நெகிழும்.
மரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால், மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் இல்லாமல் காய் கண்ணீர் வடிப்பதுபோலப் பால் வடிகிறது அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போது, அதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி, பால் வற்றி, மஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி, அது தானே உதிர்ந்து விடுகிறது.
தன்னிடத்து உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடையவை என்று பற்றிக் கொண்டு, தன்னுடைய முயற்சியால் எல்லாவற்றையும் ஈட்டியதாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைவனிடத்தில் அன்பு உண்டானால், இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையது ஆகும். அதன் பயனாக உலகியல் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தனது பொருளால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற நயம் ஏற்படும். "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.