"காதிலே திருவேடம்! கையிலே
செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே
கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்
நெறியாரே! மனிதர் காணும்
போதிலே மௌனம்! இராப் போதிலே
ருத்திராக்கப் பூனை தானே!"
இதன் பொருள் ---
வாதிலே அயன் தேடும் தண்டலை நீள்நெறியாரே - (திருமாலுக்கும் தனக்கும் நேர்ந்த) போட்டியிலே நான்முகன் அன்னப் பறவையாய்ச் சென்று திருமுடியைத் தேடிய திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!
காதிலே திருவேடம் - காதில் உருத்திராக்கம் அணிந்த திருக்கோலமும், கையிலே செபமாலை - கையில் செபமாலையும், கழுத்தில் மார்பின் மீதில் தாழ்வடங்கள் - கழுத்திலும் மார்பிலும் உருத்திராக்கத் தாழ்வடங்களும் (உடையவராய்), மனத்திலே கரவடம் ஆம் வேடம் ஆமோ - உள்ளத்திலே வஞ்சகம் பொருந்திய வேடம் ஒரு வேடம் ஆகுமோ? (அவ்வாறு பொந்நான வேடத்தோடு இருத்தல்) மனிதர் காணும் போதிலே மௌனம், இராப்போதிலே உருத்திராக்கப் பூனைதான் - மக்கள் பார்க்கும் போது கண்மூடிப் பேசாதிருந்து, இரவிலே திருடும் உருத்திராக்கப் பூனையின் செயல் போன்றதாகும்.
திருமாலும் நான்முகனும் தாமே பெரியவரெனத் தனித்தனிச் செருக்கியபோது சிவபெருமான் இடையிலே நெருப்பு மலையாகத் தோன்றினர். அதனைக் கண்ட இருவரும் திகைத்துத் தம்மில் எவர் அதன் அடியையேனும் முடியையேனும் காண்கின்றனரோ அவரே பெரியர் என முடிவு செய்து, திருமால் பன்றியாகி திருவடியையும் நான்முகன் அன்னப் பறவை ஆகித் திருமுடியையும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது புராணம்.
கரவடம் - வஞ்சகம். உள்ளொன்றும் புறம்பு ஒன்றுமாகத் திரிவோரை ‘உருத்திராக்கப் பூனை' என்பது உலகவழக்கு.
No comments:
Post a Comment