அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கத்தூரி அகரு (பட்டாலியூர்)
முருகா!
இளமை உள்ளபோதே
உனக்குத் தொண்டுபட்டு வாழ அருள்.
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
தத்தான தனன தனதன ...... தனதான
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கத்தூரி,அகரு,ம்ருகமத,வித்தார படிர,இமசல,
கற்பூர,களபம் அணிவன,...... மணிசேரக்
கட்டு ஆர வடமும் அடர்வன,நிட்டூர கலகம் இடுவன,
கச்சோடு பொருது நிமிர்வன,...... தனமாதர்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி,அவரொடு
கொல்சேரி உலையில் மெழுகு என ...... உருகாமே,
கொக்குஆக நரைகள் வருமுனம், இக்காய இளமை உடன்,முயல்
குற்றேவல் அடிமை செயும்வகை ...... அருளாதோ?
அத் தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதில்
அச்சான வயலி நகரியில் ...... உறைவேலா!
அச்சோ என வச உவகையில்,உள்சோர்தல் உடைய பரவையொடு
அக்காகி விரக பரிபவம் ...... அறவே, பார்
பத்து ஊரர் பரவ விரைவுசெல்,மெய்த் தூதர் விரவ அருள்தரு
பற்று ஆய பரம பவுருஷ ...... குருநாதா!
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
பட்டாலி மருவும் அமரர்கள் ...... பெருமாளே.
பதவுரை
அத் தூர புவன தரிசன நித்தார --- உலகில் அந்த தொலைவில் இருந்தே நிச்சயமாகத் தரிசனத்தைத் தருகின்ற,
கனக நெடுமதில் அச்சான வயலி நகரியில் உறை வேலா --- பொன்மயமான நெடிய மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதரே!
அச்சோ என் வச உவகையில் --- இது என்ன அதிசயம் என்று உலகோர் மகிழ்வு கொள்ளும்படி,
உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி --- மனச் சோர்வு கொண்ட பரவைநாச்சியாரோடு அன்பு உடையவர் ஆகி இருந்து,
விரக பரிபவம் அறவே --- அப்போது உண்டான பிரிவின் காரணமாக உண்டான துன்பம் நீங்குமாறு,
பார் பத்து ஊரர் பரவ --- இந்த உலகத்தில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்தி இருந்த ஊரர் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுமாறு,
விரைவு செல் மெய்த் தூதர் --- விரைவாகச் சென்ற உண்மையான தூதர் ஆகி,
விரவ அருள் தரு பற்று ஆய பரமபவுருஷ குருநாதா --- உள்ளம் மகிழ அருள் தந்தவரும், அற்ற துணையாக இருந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு மேலான புருட தத்துவம் நிறைந்த குருநாராக விளங்கியவரே!
பச்சோலை குலவு பனை வளர்--- பசுமையான ஓலைகள் நிறைந்த பனை மரங்கள் வளர்ந்துள்ள,
மைச் சோலை மயில்கள் நடமிடு--- இருண்ட சோலைகளில் மயில்கள் நடமாடுகின்ற,
பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே --- பட்டாலியூர் என்னும் திருத்தலத்தில் விரும்பிக் கோயில் கொண்டு இருக்கும் பெருமையில் மிக்கவரே!
கத்தூரி --- கத்தூரி மஞ்சள்,
அகரு--- அகில்,
ம்ருகமத--- கத்தூரி என்னும் மான்மதம்.
வித்தார படிர--- நிறைந்த சந்தனம்,
இமசல--- பனிநீர்
கற்பூர--- கற்பூரம்
களபம் அணிவன--- கலவைச் சாந்து ஆகியவைகளை அணிந்துள்ளதாய்,
மணி சேரக் கட்டு ஆர வடமும் அடர்வன--- இரத்தினங்களுடன் சேர்த்துக் கட்டப்பட்ட முத்துமாலையும் நெருங்கியதாய்,
நிட்டூர கலகம் இடுவன--- கொடிய கலகங்களை விளைவிப்பதாய்,
கச்சோடு பொருது நிமிர்வன தனமாதர்--- மார்புக் கச்சையை முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி--- பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு,
அவரொடு --- அந்த விலைமாதர்களோடு,
கொல்சேரி உலையில் மெழுகு என உருகாமே --- கொல்லன் சேரியில் உலைக்களத்தில் மெழுகு போல் உருகி அழியாமல்,
கொக்கு ஆக நரைகள் வருமுனம்--- கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு,
இக்காய இளமை உடன் முயல்--- இந்த உடலில் இளமைப் பருவம் உள்ள போதே முயற்சி செய்து,
குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ --- தேவரீருக்குப் பணிவிடைகளை அடியேன் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ?
பொழிப்புரை
உலகில் அந்த தொலைவில் இருந்தே நிச்சயமாகத் தரிசனத்தைத் தருகின்ற,பொன்மயமான நெடிய மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதரே!
இது என்ன அதிசயம் என்று உலகோர் மகிழ்வு கொள்ளும்படி, மனச் சோர்வு கொண்ட பரவைநாச்சியாரோடு அன்பு உடையவர் ஆகி இருந்து, அப்போது உண்டான பிரிவின் காரணமாக உண்டான துன்பம் நீங்குமாறு, இந்த உலகத்தில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்தி இருந்த ஊரர் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுமாறு, விரைவாகச் சென்ற உண்மையான தூதர் ஆகி, உள்ளம் மகிழ அருள் தந்தவரும், அற்ற துணையாக இருந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு மேலான புருட தத்துவம் நிறைந்த குருநாராக விளங்கியவரே!
பசுமையான ஓலைகள் நிறைந்த பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடமாடுகின்ற,பட்டாலியூர் என்னும் திருத்தலத்தில் விரும்பிக் கோயில் கொண்டு இருக்கும் பெருமையில் மிக்கவரே!
கத்தூரி மஞ்சள், அகில், கத்தூரி என்னும் மான்மதம்.நிறைந்த சந்தனம், பனிநீர், கற்பூரம், கலவைச் சாந்து ஆகியவைகளை அணிந்துள்ளதாய், இரத்தினங்களுடன் சேர்த்துக் கட்டப்பட்ட முத்துமாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், மார்புக் கச்சையை முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின், பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த விலைமாதர்களோடு, கொல்லன் சேரியில் உலைக்களத்தில் மெழுகு போல் உருகி அழியாமல், கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த உடலில் இளமைப் பருவம் உள்ள போதே முயற்சி செய்து, தேவரீருக்குப் பணிவிடைகளை அடியேன் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ?
விரிவுரை
ம்ருகமத---
மிருகத்தில் இருந்து பொழிகின்ற மதநார். மானின் உடலில் இருந்து பெறப்படும் நறுமணம் உள்ள பொருள். மான்மதம் என்னும் கத்தூரி.
வித்தார படிர---
வித்தாரம் --- நிறைந்த.வடமொழியில் விஸ்தாரம் எனப்படும்.
படிரம் --- சந்தனம்.
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி---
கொத்து --- பூங்கொத்து.
நறவம் --- தேன்.
காமுகர்க்கு மாதர் வாயில் இருந்து ஊறும் எச்சில் தேன் போல இனிக்கும். அதரபானம் செய்தல் என்பர்.
கொல்சேரி உலையில் மெழுகு என உருகாமே ---
கொல்லன் சேரியில் உலைக்களத்தில் இட்ட மெழுகு போல், விலைமாதரின் இன்பத்திற்காக உள்ளம் உருகி, பின்னர் அங்கம் நொந்து அயிழும் நிலை வரும்.
கொக்கு ஆக நரைகள் வருமுனம்---
கருமையாக இருந்த தலைமயிரானது, கொக்குப் போல வெண்மை நிறம் பெற்று விடும்.
எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களில் எந்த உயிர்க்கும் நரை கிடையாது. பன்றி, யானை, காக்கை முதலியவைகட்கு உரோமம் நரைப்பதில்லை.
உயர்ந்த பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரையுண்டு. நரைப்பதின் காரணம் யாது? இது இறைவன் நமக்குத் தரும் அபாய அறிவிப்பு. மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வந்தவை. மனிதன் பிறவாமையைப் பெற வந்தவன். ஏன் பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன் செய்யும் எச்சரிக்கை நரை ஆகும். நரை உண்டான உடனே ஆசாபாசங்களை அகற்றி தவநெறியில் நாட்டம் உண்டாக வேண்டும். காதின் அருகில்ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தசரதர் தவம் மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். ஒரு ரோமம் நரைத்தவுடன் ஒரு பொருளில் உள்ள பற்றையாவது விடவேண்டும்.
இக்காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ ---
இந்த உடலில் இளமைப் பருவம் உள்ளபோதே,முயற்சி செய்து இறைபணியில் நிற்றல் வேண்டும்.
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பதைப் போல, இளமையில் உண்டான பழக்கமே முதுமை வரை நிற்கும்.
முப்பதாம் ஆண்டு அளவில் மூன்று அற்று,ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின்,- செப்புங்
கலையளவே ஆகுமாம்,காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
என்பது ஔவையார் அருளிய நல்வழி. இதன் பொருள் ---
முப்பது வயது ஆகும் அளவில், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கப் பெற்று, நிகர் இல்லாத பொருளாகிய இறைவனைத் தவறாமல் தனக்கு உள்ளே அறியப் பெறான் ஆயின், வயது முதிர்ந்து கிழப்பருவம் அடைந்த பெண்கள் இளமை நலத்தைத் துய்க்க முடியாமல், தனங்களை மட்டும் உடையவர்களாகி இருப்பது போல, அவன் முதுமையில் இறைவனுடன் கலந்து இன்பம் பெறாமல், தான் கற்ற கல்வியை மட்டும் உடையவனாக இருப்பான்.
அத் தூர புவன தரிசன நித்தார,கனக நெடுமதில் அச்சான வயலி நகரியில் உறை வேலா---
நித்தாரம் --- உறுதியாக, தீர்மானமாக, நிச்சயமாக.
தூர தரிசனம் என்பது தொலைவில் இருந்து தரிசிப்பதைக் குறிக்கும். தொலைவில் இருக்கும்போதே, திருக்கோயில்களின் திருமதில், கோபுரம் ஆகியவற்றைக் கண்டால் வணங்குவது நமது முன்னோர் காட்டியவழி.
கோபுர தரிசனம் கோடி பாவ விமோசனம்என்று சொல்லக் கேட்டுள்ளோம். இது செவிவழியாக வரும் வழக்குச் சொல்லாகவே உள்ளது. அருளாளர்கள் இவ்வாறு சொன்னதாக ஆதாரம் உள்ளதா என்று பலகாலம் தேடினேன். இறையருளால் கிடைத்தது.கோபுரத்தைத் தூலலிங்கம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். தூலம் என்றால் பெரியது. கருவறையில் உள்ள இலிங்கத்தை விடப் பெரியதாக கோபுரம் உள்ளதால், அது "தூலலிங்கம்" ஆயிற்று
இந்த வழக்குச் சொல்லுக்கு ஆதாரமாகத் திருத்தணிகைத் திருப்புகழில், "தூரத் தொழுவார் வினை சிந்திடு தாது உற்று எழு கோபுரம்" என்று அருணகிரிநாதர் பாடி உள்ளார்.அப்பர் பெருமான் ஐந்தாம் திருமுறையில், "ஆரூரரைத் தூரத்தே தொழுவார் வினை தூளியே" என்று பாடி உள்ளார்.
தூரத்தில் இருந்து, தூல லிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்து வணங்கினாலும் நமது வினைகள் பொடி ஆகும். எனவே தான், நமது பெரியவர்கள் தூரத்தில் கோபுரத்தைக் கண்டாலே வணங்குவார்கள். நமக்கும் அது பழக்கம் ஆகவேண்டும். திருக்கோயிலின் உள்ளே சென்று இறைவனை வணங்க வாய்ப்பு இல்லாத காலத்தில், கோபுரத்தை வணங்கலாம்.
தூளியே --- தூள் ஆகும்.பொடி ஆகும். சாம்பல் ஆகும்.
பொடி, சாம்பல் என்னும் சொற்களுக்கு, வடமொழியில் பஸ்பம் என்று பொருள்படும்.
அச்சோ என் வச உவகையில்---
அச்சோ என்பது வியப்புக் குறிப்பு.
உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார் பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய்த் தூதர் ---
அக்கு --- கண், உரிமை. அன்பு.
பரிபவம் --- துன்பம்.
பத்து --- "பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே" என்றார் அப்பர் பெருமான். அடியார்க்கு உரிய தச காரியங்களைக் காட்டினார். இதன் விளக்கத்தை "உண்மை நெறி விளக்கம்" என்னும் நூலில் காணலாம்.
ஊரர் --- ஆரூரர் என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பிள்ளைத் திருநாமம் ஆகிய "நம்பியாரூரர்" என்பதைக் குறிக்கும். "ஊரனே! வந்தனை" என்றார் சிவபெருமான்.
பரமன் பரவையிடத்தில் தூதுசென்ற வரலாறு
சுந்தரமூர்த்தி நாயனார் தம்மை விடுத்துச் சென்று,திரு ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்துகொண்ட தன்மையை அறிந்து, பரவை நாச்சியார் தம்மை அறியா வெகுளியினால் தரியாத நெஞ்சினோடு தளர்ந்திருந்தார்.
திருவாரூர் வந்தடைந்த நம்பியாரூரர் பரவையார் பிணங்கி இருப்பதை உணர்ந்து, சில பெரியோர்களை பரவையார் பிணக்கை நீக்குமாறு தூதுவிட்டார். நம்பியருளால் சென்ற அப்பெரியோர்கள், நங்கை பரவையாரது பைம்பொன் மனையில் போந்து “எம்பிராட்டிக்கு இது தகுமோ” என்று பல நியாயங்களை எடுத்துரைத்தார்கள்.
பரவையார் சினம் தணியாராய் “குற்றமிக்க அவர் விஷயத்தைக் கூறுவீரேல் என் ஆவி நீங்கும்” என்றனர். அவர்கள் அஞ்சி, அதனை ஆரூரரிடம் கூறலும், பரவையாரது ஊடலால் சுந்தரமூர்த்தி நாயனார் துன்பமாம் பரவையில் மூழ்கி, பேயும் உறங்கும் அப்பேரிருள் இரவில் பிறைச்சடைப் பெருமானை நினைத்து “எம்பெருமானே! நீரே தூது சென்று பரவையின் ஊடலைத் தீர்த்தருள வேண்டும்” என்று வேண்டினார்.
அடியார் குறை முடிக்கும் அம்பலக் கூத்தர் நெடியோனும் காணா அடிகள் படிதோய வந்து, தொண்டர்க்குத் தரிசனம் தந்தருளினார். பெருமானைக் கண்டவுடன் தொண்டர் உடல் கம்பித்து உளம் உவந்து அடித் தாமரை மேல் வீழ்ந்து “எம்பெருமானே! தேவரீர் அருள் செய்யத் திரு ஒற்றியில் சங்கிலியை அடியேன் மணந்து கொண்டதை உணர்ந்து சினங்கொண்டு, யான் சென்றால் மடிவேன் என்று பரவை துணிந்திருக்கிறாள். நாயனீரே! நான் உமக்கு இங்கு அடியேனாகில், நீர் எனக்கு தாயில் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் அறிவு அழியும் அடியேனுக்காக இவ்விரவே சென்று பரவையின் ஊடலைத் தணித்து அருள்வீர்” என்று வேண்டி நின்றார். அன்பையே வேண்டும் அரனார் “துன்பம் ஒழிக; நினக்கு யாம் தூதனாகி இப்பொழுதே பரவையின் பைம்பொன் மனைக்குப் போகின்றோம்” என்று அருள் செய்து,
"அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவறியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல் பரவையார் மாளிகைநோக்கித்
தொண்டனார் தம் துயர்நீக்கத் தூதனாராய் எழுந்தருள".
தேவர்களும் முனிவர்களும் பூதகணங்களும் முன்னும் பின்னும் புறத்துமாகச் சென்றார்கள். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள்; எம்பெருமானது பாதச் சிலம்புகள் ஒலித்தன. அவ்வொலி “மாலும் அயனுங் காணாத மலர்த்தாளை வணங்குஞ் சமயம் இதுவே; எல்லாரும் வம்மின் வம்மின்” என்று அறைகூவி அழைப்பதுபோல் இருந்தது.
அடியார் தொடரவும், சடைவாழ் அரவு தொடரவும், மறைகள் தொடரவும், வன்தொண்டர் மனமும் தொடர,பெருமான் திருவாரூர் வீதியில் சென்றருளினார். அது சமயம் அத் திருவீதி சிவலோகம் போல் விளங்கியது. பரவையர் திருமனைக்குப் பரமன் வந்து அனைவரையும் புறத்தே நிற்கச் செய்து, தாம் குருக்கள் வடிவு தாங்கி கதவிடம் சென்று “பாவாய்! மணிக்கதவம் திறவாய்” என்று அழைக்க, பரவையார் துணுக்குற்று எழுந்து அவரை அருச்சிப்போர் என்று நினைத்து வந்து, கதவு திறந்து வணங்கி, “என்னை ஆளும் பெருமானே! பேயும் நாயும் உறங்கும் இப்பேரிருட்கங்குலில் நீர் எழுந்தருளிய காரணம் யாது” என்று வினவினார்.
வேதியராக வந்த விமலன், “பரவையே! நான் கூறுவதை மறுக்காமல் செய்வையேல் கூறுவேன்” என்ன பரவையார், “இசையுமாகில் செய்வேன்; கூறும்” என்றார். பெருமான் “பரவையே! சுந்தரமூர்த்தி இங்கு வர அனுமதிக்க வேண்டும்” என்றார். பரவையார், “சங்கிலித் தொடக்குண்ட அவருக்கு இங்கு வருவது தகாது. நீர் கூறியது மிக அழகியதே” என்னலும், சிவபெருமான் “மடவரலே! நம்பியாரூரன் செய்த நவையைக் கருதாது சினந்தணிந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்வாய். உன்னை மிகவும் மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன்" என்றார்.
பரவையார் “ஐயரே! நீர் இக் கருமத்தை மேற்கொண்டு இந் நள்ளிரவில் வந்தது உமது மேன்மைக்குத் தகுதியற்றது. அவரை இங்குவர அனுமதிக்கேன். செல்லுவீர்” என்று மறுத்துரைத்தார்.
மணிமிடற்றண்ணல் அன்பனுடன் விளையாடும் காரணமாய்,தமது நல்லுருவைப் பரவையாருக்குக் காட்டாமல் “நன்று” என்று திரும்பி,தமது வருகையை எதிர் நோக்கியிருந்த நம்பியாரூரர் பால் வந்தார். பிணக்கு தீர்த்தே வந்தார் என்று மகிழ்ந்து பணிந்து “பரவையின் ஊடல் தீர்த்து என்னை ஆட்கொண்ட எந்தையே” என்று துதித்தார். பெருமான், “அன்பனே! நான் போய்க் கூறியும் பரவை மறுத்துவிட்டாள்” என்று சொன்னார். சுந்தரமூர்த்தி நாயனார் “எம்பெருமானே! அமரர் உய்ய ஆலமுண்ட அண்ணலே! புரமெரித்த புராதனரே! பாவியேனை வலிய ஆட்கொண்ட பரம கருணாநிதியே! அடியேனைப் பரவைபால் சேர்க்காவிடில் என் ஆவி நீங்கிவிடும்” என்று வருந்திப் பூமியில் விழுந்தார். நம்பியாரூரது நடுக்கத்தைக் கண்டு எம்பிரான் திருவுளமிரங்கி “மீண்டும் நாம் சென்று பரவையை சமாதானப் படுத்துகிறோம்” என்று கூறி, தேவபூத கணங்கள் சூழ தேவதேவர் பரவையார் திருமாளிகைக்கு வருவாரானார்.
அங்கு பரவையார் தம்மிடம் வந்த அருச்சகர் சிவபெருமானே என்று கருத்தினால் உணர்ந்து “அந்தோ! என் செய்தேன்! தோழருக்காகத் தூது வந்தவரை அருச்சகர் என்று ஏமாந்து போனேனே! மூவர்க்கும் எட்டா முழுமுதல் என்று உணராமல் போனேனே! மனவாசகம் கடந்த மகாதேவர் உரையை மறுத்துப் பேசினேனே! என்னைப் போன்ற பாவிகளும் உளரோ?” என்று மனம் புழுங்கி,கண் துயிலாராய் கருத்தழிந்து திருவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். சென்றடையாத் திருவுடை கொன்றை வேணிப் பெருமான் தமது தெய்வத் திருவுருவுடன் தேவரும் முனிவரும் பூதரும் சூழ வந்தருளினார். அம் மாளிகை அக்காலை வெள்ளியங்கிரி போல் விளங்கிற்று. அது கண்டு பரவையார் ஆகமும் அகமும் நடுங்கி எதிர்கொண்டு, இணையடிகளை இறைஞ்சி நிற்ப, எண்தோள் எம்பிரான் “பரவையே முன்போல மறுக்காது நம்பியாரூரனை ஏற்றுக் கொள்ளும்” என்றார். பரவையார் கசிந்து கண்ணீர் பொழிந்து “மறைகட்கும் எட்டாத மகாதேவராகிய நீர் ஓரிரவு முழுவதும் உமது மலரடி சிவப்ப அன்பர்க்காகத் தூது வந்து உழல்வீராகில் அடியேன் சம்மதியாமல் என் செய்யக்கூடும்.” என்றார். உடனே பெருமான் உளம் உவந்து நங்கையார் வழிவிடச் சென்று, நம்பியாரூரர் பால் வந்து “பரவை சினந்தணிந்தாள். இனி நீ செல்லுதி: என்று பணித்து விடை மீது உருக் கரந்தார். சுந்தரர் மகிழ்ந்து பரவையார் மாளிகைக்கு வர அம்மையார் பொற்சுண்ணம் தெளித்து,நறுங்கலவைச் சாந்தால் மெழுகி, பூரண கும்பம் வைத்து,நாயனாரை எதிர்கொண்டு வணங்கி இன்புற்றார்.
இவ்வரலாறு சிவபெருமானது கருணையின் எளிமையையும் அடியாரது பெருமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது. இதனாலன்றோ பரஞ்சோதியார் சுந்தரமூர்த்தி நாயனாரை அடியில் கண்டவாறு துதிக்கின்றார்.
"அரவுஅகல் அல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
தருவம்என்று அளவில் வேதம் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்".
யாவரே இருந்தும்,யாவரே வாழ்ந்தும்,
யாவரே எமக்கு உறவாயும்
தேவரீர் அல்லால்,திசைமுகம் எனக்குத்
திருவுளம் அறிய வேறு உளதோ
பாவலான் ஒருவன் செந்தமிழ்க்கு இரங்கிப்
பரவையார் ஊடலை மாற்ற
ஏவல் ஆளாகி இரவெலாம் உழன்ற
இறைவனே! ஏகநாயகனே! --- பட்டினத்தார்.
பச்சோலை குலவு பனை வளர் மைச் சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே---
பட்டாலி, காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பட்டாலியூர் என்றும் அழைக்கப்படும். முருகப்பெருமான் வள்ளி நாயகியுடன் சிவாசலபதி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். இச்சந்நிதியின் இடப்பாகத்தில் வள்ளியும், தெய்வானையும் உள்ள சந்நிதி உள்ளது. சிவன் மலை சிறிய குன்று. மலையில் ஏறுவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தல விருட்சம் கொட்டி மரம். பதினெட்டு சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியர் தவம் புரிந்த தலம்.
கருத்துரை
முருகா! இளமை உள்ளபோதே உனக்குத் தொண்டுபட்டு வாழ அருள்.
No comments:
Post a Comment