அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பழிப்பர் வாழ்த்துவர் (மதுரை)
முருகா!
காமம் என்னும் படுகுழியில் விழாமல் காத்து,
அடியேனை உன் அடியருடன் சேர்த்து,
பரகதி அருள் புரிவீர்.
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்...... அளவளப் பதனாலே
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு......நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து...... கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த...... முருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு...... மருமகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை...... மணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்.......அறுமுகப் பெருமாளே.
பதம் பிரித்தல்
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை,
ஒருத்தர் வாய்ச் சுருள் ஒருவர் கை உதவுவர்,
பணத்தை நோக்குவர்,பிணம் அது தழுவுவர்,......
படுக்கை வீட்டின் உள் அவுஷதம் உதவுவர்,
அணைப்பர்,கார்த்திகை வருது என உறுபொருள்
பறிப்பர்,மாத்தையில் ஒருவிசை வருக என,......
அழைப்பர், ஆத்திகள் கருதுவர், ஒருவரை
முடுக்கி ஓட்டுவர், அழிகுடி அரிவையர்,
அலட்டினால் பிணை எருது என,மயல் எனும்......
அவத்தமாய்ச் சில படு குழி தனில்விழும்
விபத்தை நீக்கி, உன் அடியவருடன் எனை
அமர்த்தி,ஆட்கொள மனதினில் அருள்செய்து, ......
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள
குருக்கள் போல், சிவ நெறிதனை அடைவொடு,
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த......
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து,
சயத்து அயோத்தியில் வருபவன், அரி, திரு......
செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது
பிளக்க ஓச்சிய பிறகு, அமரர்கள் பதி
செலுத்தி,ஈட்டிய சுரபதி மகள்தனை......
திறத்தினால் பல சமணரை,எதிர் எதிர்
கழுக்கள் ஏற்றிய புதுமையை,இனிதொடு
திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறைதரும்......
பதவுரை
தழைத்த சாத்திர மறைபொருள்--- எக்காலத்திலும் குன்றுதல் இல்லாது விளங்குகின்ற பெருநூலாகிய வேதத்தின் முதல் அக்கரத்தில் பொதிந்துள்ள பொருளை,
அறிவு உள குருக்கள் போல்--- சிறந்த மெய்யறிவு படைத்த குருநாதனைப் போலே,
சிவநெறி தனை அடைவொடு--- சைவ நெறியினை முறைமையோடு
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக--- தந்தையாகிய சிவபெருமானுடைய ஒப்பற்ற வலக்காதிலே உபதேசித்தருளிய முருகக் கடவுளே!
வித்தக வேளே--- ஞானவடிவாகி எல்லோராலும் விரும்பப்படுகின்றவரே!
புகழ் சனகியை--- உலகமெல்லாம் புகழ்கின்ற சீதாதேவியை
சமத்தினால் நலிவு செய்--- தன்னுடைய வஞ்சனையின் சாமர்த்தியத்தால் துன்பத்துக்கு ஆளாக்கிய
திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து--- திருட்டு அரக்கனாகிய இராவணனுடைய உடலைத் துண்டாக்கி,
சயத்து அயோத்தியில் வருபவன் --- வெற்றியுடன் அயோத்தியாபுரியில் வந்தவரான் இராமச்சந்திரமூர்த்தியும்,
அரி--- பாவங்களைப் போக்குபவரும் ஆகிய திருமாலின்,
திருமருமகப் பரிவோனே--- அன்புமிக்க திருமருகரே!
செழித்த வேல் தனை--- செழுமை வாய்ந்த வேலாயுதத்தை
அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு --- சூராதி அவுணர்களுடைய உடல்கள் பிளவுபட்டு அழியுமாறு செலுத்திய பின்,
அமரர்கள் பதி செலுத்தி--- தேவர்களை அவரவர்களுடைய உலகிலே இன்புற்று வாழுமாறு அனுப்பி,
ஈட்டிய சுரபதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே--- அந்த வெற்றி காரணமாக வந்த இந்திரன் மகளாகிய தெய்வயானை அம்மையாரை திருப்பரங்குன்றத்திலே திருமணம் செய்து கொண்டவரே!
திறத்தினால் பல சமணரை--- திருவருள் வல்லமையினால் அறநெறியினின்றும் வழுவிய பற்பல சமணர்களை
எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை--- நேர் நேராக கழுக்களில் ஏற்றிய அதிசயத்தை
இனிதொடு திருத்தமாய்ப் புகழ்--- மிகவும் இனிமையாகவும் திருத்தமாகவும் புகழ்கின்ற
மதுரையில் உறை தரும் அறுமுகப் பெருமாளே--- மதுரையம்பதியில் வாழ்கின்ற ஆறுமுகங்களை உடைய பெருமையின் மிக்கவரே!
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர் தமை--- விலைமகளிர் தமக்குப் பொருள் கொடுக்காத சிலரை நிந்திப்பர், பொருள் கொடுத்த சிலரைப் புகழ்ந்து பேசி வாழ்த்துவர்,
ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்--- ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள்.
பணத்தை நோக்குவர்--- பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள்.
பிணம் அது தழுவுவர்--- (பொருள் கிட்டினால்) பிணத்தையும் கூடத் தழுவுவார்கள்.
அளவளப்பு அதனாலே--- கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே
படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர்--- படுக்கை அறைக்குள் சென்று மயக்க மருந்திடுவார்கள்.
அணைப்பர்--- அணைத்துக் கொள்வார்கள்.
கார்த்திகை வருது என உறுபொருள் பறிப்பர்--- கார்த்திகைத் திருநாள் வருகின்றது என்று கூறி உற்ற பொருளை நிரம்பவும் பறிமுதல் செய்வர்,
மாத்தையில் ஒருவிசை வருக என--- மாதத்துக்கு ஒரு முறையாவது வரவேண்டும் என்று
அவரவர்க்கு உறவாயே அழைப்பர் --- வந்த ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டி,உறவாடி, நாள்முறை வைத்துக் கூப்பிடுவர்,
ஆத்திகள் கருதுவர்--- வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள்.
ஒருவரை முடுக்கி ஓட்டுவர்--- பணம் முழுதும் பறித்துக் கொண்டபின், வறுமையுற்றவரை வீட்டை விட்டு முடுக்கி விரட்டி அடிப்பர்,
அழிகுடி அரிவையர் அலட்டினால்--- (இவ்வாறு) குடிகளை அழிக்கின்ற விலைமாதர்களின் தொந்தரவால்,
பிணை எருது என--- (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல
மயல் எனும் நரகினில் சுழல்வேனோ --- காம மயக்கம் என்னும் நரகத்தில் அடியேன் சுழற்சி அடைவேனோ?
அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும் விபத்தை நீக்கி--- வீணாக காமக் குரோதம் முதலிய படுபள்ளத்தில் விழும் இடரைத் தவிர்த்து,
உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட்கொள--- தேவரீரது அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாக என்னைச் சேர்த்து ஆட்கொள்ளுமாறு
மனதினில் அருள் செய்து --- அருள் புரியத் திருவுள்ளம் பற்றி,
கதிதனைத் தருவாயே --- அடியேனுக்கு நற்கதியைத் தந்து அருள்வீர்.
பொழிப்புரை
எக்காலத்திலும் குன்றுதல் இல்லாது விளங்குகின்ற பெருநூலாகிய வேதத்தின் முதல் அக்கரத்தில் பொதிந்துள்ள பொருளை, சிறந்த மெய்யறிவு படைத்த குருநாதனைப் போலே, சைவ நெறியின் முறைமையோடு தந்தையாகிய சிவபெருமானுடைய ஒப்பற்ற வலக்காதிலே உபதேசித்தருளிய முருகக் கடவுளே!
ஞானவடிவாகி எல்லோராலும் விரும்பப்படுகின்றவரே!
உலகமெல்லாம் புகழ்கின்ற சீதாதேவியை தன்னுடைய வஞ்சனையின் சாமர்த்தியத்தால் துன்பத்துக்கு ஆளாக்கிய திருட்டு அரக்கனாகிய இராவணனுடைய உடலைத் துண்டாக்கி, வெற்றியுடன் அயோத்தியாபுரியில் வந்தவராகிய, பாவங்களைப் போக்கும் திருமாலின் அன்புமிக்க திருமருகரே!
செழுமை வாய்ந்த வேலாயுதத்தை சூராதி அவுணர்களுடைய உடல்கள் பிளவுபட்டு அழியுமாறு செலுத்திய பின், தேவர்களை அவரவர்களுடைய உலகிலே இன்புற்று வாழுமாறு அனுப்பி, அந்த வெற்றி காரணமாக வந்த இந்திரன் மகளாகிய தெய்வயானை அம்மையாரை திருப்பரங்குன்றத்திலே திருமணம் செய்து கொண்டவரே!
திருவருள் வல்லமையினால் அறநெறியினின்றும் வழுவிய பற்பல சமணர்களை நேர் நேராக கழுக்களில் ஏற்றிய அதிசயத்தை மிகவும் இனிமையாகவும் திருத்தமாகவும் புகழ்கின்ற மதுரையம்பதியில் வாழ்கின்ற ஆறுமுகங்களை உடைய பெருமையின் மிக்கவரே!
விலைமகளிர் தமக்குப் பொருள் கொடுக்காத சிலரை நிந்திப்பர். பொருள் கொடுத்த சிலரைப் புகழ்ந்து பேசி வாழ்த்துவர். ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள். பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள். பொருள் கிட்டினால் பிணத்தையும் கூடத் தழுவுவார்கள். கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்குள் சென்று மயக்க மருந்திடுவார்கள். அணைத்துக் கொள்வார்கள். கார்த்திகைத் திருநாள் வருகின்றது என்று கூறி உற்ற பொருளை நிரம்பவும் பறிமுதல் செய்வர். மாதத்துக்கு ஒரு முறையாவது வரவேண்டும் என்று வந்த ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டி,உறவாடி, நாள்முறை வைத்துக் கூப்பிடுவர்.வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள்.பணம் முழுதும் பறித்துக் கொண்டபின், வறுமையுற்றவரை வீட்டை விட்டு முடுக்கி விரட்டி அடிப்பர். (இவ்வாறு) குடிகளை அழிக்கின்ற விலைமாதர்களின் தொந்தரவால், (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல (விலைமாதர்களின் வசமாய்க் கட்டுண்டு கிடந்து) காம மயக்கம் என்னும் நரகத்தில் அடியேன் சுழற்சி அடைவேனோ?
வீணாக காமக் குரோதம் முதலிய படுபள்ளத்தில் விழும் ஆபத்தில் இருந்து அடியேனைக் காப்பாற்றி, தேவரீரது அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாக என்னைச் சேர்த்து ஆட்கொள்ளுமாறு திருவுள்ளத்தில் கருணை புரிந்து பரகதியைத் தந்து அருள்வீர்.
விரிவுரை
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர் தமை ---
பொதுமகளிர் இயல்பு இதில் நன்கு பேசப்படுகின்றது. இருமனப் பெண்டிராகிய அவர் வலைப்பட்டவர்,பழியும் பாவமும் எய்தி, வறுமையும் சிறுமையும் அடைவர்.
பொருள் கொடுத்தவரை, "ஆகா நீங்களே கொடைவள்ளல். அள்ளி வழங்கும் வள்ளலாகிய உங்களுக்குச் சமானம் மூவுலகிலும் இல்லை. என்னே உங்கள் உதாரகுணம். உங்களைக் கண்டாலே கலி நீங்கும்" என்று இங்ஙனம் உச்சி குளிர,உள்ளம் குளிரப் புகழ்வார்கள். பொருள் கொடாராயின், "பரமலோபி, இருக்குமிடத்தில் எழுசாண் மண் வேகும், பிசினன்" என்று எங்கும் தூற்றுவார்கள். இவர்களது உறவால் இடர் உற்றவர் எண்ணிலர்.
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். --- திருக்குறள்.
ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர்கை உதவுவர் ---
விலைமகளிர் தம்பால் வரும் மோக வலைப்பட்ட ஆடவர்கட்கு, தம் வாயில் மென்ற தாம்பூலத்தைத் தருவர். ஆடவர் மென்ற தாம்பூலத்தைத் தமது வாயில் வாங்கித் தரிப்பர்.
இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவை அருந்தியே அதை ...... இதமாகக்
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில்
இடுபவர்,பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவதும் எந்தநாள் அது ...... பகர்வாயே.
"வெம்புவாள் விழுவாள் பொய்யே,
மேல் விழுந்து அழுவாள் பொய்யே,
தம்பலம் தின்பாள் பொய்யே,
சாகிறேன் என்பாள் பொய்யே,
அம்பிலும் கொடிய கண்ணாள்
ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
நாயினும் கடையாவாரே". --- விவேகசிந்தாமணி.
இதன் பொருள் ---
கூர்மை பொருந்திய அம்பைக் காட்டிலும் கொடுமையை உடைய கண்களைக் கொண்ட பரத்தை ஆனவள், (ஆடவரை மயக்கி, அவருடைய பொருளைக் கொள்ள வேண்டி, அவருக்குத் துனபம் உண்டான போது) மனம் வெதும்புவாள். தானும் துன்புற்றது போல அயர்ந்து விழுவாள். இவை பொய்யான செய்கைகளே ஆகும்.மேலும், அந்த ஆடவர் மீது விழுந்து, (அவருடைய துன்பத்திற்கு வருந்துபவள் போல) அழுவாள். இதுவும் பொய்யான செய்கையே ஆகும். ஆடவர் வாயில் வைத்துத் தின்ற எச்சில் தம்பலத்தை, (அருவருப்புக் காட்டாது தனது வாயில்) வாங்கித் தின்பாள். (இது அன்பின் பால் பட்டது அல்ல.) பொய்யே.
(நீங்கள் இல்லை என்றால் நானும் இல்லை. நீங்கள் இறந்து விட்டால்) நானும் உங்களுடன் சாகின்றேன் என்று சொல்லுவாள். இதுவும் பொய்யே.கண நேரத்தில் உறுதி இல்லாமல், ஆயிரம் எண்ணங்களை மனதில் கருதும் இந்தப் பரத்தையை நம்பினவர்கள், பிறப்பால் மனிதராக இருந்தாலும், அவர்கள் நாயினும் கடைப்பட்ட பிறப்பினை உடையவர் ஆவர்.
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்---
குணத்தை ஒரு சிறிதும் நோக்காமல், பணத்தையே பெரிதாக நோக்குவர். பணம் என்றால் பிணமும் தழுவுவர். நடைபிணமாகத் திரியும் அறிவே சிறிதும் இல்லாத அசடர்களையும் விரும்புவர் என்பது கருத்து.
களபம் ஒழுகிய புளகித முலையினர்,
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர்,...... எவரோடும்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,
பொருளில் இளைஞரை வழிகொடு,மொழிகொடு,
தளர விடுபவர்,தெருவினில் எவரையும் ...... நகையாடி,
பிளவு பெறில்அதில் அளவுஅளவு ஒழுகியர்,
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு,......குழைவோடே,
பிணமும் அணைபவர்,வெறிதரு புனல்உணும்
அவச வனிதையர்,முடுகொடும் அணைபவர்,
பெருமை உடையவர்,உறவினை விட,அருள் ...... புரிவாயே.
படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர்---
தம்மை நாடி வரும் ஆடவர்கள், இனி மனை மக்கள் வீடு முதலியவைகளை மறந்து தம் வயப்படுமாறு மருந்து கொடுத்து மயக்குவர்.
நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பஞ் சாறொடி அரைத்துஉள உண்டைகள்
நிழற்கண் காண உணக்கி மணம்பல ...... தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
ஒளித்து அன்பாக அளித்தபின், இங்குஎனை
நினைக்கின் றீர்இலை,மெச்சல் இதஞ்சொலி ......எனவோதி
உறக்கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட
விடுக்கும் பாவிகள்,பொட்டிகள்,சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணந்தனில் ......உழலாமே...
வார்குழல் விரித்துத் தூக்கி, வேல்விழி சுழற்றிப் பார்த்து,
வா என நகைத்து, தோட்டு ...... குழை ஆட,
வாசகம் உரைத்து, சூத்ர பாவை என் உறுப்பைக் காட்டி,
வாசனை முலைக் கச்சு ஆட்டி, ...... அழகாகச்
சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து, நூல்இடை நெளித்துக் காட்டி,
தீதெய நடித்து, பாட்டு ...... குயில்போல,
சேர்உற அழைத்துப் பார்த்து, சார்வுஉற மருத்து இட்டு ஆட்டி,
சீர்பொருள் பறிப் பொய்க் கூத்தர் ...... உறவு ஆமோ?
அணைப்பர்,கார்த்திகை வருது என உறுபொருள் பறிப்பர்---
அன்பு இல்லாமலேயே தழுவுவர். அவ்வாறு அன்பின்றி தழுவும் பெண்டிரை மகிழ்வது போன்ற மதியீனம் வேறு இல்லை.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்,இருட்டறையில்
ஏதில் பணம் தழீஇ அற்று. --- திருக்குறள்.
கார்த்திகையில் தீபவிழா திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். ஆதலின், அங்குள்ள பொதுமகளிர் அவ் விழாவின்போது நிரம்பப் பொருள் வேண்டும் என்று பறிமுதல் செய்வர்.
மாத்தையில் ஒருவிசை வருக என அவர்க்கு உறவாயே அழைப்பர்---
பலரை நட்புக் கொள்பவர் ஆதலின், மாதத்திற்கு ஒருமுறை வருமாறு அவரவர்கட்கு ஒவ்வொரு நாளாக முறை வைப்பர். அவ் அறிவிலிகள்,அவள் தம்மையே மிகவும் காதலிப்பதாக எண்ணி மகிழ்வர். வேசையர் உறவால் தவம், பொருள், புகழ், உடல்நலம், நற்கதி முதலியன நீங்கும். ஆனால், பின்கண்ட ஏழு தன்மைகள் கிடைக்கும்.
மனைவியர் விரோதம் ஒன்று, மாதவர் பகை இரண்டு,
தனமது விரயம் மூன்று, சகலரும் நகைத்தல் நான்கு,
தினம்தினம் லஜ்ஜை ஐந்து, தேகத்தில் பிணியும் ஆறு,
வினையுறு நரகம் ஏழு, வேசையை விரும்புவோர்க்கே.
ஆத்திகள் கருதுவர்---
விலைமகளிர் பொருள் பறிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். பலப்பல வழிகளில் இங்கிதமாகக் கவர்வர்.
எரிகின்ற விளக்கு வேசி. விளக்கின் திரி அவளை நாடிச் செல்பவன். அகல் நாடுபவனுடைய வீடு. அகலிலுள்ள நெய் அவனுடைய செல்வம். நெய் உள்ளவரை விளக்கு எரியும். கை உள்ளவரை வேசியின் நட்பு நிற்கும். அகலில் உள்ள நெய்யை திரி கொண்டுபோய் எரிகின்ற விளக்கினிடம் சேர்ப்பதுபோல், வீட்டில் உள்ள பொருளை காமுகன் கொண்டுபோய் விலமகளிடம் தருகின்றான். நெய் காலியாகி விட்டால், திரியும் எரிந்து, அதிகச் சூட்டினால் அகலும் வெடித்து விடும். பணம் தீர்ந்தவுடன் பல நோய்களுக்கு ஆளாகி, அக் காமுகனும் அழிவான். அவன் வீடு வாசலும் பராதீனமாகிவிடும்.
விளக்கு ஒளியும்,வேசையர் நட்பும்,இரண்டும்
துளக்குஅற நாடின்,வேறுஅல்ல,--- விளக்குஒளியும்
நெய்அற்ற கண்ணே அறுமே, அவர்அன்பும்
கைஅற்ற கண்ணே அறும். --- நாலடியார்.
பூவில் வேசிகள் வீடு சந்தைப் பெரும்பேட்டை,
புனைமலர் படுக்கைவீடு
பொன்வாசல்,கட்டில்பொது அம்பலம்,உடுத்ததுகில்
பொருவில் சூதாடு சாலை,
மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து,
விழிமனம் கவர்தூண்டிலாம்,
மிக்கமொழி நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு
மின்னல், இரு துடைசர்ப்பமாம்,
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம்,
அதி கபடம் ஆம் மனதுகல்,
அமிர்தவாய் இதழ்சித்ர சாலை எச்சிற்குழி,
அவர்க்கு ஆசை வைக்கலாமோ?
மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை
வதைத்தவடி வேலாயுதா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மாமர வடிவாக நடுக்கடலிலே மறைந்த ஒப்பற்ற சூரபதுமனைப் பிளந்த வடிவேலனே!மயிலில் ஏறி அருள்விளையாடல் புரியம் குகனே! திருப்புல்வழல் என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ள குமரேசனே!
உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை. மலர்களாலே அணிசெயப் பெற்ற படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில். படுக்கைக் கட்டில் பலருக்கும் பொதுவான இடம். அவர்கள் உடுத்த ஆடை ஒப்பற்ற சூதாடும் அரங்கு. விருப்பத்தை ஊட்டும் அவர்களின் கொங்கைகள் (பலர்) கையாலும்ஆடத்தக்க திரண்ட பந்து. அவர்களின் கண்கள் (பலருடைய) மனத்தையும் கவர்கின்ற தூண்டிலாகும். மிகைப்பட்ட அவர்கள் பேச்சு நீர்மேல் எழுத்தாகும். அவர்கள் காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல்போன்றுமாறக்கூடியது. அவர்களுடைய இரண்டு
துடைகளும் பாம்புகள். விருப்பம் ஊட்டும் அல்குலோ எனில் தண்டனையை நிறைவேற்றும் இடம். மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல்லாகும். அமுதம் எனக் கூறும் வாயிலுள்ள இதழ் ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சிற்குழி.
அவர்களிடம் காதல் கொள்வது தகாது.
ஒருவரை முடுக்கி ஓட்டுவர்---
கை வறண்டவுடன் சிறிதும் தாமதமின்றி மிக விரைவாக விரட்டுவர்.
நாவார வேண்டும் விதம் சொல்லுவார், உனைநான் பிரிந்தால்
சாவேன்என்றே இருந்து ஒக்க உண்பார்கள், கைதான் வறண்டால்
போய்வாரும் என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவா கச்சிஏகம்பனே. --- பட்டினத்தார்.
பெருக்கம் ஆகிய நிதியினர் வரின், மிக
நகைத்து,வாம் என,அமளி அருகு, விரல்
பிடித்து போய், அவர் தொடையொடு தொடைபட ......உறவாடிப்
பிதற்றியே, அளவு இடு பணம் அது,தமது
இடத்திலே வரும் அளவு,நல் உரைகொடு
பிலுக்கியே, வெகு சரசமொடு அணைகுவர்,...... கனமாலாய்
முருக்கின் நேர் இதழ் அமுது பருகும் என
உரைத்து,லீலைகள் அதி விதமொடு, மலை
முலைக்கு உளே துயில் கொள, மயல் புரிகுவர்,....பொருள்தீரின்
முறுக்கியே உதை கொடு,வசை உரைதரு
மனத் துரோகிகள் இடுதொழில் வினை அற,
முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்.
பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ---
விலைமகளிரது சாகசத்தில் மயங்கி காமாந்தகாரத்தால் கண்கெட்டு, தீவினைகள் பல புரிந்து, தீவினையின் பயனாக நரகிடைக் கிடந்து வேதனை உற்று, மீட்டும் மீட்டும் பல்வேறு நரகங்கட்கு மாறி மாறிச் சென்று உழல்வர். பிணை எருது வட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும். அதுபோல், ரௌரவம், கும்பிகாம், அசிபத்ரம் முதலிய கொடிய நரகங்களில் சுழல்வர்.
நஞ்சினும் கொடியது காமம். நஞ்சு உண்டாரைக் கொல்லுமே அன்றி நரகிடைச் சேர்க்காது. காமம், கொலை புலை கள் பொய் சூது வாது முதலிய பல பாவங்களைப் புரிவித்து நரகமே காணி வீடாகச் செய்யும்.
கள்ளினும் கொடியது காமம். கள் உண்டவரையே மயங்கச் செய்யும். காமம் நினைத்தவரையும் கண்டவரையும் மயங்கச் செய்யும்.
தீயினும் கொடியது காமம். தீ அருகில் உள்ளாரேயே சுடும். தீப்பட்டார் நீரில முழுகி உய்வு பெறலாம். காமம் சேய்மையில் நின்றாரையும் சுடும். நீருள் குளிப்பினும் சுடும். குன்று ஏறி ஒளிப்பினும் சுடும்.
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். --- நாலடியார்.
காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகையாக்கிக் கழுத்துஅரியும் கத்திதானே.
அடியவருடன் எனை அமர்த்தி ---
அடியவர் பெருமை அளவிடற்கரியது. அடியவர் கூட்டமே பரகதிக்கு ஏணி. அடியவர் உறவு கிடைத்துவிட்டால் இறைவனுடைய கருணை தானே கிடைத்துவிடும். மாதவம் செய்த தென்திசை வாழ எம்பெருமான் ஆலாலசுந்தரரை அனுப்பி,திருத்தொண்டத் தொகை பாடுவித்த திருவருள் திறத்தைச் சிந்திக்க.
திருத்தொண்டர் பெருமை தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறும் திறத்தை நோக்குக.
ஆரம் கண்டிகை,ஆடையும் கந்தையே,
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்,
ஈர அன்பினர், யாதும் குறைவு இலர்,
வீரம் என்னால் விளம்பும் தகையதோ.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்பார் ஔவைப் பிராட்டியார்.
அடியார் உறவும் அரன்பூசை நேசமும், அன்பம் அன்றிப்
படிமீதில் வேறு பயன்உளதோ, பங்கயன் வகுத்த
குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக்கலங்கள்
தடியால் அடியுண்டவாறு ஒக்கும் என்று இனம் சார்ந்திலரே.
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று ...... பெறுவேனோ...--- (கரையற) திருப்புகழ்.
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாள்தொழு மாறே தான்இனி உடனேதான்
தரையி னாழ்த்திரை ஏழே போல்எழு
பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
சவலை தீர்த்து உனதாளே சூடிஉன் அடியார்வாழ்
சபையின் ஏற்றிஇன் ஞானா போதமும்
அருளி ஆட்கொளு மாறே தான்அது
தமிய னேற்கு முனேநீ மேவுவது ஒருநாளே.. --- திருப்புகழ்.
தழைத்த சாத்திர …... உரைசெய்த முருக---
ஐம்முகச் சிவனே அறுமுகச் சிவன். தனக்குத் தானே மகனாகிய தற்பரன், குருநாதன் ஒவ்வொருவருக்கும் அவசியம் வேண்டும் என்பதையும், குருவை இன்றி பரகதி சேர எண்ணுவது, மீகாமன் இன்றி கடல் பிரயாணம் செல்ல முயல்வதுபோல என்பதையும், உலகினர்க்கு உணர்த்துவான் கருதி, சிஷ்யபாவ மூர்த்தியாகி, உபதேசம் கேட்டுக் கொண்டனர். தனக்குத் தானே குருவாகிய முருகவேள் குருக்கள்போல் உபதேசித்து அருளினார்.
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக்கு ழந்தையும் எனஅவர் வழிபடு
குருக்க ளின்திறம் எனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனில்உறை சரவண ...... பெருமாளே.
சமத்தினால் புகழ் சனகியை....... அரி திருமருமகப் பரிவோனே---
நஞ்சம் அன்ன இராவணன், பஞ்சவடியில் மானை அனுப்பி, கள்ள வடிவம் கொண்டு சென்று, நாய் எனப் பர்ணசாலையில் நுழைந்து, தீயென நின்ற சீதாதேவியை மண்ணுடன் எடுத்து, சிறை வைத்து, விண்ணுடன் நின்ற புகழும் செல்வமும் போய், தமருடன் அழிந்து நமனுலகம் சென்றனன். பரதார கமனம் என்ற பாவத்தை அழிக்க வந்த ரகுவீரர் இராவணாதி அவுணரை அழித்து, அறநெறியை நிறுவி, அயோத்தியில் சென்று அரசு புரிந்தனர். அதனைத் தான் இன்றும் இராமராஜ்யம் என்று உலகம் புகழ்கின்றது. அத்தகைய வில் வீரன் அன்பு கொள் மருகன் - முருகனாகிய வேல் வீரன்.
செழித்த வேல் தனை...... சுரபதி மகள்தனை மணமது உற்றிடுவோனே---
வில் வீரன் சீதை சிறை மீட்டனன். வேல் வீரன் தேவர் சிறை மீட்டனன்.
சத்துவ குணமாகிய விபீடணனை வாழ்வித்து, தாமத குணமாகிய கும்பகர்ணனையும், இராஜச குணமாகிய இராவணனையும் வதைத்து, சமதமாதி முனிவர்களை உய்வித்தது இராமாயணம்.
ஆணவ மலமாகிய சூரபன்மனை வலிகுன்றச் செய்து, கன்மமாகிய சிங்கமுகனையும், மாயையாகிய தாரகனையும் மாய்த்து, பிறவிப் பெருங்கடலை வற்றச் செய்து, முத்திமாதாகிய தெய்வயானையை மணந்துகொண்டது காந்தம்.
சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றி புதுமை---
இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. விரிவிலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும் என்பார் அப்பமூர்த்திகள். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.
ஏழாம் நூற்றாண்டில் இருந்த சமணர் இந்நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்தனர். திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டுமுட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். எத்துணை கொடுமை?. தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர். அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.
இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.
அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.
திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுகப் பெருமாளே---
திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதத்தை பாண்டி நாட்டு மக்கள் பலவாறாகப் புகழ்ந்து போற்றினர். இன்றும் அவர் திருவடியைச் சிந்தித்து வந்தித்துப் புகழ்கின்றனர் மதுரையம்பதியினர்.
தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது,
பிள்ளையார் பெருகுஞ் செல்வம்
மன்னிய மதுரை மூதூர்
மறுகில்வந்து அருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர்
தொழுதுவேறு இனைய சொன்னார்.
மீனவன் கொண்ட வெப்பை
நீக்கி நம் விழுமம் தீர்த்த
ஞானசம் பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்,
பானறுங் குதலைச் செய்ய
பவளவாய்ப் பிள்ளை யார்தாம்
மானசீர்த் தென்னன் நாடு
வாழவந்து அணைந்தார் என்பார்.
எரியிடை வாதில் தோற்றது
இவர்க்குநம் அருகர் என்பார்,
புரிசடை அண்ணல் நீறே
பொருள் எனக் கண்டோம் என்பார்,
பெருகு ஒளி முத்தின் பைம்பொற்
சிவிகைமேல் பிள்ளை யார்தாம்
வரும் அழகு என்னே என்பார்,
வாழ்ந்தன கண்கள் என்பார்.
ஏதமே விளைந்தது இந்த
அடிகள்மார் இயல்பால் என்பார்,
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணும் என்பார்,
போதம் ஆவதுவும் முக்கட்
புராணனை அறிவது என்பார்,
வேதமும் நீறும் ஆகி
விரவிடும் எங்கும் என்பார்.
ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற்கு அணைந்தார் என்பார்,
ஓடுநீர் உடன்செ லாது
நிற்குமோ ஓலை என்பார்,
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்,
நாடெலாம் காண இங்கு
நண்ணுவர் காணீர் என்பார்.
தோற்றவர் கழுவில் ஏறத்
துணிவதே அருகர் என்பார்,
ஆற்றிய அருளின் மேன்மைப்
பிள்ளையார்க்கு அழகிது என்பார்,
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணங் கண்டார்,
போற்றுவார் எல்லாம் சைவ
நெறியினைப் போற்றும் என்பார்.
எனவரும் பெரியபுராணப் பாடல்கள் காண்க.
சிவசாதனங்கள் மூன்று --- திருநீறு, கண்டிகை, திருவைந்தெழுத்து. இவற்றுள் முன் நிற்பது திருநீறு. கருநீறு படுத்தும் திருநீற்றின் பதிகம், "மந்திரமாவது நீறு" பெற்ற பழம்பதி மதுரையம்பதி. ஆதலின், மதுரை மிகச் சிறந்த திருத்தலம்.
கருத்துரை
முருகா!காமம் என்னும் படுகுழியில் விழாமல் காத்து, அடியேனை உன் அடியருடன் சேர்த்து, பரகதி அருள் புரிவீர்.
No comments:
Post a Comment