உயிருக்கு உறுதி தருவது கல்வியே
-----
உணவு உடலுக்கு உறுதியைத் தருவது போல, கல்வி உயிருக்கு உறுதியைத் தருவதாக உள்ளது. உணவு இல்லையானால், நிற்றல், இருத்தல், நடத்தல் முதலிய தொழில்களை உடலால் மேற்கொள்ள முடியாது. அதுபோலவே, கல்வி அறிவு இல்லையானால், உயிரானது, நன்மை தீமைகளை நாடி அறியமாட்டாமல், மேன்மை குலைந்து, புன்மையில் கிடந்து தவிக்கும்.
பறவைக்குச் சிறகு போல், மனிதனுக்குக் கல்வி தேவைப்படுகின்றது. கல்வி அறிவு இல்லாதவன் சிறகு இழந்த பறவை போல, வலிமை இழந்து மடிவான். கண் இருந்தும் குருடனாய், காது இருந்து செவிடனாய், கால் இருந்தும் முடவனாய், உயிர் இருந்தும் சடமாய் இழிந்து போவான்.
"கேடுஇல் விழுச் செல்வம் கல்வி, ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை"
என்றார் திருவள்ளுவ நாயனார். தனக்கு உரிமையாகுமாறு மனிதன் ஈட்டிக் கொள்ளக் கூடிய செல்வம் கல்வியே ஆகும். அழிவு இன்மையோடு, விழுமிய தன்மையும் உடைய செல்வம்,கல்வியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
கல்வியானது உள்ளே இருந்து விளைவது. ஆன்ம ஒளியைத் தரவல்லது. அடுத்தவர்க்குக் கொடுத்தாலும் குறைவு படாது. கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாது. எடுக்க எடுக்கப் பெருகுவது. எவராலும் கவர்ந்து கொள்ள முடியாதது. அதனால் கல்வியே கேடு இல்லாத மேன்மையைத் தரவல்லது. விழுப்பத்தையும் தரவல்லது.
பிற செல்வங்கள்,வெளியில் இருந்து வருபவை. அவை அறிவை மயக்குபவை. கொடுக்கக் குறைபவை. எடுக்கத் தேய்பவை. தாயத்தார் பங்கு கொள்வது. கள்வரால் கவரப்படுவது. எனவே, கல்வியைத் தவிர, பிற செல்வங்கள் கேட்டைத் தருவதோடு, சிறுமையையும் தருபவை ஆகும் என்பதை, மேலே காட்டிய திருக்குறள் தெளிவிக்கின்றது.
"மால்படு புந்தியின் மறுவில் சேதனம்
பாற்படும் உயிர்க்கு எலாம் பவத்தின் மாண்பயன்
நூற்படு கல்வியின் நுவல் வளத்தினின்
மேற்படு கின்றதில் விழுமிது இல்லையே".
என்று கல்வியின் மேன்மையை அறிவுறுத்துகின்றது கந்தபுராணம்.
"வைப்பு உழிக் கோட்படா; வாய்த்து ஈயில் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்று அல்ல பிற".
என்று கல்வியின் சிறப்பை உணர்த்துகின்றது நாலடியார்.
சேர்த்து வைத்த கல்வி அறிவை யாரும் திருடிக் கொண்டு போய்விட முடியாது. பிறருக்கு வழங்குவதாலும் கல்விச் செல்வமானது குறையாமல் வளரவே செய்யும். மிகச் சிறந்த வலிமை படைத்த அரசர்களாக இருந்தாலும், அவர்களால் ஒருவன் பெற்றுள்ள கல்விச் செல்வத்தைப் போரிட்டுக் கவர்ந்து கொள்ள முடியாது. தனக்குப் பின்னாலே வருகின்ற சந்ததிக்கு மிச்சம் என வைத்துச் செல்லவேண்டியது கல்வி அறிவே ஆகும். வேறு ஏதும் இல்லை.
"வெள்ளத்தே போகாது, வெந்தணலில் வேகாது,
கொள்ளத்தான் போகாது, கொடுத்தாலும் குறையாது,
கள்ளருக்கும் எட்டாது, காவலுக்குள் அமையாது,
உள்ளத்தே பொருள் இருக்க, ஊரில் உழைத்து உழல்வானேன்".
என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.
இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி அலையும் அலையும் மனிதர்களைப் பார்த்து, பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாததும், வெம்மையான தீயில் எரிந்து போகாததும்,மற்றவர் எடுத்துக் கொள்வதால் குறைவு படாததும்,கொடுத்தாலும் குறைவு படாததும்,திருடர்களால் கவர்ந்து கொள்ள முடியாததும்,ஒருவர் தனக்குச் சொந்தமானது என்று எண்ணி, காவலில் வைத்தாலும் அதற்குள் கட்டுப்படாததும் ஆகிய உயர்வான கல்விச் செல்வமானது உங்கள் உள்ளத்தில் பொருந்தி இருக்க, முயற்சி செய்து பிற பொருள்களைத் தேட முயலாதீர். அதனால் ஒரு பயனும் அடையமாட்டீர். கல்வியால் ஞானத்தைப் பெருக்கிப் பயன் அடைவீர் என்று உபதேசிக்கின்றது இந்தப் பாடல்.
கல்வி வெளியில் இருந்து வருவதில்லை. மனிதனுடைய உள்ளத்தில் இருந்தே அது ஒளி பெற்று வளர்கின்றது. மழை நீரைப் பெற்று பயிர் தழைப்பதைப் போல. மண்ணில் புதைந்து கிடக்கும் பொன்னைத் தோண்டி எடுத்துக் கொள்வது போல, கல்வியால் அறிவைப் பெற்றுக் கொள்கின்றோம். இயல்பாகவே மனிதனுக்கு உள்ள அறிவானது கல்வி அறிவால் விளக்கம் பெறுகின்றது.
கேடு இல்லாத, விழுப்பமான செல்வமாகிய கல்வியைப் பெற்றுக் கொள்ளச் சொல்லிப் பெரியவர்கள் அறிவுறுத்துவது, கேடு தருகின்ற வினைகளை அறுத்து, பிறவாத பெருநிலையை அடைந்து, கேடு இல்லாததும் மேலான இன்பத்தையே தருவதும் ஆகிய விடுபேற்றை மனிதன் அடைந்து உய்யவே.
"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்,
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்,
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்,
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தார்களே."
என்று பாடியதன் வழி, மனிதப் பிறவியானது பெறுதற்கு அரிய பிறவி. பெறுதற்கு அரியதான பிறவியைப் பெற்றும் கூட, பெறுதற்கு அரியவன் ஆக உள்ள இறைவன் திருவடியை வணங்காதவர்கள் எல்லாம், மனித வடிவில் இருக்கின்றார்களே ஒழிய, அவர்கள் எல்லாம் பெறுதற்கு அரிய பிராணிகளே ஆவார்கள். அந்தப் பிராணிகள் பெறுதற்கு அரியதாகிய வீடுபேற்றினை இழந்தவர்கள். பிராணன் மட்டுமே இருப்பதால், ஆறறிவு உயிரோடு பிறந்தும் ஐயறிவு விளங்கும் விலங்கு முதலியவற்றோடும் இவர்கள் ஒப்பாக மாட்டார் என்னும் கருத்தால் "பெறுதற்கு அரிய பிராணிகள்" என்னும் கருத்து சிந்தனைக்கு உரியது. ஐயறிவு வரை உள்ள விலங்குகள் கூட இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றன. அப்படி இருக்க, மனித வடிவில் உள்ள விலங்கானது, பெறுதற்கு அரிய பேற்றினை இழந்து நிற்கும் கேட்டினைக் கண்டு, திருமூல நாயனார், "கேடு கண்டு இரங்கல்" என்னும் தலைப்பில் பாடியருளிய திருமந்திரம் இது. இரையைத் தேடுவதோடு, இறையையும் தேடுவதே மாந்தரின் அறிவுடைய செயல் ஆகும். அதுவே, கல்வியின் பயனும் ஆகும்.
எனவே, இந்த உடம்பில் உயிர் உள்ள காலத்திலேயே, இறைவனைத் தொழுது நற்பேறு பெறுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த,
"நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின்,கழிந்து அறும் பாவங்கள்,
சொல் குன்றல் இன்றித் தொழுமின்,தொழுதபின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே".
என்று அருளினார் திருமூல நாயனார்.
"இளமையில் கல்" என்றார் ஔவையார். இளமைக் காலத்தில் அறிவு,ஆற்றல்,முயற்சியுடைமை முதலியன தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியாக இருக்கும். அதுவே,தொழுதற்கு வாய்ப்புடைய காலம் ஆகும். "காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்" என்றார் மணிவாசகப் பெருமான். "போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே" என்று அப்பர் பெருமான் வருந்திப் பாடினார். என்றும் மாறாத ஒப்பற்ற நிலையை உடைய இறைவனை, மாறுகின்ற இயல்பே உடைய இந்த உடம்பு நல்ல நிலையில் உள்ளபோதே, அவன் திருவடியினை அடைவிக்கும் மெய்யுணர்வுக் கல்வியினைக் காலம் போக்காது, விரைந்து கற்றிட வேண்டும். கற்று உணர்ந்து இறைவனை வழிபட, பாவங்கள் அற்றுப் போகும். எனவே, அவனது பொருள்சேர் புகழைக் கொண்டு அருட்பாடல்களை, சொல் குற்றம், பொருள் குற்றம் வராதபடி, பொருள் உணர்ந்து ஓதி, அருள் நினைவுடன் தொழுதல் வேண்டும். மணி விளக்காக இறைவன் விளங்கி அருள் புரிவான்.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்று மணிவாசகப் பெருமான் அருளிச் செய்தார். ஆனால், அகங்காரம் குடிகொண்டு இருப்பதால், சொல்லுகின்ற பாட்டின் பொருளை உணர வேண்டும் என்று தலைப்படாமல், சிலர், "நாம் இன்று இறைவன் திருவடியை வணங்கினோம். உள்ளம் கனிந்து விட்டது. அவனுக்கு அடியவர் ஆனோம். அருமையாக நாம் பாடினோம். கல்வியை அறிந்தோம், அருளையும் அடைந்தோம். இம்மை மறுமை இன்பங்களையும் பெற்றோம்" என்று தமக்குத் தாமே மதித்துக் கொண்டு, இழிநிலையை அடைகின்றார்கள் என்பதை மிக அருமையாக, பின்வருமாறு வள்ளல் பெருமான் பாடிக் காட்டினார். பொருளை உணர்ந்து தெளிவது நன்மையைத் தரும்.
அமைவு அறிந்திடா ஆணவப் பயலே!
அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
எமை நடத்துவோன்,ஈது உணராமல்,
இன்று நாம் பரன் இணையடி தொழுதோம்,
கமைவின் ஏத்தினோம்,அடியரும் ஆனோம்,
கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல்,
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மைஎன்று உணரே.
இதன் பொருள் ---
உனது தகுதி இன்னது என்று அறியாது,திமிர் கொண்டு இருக்கும் ஆணவம் என்னும் சிறு பையனே! கோடிக் கணக்கான அண்டங்கள் அனைத்தையும் ஆட்டுகின்றவன் நம்மை நடத்துபவனாகிய இறைவனே. இதனை உணராமல், "இன்று நாம் பெருமானுடைய திருவடிகளையும் தொழுகின்றோம். பொறுமைப் பண்புடன் அவனை ஏத்தி வழிபடுகின்றோம், அவனுக்கு அடியவர் ஆகிவிட்டோம். அதனால் எமது உள்ளம் கனிந்து விட்டது"என்று நாங்கள் கருதுமாறு தலைக்கனம் கொள்ளச் செய்யாதே. உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவனான திருவொற்றியூர்ச் சிவனுடைய திருவருள் என்னும் வாளால் உன்னைத் துண்டாக வெட்டுவேன்; இதனை உண்மையாக உணர்வாயாக.
கருமையாம் அகங்கார மர்க்கடவா!
கடையனே! உனைக் கலந்த அதனாலே,
அருமையாக நாம் பாடினோம்,கல்வி
அற அறிந்தனம்,அருளையும் அடைந்தோம்,
இருமை இன்பமும் பெற்றனம் என்றே,
எனை மதித்து, நான் இழிவு அடைந்தனன் காண்,
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.
இதன் பொருள் ---
கருமைப் பண்புடைய அகங்காரம் என்னும் குரங்காகிய கடையனே! உன்னோடுநான் கலப்புற்றமையால், “நாம் அருமையாகப் பாடுகின்றோம். கல்வியும் முற்றக் கற்று உள்ளோம். திருவருளையும் பெற்று விட்டோம். இம்மை மறுமைக்கு உரிய இன்பமும் பெற்றுள்ளோம் என்று என்னை நானே வியந்து இழிவுற்றேன். (அதனால், இனியும் நீ அடங்கவில்லையானால்) ஒருமை நலம் வாய்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள பெருமானுடைய திருவருளாகிய ஞானவாள் கொண்டு உன்னைத் துண்டாக வெட்டுவேன்.இதனை மெய்யாக உணர்வாயாக.
உணவுப் பொருள்களை விளைவிக்கின்ற வயலிலும், விளைந்த பொருள்களைப் பதப்படுத்துகின்ற களத்திலும், அதற்குக் காவலாக உள்ளவர் தனது கையில் கோல் ஒன்றை வைத்திருப்பார். பறவைகள் வந்து விளைபொருளை அணுகாமல் இருக்கவே இந்த உபாயம்.
வள்ளிநாயகியார், சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்து, தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.
வள்ளிநாயகி --- சீவான்மா.
தினைப்புனம் --- உள்ளம்.
தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.
பறவைகள் --- தீய நினைவுகள்.
பசுங்கதிர் --- ஞான அனுபவம்.
ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனத்தில், மெய்ம்மையான உழவைச் செய்து, நல்ல எண்ணங்கள் ஆகிய தினைப்பயிர் வளர்ந்துகொண்டு இருக்கின்றது. அது வளர்ந்து ஞானானுபவம் ஆகிய பசுங்கதிர் உண்டாகும். நல்லெண்ணம் ஆகிய தினைப்பயிரை, தீய எண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல் புரிந்து கொண்டு இருந்தவர், சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டி, அகிலாண்ட நாயகியாகிய வள்ளித் தாயார். அந்த சீவான்மாவைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார் ஆறுமுகப் பரம்பொருள்.
திண்மையான நல்லெண்ணத்தால் மெய்யறிவு பெற்றவர்களுடைய உள்ளமாகிய புனத்தை, ஐம்புலன்கள் என்னும் பறவைகள் வந்து பாழ்படுத்தாதவண்ணம் காத்துக் கொள்வதை அறிதற்கு உரிய கல்வியைப் பயிலாமல், மனிதர்கள் அறிவு மயக்கம் கொண்டு உள்ளார்களே என்று இரங்குகின்றார் திருமூல நாயனார்,
"கோல் ஒன்று பற்றினால், கூடா பறவைகள்,
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே". --- திருமந்திரம்.
எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக இறைவன் உள்ளான் என்றபோதிலும், கல்லாத புல்லறிவாளர்களின் நெஞ்சில் அவனைக் காண முடியாது. கற்று அறிவு பெற்றவர் நெஞ்சில் அவனைக் காணுதல் கூடும். உலகும்,உலகத்துப் பொருள்களும்,உடலும் நில்லாத தன்மையினை உடையன. அவற்றை நிலையாகநிற்கும் என உள்ளத்தில் கொள்பவர்கள் கல்லாத புல்லறிவினர். எனவே, "கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேன்" என்றார் மணிவாசகப் பெருமான். "கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே" என்றார் திருமூல நாயனார்.
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்!
எல்லா உயிர்க்கும் இறைவனே,ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே. --- திருமந்திரம்.
எனவே, "கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" என்று திருஞானசம்பந்தரும், "கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள், கற்றார்கள் உற்று ஓரும் காதலான்" என்று அப்பர் பெருமானும் அருளியதை உணர்ந்து, இறைகல்வியைக் கற்று, இறைவனடியை அடைய முயல்வதே உயிருக்குச் சிறப்பைத் தரும். "கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"கடவுள் நாமமே கற்றல் நல் தவமே" என்றார் திருஞானசம்பந்தர். "நாமம்" என்பது புகழைக் குறிக்கும். அது இறைவன் பொருள்சேர் புகழ் ஆகும். இறைவன் புகழைக் கற்பதே தவம் ஆகும். கல்வியின் பயன் அதுவே என்பாதல்,
"கற்றதனால் ஆய பயன் என்கொல்? வால்அறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்."
என்றார் திருவள்ளுவ நாயனார்.
"கற்ற கல்வியிலும் இனியான்" இறைவன். அவனைப் பணியாமல் இருத்தல் கூடாது என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.
குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால்
கூடுமாறு அதனைக் கொடுப் பானை,
கற்ற கல்வியிலும் இனியானை,
காணப் பேணும் அவர்க்கு எளியானை,
முற்ற அஞ்சும் துறந்து இருப்பானை,
மூவரின் முதல் ஆயவன் தன்னை,
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
தோன்றலைப் பணியா விடல் ஆமே.
இதன் பொருள் ---
அடியவர் குற்றம் சிறிதும் இல்லாதவராய் இருந்தால்,அவர்கள் கூடி இருக்குமாறுஉ தன்னையே கொடுப்பவன் இறைவன். வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவன். ஐம்புலன்களையும் முற்றத் துறந்து பற்றின்றி இருப்பவன், காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாய் இருப்பவன்.சுற்றிலும் நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதல் ஆகுமோ? (ஆகாது அல்லவா? அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்).
No comments:
Post a Comment