பத்தி வலையில் படுவது பரம்பொருள்

 


 

பத்தி வலையில் படுவது பரம்பொருள்

-----

 

     "கண்ணால் யானும் கண்டேன்காண்க" என்று பாடிநான் கண்டதை நீங்களும் காணுங்கள் என்று காட்டுகின்றார் மணிவாசகப் பெருமான். அவர் அகக் கண்ணால் கண்ட பரம்பொருள் எப்படிப்பட்டது என்பதை அவரே கூறுகின்றார்.

 

"சித்தமும் செல்லா சேட்சியன் காண்க".

"பத்தி வலையில் படுவோன் காண்க".      --- திருவாசகம்.

 

     புறமனம்அகமனம்மட்டுமல்லாதுஆழ்நிலைச் சித்தத்தாலும் எட்டமுடியாதவன். ஆயினும் அன்பர்களின் பத்தி என்ற வலையினுள் தாஈனே வந்து அகப்படுவான். பத்தி வலையானது விரிய விரியதனது அளப்பரும் கருணை காரணமாக,சித்தமும் செல்லாத சேட்சியன் ஆகிய பரம்பொருள் தானே வந்து வலையில் படுகின்றது. அதைக் காணுங்கள் என்கின்றார் மணிவாசகர்.

 

     வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுபவன் கரையை நாடுவது போலவும்கோடை வெயிலில் நடப்பவன் நிழலை நாடுவது போலவும்,மழைக்கு அஞ்சியவன் வீட்டை நாடுவது போலவும்,ஏழை செல்வந்தனை நாடுவது போலவும்,  அடர்ந்த இருளிலே தவிப்பவன் விளக்கை நாடுவது போலவும்குளிரிலே நடுங்குபவன் நெருப்பை நாடுவது போலவும்இறைவனுடையதிருவருளை நாடுவது பக்தியாகும்.லப்பல சடங்குகள் செய்வதுதான் பக்தி என்று எண்ணி வாழ்நாளை வீழ்நாளாக்கி வருகிறோம் நாம்.

 

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகிஅகம் குழைவார்க்கு அன்றி

என்போல் மணியினை எய்த ஒண்ணாதே" 

 

என்கின்றார் திருமூல நாயனார்.

 

     நமது எலும்புகளையே விறகாக ஆக்கிநெருப்பு மூட்டிஅதில் நமது உடல் சதைகளை அறுத்து அறுத்துப் போட்டு,வறுத்து எடுத்துக் கடுந்தவம் செய்வதால் இறைவனை உணர்ந்திட முடியாது. உடலை எவ்வளவு வருத்தினாலும் பயன் இல்லை.  உள்ளத்தில் உண்டாகும் அன்பின் மிகுதியினால் அகம் குழைய வேண்டும். அன்பு என்பது தன்னலம் இல்லாத தன்மை. தன்னலப் பற்றை நீக்கிகருணை மிகும் பொழுது உள்ளம் மென்மையாகி விடுகிறதுஇத்தன்மையே உருகிய நிலை என்பர்.

 

     வெண்ணெய் உருகினால் நறுமணம் வெளிப்படும்.தங்கம் உருகினால் கல் பதியும்உள்ளம் உருகினால் இறையருள் பதியும்.தீய குணங்கள் யாவும் நீங்கி நற்குணங்கள் மட்டுமே நிறைந்த உள்ளம் மென்மையான,உருகிய உள்ளம் ஆகும்.

 

     அன்பே வடிவாக உள்ள பரம்பொருளை அடைவதற்கு ஒரே வழி அன்பு நெறியே ஆகும். பரம்பொருள் --- மிகப் பெரிய பொருள். ஆனாலும்அன்பு என்னும் வலையை நாம் விரித்தோமானால்பரம்பொருள் தன்னாலே வந்து,நாம் விரித்த அன்பு வலையில் அகப்பட்டுக்கொள்ளும்.

 

     இதைத் தான்"அன்பெனும் வலைக்குள் படு பரம்பொருளே"என்றார் வள்ளல்பெருமான். அன்பு உருவாகிய பரம்பொருள்அன்பு வலையில் தானே வந்து விழும். மற்ற எந்த வலையை விரித்தாலும்அது வந்து அகப்படாது.

 

     கண்ணபிரானுக்கு யசோதைபாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாதுஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும்அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும்உரியில் உள்ளதனை உரல் மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றம் கொண்டுதாம்புக் கயிறு ஒன்றை எடுத்து உரலிலே கட்டும் பொருட்டுஓடித் தேடிப் பிடித்து கண்ணனின் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத தனது மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்துஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. இது என்ன அதிசயம்?இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும்மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டுதனது இடையைச் சுருக்கினார் கண்ணன். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற கண்ணனை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுதுமெல்லத் தவழ்ந்துவாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார். கண்ணன் யசோதையின் அன்புக்குக் கட்டுண்டார்.

 

     பாண்டவர்கள் வனவாசத்தை முடித்துகரந்துறை வாசத்தையும் முடித்த பின்னர்தருமன்கண்ணனைப் பார்த்து, "நஞ்சுதனை மிகுதியாக உண்டுஅதை ஒழிக்கத்தக்க சிறந்த மருந்துகளையும் சிறந்த மந்திரத்தையும் விரைவாகஉயிர் நீங்குவதற்குள்ளே தேடாமல்உயிர் ஒடுங்குபவரைப் போல,நாம் யாதொரு முயற்சியும் செய்யாது இருப்பது தகுதியாகுமாஅருமையான போரைச் செய்யும்படிதுரியோதனாதியர்கள் சொன்னாலும்,சிறிதும் தருமம் இல்லாமல்பலர்க்கும் அழிவு உண்டாகப் பெரிய போரைச் செய்வது நீதியல்ல" என்கின்றான். கண்ணன் தருமனது தம்பியர் நால்வரை உடன் இருக்கச் செய்து, "உங்களுக்கு உரிய நாட்டை சமாதானத்தால் பெற்றுக் கொள்வதாமீண்டும் வனவாசம் புரிவதாபோர் புரிவதாஉங்களின் எண்ணம் என்ன?"என்று வினவினான்.

 

     "எங்களுக்கு உயிரை ஒத்த கண்ணா! பகைமை என்னும் கொடிய தீயை மூளச் செய்தால்உயர வளர்ந்துள்ள காடு தானே அழிந்துபோகும். போர் மூண்டால் இருதிறத்தாரும் அழிவோம்.

நாங்கள் ஒருவரோடு ஒருவர் பகை உணர்வு இல்லாமல் கூடி வாழும்படி சமாதானம் உண்டாகநீ தூது சொல்லி அருள்வாய்" என்று தருமன் வேண்டினான்.

 

     "கொடியவன் ஆன துரியோதனன்குருநாட்டில் உங்களுக்கு உரிய பங்கைக் கொடாமல் இருப்பானாகில்அவனைப் போரில் கொன்றுஇராச்சியம் முழுவதையும் அரசாளத் துணிவதே இனிமேல் செய்யத்தக்கது" என்று கண்ணன் கூறினான்.

 

     அது கேட்ட தருமன், "பெரியோர்களையும்உறவினரையும்ஒரு குலத்திலே பிறந்த தம்பிமார்களையும் போரில் கொன்றுவென்றுஅரசாளுவதைக் காட்டிலும்காடுகள் தோறும் சென்று,பழங்களையும்கிழங்குகளையும் உண்டு உயிர் வாழ்வது நல்லது" என்றான்.

 

     இதைக் கேட்ட கண்ணன், "நீ போருக்கு அஞ்சி,காட்டிலே திரும்பவும் வாழ்வது என்றால்உலகவர் ஏசமாட்டார்களாதிரௌபதியைத் துகில் உரிந்த காலத்தில் நீங்கள் சபையில் சொன்ன பெரிய சபதமும் பொய்யாகி விடாதாநீங்கள் அப்படிச் செய்வது அரச நீதி ஆகுமா?"என்று கேட்டான். அதற்குத் தருமன், "நீ எங்களுக்காகத் தூது சென்றாயாகில்துரியோதனன் எங்களுக்கு உரிய பாகத்தைக் கொடுப்பான். அப்படி அவன் இசையாவிட்டால்ஐந்து ஊர்களையாவது கேட்டுப் பார். அப்படியும் இசையவில்லையானால்போரை விரும்பி வருவாயாக" என்றான்.

 

     தருமன் சொன்னதைக் கேட்டு பீமன் வெகுள்கின்றான். அவனைத் தருமன் சமாதானப்படுத்துகின்றான். கண்ணனும் பீமனைச் சமாதானப்படுத்துகின்றான். பீமனும்அருச்சுனனும் போரையே வலியுறுத்தினர். நகுலன் தனது கருத்தாக, "நீண்ட காலமாக நமக்கும்கௌரவர்க்கும் பகை இருப்பதால்குருநாட்டின் பாகத்தையும்,அதற்கு உரிய அரசாட்சியையும் அவன் நமக்குக் கொடுக்கமாட்டான்ஆதலால்நாம் நமக்குரிய இராச்சியத்தைப் பகைவனிடம் யாசித்தோம் என்று உலகம்நம்மை இகழ்ந்து பரிகாசம் செய்யாதபடிதுரியோதனனது சேனா பலத்தையும்இவர்களுக்குத் தம்பியாகிய என்னுடைய பெரிய தோள்களின் வலிமையையும் கண்கூடாகப் பார்த்து விடலாமே" என்றான்.

 

     நகுலன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட கண்ணபிரான், "இது நன்றாக உள்ளது" என்று கையமைத்துசகாதேவனைப் பார்த்து"எவராலும் சிறப்பித்துச் சொல்லுதற்கு முடியாத மெய்யறிவை உடையவனே! வல்லமையை உடையவனே! புகழை உடையவனே! நீ உனது கருத்தைச் சொல்" என்று சொல்லவும்கண்ணன் மனம் உருகுமாறு சகாதேவன் கூறுகின்றான். 

 

     "ஆதிமூர்த்தியே! இப்பொழுது தருமபுத்திரனின் கருத்துப்படி,நீ தூது போனாலும் என்னபோகாமல் இருந்தாலும் என்ன?  துரியோதனன் எங்களுக்கு நாட்டைக் கொடுத்தால் என்னகொடுக்காமல் இருந்தால் என்னஇந்தப் பாஞ்சாலி தனது விரித்த கூந்தலை முடித்தால் என்னமுடிக்காமல் இப்படியே விட்டுவிட்டால் என்னநீ நினைத்த காரியம் எப்படி முடியும் என்று எனக்குத் தெரியுமாஎது எப்படி நடந்தாலும்அது உனது சங்கற்பத்தின்படியே முடியும் என்பது எனது கருத்து. திருத்துழாய் மாலையை அணிந்ததிருமுடியை உடையவனே! நீ குழந்தையாய் இருந்த காலத்தில்பூதனை என்னும் பேய்மகளது முலைப்பாலைப் பருகியருளியும்இரட்டை மருத மரத்தின் நடுவிலே தவழ்ந்து சென்றும்உயர்ந்த

சகடாசுரனை இறந்து விழும்படி காலால் உதைத்தும்இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய திருமாலே! உனது மாயை,இங்கு ஒருவருக்கும் தெரியாது. அதனை உள்ளபடி நான் அறிவேன்உனது திரு உள்ளக் கருத்து எதுவோ,அதுவே எனது கருத்தும் ஆகும்"

என்று முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில் கடவுளை ஒத்தவனான சகதேவன் கூறினான்.

 

     சகாதேவனைப் பார்த்து"போர் நேராதிருப்பதற்கு உபாயம் என்ன?" என்று கண்ணன் கேட்கின்றான். அதற்கு சகாதேவன்"மேகம் போலக் கரியநிறம் உடையவனே! பசுக்களைக் காக்கும் இடைச்சாதியில் வளர்ந்தவனே! போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தன் என்னும் திருநாமம் உடையவனே! நீ பாரதப் போரில் எல்லாரையும் அழியச் செய்து பூமிதேவியின் பாரத்தை ஒழிக்க விரும்பி உள்ளாய். உனது கருத்துப்படி நிகழப் போகும் பெரிய பாரதப் போரைஅதனை நடத்தும் நீ அல்லாமல்தடுக்க வல்லவர் யாரும் இல்லை" என்றான். அவன் மேலும் சொல்லுகின்றான், "ஆனாலும் எனக்குத் தோன்றுவதைக் கூறுகின்றேன். கர்ணன் இந்தப் பூமியை அரசாட்சி செய்யும்படிஅவனிடத்துப் பகைமை கொண்டுள்ள அருச்சுனனை முதலில் கொன்றுவிட வேண்டும். சிறந்த மகளான திரௌபதியினது கருநிறம் பொருந்திய கூந்தலை அரிந்துவிட்டு,  உனது கால்களிலே விலங்கை இட்டு,கைகளையும் பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டிவைப்பேன் என்றால்பெரிய பாரதப்போர் நடக்காதவண்ணம் தடுத்துவிடலாம்" என்றான் சகாதேவன்.


     இவ்வாறு கூறிய சகாதேவனை நோக்கி
விசித்திர ஆற்றல்  உடையவனான கண்ணன், "நீ முன்னே சொன்ன காரியங்களை எல்லாம் நிறைவேற்றினாலும்இறுதியில் சொன்னபடி நீ என்னைக் கட்டும் வகை எப்படி?" என்று வினவுகின்றான். அதற்குச் சகாதேவன், "உனது கலியாண குணங்களின் பெருமையை நீ அறியமாட்டாய். உனது திவ்விய சொரூபத்தை நீ எனக்குக் காட்டினால்நான் உன்னைக் கட்டிவிடுவேன்"என்றான்.

 

     தன்னிடத்து மிக்க பக்தியை உடையவனான சகாதேவனது நிலையை அறிய வேண்டி"என்னை நீ கட்டுவாயாக" என்று சொல்லி,  பதினாறாயிரம் வடிவங்களை ஒருங்கே எடுத்துக் கொண்டான். தூய அன்பினை உடைய சகாதேவன் தனது ஞானத்தால்இந்த வடிவங்களுக்கு எல்லாம்மூல காரணமாய் நின்ற திருவருவத்தை அறிந்துஅப் பெருமானது உபய பாதாம்புயங்களைத் தனது மனமாகிய கயிற்றினால் கட்டினான்.

 

     பூமியில் வசிக்கும் தேவர்களாகிய அந்தணர்களும்அழகிய கற்பகச்சோலையின் நிழலிலே வசிக்கிற சிறந்த தேவர்களும் தேடியும் பார்க்க முடியாததாமரை மலர்போன்ற திருவடிகளை உடைய கண்ணபிரான், "நீயே கடவுள் ஆவாய்என்றுமனத்தினாலே தன்னைக் கட்டின சகாதேவன் கண்ணால் கண்டு களிக்கும்படிதனது சொரூப நிலையைக் காட்டி நின்றான். (கண்ணால் யானும் கண்டேன் காண்க --- மணிவாசகம்)

 

     பின்னர் கண்ணன் சகாதேவனை நோக்கி, "அன்பால் இன்று  எனது சொரூபத்தை நீ உணர்ந்து கட்டியது நன்றாக உள்ளதுஇனி எனது கால்களை விட்டிடுவாயாகஎன்று சொல்லஅதற்குச் சகாதேவன் கண்ணனை நோக்கி, "கண்ணா! உன்னை வந்து அடைந்தவர்கள் ஆகிய எங்கள் ஐந்து பேரையும்,இனி நிகழ உள்ள கொடிய பாரதப் போரில்உனது திருவருள் நோக்கத்தால்  பாதுகாத்து அருளவேண்டும்"என்று வேண்டினான். தனது திருவடியைச் சரண்டைந்த சகாதேவனுக்கு, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னதோடு, "இங்கு நம் இருவருக்குள் நடந்தவற்றை ஒருவருக்கும் சொல்லி விடாதே" என்று கண்ணன் கூறினான். 

 

     பின்னர் கண்ணன்துரியோதனனிடத்துத் தூது வந்த போது,கண்ணனைக் கொல்லச் சூழ்ச்சி செய்துநிலவறை ஒன்று துரியோதனனால் அமைக்கப்பட்டது. அந்த நிலவறையின் மீது அமைக்கப்பட்ட ஆசனத்தில் கண்ணன் அமர்ந்ததும்ஆசனம் முறிந்து,கண்ணன் நிலவறைக்குள் விழுந்தான். பெருவடிவம் கொண்டு அங்கிருந்த வீரர்களைக் கண்ணன் அழித்தான். தேவர்கள் யாவரும் வேண்டகண்ணன் தனது பெருவடிவத்தைச் சுருக்கிக் கொண்டான்.

 

"ஆரணனே!அரனே!புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்

காரணனே!கருணாகரனே!கமலாசனி காதலனே!,

வாரணமே! பொதுவே! ஒரு பேர் இட வந்தருளும் புயலே!

நாரணனே! முனியேல்முனியேல்!எனநாகர் பணிந்தனரே.

     

"மாதவனே! முனியேல்,எமை ஆளுடை வானவனே!முனியேல்,

யாதவனே! முனியேல்,இதயத்தில் இருப்பவனேமுனியேல்,

ஆதவனேமுனியேல்மதி வெங் கனல் ஆனவனே!முனியேல்,

நீதவனேமுனியேல்,முனியேல்," என நின்று பணிந்தனரே.

     

கங்கை மகன்,கதிரோன் மகன்,அம்பிகை

     காதல் மகன்தனயர்,

அங்கு அவையின்கண் இருந்த நராதிபர்

     அடைய எழுந்துஅடைவே

செங்கை குவித்த சிரத்தினர் ஆய்உணர்வு 

     ஒன்றிய சிந்தையர் ஆய்,

"எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள்"

     என்று பணிந்தனரே.

     

"'கண்ணபொறுத்தருள்,வெண்ணெய் அருந்திய

      கள்வபொறுத்தருள்,கார்

வண்ணபொறுத்தருள்,வாமபொறுத்தருள்! 

     வரதபொறுத்தருள் நீ,

திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் 

     செய்த பெரும் பிழைஎன்று,

அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்துஎதிர்

     அன்று துதித்தனரே.

 

தேவரும்வாசவனும்தவரும்திசை

     முகனும்நராதிபரும்,

யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் 

     எண்ணிஇறைஞ்சுதலால்,

மூவரும் ஒன்று என நின்றருள் நாதனும்

     முனிவு தவிர்ந்தருளா,

மீவரும் அண்டம் உறும் திருமேனி 

     ஒடுங்கினன்மீளவுமே.

     

     தேவர்களும்தேவர்களுக்குத் தலைவனான இந்திரனும்தவமுனிவர்களும்பிரமனும்மனிதர்களுக்குத் தலைவரான அரசர்களும்மற்றும் எல்லோரும்அன்போடு எம்பெருமானது ஆயிரம் திருப்பெயர்களையும் தியானித்து,வணங்கியதால்மும்மூர்த்திகளும் ஏக மூர்த்தி என்னும்படி அந்தந்த வடிவமாய் நின்றருளுகின்ற தலைவனான கண்ணன் தனது சினம் தணிந்தருளிமேன்மைபொருந்திய அண்ட கோளம் முழுவதிலும் பரந்த தனது பெரிய வடிவமானது மறுபடி ஒடுங்கப் பெற்றான்.

 

     "பத்தி வலையில் படுவோன் காண்க" என்று மணிவாசகப் பெருமானும், "அன்பு எனும் வலைக்குள் படு பரம்பொருளே" என்று வள்ளல் பெருமானும் காட்டியது இந்த வரலாற்றால் விளங்கும். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்ட கண்ணன்தனது அன்பனாகிய சகாதேவனது மனம் என்னும் கயிற்றினால் கட்டப்பட்டு நின்றான்.

 

     ஆனால்தனது வல்லமையால் ஒடுக்க முயன்ற துரியோதனனுக்கு,கண்ணன் கட்டுப்படவில்லை. தேவர்கள்திருமால்பிரமன் முதலானவர்களின் அன்பு வணக்ககத்திற்குக் கட்டுப்பட்டுதான் எடுத்த பெருவடிவத்தைச் சுருக்கிக் கொண்டான்.

 

     மணிவாசகப் பெருமானும் தமது சித்தம் என்னும் திண்மையான கயிற்றினால் கட்டப்பட்டுக் கிடந்த வித்தகன் ஆகிய அம்பலவாணப் பெருமான்ஆடல் புரிவதைத் தில்லையிலே கண்டு மகிழ்ந்ததாகப் பாடுகின்றார்.

 

பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்து அருளி,

பித்தன் இவன் எனஎன்னை ஆக்குவித்து,பேராமே

சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த

வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.  --- கண்டபத்துதிருவாசகம்.

                                    

பொருள் ---    அன்புடைமையும் நல்லொழுக்கமும் இல்லாமைக்கு ஏதுவாகியஆன்ம அறிவைத் தடை செய்கின்ற பாசத்தை நீக்கிஅடியேனை இவன் பித்துப் பிடித்தவன் என்று கண்டோர் கூறும்படி செய்துநான் தமது திருவடியை விட்டு அகலாமல் மனம் என்கிற திண்கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த ஞானவடிவினனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

 

     சித்தம் என்னும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்தலாவதுசித்தத்தைத் திருவடியின்பாலே நிலைபெறுத்தி வேறொன்றை நினையாதிருக்கச் செய்தல்.

 

     "என் உள்ளத்தில் வந்து பொருந்திய திருவடிகள் வேறு எங்கும் போய்விடாதபடிஅத் திருவடிகளை எனது சித்தம் என்னும் திண்மையான கயிற்றினால் நான் கட்டினேன்" என்கின்றார் மணிவாசகர். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் திருவடிஎப்படி இவர் கட்ட இடம் கொடுத்ததுமணிவாசகப் பெருமானுடைய அன்பின் தன்மையை அறிந்த பரம்பொருள்அவர் தனது சித்தம் என்னும் திண்மையான கயிற்றினால் கட்டுவதற்கு ஏற்ப வந்து நின்று திருவருள் புரிந்தது.

 

     தலைப்பின் பொருள் இப்போது தெளிவாகும். பத்தி வலையை நாமும் விரிப்போம். பரம்பொருள் தானே வந்து அதில் மாட்டிக் கொள்ளும்.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...