ஆத்திசூடி --- 27. வஞ்சகம் பேசேல்

 


27. வஞ்சகம் பேசேல்.

 

(பதவுரை) வஞ்சகம் --- கபடச் சொற்களைபேசேல் --- பேசாதே.

 

(பொழிப்புரை) கபடச் சொற்களைப் பேசாதே.

 

     உண்மைக்கு மாறானதும், கவர்ச்சியானதும் ஆகிய சொற்களைத் தன்னலம் கருதிப் பேசாதே. 

 

     மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களாலும் ஒருவன் தூயவனாக விளங்குதல் வேண்டும். அப்படி இருந்தால் வினை விளையாது. காக்கவேண்டுவனவற்றைக் காத்துக் கடிவனவற்றை நீக்கி ஒழுகுதல் வேண்டும். திரிகரணங்களாலும் தூயவனாக விளங்குவதே வஞ்சகம் அற்ற நிலை ஆகும் என்பதை,

 

வாயின் அடங்குதல் துப்புரவாம்,மாசற்ற

செய்கை அடங்குதல் திப்பியமாம்,--- பொய்யின்றி

நெஞ்சம் அடங்குதல் வீடாகும்,இம்மூன்றும்

வஞ்சத்தில் தீர்ந்த பொருள்.  

 

என்று "திரிகடுகம்" கூறுவதால் அறியலாம்.

 

     தீய சொற்களைப் பேசாமல் காத்துக் கொள்ளுதலால் தூய்மை உண்டாகும். உடலின் செய்கை அடங்குதலால்மறுமையில் குற்றமற்ற தெய்வத் தன்மை உண்டாகும். உண்மையாக மனம் அடங்குதலால் வினை நீக்கம் உண்டாகும். இம் மூன்று அடக்கமும்வஞ்சகத்தில் இருந்து நீங்கிய பொருள்களாகும்.

 

     பிறர் உனக்குச் செய்த வஞ்சகத்தைப் பற்றியும் பேசாதே என்பது, "தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே" என்று ஔவைப் பிராட்டியும், "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றும், "துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர்" என்றும், திருவள்ளுவ நாயனாரும் அறிவுறுத்திய வழி தெளிவாகும்.

 

     "சொல்லான் அறிப ஒருவனை" என்பது நான்மணிக் கடிகை. ஒருவன் நல்லவனா, தீயவனா என்பதை. அவன் கூறும் சொற்களாலேயே அறிந்து கொள்வார்கள் அறிவு உடையவர்.

மேலும், "தெற்றென உற்றது உரையாதார் உள் கரந்து பாம்பு உறையும் புற்று அன்னர், புல்லறிவினார்" என்றும் நான்மணிக் கடிகை கூறுகின்றது. தெளிவாக உண்மையைச் சொல்லாதவர்கள் கீழ்மையான அறிவினை உடையவர்கள். அவர்கள் பாம்பு மறைந்து வாழும் புற்றினைப் போன்றவர்கள். 

 

     "உள் ஒன்று வைத்து, புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றார் வள்ளல்பெருமான். பிறரை ஏமாற்றி, சுகவாழ்வு வாழவேண்டும் என்பதற்காக,எந்தப் பொய்யை வேண்டுமானாலும் பேசுவது இன்றைய உலகவழக்கமாக ஆகிவிட்டது. மனதில் எண்ணுவது தான் சொல்லாக வரும். ஆனால் வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் உள்ளத்தில் ஒன்று இருக்கும். அது வஞ்சகத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.  தமது எண்ணம் ஈடேறவேண்டும் என்பதற்காக உள்ளத்தில் உள்ளதை வெளிக் காட்டாமல், சாதிக்க எண்ணியதைப் பேசுவார்கள். அப்படிப் பட்டவர்களோடு ஏமாந்து உறவு வைத்துக் கொள்வது வெள்ளை மனம் படைத்தவர்களின் இயல்பு. 

 

     வஞ்சகமாக வடிவெடுத்து வந்த மாரீசன் மடிந்தான். வஞ்சகமாக சீதாப் பிராட்டியைக் கவர்ந்து சென்ற இராவணன் எல்லாவற்றையும் இழந்தான்.

 

மான்ஒன்று வடிவெடுத்து மாரீசன்

      போய் மடிந்தான்! மானே என்று

தேன்ஒன்று மொழிபேசிச் சீதைதனைச்

      சிறையிருக்கத் திருடிச் சென்றோன்

வான்ஒன்றும் அரசு இழந்தான்! தண்டலையார்

      திருவுளத்தின் மகிமை காணீர்!

தான்ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று

      நினைப்பதுவும் சகசம் தானே.

 

என்பது "தண்டலையார் சதகம்". இதன் பொருள்,

 

     தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் --- திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள நீள்நெறி நாதரின்திருவுள்ளப் பெருமையைப் பாருங்கள்! மான் ஒன்று வடிவுஎடுத்துப் போய் மாரீசன் மடிந்தான் --- மானைப்போல் ஒன்றிய  வடிவைஎடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான்.  மானேஎன்று தேன் ஒன்றும் மொழிபேசிச் சீதைதனைச்  சிறையிருக்கத் திருடிச்சென்றோன் --- மானே என அழைத்துத் தேனைப்போல இனிக்கும்மொழிகளை மொழிந்துசீதையைத்  திருடிச் சிறைக்குக் கொண்டு சென்ற இராவணன்வான் ஒன்றும் அரசு இழந்தான் --- தனது நாட்டு ஆட்சி அல்லாமல், வானை ஆளுகின்றதனது ஆட்சியைப் பறிகொடுத்தான்ஆகையால், தான் ஒன்று

நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசந்தான் - (உலகில் ஒருவன்) தான் ஒன்றை எண்ணும்போது தெய்வம் மற்றொன்றுஎண்ணுவது இயல்பே!

 

     "வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான நெஞ்சனை" என்பார் தாயுமானார். நெஞ்சத்தில் வஞ்சகமும்பொறாமையும் ஆகிய குற்றங்களை வைத்து இருத்தல் கூடாது.

 

வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.             --- தாயுமானார்.

                                              

     வஞ்சனையையும் பொய்யினையும் மனம் முழுவதும் நிறைய வைத்துஅதற்கு மேலும்பொல்லாத பொறாமையும் கொண்டிருந்து,  தடுமாற்றமும் உடையவனாகிய அடியேனுக்கு நன்னெறி கைகூடுமோ?                                                                 

 

     வஞ்சகம் என்பது தெய்வ சம்மதம் இல்லாதது. எனவே, "வஞ்சகம் பேசேல்" என்று ஔவைப் பிராட்டி கூறியதன் அருமை விளங்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...