தொட்டனைத்து ஊறும் மணல் கேணி

 


தொட்டனைத்து ஊறும் மணல்கேணி

----

 

         திருக்குறளில், "கல்விஎன்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "மணலைத் தோண்டிய அளவு ஊற்று சுரக்கும் கேணி. அதுபோலமக்களுக்குக் கற்ற அளவு அறிவு சுரக்கும்என்கின்றார் நாயனார்.

 

         கிணற்றில் நீர் வெளிப்படும் அளவும் தோண்டுதல் வேண்டும். தோண்டத் தோண்ட மென்மேலும் மிகுதியாக நீர் ஊற்றெடுக்கும். அதுபோலசிறிதளவு கற்றுஅது போதும் என்று விட்டுவிடாமல்மேலும் மேலும் கற்றுத் தெளிதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. அறிவுக்கு எல்லை இல்லை. அதுபோநீரால் சூழப்பட்டுள்ள உலகத்தில் நீருக்கும் குறைவில்லை.கிணறு தோண்டினால்,நாளும் எடுக்க எடுக்க நீர் குறையாது மிகும்.நாளும் கற்கக் கற்க அறிவு மிகுந்து கொண்டே செல்லும். நூலறிவு நுண்ணறிவாக மிகும்.

 

தொட்டனைத்து ஊறும் மணல்கேணிமாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     நுண்ணறிவு --- நுண்ணிய அறிவு. நுண்மை --- கூர்மைநுட்பம். கூர்த்த மதி.

 

         கற்பதனால் உண்டாகும் நூலறிவு,நுண்ணிய அறிவாக விளங்கவேண்டும். நுண்ணிய அறிவு என்பதுஒருவன் கற்கின்ற நூல்களின் தன்மையைப் பொறுத்தது. நுண்ணறிவை விளக்கும் நூல்களும் உண்டு. பொழுதுபோக்குவதற்கான நூல்களும் உண்டு. அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்பதுமணல்கேணியைத் தோண்டுவது போல. சிறு முயற்சி செய்துமணல்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். தோண்டுகின்ற அளவுக்கு நீர் சுரக்கும். பாறையைத் தோண்டினாலும் நீர் கிடைக்கும். அதற்குப் பெருமுயற்சி தேவை. பாறையைத் தோண்டினால்நீர் உள்ள இடம் வந்தால்தான் கிடைக்கும். மிகவும் ஆழமாகத் தோண்டவும் வேண்டி இருக்கும்.

 

         அறிவு மேலும் மேலும் நுணுகியதாக மாறநூல்களைக் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். கற்கின்ற நூல் அளவு என்பதைக் கொண்டுஎவ்வளவு நூல்களைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு நுண்ணறிவு மிகும் என்று கொள்ளுதல் கூடாது. கற்கின்ற ஒரு நூலாக இருந்தாலும்எந்த அளவுக்கு அதன் நுண்பொருளை உணர்ந்து கற்கின்றோமோஅந்த அளவுக்கு அறிவு மிகும். "நூலின் அளவே நுண்ணறிவு" என்பதைஔவையார் கூறுகின்றார்.

 

நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்,தான்கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு --- மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,

குலத்து அளவே ஆகும் குணம்.      ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

         நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் --- நீரிலுள்ள அல்லியானது நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் --- கூரிய அறிவானது தான் படித்தநூல்களின் அளவாகவே இருக்கும்தான் பெற்ற செல்வம் மேலை தவத்து அளவே ஆகும் --- தான் அடைந்த செல்வமானதுமுற்பிறப்பிற் செய்ததவத்தின் அளவாகவே இருக்கும்குணம் குலத்து அளவே ஆகும் --- குணமானது (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.

 

         இதற்குத் தான்"தொட்டனைத்து ஊறும் மணல் கேணிஎன்னும் உதாரணத்தைக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். பத்தடி தோண்டும்போதுகிடைக்கும் நீரை விடஐம்பது அடி தோண்டும்போது இன்னும் மேலே கிடைக்கும். தோண்டத் தோண்டத் தண்ணீரானது அளவில் பெருகிக் கொண்டே இருக்கும்.

 

         தோண்டத் தோண்ட என்னும்போதுமுயற்சி செய்யச் செய்ய என்பது விளங்கும். முயற்சி செய்யச் செய்யத் தண்ணீர் ஊறும். இந்த முயற்சியானது ஒருவனது ஐந்து வயதில் இருக்கலாம். சாகப் போகின்ற வயதிலும் இருக்கலாம். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல.

 

         சரிமணல்கேணியை ஏன் சொன்னார்பாறையைக் குடைந்தால் கூட தண்ணீர் ஊறுகின்றதே. சற்று சிந்தித்தால்மணல் கேணியை ஏன் சொன்னார் நாயனார் என்பது விளங்கும். மணல் கேணி என்றால்சிறுமுயற்சியும் பெரும்பலன் தரும். பாறையைத் தோண்ட வேண்டுமானால் பெருமுயற்சி வேண்டும். பெருமுயற்சி செய்தாலும்உடனே தண்ணீர் கிடைத்துவிடாது. மணல்கேணியில் ஊறுவது போலத் தண்ணீர் ஊறாது.

 

         மணல்கேணியைத் தோண்டத் தோண்டத் தண்ணீர் கிடைக்கும். பாறையைத் தோண்டினால்தண்ணீர் உள்ள இடம் வந்தால்தான் கிடைக்கும். சிறமுயற்சியில் பெரும்பலன் கிடைக்கும் என்பதால்மணல்கேணியை நாயனார் உதாரணமாக எடுத்துக் கொண்டார்.

 

         இதற்குச் சேக்கிழார் ஓர் அற்புதமான உவமையைக் கையாள்கின்றார். சேக்கிழார் அவதரித்த தொண்டை நாட்டிலே ஓர் ஆறு உள்ளது. அதற்குப் பாலாறு என்று பெயர். பவுர்ணமி இரவில் பார்த்தால்பால் ஓடுவது போலத் தோன்றும். இந்த ஆறு காலப் போக்கில் சுரண்டப்பட்டு விட்டது. இப்போது தண்ணீர் ஓடுவதற்குப் பதிலாகஆண்டுக்குப் பதின்மூன்று மாதமும்!!!!சுரண்டப்படுகின்ற மணல் வெளியில் ஓடுகின்றது.

 

         "ஆற்றுப் பெருக்கு அற்றுஅடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்". இதுதான் ஆற்றின் சிறப்பு. இதை நல்லோர்க்கு உதாரணமாகக் காட்டினார் ஔவையார். ஆற்றிலே பெருக்கு இல்லையானாலும்நீர் வளம் இல்லாமல் இல்லை. கோடைக்காலத்தில் கூடகையால் மணலைச் சிறிது பறித்தாலும் தண்ணீர் சுரக்கும். ஆற்றிலே கையால் தோண்டியவர்களுக்கு இது எளிதாக விளங்கும். நான் தோண்டிப் பழக்கப்பட்டவன்.

 

         பெரியபுராணத்தில்திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாற்றைக் கூறவந்தசேக்கிழார் பெருமான்தொண்டை நாட்டின் பெருமையை மிகுதியாகவே கூறுகின்றார். பாலாற்றின் பெருமையைக் கூற வந்தவர்,

 

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்,

மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கை வருட,

வெள்ள நீர்இரு மருங்குகால் வழி மிதந்து ஏறி,

பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.

 

என்று கூறிப் போந்தார்.

 

         சிறுபிள்ளைகள் தமக்குப் பசி வந்தபோதுதமது சிறு கைகளால்தாயின் மார்பகத்தைத் தடவுவார்கள். அப்படித் தடவிய உடனே தாயின் மார்பில் இருந்து பால் சொரியும். அதுபோலஉழவர்கள் கோடைக் காலத்தில்வேளாண்மை செய்யும் காலத்தில்பாலாற்றின் மணல் திடர்களைக் கைகளால் பிசைந்து வாய்க்கால் தோண்டுவார்கள். ஊறுகின்ற ஆற்று நீரானது வாய்க்கால் வழியாக ஓடிவயல்களில் உள்ள வரம்புகளை உடைக்கும் என்கின்றார் சேக்கிழார்.

 

         வேண்டும் பொழுது பாலைச் சுரந்தும்வேண்டாத போது தன்னுள் அடக்கியும் வைத்திருக்கும் தாய்முலையைப் போன்றது பாலாறு என்கின்றார். வேண்டும் பொழுது நீரைச் சுரந்தும்வேண்டாத பொழுது தன்னுள் அடக்கியும் இருக்கும் பெருமையுடையது பாலாறு என்பது இதனால் விளங்கும்.

 

         மணல்கேணி என்று திருவள்ளுவ நாயனார் சொன்னதை வைத்துக் கொண்டுஇன்றைக்கும் பாலாற்றிலே தோண்டினால் தண்ணீர் வரும். முயற்சிசிறுமுயற்சி வேண்டும்.

 

         ஆகஎவ்வளவுக்கு சிறுமுயற்சி செய்கின்றோமோ அவ்வளவுக்கு ஆற்று மணலிலே நீர் சுரக்கும். பெரிதாக கயம் ஒன்றை உருவாக்கிஅதில் ஊறும் நீரை வாய்க்கால் வழியாக வயல்களுக்குப் பாய்ச்சுவர் உழவர். கயம் என்பது நீந்துதற்கும் அரிதானது."நீத்தாய கயம் புக    நூக்கி இடநிலைகொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்என்பார் திருநாவுக்கரசு நாயனார். அதுபோலவேமுயற்சி செய்து கற்கக் கற்க அறிவு ஊறும். எனவேதான், "கற்றனைத்து ஊறும் அறிவுஎன்று அருளினார் நாயனார். வேறுவிதமாகச் சொன்னால்கற்றல் என்பது சிறுமுயற்சிதான்.

 

         கற்றல் என்று சொன்ன உடனேநூல்களைப் படித்தால் போதும் என்று எண்ணிவிடக் கூடாது. படிக்காத மேதைகள் உண்டு என்பதை மறக்கலாகாது. நமது தமிழ் நாட்டிலே அவதரித்த இராமலிங்கர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. வடநாட்டில் இராமகிருஷ்ணர் படித்தவர் இல்லை. ஆனால்அவர்களுக்கு உள்ள அறிவுமெத்தப் படித்த நம்மவர்கள் பலருக்கும் இல்லை.

 

         இதற்கும் மணல்கேணி தான் உதாரணம். பாறையில் கிடைக்கின்ற நீரை விடமிகச் சுலபமாகமணல்கேணியில் கிடைக்கின்றதுஎன்றால்புரிந்து கொள்ளமுடியாதவை எல்லாம் எளிதில் புரிகின்றது என்றால்அதற்குக் காரணம், "திருவருள்என்று சொல்லலாம். திருவருளைப் பெறுவதிலும் முயற்சி தேவை. அது தானாக வந்துவிடாது.

 

         திருவருளைப் பெறச் சிறுச் சிறிதே முயன்று வந்தால் போதும். அது பெரும்பலனைத் தந்தே தீரும். அதுஓதாது உணருகின்ற பெருநிலையில் கொண்டு சேர்த்து விடும்."ஓதாது உணர்ந்திட ஒளி அளித்துஎனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி"என்றார் வள்ளல்பெருமான். ஓதாது உணர்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

         ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும்சொல்லானது உணர்த்தி நின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும்."சொல்லும் பொருளும் இறந்த சுடர்"என்றார் மணிவாசகப் பெருமான்."சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்என்றார் அப்பர் பெருமான்.

 

         புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 

 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.

 

     அறிதல்தெரிதல்கற்றல் என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

           சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில்அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்குசிவபெருமான் பணிக்கஎண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,

 

"சிவனடியே சிந்திக்கும்

           திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும்

           பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம்,

           உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர்

           தாம்உணர்ந்தார் அந்நிலையில்"

 

என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

 

         "சம்பந்தர் அறிந்தார்"என்று சொல்லவில்லை.  "உணர்ந்தார்"  என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர்அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான்"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்"என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 

 

           மணல்கேணியைத் தோண்டுவது போலசிறுமுயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால் கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்ககற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும்.

 

           நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலகநூல். இன்னொன்று அறிவுநூல். உலகநூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவு நூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் எல்லாம்அறிவுவளர்ச்சிக்கு உதவுவது இல்லை.

 

     ஆக,கற்றல் என்பது மிக எளிதானதே. அதில் மனம் வைக்கவேண்டும். முயற்சி இருக்கவேண்டும். முயற்சியில் தான் எல்லாமே உள்ளது. முயற்சி என்பது தோண்டுவதைக் குறிக்கும். எவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு தண்ணீர் ஊறும். எவ்வளவு முயல்கின்றோமோ, அவ்வளவுக்கு அறிவு ஊறும்.

 

     கலை அறிவு என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. அருள் அறிவு என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு.

 

     "பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவைஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால்ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்." என்கின்றார் வள்ளல்பெருமான். திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான்.

                                      

தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

 

என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகவே இவ்வாறு அருளி உள்ளார்.

 

     நாம் நமது கைகளைத் தொட்டுமணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவைகலை அறிவு என்கிறோம். 

 

     ஒருவன் ஒரு பிறவியில் எத்தனை புத்தகங்களைப் படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால்நாம் வாழும் ஆயுளில் சுமார் ஆயிரம் நூல்களைப் படிக்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் ஒரு சில நூல்களையே முயன்றுதான் படிக்க முடிகின்றது. படிக்கப் படிக்க,மறந்துகொண்டே வருகின்றது. படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் முடியும். 

 

     இந்த நூலறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது.  அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? என்றால் வள்ளல்பெருமான் ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகின்றார்.

 

     ஒரு ஆள் சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக,20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல்பெருமானாரின் கணக்கு.

       

     நமக்குத் தெரிந்த, பிடித்தமான,பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் 10 கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 2 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 2,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல்சுத்தசிவ நோக்கம் (திருவருள்)என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்கவேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.

 

     நமது வாழ்நாளைக் கணக்கில் பார்ப்போம்.

 

"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."

 

என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

 

     ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில் 15 ஆண்டுகள் பேதைபாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம்பிணிபசிமூப்புதுன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார்.

 

     கடைகளிலே விழாக் காலங்களில் தள்ளுபடி என்று அறிவிப்பு வரும். ஆவல் மிகுந்து, அங்கே போய்க் கேட்டால், அது இது என்று ஒரு கணக்கைச் சொல்வார்கள். இதற்காகவா இங்கு வந்தோம்? என்ற சலிப்பு நமக்கு உண்டாகும். அதுபோலத்தான் நமது வாழ்நாள் கணக்கு.

 

     தொண்டரடிப்பொடி ஆழ்வார் போட்ட கணக்கு ஒருபுறம். இன்னொரு புறம், சேரமான் பெருமாள் நாயனார் போட்ட கணக்கு ஒன்றையும், பதினோராம் திருமுறையில் வரும் "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் பகுதியில் காண்போம்.

 

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி

     விச்சைகள் கொண்டு பண்டே

கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை,

     குங்குமக் குன்று அனைய

பதித்தனம் கண்டனம் குன்றம்வெண்

     சந்தனம் பட்டனைய

மதித்தனம் கண்டனம், நெஞ்சு இனி

     என்செய்யும் வஞ்சனையே.

 

இதன் பொருள் ---

 

     நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு, பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும்மார்பில் அழுந்துதலை உடைய தனங்களை முன்னே கண்டோம்பின்பு அத் தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டன போல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்து விட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

 

     ஏதோ, விதித்த வாழ்நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணினால், பெரிய நோய்கள் வந்து வெதுப்புகின்றன. அத்தோடு காமநோயும் வந்து வெதுப்புகின்றது. இதில் என்னத்தைச் சாதிப்பது?

 

வேண்டிய நாள்களில் பாதியும்

     கங்குல், மிக அவற்றுள்

ஈண்டிய வெந்நோய், முதலது

     பிள்ளைமை, மேலது மூப்பு

ஆண்டின அச்சம் வெகுளி

     அவா அழுக்காறு, இங்ஙனே

மாண்டன, சேர்தும் வளர்புன்

     சடைமுக்கண் மாயனையே. 

 

இதன் பொருள் ---

 

     படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள், மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இந்த உடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்கஎன வேண்டி வரையறுக்கின்றான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. பொதுவாக, ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்சஅவைகளிலும் பலவகையாய்த் திரள்கின்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. வரையறுக்கப்பட்ட ஆண்டுகளிலும் தொடக்கப் பகுதி குழந்தைப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. அவைகளிலும் அச்சம்வெகுளிஅவா, அழுக்காறுஎன இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்? ஆகையால், நாம் மிக இளைய பருவத்திலேயே வேறு எதனையும் பொருட்படுத்தாமல், நீண்டபுல்லிய சடையையும்மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்துஅவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

 

     இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலை அறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? என்றால்,அதுதான் இல்லை. நம்முடைய முயற்சி இன்மைதான் பிரச்சினை. 

 

     கற்பது என்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல என்று மிகவும் எளிதான வழியைத் தான் நம் மீது கருணை வைத்து திருவள்ளுவ நாயனார் காட்டினார் என்பதை உய்த்து உணர்தல் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித் தானே ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும்.

 

     நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையானது கல்விச் செல்வம் என்பதால்அதையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரைக் காணலாம்.

 

"முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள்.

 

"கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, நான் நிரம்பக் கற்றவன்நீ கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

கற்றதுகைம் மண் அளவு கல்லாதது உலகு அளவு என்று

உற்ற கலைமடந்தை ஓதுகிறாள், – மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்!

எறும்பும் தன் கையால் எண்சாண்.

 

எனவே,

 

தொட்ட அனைத்து ஊறும் மணல் கேணி, மாந்தர்க்குக்

கற்ற அனைத்து ஊறும் அறிவு.

 

என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

      "தோண்டவேண்டியது மணலைத் தான். பாறையை அல்ல". எளிதான கற்றலைத் தான் காட்டினார். கற்போம்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...