தமிழ் மொழியா? வடமொழியா?
எது இறைவனுக்கு உகந்தது?
-----
தமிழ்நாட்டில் தமிழராக, கவுண்டின்ய கோத்திரம் என்று இக்காலத்தில் வழங்கப்படுகின்ற "கவுணியர்" கோத்திரத்தில் பிறந்த திருஞானசம்பந்தர்,தம்மைக் "கவுணியன் சம்பந்தன்"என்றே பாடிய உள்ளார். தாம் பாடியுள்ள திருப்பதிகங்களில், இறுதிப் பாடலாகிய திருக்கடைக்காப்பில், தமது பெயரைக் குறிப்பிடும்பொழுது, தமது பெயரைக் கூறுகையில், தாம் ஒரு இருக்கு வேதி என்றும், வேள்விகள் செய்யும் குடியில் பிறந்தவர் என்றும், நான்கு வேதங்களிலும், ஆறு அங்கங்களிலும்வல்லவர் என்று தம்மைக் கூறுவதோடு நில்லாமல், தம்மைத் தமிழுடன் சம்பந்தப்படுத்திக் கூறி உள்ளார்.
வேதத்தின் பெயரைக் கூறிக் கொண்டே, வேதம் ஏற்றுக் கொள்ளாத விக்கிரக வழிபாடு, அபிடேகம், அருச்சனை முதலானவற்றை வலியுறுத்திப் பாடினார். வேதத்தில் வேள்விக்கே முதலிடம். இருந்தாலும், தமிழ்நாட்டின் அடிப்படைப் பண்பாபாட்டிற்கு உருவ வழிபாடே கடைக்கால் என்பதால், தமிழுக்கு முதலிடம் தந்து பாடினார்.
திருஞானசம்பந்தருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தவர் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவர். பூஞ்சாற்றூர் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. கவுண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர், கவுணியர் எனப்படுகின்றனர். சீகாழித் திருஞானசம்பந்தரும் கவுணியர் கோத்திரத்தில் உதித்தவர் ஆவார். விண்ணன் என்பது இவன் தந்தை பெயர். இவன் இயற்பெயர் தாயன் என்பது. அரிவாள் தாய நாயனாரும், தாயன் என்ற பெயரை உடையவர். இக்காலத்தும் தாயன், தாயப்பன் என்று பெயர் வழங்குவது உண்டு.
இந்த விண்ணந்தாயனைச் சிறப்பித்து புறநானூற்றில் ஆவூர் மூலங்கிழார் பாடி உள்ளார். விண்ணந்தாயன் நாள்தோறும் இருபத்தோரு வகையான வேள்விகளைச் செய்து வந்தார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நாளும் ஒரு வேள்வி செய்வதே பெரிய காரியமாக உள்ளது இக்காலம். வடமொழியின ஆதிக்கம் பரவாத காலத்தில், அவர் தமது தாய்மொழியான தமிழில் தான் வேள்விகளைச் செய்திருக்க வேண்டும்.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சீகாழியில் கவுண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞானசம்பந்தர், தாம் வேதங்களையும், அவற்றின் உறுப்புகள் ஆகிய ஆறு அங்கங்களையும் தெளிய உணர்ந்தவர் என்றே கூறியுள்ளார். வேதங்கள் கூறுகின்ற இந்திரன், பிரஜாபதி, வருணன் முதலியோரை ஏற்றுக் கொள்ளாமல், சிவனையே பரம்பொருளாக ஏற்றுக் கொண்டார் என்பதையும், திருஞானசம்பந்தருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த விண்ணந்தாயன் என்பவரும் சிவபரம்பொருளை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சிவவழிபாடு என்பதும் தமிழில் வேள்விகளை இயற்றுவது என்பதும் பண்டைக் காலம் தொட்டே இருந்து வருவது என்பது விளங்கும். தனக்குத் தெரிந்த மொழியால் இறைவன் வழிபடுவதில் வியப்பு ஏதும் இல்லை. திருஞானசம்பந்தர் வேள்வி செய்வதைத் தமது வழக்கமாகக் கொண்டிருந்ததாக அறிய முடியவில்லை. ஆனால், அவரது தந்தையார் வேள்வி செய்யும் வழக்கத்தைக் கொண்டு இருந்தார். தந்தையாருக்கு வேள்வி செய்யத் தேவையான பொருளை, தமிழில் பாடியே சிவபெரமானிடம் பெற்றுத் தந்தார் என்பதை அறியலாம். வேதநெறி தழைத்து ஓங்கவும், மிகுசைவத் துறை விளங்கவும் அவதரித்த திருஞானசம்பந்தர் வேதநெறியைப் பழிக்கவில்லை. மாறாக,வேதங்களையும், அவற்றில் விதித்தபடி வேள்விகளையும் நிந்தனை செய்துகொண்டு இருந்த சமணர்களையும், புத்தர்களையுமே அவர் மறுத்தார்.
"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே?
பாதி மாதுடன் ஆய பரமனே!
ஞால நின் புகழே மிக வேண்டும், தென்
ஆல வாயில் உறையும் எம் ஆதியே!"
என்றுதான் பாடினார்.
இதன் பொருள் ---
உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே! அழகிய ஆலவாயில் என்னும் மதுரையம்பதியில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரிகின்ற, பயன் அற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்று அழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகம் அனைத்திலும் உமது புகழே மிக வேண்டும். திருவருள் புரிவீராக!
ஆனால், சைவத்திற்கு உடன்பாடான, தவம் எது எனக் காட்ட வந்த நாயனார், "ஞானசம்பந்தன் தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவம்" என்று பாடி சைவநெறி இன்னது என்று உணர்த்தினார்.
இறைவன் திருவடிப் பேறு என்று சொல்லப்படும் வீடுபேறும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் பெற விரும்பினால், உங்களை நீங்கள் விரதங்களால் வருத்திக் கொள்ளவேண்டாம். ஞானசம்பந்தன் பாடி அருளிய செந்தமிழை இசையோடு பாடுகின்ற ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடியை வழிபடுங்கள், ஞானமும், வீடுபேறும் வாய்க்கும் என்றுதான் அறிவுறுத்தினார்.
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவது? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.
தாய்மொழியாகிய தமிழில் இறைவனைப் பாடியே பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் திருஞானசம்பந்தர். பிறமொழிகளையோ, பிறநெறிகளையோ அவர் ஒருபோதும் வெறுத்து உரைத்தது இல்லை.
தன்னைத் "தமிழ்ஞானசம்பந்தன்" என்றதான் பாடினாரே ஒழிய,சைவஞானசம்பந்தன் என்று கூடப் பாடவில்லை.
"பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்"
ஆனவன் இறைவன் என்பதால், பண் வடிவாகவும், பத வடிவாகவும், தமிழ் வடிவாகவும், தாள ஒத்துக்களின் வடிவாகவும் உள்ள இறைவனைப் பண்ணோடு கூடிய தமிழ்ப் பாடல்களால் பாடிப் பரவினார். நாளும் இன்னிசையால் தமிழைப் பரப்பியவர்.
இறைவனை வழிபடுவோர், அவனது திருவடி உணர்வில் ஒன்றி இருந்து வழபடுதல் வேண்டும். அப்படி ஒன்றி இருக்கும் பக்குவத்தை உண்டாக்குவது, அவனைப் பாடிப் பரவுதலே ஆகும். பாடிப் பரவும் அடியவர்கள், தமிழிலும் பாடுவார்கள், வடமொழிலும் பாடுவார்கள். எப்படிப் பாடினாலும், அது இறைவன் திருவடியில் சமர்ப்பிக்கப்படுவது ஆகும்.
"தம்மலர் அடிஒன்று அடியவர் பரவ,
தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர,
அம்மலர்க் கொன்றை அணிந்த எம்அடிகள்
அச்சிறுபாக்கம் அது ஆட்சிகொண்டாரே".
"அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர். தமது தாமரை மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும், தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடியதை நோக்க,இறைவனைத் தமிழில்தான் வழிபடவேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக அறிய முடியவில்லை.
"பண்டிதர் ஆவார், பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்து அறிவார் என்க;
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம்சொன்ன வாறே.
என்றார் திருமூல நாயனார். பண்டிதர் என்பவர் ஒரு மொழியை மட்டும் அறிந்தவர் இல்லை. பதினெட்டு மொழிகளையும் அறிந்தவர் கூறும் கருத்துக்களை அறிந்தவர் ஆவார். அந்தப் பதினெட்டு மொழிகளும் இறையருளைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு உள்ளவை என்று திருமூல நாயனார் காட்டி அருளியதை எண்ணுகையில், அவரும் பிற மொழிகளுக்கு விலக்குச் சொல்லவில்லை என்பதை அறியலாம்.
"ஆரியமும் தமிழும் உடனே சொலிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே" என்றும், "தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும், அவனை உணரலும் ஆமே" என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல் வரிகளின் பொருளை ஆழ்ந்து சிந்திப்போர்க்கு, இறைவனுக்கு வடமொழியும், தமிழ் மொழியும் உகந்தவையே என்பது விளங்கும். "வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்" என்றார் அப்பர் பெருமான்.
எனவே, அவரவர் தாய்மொழியில் இறைவனை வழிபடுவது, இறை உணர்வைத் தரும். எனவேதான், அதனை வலியுறுத்தினார்கள் நமது நாயன்மார்கள். வடமொழியை அவர்கள் வேண்டாம் என்று சொன்னதாகவோ, வெறுத்ததாகவோ அறியப்படவில்லை.
இந்தமொழி, அந்த மொழி, எனது மொழி, உனது மொழி என்றும் வேற்றுமை பாராட்டுவது அப்பட்டமான அறியாமையே ஆகும். அறியாமை என்று சொல்லுவதை, முட்டாள்தனம் என்றும் சொல்லலாம் போலத் தோன்றுகின்றது. அவரவர்க்கு எது விருப்பமோ, அதைச் செய்யலாம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று தலைக் கட்டுவது தேவையற்றது. மொழிப் பிணக்கும், நெறிப் பிணக்கும், நல்லுணர்வைத் தராது.
No comments:
Post a Comment