அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பக்குவ ஆசார (அவிநாசி)
முருகா!
மேலான குருநாதா!
தேவரீரது அற்புதத் திருவடிகளை மறவேன்.
தத்தன தானான தத்தன தானான
தத்தன தானான ...... தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாத ...... மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ ...... வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பக்குவ ஆசார லட்சண சாக ஆதி
பட்சண மாமோன ...... சிவயோகர்,
பத்தியில் ஆறுஆறு தத்துவ மேல்வீடு
பற்று நிராதாரம் ...... நிலையாக,
அக்கணமே மாய துர்க்குணம் வேறுஆக,
அப்படையே ஞான ...... உபதேசம்,
அக்குஅற வாய்பேசு சற்குரு நாதா! உன்
அற்புத சீர்பாதம் ...... மறவேனே,
உக்கிர ஈர்ஆறு மெய்ப் புயனே! நீல
உற்பல வீராசி ...... மணம்நாற
ஒத்த நிலாவீசு நித்தில நீராவி
உற்பல ராசீவ! ...... வயலூரா!
பொக்கம் இலா வீர விக்ரம! மாமேனி
பொற்ப்ரபை ஆகார! ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு,மெய்க்குஅருள் சீரான
புக்கொளியூர் மேவு ...... பெருமாளே!
பதவுரை
உக்கிர ஈராறு மெய்ப் புயனே--- வலிமை மிக்க பன்னிரு திருத்தோள்களை உடையவரே!
நீல உற்பல வீராசி மணநாற--- நீலோத்பல மலர்களின் நறுமணம் மிக்கு நிறைந்ததும்,
ஒத்த நிலா வீசு நித்தில நீராவி--- பொருந்திய நிலவு ஒளி வீசுவதும், முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில்
உற்பல ராசீவ வயலூரா--- குவளை மலர்களும், தாமரை மலர்களும் மலர்ந்து இருக்கும் வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!
பொக்கம் இலா வீர--- பொய்யே இல்லாத மெய்ம்மையான வீரரே!
விக்ரம--- பேராற்றல் உடையவரே!
மாமேனி பொற்ப்ரபை ஆகார--- ஒளி திகழும் பொன்னார் மேனியனே!
அவிநாசிப் பொய்க்கலி போம் ஆறு--- அவிநாசியப்பர் திருக்கோயிலில், இந்தக் கலியுகத்தின் அறியாமை என்னும் வறுமை நீங்கவும்,
மெய்க்கு அருள்-- மெய்யன்பருக்கு அருளைப் புரிந்தும்
சீரான புக்கொளியூர் மேவும் பெருமாளே--- சிறப்புப் பொருந்திய திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
பக்குவ ஆசார லட்சண--- பக்குவமான ஒழுக்கத்திற்குரிய நெறியிலே நின்று,
சாகாதி பட்சண--- பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு,
மாமோன சிவயோகர்--- பெரும் மெளன நிலையில் இருக்கும் சிவயோகிகள்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று--- பக்திநெயில் நின்று முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் மோட்ச வீட்டைப் பற்றுதற்குரிய
நிராதார நிலை ஆக--- எந்தவிதமான பற்றுக்கோடும் இல்லாததும், ஆதார நிலையைக் கடந்ததுமான நிலையை அடியேன் அடையவும்,
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக--- அந்நிலையை அடியேன் அடைந்ததுமே, மாயை காரணமாக அடியேனைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் நீங்கவும்,
அப் படையே ஞான உபதேசம்--- அடியேன் பெற்ற ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி,அந்த ஞான வாளினால்
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா--- பாசம் முற்றும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை அடியேனுக்குத் திருவாய் மலர்ந்து அருளிய மேலான குருநாதரே!
உன் அற்புத சீர்பாத மறவேனே--- உமது அற்புதமான பெருமை பொருந்திய திருவடிகளை நான் மறக்கமாட்டேன்.
பொழிப்புரை
வலிமை மிக்க பன்னிரு திருத்தோள்களை உடையவரே!
நீலோத்பல மலர்களின் நறுமணம் மிக்கு நிறைந்ததும்,
பொருந்திய நிலவு ஒளி வீசுவதும், முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளை மலர்களும், தாமரை மலர்களும் மலர்ந்து இருக்கும் வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரே!
பொய்யே இல்லாத மெய்ம்மையான வீரரே!
பேராற்றல் உடையவரே!
ஒளி திகழும் பொன்னார் மேனியனே!
அவிநாசியப்பர் திருக்கோயிலில், இந்தக் கலியுகத்தின் அறியாமை என்னும் வறுமை நீங்கவும், மெய்யன்பருக்கு அருளைப் புரிந்தும், சிறப்புப் பொருந்திய திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே!
பக்குவமான ஒழுக்கத்திற்குரிய நெறியிலே நின்று,பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு,மகாமெளன நிலையில் இருக்கும் சிவயோகிகள், பத்திநெயில் நின்று முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த நிலையில் விளங்கும் மோட்ச வீட்டைப் பற்றுதற்குரிய, எந்தவிதமான பற்றுக்கோடும் இல்லாததும், ஆதார நிலையைக் கடந்ததுமான நிலையை அடியேன் அடையவும்,அந்நிலையை அடியேன் அடைந்ததுமே, மாயை காரணமாக அடியேனைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் நீங்கவும்,அடியேன் பெற்ற ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி,அந்த ஞான வாளினால், பாசம் முற்றும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை அடியேனுக்குத் திருவாய் மலர்ந்து அருளிய மேலான குருநாதரே!உமது அற்புதமான பெருமை பொருந்திய திருவடிகளை நான் மறக்கமாட்டேன்.
விரிவுரை
பக்குவ ஆசார லட்சண சாகஆதி பட்சண மாமோன சிவயோகர்---
உயிர்கள் பக்குவ நிலையை அடைய வேண்டுமானால் ஒழுக்க நெறியிலே நிற்றல் வேண்டும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். --- திருக்குறள்.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை. --- திருக்குறள்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. --- திருக்குறள்.
பரிமேலழகர் தரும் உரை விளக்கத்தை எண்ணுதல் வேண்டும்......
ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
தமக்கு உரிய ஒழுக்கத்திலே நின்று துறத்தலாவது, தத்தமது சாதிக்கும் ஆசிரமத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களில் நின்று தவறாது நடக்கப் புண்ணியம் வளரும். புண்ணியம் வளரப் பாவம் குறையும். பாவம் குறைய அறியாமை நீங்கும். அறியாமை நீங்க, இது நிலையானது, இது நிலையற்றது என்னும் பகுத்தறிவு தோன்றும். அழியும் தன்மையவான இம்மை மறுமை இன்பங்களில் வெறுப்பும், பிறவித்துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற மோட்சத்தில் விருப்பம் உண்டாகும். அது உண்டாக, பிறவிக்குக் காரணமாகிய பொருள் இன்பங்களைத் தேடுவதில் உரிய வேண்டாத முயற்சிகள் எல்லாம் நீங்கி மோட்சத்திற்கு நிமித்த காரணமாகிய யோக முயற்சி உண்டாகும். அது உண்டாக, தத்துவஞானம் என்னும் மெய்யுணர்வு பிறந்து, புறப்பற்று ஆகிய எனது என்பதும், அகப்பற்று ஆகிய நான் என்பதும் ஆகிய மமகாரமும் அகங்காரமும் நீங்கும்.
இத்தகு நிலைக்கு இன்றியமையாதது புலால் மறுத்தல் ஆகும்.
யானை உடைய படைகாண்டல் முன்இனிதே1
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற்று அடைகரை யூர்இனிது, ஆங்குஇனிதே
மானம் உடையார் மதிப்பு. -- இனியவை நாற்பது.
யானையின் மன்னரைக் காண்டல் நனிஇன்னா,
ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்இன்னா,
தேனெய் புளிப்பில் சுவைஇன்னா,ஆங்க் இன்னா
கான்யாறு இடையிட்ட ஊர். -- இன்னா நாற்பது.
தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். --- திருக்குறள்.
இத்திருக்குறளின் பொருள் ---
தன் ஊன் பெருக்கற்கு --- தன் உடம்பைப் பெருக்குதற்பொருட்டு, தான் பிறிது ஊன் உண்பான் --- தான் பிறிது ஓர் உயிரின் உடம்பைத் தின்பவன் உண்மையாகவே, எங்ஙனம் ஆளும் அருள் --- எவ்வகையான் நடத்தும் அருளினை,
திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த நூல்களுள் ஒன்றான 'சோமேசர் முதுமொழி வெண்பா'என்னும் வரும் பாடலையும், அதன் விளக்கத்தையும் பின்வருமாறு காண்க...
மச்சம் சுமந்துஉய்ப்ப வானோர்ப் பணிகொண்டான்
துச்சனாம் சூரபன்மன், சோமேசா! - நிச்சயமே
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
அசுரேசனுடைய மகளாகிய மாயை என்பாளிடம் காசிப முனிவர் அருளால் பிறந்த சூரபத்மன் தனது தாயின் மொழி கொண்டு சிங்கமுகன், தாரகன் என்னும் தன் தம்பியருடன் வடதிசையில் புக்குச் சிவபெருமானைக் குறித்து அரியதொரு வேள்வியை நெடுங்காலம் செய்தும் அவ் வேள்வித் தீயில் தன் உடல் தசைகளை எல்லாம் அரிந்து அரிந்து சொரிந்ததும், அப் பெருமான் பார்வதி சமேதராய்த் தோன்றி அவன் உயிர்பெற்று எழும்படி அனுக்கிரகம் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகம் அளவும் ஆள வரம் அளித்துப் பாசுபத அத்திர முதலியனவும் உதவிச் சென்றார். சூரபத்மன் வரபலம் முதலியவற்றால் மயங்கித் தேவர்கள் மீன் சுமத்தல் முதலிய ஏலாத குற்றேவல்களும் செய்ய ஏவி அவர்களை மிக வருத்த, வருத்தம் பொறாத அத் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவகுமரனாய்த் தோன்றிய சுப்பிரமணியக் கடவுளைப் பாலன் என எள்ளிப் போரில் எதிர்த்துப் பலவற்றையும் இழந்து முடிவில் தானும் அழிந்தான்.
நீள்வாரிதியின் நெடுமீன் பல சுமந்து
தாழ்வாம் பணிபலவும் செய்தும் தளர்ந்துலகில்
வாழ்வாமெனவே மதித்திருந்தோம் மற்றுஅதுஅன்றி
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே,
மீனும் வடியும் வியன்தசையும் தான்சுமந்த
ஈனம் அதுஅன்றி ஈதோர் பழி சுமக்கின்
மானம் அழிய வருமே அது அன்றி
தீனம் உறுசிறையும் தீராது வந்திடுமே
என்னும் கந்தபுராணப் பாக்கள் காண்க.
மாமோன சிவயோகர்---
மாமோனம் என்பது நிட்டை நிலையைக் குறிக்கும். வாய் பேசாமல் இருப்பது மவுனம். அத்துடன் உடம்பும் அசையாமல் இருப்பது காஷ்ட மவுனம். மனோவியாபாரம் அற்று இருப்பது மகாமவுனம். "மகாமவுன ரூபம்" என்பார் வள்ளல் பெருமான்.
ஆங்கார மானகுல வேட வெம்பேய்ஒபாழ்த்த
ஆணவத்தினும்ஒவலிதுகாண்,
அறிவினை மயக்கிடும், நடுஅறிய வொட்டாது,
யாதொன்று தொடினும், அதுவாய்த்
தாங்காது மொழிபேசும், அரிகரப் பிரமாதி
தம்மொடு சமானம்என்னும்,
தடையற்ற தேரில்அம் சுருவாணி போலவே
தன்னில் அசையாது நிற்கும்,
ஈங்குஆர் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்து
இராவணா காரமாகி,
இதயவெளி எங்கணும் தன்னரசு நாடுசெய்து
இருக்கும்,இதனொடு எந்நேரமும்
வாங்கா நிலா அடிமை போராட முடியுமோ?
மௌன உபதேச குருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ரகுருவே! மூலன்
மரபில்வரு மௌனகுருவே. --- தாயுமானார்.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், --- பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுருவே. --- தாயுமானார்.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்று அறிந்தேன் ஆனந்த மே. --- தாயுமானார்.
அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
மறிந்த மனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு. --- தாயுமானார்.
சிவயோகம் என்பது சிவத்தை அடையச் செய்யும் யோகம்.
"எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்பார் அருணகிரியார்.
பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று நிராதார நிலை ஆக---
பத்திநெறியில் நின்று ஒழுகினால், தத்துவங்களை எளிதில் கடக்க முடியும். முப்பத்தாறு தத்துவங்களுக்கும் உட்பட்டவை ஆதார நிலைகள். ஆறு ஆதார நிலைகள் நமது உடம்பில் உள்ளன. அதையும் கடந்தது நிராதார நிலையாகும். அதைப் பெறுவதுதான் பெரும்பேறு.
ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே. --- கந்தர் அநுபூதி.
ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்தது ஓர் ஆனந்தத் தேனை, அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பியவா! முகம்ஆறுஉடைத் தேசிகனே.
சீவான்மாவானது இருவினை ஒப்பு மலபரிபாகம் உற்றபோது அருள் பதிந்து, சிவத்தோடு இரண்டறக் கலந்து, ஏகப் பெரு வெறுவெளியில் கரை கடந்த இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்தி, ஏக சொரூபமாய் நிற்கும். அந்நிலையில் சிவமும் சீவனும் வேற்றுமை இன்றிக் கதிரொளியும் கண்ணொளியுங் கலந்தது போல் கலந்து விளங்கும்.
“இருவினையும் மலமும்அற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயுநானுமாய்
இறுகும் வகை பரமசுகம் அதனைஅருள்". --- (அறுகுநுனி) திருப்புகழ்.
சீவன் சிவனாகிப் பூரணம் உற்ற அந்நிலையைச் சொல்லாலும் எழுத்தாலும் விளக்க முடியாது.அனுபவித்து உணரக் கூடியது. அந்நிலையை அடைந்த அனுபவ மெய்ஞ்ஞானப் பெரியார்கள் கூறிய அருட்பாக்களை உற்று நோக்குக.
அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ! --- திருவாசகம்.
சீவன் என்னச் சிவன் என்ன வேறுஇல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பாரே. --- திருமந்திரம்.
நான்என்றும் தான்என்றும் நாடிநான் சாரவே
தான்என்று நான்என்று இரண்டுஇலாத் தற்பதம்
தான்என்று நான்என்ற தத்துவம் நல்கலால்
தான்என்று நான்என்றும் சாற்றகில் லேனே. --- திருமந்திரம்.
அதுஇது என்றும் அவன் நானே என்றும்
அதுநீயே ஆகின்றாய்என்றும் - அதுஆனேன்
என்றும் தமைஉணர்ந்தார் எல்லாம் இரண்டாக
ஒன்றாகச் சொல்வாரோ இற்று. --- திருக்களிற்றுப்படியார்.
நான் எனவும் நீஎனவும் இருதன்மை நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலைஎனவே சத்தியம் --- தாயுமானார்.
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக---
ஆறாறு தத்துவங்களைக் கடந்து நிராதார நிலையை ஆன்மா அடைந்த அந்தக் கணத்திலேயே, அதைப் பற்றி இருந்த மாயாகாரியத்தால் ஆன துர்க்குணங்கள் அனைத்தும் தொலைந்து ஒழியும்.
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராஅமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்பிற வித்துய ரேகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே. --- திருவாசகம்.
அப் படையே ஞான உபதேசம்---
ஞான உபதேசம் பெற்றதன் பயனாக ஞானம் சித்திக்கும். அதுவே அஞ்ஞானத்தை அறுக்கின்ற வாளாகும்.
"தனிஞான வாள்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "அவிரோத ஞானச் சுடர் வடிவாள்" என்றும் கூறுவார் அடிகளார். "எனது மன சிற்பரம சுகமவுன கட்கம் அதை யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதி" என்பார் வேடிச்சி காலவன் வகுப்பில்.
"ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறே அறைமின்" என்பார் மணிவாசகப் பெருமான்.
"இரவுபகல் போன ஞானம்" என்பார் அருணகிரியார்.
இரவு --- மறைப்பு. பகல் --- நினைப்பு. கேவல சகலம் எனப்படும் வடமொழியில். நினைப்பு மறப்பு இன்றிய நிலையே சமாதி நிலை.
இந்த நிலையைத்தான் எல்லாப் பெரியோர்களும் வியந்து கூறுகின்றனர்.
இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர். வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர். நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆயது. இறைவனுடைய உருவம் இத்தன்மையது அன்று. அது அறிவு மயமானது. அந்த அறிவும் நமக்கு உள்ள உலகஅறிவு, கலையறிவு, வேறுள்ள ஆராய்ச்சியறிவுகள் அன்று.
சிங்கமுகன் கூறுகின்றான்....
ஞானம்தான் உருஆகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?
மோனம் தீர்கிலா முனிவரும் தேற்றிலர், முழுதும்
தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந்தலைமை.
முருகவேளை வழிபடுவது எதற்கு? எனின், அறிவு திருமேனியாகக் கொண்ட பரம்பொருளை வழிபடுவதனால் அறிவு நலத்தை நாம் பெற்று உய்யலாம்.
அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார்
என்உடையரேனும் இலர்.
என்று பொய்யாமொழி கூறியப்படி, அறிவு எல்லா நலன்களையும் எளிதில் தரும். அறிவு நிரம்பப் பெற்றவன் அஞ்சாமையையும் அமைதியையும் பெறுவான். பின்னே வருவதை முன்னே அறிவான். ஆகவே, அறிவு நமக்கு இன்றியமையாத சிறந்த செல்வம்.
அறிவு திருமேனியாக உடைய அறுமுகப் பெருமான் அடிமலரைச் சிந்தித்து வாழ்த்தி வந்திப்போர், அறிவு நலத்தையும், அதனால் ஏனைய நலங்களையும் எளிதில் பெற்று இன்புறுவர் என்பது உறுதி.
இராப்பகல் அற்ற இடம்காட்டி, யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டைஅம் தாள்அருளாய், கரி கூப்பிட்டநாள்
கராப்படக் கொன்று,அக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல, நிருத சங்கார, பயங்கரனே. --- கந்தர் அலங்காரம்.
அராப்புனை வேணியன்சேய் அருள்வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும், கொடிய ஐவர்
பராக்கு அறல் வேண்டும், மனமும் பதைப்பு அறல் வேண்டும், என்றால்
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே. --- கந்தர் அலங்காரம்.
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.... --- திருப்புகழ்.
கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே. --- கந்தர் அநுபூதி.
இரவுபகல் அற்றஇடத்து ஏகாந்த யோகம்
வரவும் திருக்கருணை வையாய் பராபரமே....
கங்குல்பகல் அற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே... --- தாயுமானார்.
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா---
அக்கு --- உரிமை.
உயிருக்கு உரிமையாக உள்ளது அஞ்ஞானம். அதனால் உண்டான பாசம்.
‘பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே’ என்னும் மணிவாசகப் பொருளைச் சிந்திக்கவும்.
உக்கிர ஈராறு மெய்ப் புயனே---
உக்கிரம் --- வலிமை.
ஈராறு --- பன்னிரண்டு.
நீல உற்பல வீராசி மணநாற---
நீல உற்பலம் --- நீலோத்பல மலர்.
விராசி --- நறுமணம்.
ஒத்த நிலா வீசு நித்தில நீராவி---
நித்தில நீராவி --- வெண்மையான முத்தப் போலத் தெளிந்த நீர் உள்ள குளங்கள். தடாகங்கள்.
உற்பல ராசீவ வயலூரா---
உற்பலம் --- கருங்குவளை.
ராசீவம் --- தாமரை.
பொக்கம் இலா வீர---
பொக்கம் --- பொய்.
அவிநாசிப் பொய்க்கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவும் பெருமாளே---
பொய்க் கலி --- கலியால் வந்த அறியாமை என்னும் நோயால் உண்டான துன்பம்.
கலியுகம் என்பது பாவம் மிகுந்த யுகம் எனப்படும். பாவம் மிகுந்த இந்தக் கலியுகத்திலும் புகழப் பெறுவது சிவபதம்.
பிரமபதம், விஷ்ணுபதம், முதலிய எல்லாப் பதங்களிலும் சிறந்தது சிவபதம் என்பதால் அதனைத் தனக்கு அளித்து அருள் புரியுமாறு அருணகிரிநாதப் பெருமான் பழநித் திருப்புகழில் வேண்டுகின்றார்.
"கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து ஆடி,நல்
கயல்விழிப் பார்வையில் ...... பொருள்பேசி,
கலை இழுத்தே, குலுக்கு என நகைத்தே, மயல்
கலதி இட்டே, அழைத்து, ...... அணைஊடே
செருமி, வித்தார சிற்றிடை துடித்து ஆட, மல்
திறம் அளித்தே, பொருள் ...... பறிமாதர்
செயல் இழுக்காமல், இக் கலியுகத்தே புகழ்ச்
சிவபதத்தே பதித்து ...... அருள்வாயே."
இதன் பொருள் ---
யானையின் இரு கொம்புகள் போன்ற தனங்களை அசைத்து நடனம் ஆடியும், நல்ல கயல் மீன் போன்ற கண்பார்வையாலேயே பெரும் பொருள் தரவேண்டும் என்று பேசியும்,மேல் முந்தானையை இழுத்து இழுத்து விட்டும், குலுக்கென்று அடிக்கடி சிரித்தும், மயக்கமான கெடுதியைத் தந்தும், அழைத்துக் கொண்டுபோய் படுக்கையில் நெருங்கி, அலங்கரித்த சிறு இடை துடித்து அசையவும், வளமையான இன்பத்தைத் தந்து பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் செயல் அடியேனை இழுக்காமல், இக்கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவபதத்தில் என்னைப் பொருந்துமாறு அருள் புரிவீர்.
கலிகாலம் என்பது எப்படிப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல்களால் அறிவோம்.
"எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
இணையிலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
இணையிலாக் கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகுகோர ரூபத்தை உடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
ஆண்மை மிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்பது என்னோ?
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
இதன் பொருள் ---
அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே --- நெருப்பைப் போலத் தோன்றி வந்த ஆலகால விடத்தை உண்ட கண்டத்தை உடையவனே! அமலனே --- குற்றம் அற்றவனே!, அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை இணை இலாச் சேடன் என்றும் --- எழுதவும் படிக்கவும் வழியறியாத அறிவு அற்றவனை ஒப்பற்ற கல்வியில் சிறந்த ஆதிசேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியைச் சபையதனில் இணை இலாக் கர்ணன் என்றும் --- பொருளைப் பிறருக்குக் கொடுத்து அறியாத பெரிய அறியாதவனாகிய உலோபியை,அவையிலே ஒப்பற்ற கொடையில் சிறந்த கர்ணன் என்று புகழ்ந்தும்,
அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் --- அழகு இல்லாத, மிகுந்த அருவருப்பான உருவம் உடையவனைப் பேரழகு உடைய மன்மதன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை ஆண்மை மிகு விசயன் என்றும் - ஆயுதத்தை ஏந்தவும் பழகாத ஆண்மை அற்றவனை வீரத்தில் அர்ச்சுனன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் --- எக்காலமும் பொய்யையே பேசித் திரிகின்ற வஞ்சகனை, சொல்லில் அரிச்சந்திரன் என்றும்,
இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது என்னோ --- இவ்வாறு பழைமையான இந்த உலகத்தில் பாவாணர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசி, தகுதி இல்லாதவர்களிடம் இரப்பது என்ன காரணமோ?
"துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும் நல் கவியை மெச்சார்;
துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார்; வரும்
தூயரைத் தள்ளி விடுவார்;
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
என்னிலோ போய்ப் பணிகுவார்;
ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
நன்றாகவே பேசிடார்;
நாளும் ஒப்பாரியாய் வந்த புத்துறவுக்கு
நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ்புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தரு சதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
இதன் பொருள் ----
அத்தனே --- தலைவனே!, அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் --- எல்லோரும் தீமை பயக்கின்ற விதத்தில் விகடமாகப் பாடல் புனையும் கவிஞனைப் புகழ்வார்கள்,
சொல்லும் நல் கவியை மெச்சார் --- புகழ்ந்து கூறத்தக்க நல்ல கவிஞரைப் புகழமாட்டார்கள்,
துர்ச்சனருக்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் --- தீயவருக்கு மனமகிழ்ச்சியுடன் வேண்டிய உபசாரங்களைச் செய்வார்,
தூயரைத் தள்ளி விடுவார் --- நல்லோரைத் தள்ளி வைப்பார்கள்,
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார் --- விருப்பமான தெய்வத்தை நினைந்து வழிபட மாட்டார்கள்,
கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் --- பேய் என்றால் சென்று வணங்குவர்,
ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் --- தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைச் சிறிதும் மதிக்க மாட்டார்கள்,
வேசை என்னிலோ காலில் வீழ்வார் --- விலைமகள் என்றால் அவள் காலில் விழுந்து வணங்குவார்,
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே பேசிடார் --- இன்ப துன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார்,
ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல நன்மை செய்வார் --- ஒப்புக்கு என்று வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பல நன்மைகளையும் செய்வார்,
அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை --- எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகத்தின் கலிகாலப் பெருமை இது ஆகும்.
கருத்து --- மதிக்க வேண்டியவற்றை மதித்துப் போற்றிப் பயன் பெற வேண்டும் என்பது அறியாத அறியாமை மிகுந்தது கலிகாலத்தின் போக்கு என்றார்.
அடுத்து, கலிகாலத்தைப் பற்றி, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
"தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்; உயர்
தந்தையைச் சீறு காலம்;
சற்குருவை நிந்தை செய் காலம்; மெய்க் கடவுளைச்
சற்றும் எண்ணாத காலம்;
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்; நல்
பெரியர் சொல் கேளாத காலம்;
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்; மிகு
சிறியவன் பெருகு காலம்;
செருவில் விட்டு ஓடினார் வரிசைபெறு காலம்;வசை
செப்புவோர்க்கு உதவு காலம்;
வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு
வாய்த்த கலி காலம்; ஐயா!
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
ஐயா --- ஐயனே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் --- பெற்றெடுத்த தாய் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கின்ற காலம்;
உயர் தந்தையைச் சீறு காலம் --- மேலான தந்தையைச் சீறி, வெறுத்து உரைக்கும் காலம்;
சற்குருவை நிந்தைசெய் காலம் --- நல்லாசிரியரை நிந்திக்கின்ற காலம்;
கடவுளைச் சற்றும் எண்ணாத காலம் --- தெய்வத்தைச் சிறிதும் நினையாத காலம்;
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் --- பேயைத் தெய்வம் என்று போற்றி வழிபாடு செய்யும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம் --- ஏமாற்றுகின்றவர்க்குத் தகுந்த காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் --- மனைவி வைதாலும் பொறுத்துக் கொள்ளுகின்ற காலம்; (மனைவியின் ஊதியத்தில் வாழுகின்ற காலம்)
நல் பெரியர் சொல் கேளாத காலம் --- நல்ல பெரியோர் சொல்லும் சொற்களைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாத காலம்;
பெரியவன் தேய்வுடன் சிறுமை உறு காலம் --- முன் பிறந்தவனாகிய அண்ணன் என்பவன் கலங்கித் தாழ்வு அடையும் காலம்; (பெரியவன் என்பதை அறிவில் பெரியவன் என்றும் கொள்ளலாம்)
மிகு சிறியவன் பெருகு காலம் --- பின் பிறந்தவன் பெருமை அடைகின்ற காலம். (சிறியவன் என்பதை அறிவில் சிறியவன் என்றும் கொள்ளலாம்.)
(குறிப்பு --- மூத்தவனாகப் பிறந்து, குடும்ப பாரத்தை, தந்தையைப் போல் சுமக்கின்ற பெரியவர்கள், தனக்கென வாழாமல், தனது பின் பிறந்தார்களுக்கு என்றே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து, பின்னர் வாழ்வில் சிறுமையை அடைவதை இன்றும் காணலாம்)
செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறு காலம் --- போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுகின்ற காலம்; (போருக்குப் பயந்து புறமுதுகு இட்டு ஓடியவர்கள் என்றும் கொள்ளலாம்)
வசை செப்புவோர்க்கு உதவு காலம் --- இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யும் காலம்;
வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் --- வாய்க் கொழுப்போடு இறுமாப்பாகப் பேசிடும் நியாயம் இல்லாத ஒழுங்கீனர்களுக்குப் பொருந்திய கலிகாலம்.
இங்கே பின்வரும் "விவேக சிந்தாமணி"ப் பாடலைப் படித்துக் கொள்ளவும்.
"பொருட் பாலை விரும்புவார்கள், காமப்பால்
இடைமூழ்கிப் புரள்வர், கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
விரும்பார்கள், அறிவொன்று இல்லார்,
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால்
புரவலர்பால் கொடுக்கக் கோரார்,
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி
செம்பொன் சேவித்து இடுவார்"
இதன் பொருள்---
அறிவு சிறிதேனும் இல்லாத மூடர்கள், நிலையற்ற செல்வத்தின் தன்மையை விரும்புவார்கள். (அவ்வாறு விரும்பிச் செல்வம் தேடிய செருக்கு காரணமாக) பெண்ணாசை என்னும் கடலில் விழுந்து புரளுவார்கள். செல்வத்தால் தேட வேண்டிய புகழைப் பற்றியும், அறம் செய்து அருளைத் தேட வேண்டியதைப் பற்றியும், கனவிலும் விரும்பமாட்டார்கள். குருவுக்கோ, கடவுள் பூசைக்கோ, அந்தணர்களுக்கோ, அறச் செயல்களைப் பாதுகாத்து நடத்தும் புரவலர்களுக்கோ தாம் தேடிய செல்வத்தை ஈய சிறிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்களைப் பிடித்து செருப்பாலே அடித்துத் துன்புறுத்தும் திருடர், துட்டர் முதலியோருக்கு, மனம் விரும்பி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பொன்னைக் கொடுப்பார்கள்.)
இங்கே இன்னொரு பாடலையும் கருத்தில் கொள்ளலாம்...
"அண்டின பேரைக் கெடுப்போரும்,
ஒன்று பத்தா முடிந்து
குண்டுணி சொல்லும் குடோரிகளும்,
கொலையே நிதம் செய்
வண்டரைச் சேர்ந்து இன்பச்
சல்லாபம் பேசிடும் வஞ்சகரும்,
சண்டிப் பயல்களுமே,
கலிகாலத்தில் தாட்டிகரே".
திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான் கலிகாலத்தைப் பற்றி விளக்கி உள்ளார்.
"கோழை, ஆணவ மிகுத்த வீரமே புகல்வர், அற்பர்,
கோதுசேர் இழிகுலத்தர்,.... குலமேன்மை
கூறியே நடு இருப்பர், சோறுஇடார், தருமபுத்ர
கோவும் நான் என இசைப்பர்,.... மிடியூடே
ஆழுவார், நிதி உடைக் குபேரனாம் என இசைப்பர்,
ஆசுசேர் கலியுகத்தின்.... நெறி ஈதே.
ஆயும் நூலறிவு கெட்ட நானும் வேறுஅல அதற்குள்,
ஆகையால் அவையடக்க.... உரை ஈதே.
இதன் பொருள் ----
பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப்பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும், குற்றம் உள்ள இழி குலத்தவராக இருப்பினும், சிலர் தங்கள் குலப்பெருமை பேசியே சபை நடுவே வீற்றிருப்பர். பசித்தவருக்குச் சோறு இடாத சிலர், தருமபுத்ர அரசன் நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்வார்கள். ஏழ்மை நிலையிலே ஆழ்ந்து கிடந்தாலும் சிலர், செல்வம் மிக்க குபேரன் நான்தான் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். குற்றம் நிறைந்த கலியுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆயவேண்டிய நூலறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன்.
கலியுகத்தில் நிகழ முடியாத ஒரு அற்புத நிகழ்ச்சியாய்க் கலி யுகத்தின் பொய்ம்மையை நீக்கி, முதலை உண்ட பிள்ளையை, முதலை வாயினின்றும் சுந்தரமூர்த்திப் பெருமான் மீட்டுக் கொடுத்த நிகழ்ச்சியைக் குறிக்கின்றது. இந்த நிகழ்ச்சி கலியின் பொய்ம்மையை விலக்கி, இறைவன் திருவருளின் மெய்ம்மையை நாட்டிற்று என்கின்றார்.
அவிநாசி - விநாசம் இல்லாதது. அழிவற்றது.
திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.
இறைவர் : அவிநாசிலிங்கேசுவரர், அவிநாசி ஈசுவரர், அவிநாசியப்பர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம் : பாதிரி (ஆதியில் மாமரம்)
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டது, தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது.
அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.
மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.
முதலை வாயினின்றும் பிள்ளையை அழைத்த வரலாறு:
வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வரும் நாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார். திருப்புக்கொளியூரை அடைந்தார். மாடவீதி வழியே நடந்தார்.
அப்பொழுது அங்கே, ஒரு வீட்டில் மங்கல ஒலியும், மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான், அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளே! இரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலி, இறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர், நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர். வன்தொண்டரை வணங்கினர். வன்தொண்டர், அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்' என்று உள்ளம் கொண்டார். பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்து, அங்கே போனார். திருப்பதிகம் பாடினார். "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,
அரைக்குஆடு அரவா, ஆதியும் அந்தமும் ஆயினாய்,
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
என்று வேண்டினார். உடனே, காலன், பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால், எந்த வயதை அடைந்திருப்பானோ, அந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலை, பிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர், புதல்வனை அழைத்துக் கொண்டு அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர், அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர், நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.
அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.
கருத்துரை
முருகா! மேலான குருநாதா! தேவரீரது அற்புதத் திருவடிகளை மறவேன்.
For simple explanation of this song, pls see https://www.youtube.com/watch?v=Rq4wppc4diw&t=150s
ReplyDelete