அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சங்கைக் கத்தோடு (பட்டாலியூர்)
முருகா!
பரகதி அருள்வாய்
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன ...... தனதான
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச்
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின்
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின்
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே
வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட்கோல சமயிகள்,
சங்கற்பித்து ஓதும்,வெகுவித ...... கலைஞானச்
சண்டைக்குள் கேள்வி அலம்அலம்,அண்டற்குப் பூசை இடும்அவர்
சம்பத்துக் கேள்வி அலம்அலம்,...... இமவானின்
மங்கைக்குப் பாகன், இருடிகள் எங்கட்குச் சாமி என அடி
வந்திக்கப் பேசி அருளிய ...... சிவநூலின்
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி அலம்அலம்,
வம்பில் சுற்றாது பரகதி ...... அருள்வாயே.
வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விட வல
வென்றிச் சக்ர ஈசன் மிகமகிழ் ...... மருகோனே!
வெண்பட்டுப் பூண்நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா!
கொங்கைக்கு ஒப்பாகும் வடகிரி,செங்கைக்கு ஒப்பாகு நறுமலர்
கொண்டைக்கு ஒப்பாகு முகில் என,...... வனமாதைக்
கும்பிட்டு,காதல் குனகிய இன்பச்சொல் பாடும் இளையவ!
கொங்கில் பட்டாலி நகர் உறை ...... பெருமாளே.
பதவுரை
வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விடவல--- மிக்க ஆற்றல் உடைய சுக்கிரீவனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனாகி,
வென்றிச் சக்ரேசன் மிகமகிழ் மருகோனே--- வெற்றியையே தருகின்ற இராமபிரானும்,திருக்கையில் சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மகிழும் திருமருகரே!
வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு--- வெண்பட்டு விரித்தால் போல நல்ல ஆழகிய பாக்கு மரங்கள்,
எண்பட்டுப் பாளை விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை வயலூரா--- மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்ந்துள்ளதால்,வெயில் மறைபடுகின்ற வயலூரில் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!
கொங்கைக்கு ஒப்பாகும் வடகிரி--- மார்பகத்துக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது,
செம்கைக்கு ஒப்பாகும் நறுமலர்--- செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும்,
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என--- கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று விளங்கி,
வனமாதைக் கும்பிட்டுக்--- தினைவனத்தில் இருந்தவளாகிய எம்பிராட்டி வள்ளநாயகியைக் கண்டு வணங்கி,
காதல் குனகிய இன்பச்சொல் பாடும் இளையவ--- அவர்மீது காதல் கொண்டு, பண்போல இனிய சொற்களைக் கொண்டு கொஞ்சிப் பேசிய இளையவரே!
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே --- கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
சங்கைக் கத்தோடு--- சந்தேகக் கூச்சலோடு,
சிலுகிடு--- வாதம் புரிகின்ற,
சங்கிச் சட்கோல சமயிகள்--- ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய ஆறு வகையான சமயத்தினர்களும்
சங்கற்பித்து ஓதும்--- சித்தவிருத்தி கொண்டு பேசுகின்ற,
வெகுவித கலைஞானச் சண்டைக்குள் கேள்வி அலம் அலம்--- பலவிதமான சாத்திர ஞானச் சண்டைகளைக் கேட்டதால் வந்த அறிவு போதும் போதும்.
அண்டற்குப் பூசை இடும் அவர் சம்பத்துக் கேள்வி அலம் அலம்--- கடவுட்பூசை செய்பவர்களுடைய செல்வமாகிய கேள்வி அறிவும் போதும் போதும்.
இருடிகள்--- முனிவர்கள்,
இமவானின் மங்கைக்குப் பாகன்--- இமயமலை அரசனின் மகளாகிய உமாதேவியார்க்குப் பாகர் என்றும்
எங்கட்குச் சாமி என--- எங்களுக்குச் சுவாமி என்றும்,
அடி வந்திக்கப் பேசி அருளிய--- திருவடியைத் துதிப்பதற்காக ஓதி விளக்கியுள்ள
சிவநூலின் மந்த்ர ப்ரஸ்த்தார--- சிவநூல்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களின் வரையறைகளும்,
தரிசன யந்த்ரத்துக் கேள்வி அலம் அலம்--- காட்சியாக விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய அறிவும் போதும் போதும்.
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே--- இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல்,மேலான வீடுபேற்றை அருள்வாயாக.
பொழிப்புரை
மிக்க ஆற்றல் உடைய சுக்கிரீவனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனாகி, வெற்றியையே தருகின்ற இராமபிரானும்,திருக்கையில் சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மகிழும் திருமருகரே!
வெண்பட்டு விரித்தால் போல நல்ல ஆழகிய பாக்கு மரங்கள், மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்ந்துள்ளதால்,வெயில் மறைபடுகின்ற வயலூரில் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவரே!
மார்பகத்துக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று விளங்கி, தினைவனத்தில் இருந்தவளாகிய எம்பிராட்டி வள்ளநாயகியைக் கண்டு வணங்கி, அவர்மீது காதல் கொண்டு, பண்போல இனிய சொற்களைக் கொண்டு கொஞ்சிப் பேசிய இளையவரே!
கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
சந்தேகக் கூச்சலோடுவாதம் புரிகின்ற,ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய ஆறு வகையான சமயத்தினர்களும் சித்தவிருத்தி கொண்டு பேசுகின்ற பலவிதமான சாத்திர ஞானச் சண்டைகளைக் கேட்டதால் வந்த அறிவு போதும் போதும். கடவுட்பூசை செய்பவர்களுடைய செல்வமாகிய கேள்வி அறிவும் போதும் போதும். முனிவர்கள், இமயமலை அரசனின் மகளாகிய உமாதேவியார்க்குப் பாகர் என்றும் எங்களுக்குச் சுவாமி என்றும், திருவடியைத் துதிப்பதற்காக ஓதி விளக்கியுள்ளசிவநூல்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரங்களின் வரையறைகளும், காட்சியாக விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய அறிவும் போதும் போதும்.இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல்,மேலான வீடுபேற்றை அருள்வாயாக.
விரிவுரை
சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட்கோல சமயிகள் சங்கற்பித்து ஓதும் வெகுவித கலைஞானச் சண்டைக்குள் கேள்வி அலம் அலம்---
சங்கை --- சந்தேகம்.
கத்து --- கூச்சல்.
சிலுகு --- சண்டை, குழப்பம், கூச்சல், வாதம்.
சங்கி --- தொடர்பு உடையது.
சட்கோலச் சமயிகள் --- ஆறுவிதமான சமயக் கொள்கைகளை உடையவர்கள்.
சங்கற்பம் --- மனக் கற்பனை, சித்தவிருத்தி, விருப்பம், நியமனம், எண்ணம், கொள்கை.
கலைஞானம் --- நூல் அறிவு.
அலம் --- போதும்.
தெளிந்த அறிவு உள்ளவர்கள் ஒருபோதும் வாதம் புரியமாட்டார்கள். நூலறிவு மட்டுமே உள்ளவர்கள், தாம் உணர்ந்தவற்றையே உணர்ந்து, அவர்கள் உணர்ந்ததை நிறுவுவதற்காக,பிறரோடு வாதம் புரிவார்கள்.
அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு. பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்.. --- (அலகில்) திருப்புகழ்.
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம தருள்வாயே.. --- திருப்புகழ்.
இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். பத்திநெறியில் நின்று முத்தியை அடையவேண்டும்.
அண்டற்குப் பூசை இடும் அவர் சம்பத்துக் கேள்வி அலம் அலம்---
கடவுளைப் பேசை புரிபவர்களும் அவரவர் வகுத்துக் கொண்ட வழிமுறைகளையே பெரிதாக மதித்து, பிறர் கேட்குமாறு போதிப்பார்கள்.
சிவநூலின் மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி அலம் அலம்---
மந்திரப் பிரஸ்தாரம் குறித்து நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. யந்திரங்க்ளும் வரையறை செயது காட்டப்பட்டு உள்ளன. இவைகளால் மட்டுமே இறைவனைக் காண முடியாது.
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே---
வம்பு -- வீண்.
வீணான வழிகளில் அலையாமல், மனத்தை இறைவன் திருவடியில் புகுத்தி இருந்தால், பரகதியை அடையலாம்.
பரகதி அடைவதற்கு எளிய வழி பத்திநெறியே ஆகும்.
வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை வயலூரா---
வயலூர் அனுபவத்தை அருணகிரிநாதப் பெருமானால் மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் வயலூரா, வயலூரா என்று உருகுவார். அப்படி உருகும்போது, வயலூரின் இயற்கைக் காட்சி அவரது மனக்கண் முன்னர் வருகின்றது. வயலூரின் இயற்கை அயகை இங்கே சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
பனைமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், சூரிய ஒளியானது புக முடியாமல் மறைக்கப்பட்டு உள்ளது.
வெயிற்கு எதிர்ந்து இடங்கொடாது அகம்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்குஎதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கு எதிர்ந்து அணங்குசாயல் மாதொர்பாகம் ஆகமூ
வெயிற்கு எதிர்ந்து ஒர்அம்பினால் எரித்தவில்லி அல்லையே.
என்னும் திருஞானசம்பந்தர் தேவாரம் காண்க.
கொங்கைக்கு ஒப்பாகும் வடகிரி, செம்கைக்கு ஒப்பாகும் நறுமலர்,கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வனமாதைக் கும்பிட்டு,காதல் குனகிய இன்பச்சொல் பாடும் இளையவ---
முருகப் பெருமான் வள்ளிமலையில் அகிலாண்ட நாயகி வள்ளிபிராட்டி தவம் புரிந்து கொண்டு இருக்கின்றார் என்ற நாரதர் சொன்னதைக் கேட்டு, பிராட்டியார் இருக்கும் வனத்தைத் தேடி வந்தார். அம்மையைக் கண்டு காதல் கொண்டார். காதல் மொழிகளைப் பேசிக் கொஞ்சு, அவளது திருவடியை வணங்கி நின்றார்.
இந்த அற்புதமான அருள் வரலாற்றை, அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் ஆங்காங்கே வைத்து அழகாகப் பாடி அருளி உள்ளார். பின்வரும் மேற்கோள்களைக் காண்க.
முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...
குறவர் கூட்டத்தில் வந்து,கிழவனாய்ப் புக்கு நின்று,
குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே.--- கச்சித் திருப்புகழ்.
புன வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே!--- பழநித் திருப்புகழ்.
செட்டி வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....
செட்டி என்று வன மேவி,இன்ப ரச
சத்தியின் செயலினாளை அன்பு உருக
தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் ......பெருமாளே.
--- சிதம்பரத் திருப்புகழ்.
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி என்று எத்தி வந்து, ஆடி நிர்த்தங்கள் புரி
சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும் ...... எங்கள் கோவே! --- சிதம்பரத் திருப்புகழ்.
வள்ளிநாயகிக்ககாக மடல் ஏறியது ....
பொழுது அளவு நீடு குன்று சென்று,
குறவர்மகள் காலினும் பணிந்து,
புளிஞர் அறியாமலும் திரிந்து,...... புனமீதே,
புதியமடல் ஏறவும் துணிந்த,
அரிய பரிதாபமும் தணிந்து,
புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.
முருகப் பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....
மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தனை நாடி,...... வனமீது
வந்த,சரண அரவிந்தம் அது பாட
வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.
குஞ்சர கலாப வஞ்சி,அபிராம
குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!
குன்று தடுமாற ...... இகல் கோப! --- நிம்பபுரத் திருப்புகழ்.
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என,இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,
அருகு சென்றுஅடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......
--- திருவருணைத் திருப்புகழ்.
வள்ளிநாயகி தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...
தவநெறி உள்ளு சிவமுனி,துள்ளு
தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்
தரு புன வள்ளி, மலை மற வள்ளி,
தரு தினை மெள்ள ...... நுகர்வோனே! --- வெள்ளிகரத் திருப்புகழ்.
வள்ளிநாயகி முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....
மால் உற நிறத்தைக் காட்டி,வேடுவர் புனத்தில் காட்டில்,
வாலிபம் இளைத்துக் காட்டி,...... அயர்வாகி,
மான்மகள் தனத்தைச் சூட்டி,ஏன் என அழைத்துக் கேட்டு,
வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.
வள்ளிநாயகியின் திருக்கையையும், திருவடியையும் பிடித்தது...
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா!--- சுவாமிமலைத் திருப்புகழ்.
கனத்த மருப்பு இனக் கரி,நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி
கனிக் குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.
வள்ளிநாயகியின் எதிரில் துறவியாய்த் தோன்றியது...
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய். --- திருவேங்கடத் திருப்புகழ்.
வள்ளிநாயகியைக் கன்னமிட்டுத் திருடியது....
கன்னல் மொழி,பின்அளகத்து, அன்னநடை,பன்ன உடைக்
கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னம் இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே! --- கண்ணபுரத் திருப்புகழ்.
முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...
ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
உரத்தோள் இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா! --- திருவருணைத் திருப்புகழ்.
வள்ளிநாயகியை முருகப் பெருமான் வணங்கி,சரசம் புரிந்தது.....
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என,இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட,வடிவமும்...மிகவேறாய்,
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம்,தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை,ஒருதிரு ....உளம் நாடி,
அருகு சென்றுஅடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ...... அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
தழை உடுத்த குறத்தி பதத் துணை
வருடி,வட்ட முகத் திலதக் குறி
தடவி,வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, இரு
குழை திருத்தி,அருத்தி மிகுத்திடு
தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே. --- திருத்தணிகைத் திருப்புகழ்.
உலப்பறு இலம்பகம் மினுக்கிய செந்திரு,
உருப்பணி யும்பல தரித்து,அடர் பைந்தினை
ஓவல் இலா அரணே செயுமாறு,
ஒழுங்கு உறும் புனம் இருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகள்எனும் ஒருமானாம்
மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து,அதி
வனத்து உறை குன்றவர் உறுப்பொடு நின்று,இள
மான் இனியே கனியே,இனிநீ
வருந்தும் என்தனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட அன நினதுஏர்ஆர்
மடிக்கு ஒரு வந்தனம்,அடிக்கு ஒரு வந்தனம்,
வளைக்கு ஒரு வந்தனம்,விழிக்கு ஒரு வந்தனம்,
வா எனும் ஓர் மொழியே சொலுநீ,
மணம் கிளர்ந்த நல் உடம்பு இலங்கிடு
மதங்கி இன்று உளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே..... எனும் மொழி பலநூறே
படித்து, அவள் தன்கைகள் பிடித்து, முனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்தகிரு
பா கரனே! வரனே! அரனே!
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பா வகியே! சிகியூர் இறையே! . . . . . . திருமலிசமர் ஊரா!
எனப் பாம்பன் சுவாமிகள் பாடி அருளிய "பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்" சொல்லும். முருகா! முருகா! முருகா!
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே ---
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி. மீ. தொலைவில் உள்ளது பட்டாலியூர் என்னும் திருத்தலம். முருகப்பெருமான் வள்ளி நாயகியுடன் சிவாசலபதி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். இச்சந்நிதியின் இடப்பாகத்தில் வள்ளியும், தெய்வானையும் உள்ள சந்நிதி உள்ளது. சிவன் மலை சிறிய குன்று. மலையில் ஏறுவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தல விருட்சம் கொட்டி மரம். பதினெட்டு சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியர் தவம் புரிந்த தலம்.
கருத்துரை
முருகா! பரகதி அருள்வாய்
No comments:
Post a Comment