பொருள் சேர் புகழ்
-----
இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
என்பது "கடவுள் வாழ்த்து" என்னும் முதல் அதிகாரத்துள், திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள்.
அவிச்சை, அவித்தை, அறியாமை, மாயை, ஆணவம், மோகம் என்று இவை எல்லாம் ஒரே பொருளைத் தருவன. எது சரி, எது சரியில்லை; எது நன்மை, எது தீமை என்னும் அறிவு தெளியாத நிலையில், அறியாமையில் நம்மால் வினைகள் ஆற்றப்படுகின்றன. அறிவோடுதான் எதையும் செய்வதாக, நாம் நம்முடைய அறிவைக் கொண்டு தீர்மானம் செய்கின்றோம். நாம் அறிந்தது எதுவோ,அது அறிவு அல்ல. நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து தெளிவதே அறிவு என்றனர் நம் முன்னோர்.
"அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய
செறுவார்க்கும் செய்யா விடல்".
என்ற திருக்குறளில் தலையான அறிவு எது என்பதையும்,
"அறிவினால் ஆகுவது உண்டோ?பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக் கடை"
என்ற திருக்குறளின் மூலம் அறிவின் பயன் என்ன என்றும் காட்டினார்.
எனவே தான்,"இருள்சேர் இருவினையும்" என்பதற்கு,"மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உள ஆகா" என்று உரை வகுத்தார் பரிமேலழகர்.
அவிச்சை காரணமாக, உலகியல் நிலையில் இறைவனைத் தவிர மற்றவர்கள் புகழைப் பேசுகின்றோம். அது பொருள் சேர் புகழ் அல்ல என்பதைக் காட்ட, "இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது" என்றார் பரிமேலழகர். "மலர் மிசை ஏகினான்" என்னும் திருக்குறளின் உரையில், "சேர்தல்" என்பதற்கு "இடைவிடாது நினைத்தல்" என்று உரை கண்ட, பரிமேலழகர், இத் திருக்குறளில், "புரிதல்" என்னும் சொல்லுக்கு "எப்பொழுதும் சொல்லுதல்" என்று உரை வகுத்தார். இத் திருக்குறளில் சொல்லப்பட்ட இரண்டு கருத்துக்கள் இவை.
உலகில் உள்ள எல்லாச் சமயத்தினரும் இறைவன் புகழைப் பாடுகின்றார்கள். கடவுள் என்னும் ஒரு பொருளை ஏற்காத சமயத்தினர் கூட,தாங்கள் கொண்டுள்ள சமயத்தைத் தோற்றுவித்த குருமார்களை வழிபடுகின்றனர். அப்படியிருக்க,"பொருள்சேர் புகழ்" என்பது என்ன?
நமது வாழ்க்கைச் சூழலில், விரும்பியோ விரும்பாமலோ சிலரைப் புகழவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடுவது இயல்பு. பதவியிலும், பணத்திலும் உயர்ந்து இருந்து, அவை காரணமாக அளவற்ற அதிகாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் சிலரைப் புகழ்வது என்றுமே வாலாயமாகக் காணப்படுவது.
--- மிடுக்கு இல்லாதவனை பீமன் என்றும், அருச்சுனன் என்றும்,
--- ஒரு காசும் கொடுத்து உதவாதவனைப் பாரி என்றும்,
--- நலம் ஏதும் இல்லாதவனை நலம் மிக்கவன் என்றும்,
--- நரைகள் போந்து,மெய் தளர்ந்து, மூத்து,உடல்நடுங்கி நிற்கும் கிழவனை,வரைகள் போல்திரள் தோளனே என்றும்,
--- நோயனைத் தடம் தோளனே என்றும்,
--- நொய்ய மாந்தனை விழுமிய தாய் அன்றோ புலவோர்க்கு எல்லாம் என்றும்
பலவாறாக சுந்தரமூர்த்தி நாயனார் காட்டியபடி புகழ்ந்து பேசுவது, வெறும் சொல் அலங்காரமாகவே இருப்பதையும் காணலாம். இப்படிப் புகழுகின்ற போது, மனத்தில் எவ்விதமான ஈடுபாடோ, உணர்ச்சியோ இல்லாமல் வாயளவில் சொல்லுகின்றதாகவே இருக்கும். புகழப்படுகின்றவர், புகழுகின்றவர், புகழுரையைக் கேட்கின்றவர்கள் யாரும், இந்தப் புகழுரைகளில் ஒரு சொல்லைக் கூட நம்புவதில்லை. அனைத்தும் பொய்யுரையாகவே உள்ளது. புகழப்படுபவர் இதை உண்மை என்று நம்புகின்றார். புகழுரையை ஏற்றுக் கொள்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்தாலும், அவரும் அந்தப் புகழுரையில் மயங்குகின்றார். பொய்யான புகழுரையை எப்போதும் கூறும் ஒரு கூட்டத்தையும் தனக்காக அவர் உருவாக்கி வைத்துக் கொள்ளுகின்றார். ஆக,செல்வம் படைத்தவர்க்கும், அதிகாரம் படைத்தவர்க்கும் மட்டும் அல்லாது, கல்வி அறிவு மிக்கவர்க்கும் புகழுரை தேவைப்படுகின்றது. புகழ் என்பது ஒரு போதைப் பொருள் போல் ஆகிவிட்டது.
பொருள் கருதிச் சொல்லப்படும் வெற்றுப் புகழுரைகள் ஆகிய இவை யாவும் பொருள் (அர்த்தம்) இல்லாதவை. "பொருள் சேர் புகழ்" என்பதற்கு எதிர்ப்பதம், "பொருள் சேராத புகழ்" என்பது உலகியலில் வைத்து மேலே காட்டப்பட்டது. இவ்வாறு பயனில்லாத சொற்களை வைத்துப் பிறரைப் புகழ்ந்து கொண்டு, பொருளையும் புகழையும் தேடுபவர்கள், இந்தப் பழக்கத்தில் இருந்து மீளுவது அவ்வளவு எளிதல்ல.
இப்படிப்பட்டவர்கள் இறைவன் புகழைப் பாடத் தொடங்கினாலும், எதையோ வேண்டிச் சொல்வதால், அதுவும் "பொருள் சேர் புகழ்" ஆகாது. சொல்லும் சொல்லானது பொருள் உணர்ந்து சொல்லப்படுமானால், அது மனத்தில் ஆழத்தில் பதிந்துவிடும். எல்லார் உள்ளத்திலும் கலந்து இருக்கும் இறைவன், ஒருவன் கூறுகின்ற புகழானது உணர்வோடு கலந்ததா? வெற்று உரையா? என்பதை நன்கு அறிவான். மனிதர்களை வேண்டுவதை விடுத்து, இறைவனை வேண்டுவது சரிதான். என்றாலும், எவ்விதப் பயனையும் கருதாமல் உள்ளன்போடு இறைவனைப் பாடுவதை விட,பயன் கருதிப் பாடுவது சற்றுக் குறைந்தது தான். காரணம், பயனை வேண்டிப் பாடும்போது, தன்முனைப்பு இருக்கின்றது. அந்த முனைப்பின் வெளிப்பாடுதான், எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்பது. இது தான் இருள் சேர் இருவினைகளையும் விளைக்கக் கூடியது. "இருள்" என்னும் சொல்லுக்கு, அறியாமை, அஞ்ஞானம், துன்பம் என்றெல்லாம் பொருள் பல உண்டு.
எனவே, இருள்சேர் இருவினைக்கும், இருவினைக்கும் வேறுபாடு உண்டு. நான் எனது என்னும் பற்றுக்களை ஒழித்து, இறையருள் ஒன்றையே கருதி, வழிபடும்போது, அதன் விளைவு, இருவினைகளை உண்டாக்குவதில்லை. புண்ணியமோ, பாவமோ அவர்கள் கணக்கில் சேராது.
அரன் அடிக்கு அன்பர் செய்யும்
பாவமும் அறம் அது ஆகும்;
பரன் அடிக்கு அன்பு இலாதார்
புண்ணியம் பாவம் ஆகும்;
வரம் உடைத் தக்கன் செய்த
மாவேள்வி தீமை ஆகி;
நரரினில் பாலன் செய்த
பாதகம் நன்மை ஆய்த்தே.
என வரும் "சிவஞானசித்தியார்" பாடல் இதனை உறுதி செய்கின்றது.
சிவபெருமானுடைய திருவடிக்கு அன்பு பூண்ட மெய்யடியார்கள் வழிபாடு செய்யும் காலத்தில் அவர்கள் செய்கிற பாவச் செயல்களும் கூட அறமே ஆகும். தலைவனாகிய சிவனது திருவடிகளுக்கு அன்பு இல்லாதவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவமே ஆகும். தனது தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற தக்கன் இயற்றத் தொடங்கிய சிறந்த வேள்வியானது, பாவச் செயலாக முடிந்தது. சிறிய பெருந்தகையான சண்டீச நாயனார், தமது தந்தையின் காலைத் தடிந்த பாதகம்,நன்மையாக முடிந்தது.
சிவபெருமானை ஒதுக்கி விட்டு, "நான்" என்னும்தன்முனைப்போடு வேள்வி செய்யத் தொடங்கினான் தக்கன். அந்த வேள்வி அவனுக்கு நன்மையைத் தராமல் தீமையில் முடிந்தது. இந்த வரலாறு கந்தபுராணத்தில் இடம் பெறுகிறது
சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார், விசாரசருமர் என்னும் பிள்ளைத் திருநாமத்தை உடையவர். மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்துப் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபட்டார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையின் காலை அருகில் கிடந்த சிறு கோலால் எறிந்தார். அதுவே வாளாகித் தந்தையின் கால்கள் இரண்டையும் துணித்து எறிந்தது. தந்தையை இழந்த விசாரசருமர் முன்னர் சிவபிரான் காட்சி அளித்து, "நம் பொருட்டு ஈன்ற தாதை (தந்தை) விழ எறிந்தாய்; அடுத்த தாதை (தந்தை) இனி உனக்கு நாம்" என்று அருள் செய்து, அணைத்து, கருணையால் அவரைத் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள் புரிந்தார். அத்தோடு நில்லாமல், தேவர்களது பெருமானாகிய சிவபிரான்,விசாரசருமனாரைத் தொண்டர்களுக்கு எல்லாம் அதிபராக ஆக்கி, "நாம் உண்ட பரிகலமும்,உடுக்கும் உடைகளும்,சூடும் மாலை அணிகலன் முதலியனவும் ஆகிய அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசன் ஆகும் பதவியையும் தந்தோம்" என்று சொல்லி அவருடைய அழகிய பெரிய திருமுடிக்குத் தமது பிறைச்சந்திரன் இருக்கும் சடையில் சூடிய கொன்றைமலர் மாலையை எடுத்துச் சூட்டியருளினார். அதுமுதல், விசாரசருமர், "சண்டீச நாயனார்" ஆனார்.
தொடுத்த இதழி சூழ் சடையார்
துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி,"நம் பொருட்டால்
ஈன்ற தாதை விழ எறிந்தாய்;
அடுத்த தாதை இனி உனக்கு
நாம்" என்று அருள் செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி
உச்சி மோந்து மகிழ்ந்து அருள.
செங்கண் விடையார் திரு மலர்க்கை தீ
ண்டப் பெற்ற சிறுவனார்
அம் கண் மாயை யாக்கையின் மேல்
அளவு இன்று உயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி எழுந்த திரு அருளின்
மூழ்கிப் பூ மேல் அயன் முதல் ஆம்
துங்க அமரர் துதி செய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு
அதிபன் ஆக்கி,"அனைத்தும் நாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம்"
என்று அங்கு அவர் பொன் தடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
இவ்வாறு பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.
சுவரில் தீட்டிய ஓவியங்கள் காண்பவரை மகிழ்விக்கும். மனத்தில் பற்றினை உண்டாக்கும். அந்த ஓவியங்களைப் பார்க்காமல், அவற்றிற்கு ஆதாரமாய் உள்ள சுவரினையே பார்த்தால், ஓவியம் தெரியாது.ஓவியங்களால் வரும் மகிழ்ச்சியும் பற்றுதலும் இல்லையாகும். அதுபோல, உலகப் பொருள்களைத் தனித்தனியே பார்ப்பவர்க்கு அவை சிற்றின்பத்தையும் பற்றினையும் உண்டாக்கும். ஓவியங்களுக்கு எல்லாம் சுவர் ஆதாரமாக இருப்பது போல, உலகிற்கெல்லாம் ஆதாரம் திருவருளே என்பதை உணர்ந்து அத் திருவருள் ஒன்றையே நோக்குவார்க்கு, அவை எல்லாம் நிலையில்லாதன எனத் தோன்றி,அவை மீது கொண்ட பற்று ஒழியும். இறைவன் ஒருவனே மெய்ப்பொருள் என்பது விளங்கும். இதனை,
"திருவருள் நாட்டம் கருணையில் பெறலும்
யாவையும் எனக்குப் பொய் எனத் தோன்றி,
மேவரும் நீயே மெய் எனத் தோன்றினை;
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே"
என்று பட்டினத்தடிகள் "திருக்கழுமல மும்மணிக்கோவை" என்னும் நூலில் காட்டி அருளினார்.
சிறு குழந்தையின் கையில் பொற்கிண்ணத்தை அளித்தால் அக்குழந்தை அதன் அருமையை உணராமல் வீசி எறிதலும் கூடும். தன் கையில் உள்ளது பொன் கிண்ணம் என்று அறிந்தால், இறுகப் பற்றிக் கொள்ளுதல் கூடும். அதுபோல, உயிர்கள்திருவருளைப் பெற்ற பின்னரும், அறியாமையால், அதனை நெகிழ விடுதலும் கூடும். அவ்வாறு இல்லாமல், தெளிந்த உணர்வால் அதனை இறுகப் பற்றுதல் வேண்டும். "மழக் கை இலங்கு பொன்கிண்ணம் என்று அல்லால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்" என்று மணிவாசகர் அருளியதைச் சிந்திக்கவும்.
திருவருளைத் தெளிய உணர்ந்த உயிர்,தான் வேறு நில்லாமல் திருவருளோடு ஒன்றி நிற்கும். உயிரினது அறிவு சிவனது அறிவாகிய திருவருளினுள்ளே பொருந்தி,தான் கர்த்தா என்னும் எண்ணம் தோன்றாதபடி நிற்கும். அந்த நிலையே சிவயோகம் எனப்படும். அப்படி, சிவயோகத்தில் இருப்பவர்க்கு ஆணவமலம் இல்லை. மாயை இல்லை, வல்வினைகளும் இல்லை என்கின்றது, "சிவஞானபோதம்" பத்தாம் சூத்திரம்.
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க;
மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே.
"அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார். அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியை இறைவன் கொடுத்தது, செத்துச் செத்துப் பிறப்பதற்கு அல்ல. இறவாத பெருநிலையைப் பெறுவதற்கே. இந்தப் பிறவியைப் பெருவரமாகக் கொடுத்த அருட்கருணை ஒன்றுக்கே இறைவனை எக்காலமும் வழிபடவேண்டும். இதை எண்ணித் தான் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். பள்ளிக்கு ஒருவனை அனுப்புவது, அவன் கல்வி அறிவு பெற்றுத் திரும்புவதற்கே. ஒரே வகுப்பில் பலகாலம் இருப்பதற்கு அல்ல. அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு தமக்கு இட்ட பணியைச் சிறப்பாக ஆற்றி, மேன்மேலும் உயர்வதற்கே. அங்கே சென்றதும், எங்கே என்ன கிடைக்கும் என்று ஆராய்ச்சி புரிவதற்கு அல்ல.
கர்மண்யேவ அதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சன|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி||
என்கின்றது பகவத் கீதை. கர்மத்தை (வினையை) செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரம் (தகுதி) உண்டு. ஒருபொழுதும் பலன்களில் இல்லை. வினைகளின் பயனை விளைப்பவன் நீ ஆகாதே. வினைகளைச் செய்யாமல் வெறுமனே இருப்பதிலும் விருப்புக் கொள்ளாதே. அதிகாரம் என்றால் தகுதி என்றுதான் பொருள். தகுதி உள்ளவனுக்குத் தான் அதிகாரம் தரப்படும். அது தகுதியோடு பணியாற்றுவதற்குத் தான். பிறரை மேய்ப்பதற்கு இல்லை. தகுதியான இடத்தில் இருந்துகொண்டு, தகுதியற்ற செயல்களைச் செய்வது தகுதி அல்ல.
கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||
என்று மேலும் பகவத் கீதை கூறுகின்றது. சமபுத்தியை உடைய ஞானிகள் தாங்கள் செய்யும் கர்மத்தின் பலனைத் தியாகம் செய்து, (பலனை விரும்பாது இருந்து) பிறவியாகிய தளையில் இருந்து விடுபட்டு, துன்பம் இல்லாத,கேடு இல்லாத பெருநிலையை அடைகின்றார்கள்.
எனவே, "பொருள் சேர் புகழ்" என்னும் உண்மையான புகழானது, "இருள்சேர் இருவினை" ஆகாது. பொருளற்ற புகழான,"பொருள் சேராத புகழ்" என்பதே "இருள்சேர் இருவினை" ஆகும்.
எனவேதான், மனிதர்களைப் பற்றி "பொருள்சேராத புகழ்" (அர்த்தம் இல்லாத புகழ், பொய்ப் புகழ்) கூறுவதை விடுத்து, இறைவனின் "பொருள்சேர் புகழ்" பாடுங்கள், இல்லாததைப் பேசி இல்லாமல் போவதை விட,இருப்பதைப் பேசி,தவறாமல் தருவதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்,
சார்கினும், தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின், புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
இல்லாததை எல்லாம் சொன்னேன், இல்லாமலே போனது என்று ஒரு புலவர் நொந்து கொள்கின்றார். "பொருள் (அர்த்தம்) சேராத புகழைச் சொன்னால், பொருள் (பணம்) சேராது.
கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடு ஏறித் திரிவானை நாடா என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்துக் கோழையை யான் புலியேறு என்றேன்;
மல்ஆரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்;
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.
மெய்அதைச் சொல்வார் ஆகில்
விளங்கிடும் மேலாம் நன்மை,
வையகம் அதனைக் கொள்ளும்,
மனிதரில் தேவர் ஆவார்,
பொய்அதைச் சொல்வார் ஆகில்,
போசனம் அற்பம் ஆகும்,
நொய்யர் இவர்கள் என்று
நோக்கிடார் அறிவு உள்ளோரே.
என்பது "விவேக சிந்தாமணி". இதன் பொருள் ---
உண்மையைப் பேசுகின்ற ஒருவரிடம், நன்மைகள் யாவும் ஒளி பெற்று விளங்கும். உலகத்தவர் அவரை மேன்மை உடையவர் என்று ஏற்றுக் கொள்வார்கள். மனிதர்களில் தேவரைப் போல எண்ணிப் போற்றுவார்கள். பொய்யைச் சொல்பவர்க்கு உண்ண உணவும் கிடைக்காது. அறிவு உடையவர்கள், பொய் சொல்பவரை "அற்பர்" என்று எண்ணி, தமது கண்களால் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
"பொருள் சேர் புகழ்" என்பது இறைவன் புகழே ஆகும். அதைச் சொன்னால் துன்பம் இல்லை. அதை எப்போதும் சொல்லப் பழகுவது நல்லது. சொல்லச் சொல்ல இனிக்கும். அதனால்,"இருள்சேர் இருவினை" இல்லையாகும்.எனவே,
இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
என்று நாயனர் அருளியதைக் கருத்தில் கொள்வோம்.
No comments:
Post a Comment