அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பரவு நெடுங்கதிர் (மதுரை)
முருகா!
எங்கும் நிறைந்த உமது திருவடியைத் தமிழினால் பாடவும்,
அன்பர்கள் மகிழவும் அருள் புரிவீர்.
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே
அரகர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... அதனாலே,
பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே,
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் ...... அதுபாடி,
வளமொடு செந்தமிழ் உரைசெய,அன்பரும்
மகிழ,வரங்களும் ...... அருள்வாயே.
அரகர சுந்தர! அறுமுக! என்று உ(ன்)னி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே!
அசல நெடும் கொடி,அமை, உமை,தன்சுத!
குறமகள் இங்கித ...... மணவாளா!
கருத அரு திண்புய! சரவண! குங்கும
களபம் அணிந்திடு ...... மணிமார்பா!
கனக மிகும்பதி,மதுரை வளம்பதி,
அதனில் வளர்ந்து அருள் ...... பெருமாளே.
பதவுரை
அரகர சுந்தர அறுமுக என்று உ(ன்)னி--- அரகர, அழகா, ஆறுமுகரே என்று உம்மைத் தியானித்து,
அடியர் பணிந்திட மகிழ்வோனே--- அடியார்கள் வணங்க மகிழ்பவரே!
அசல நெடுங்கொடி அமை உமை தன் சுத--- மலையரசன் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற உலகன்னையாகிய உமாதேவியாருடைய திருக்குமாரரே!
குறமகள் இங்கித மணவாளா--- குறமகள் ஆகிய வள்ளிநாயகியாருக்கு இனிமையான மணவாளரே!
கருத அரு திண்புய--- நினைப்பதற்கு அருமையான திண்ணிய திருத்தோள்களை உடையவரே!
சரவண--- சரவணப் பொய்கையில் தவழ்ந்து அருளியவரே!
குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா--- குங்குமப் பூவுடன் சேர்ந்த சந்தனத்தை அணிந்துள்ள இரத்தின மணிகளுடன் கூடிய திருமார்பினரே!
கனக மிகும்பதி மதுரை வளம்பதி அதனில் வளர்ந்து அருள் பெருமாளே--- பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்னும் செழிப்பான திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய--- எல்லோரும் புகழுகின்ற நீண்ட கதிர்களை உடைய சூரியனால் ஒளி வீசப் பெறுகின்ற உலகினில் உள்ள அன்பர்களால் விரும்பப்படுகின்ற
பவனி வரும்படி அதனாலே--- தேவரீர் திருஉலா வரும் தன்மையினாலே,
பகர வளங்களும் நிகர விளங்கிய--- வளப்பங்கள் எல்லாம் நிறைவாகப் பொருந்தி, கொடைச் சிறப்பாக விளங்கும்படி,
இருளை விடிந்தது நிலவாலே--- நிலவாலே இருள் நீங்கியது.
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது--- மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்தது.
வரிசை தரும் பதம் அதுபாடி--- உயர்வைத் தருவதாகிய தேவரீருடைய திருவடியைப் பாடி
வளமொடு செந்தமிழ் உரைசெய--- சொல்வளம், பொருள்வளம் மிக்க செந்தமிழ்ப் பாக்களால் தேவரீரைப் புகழவும்,
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே--- அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் யாவரும் அகம் மகிழவும், வரங்களைத் தந்து அருள் புரிவீர்.
பொழிப்புரை
அரகர, அழகா, ஆறுமுகரே என்று தேவரீரைத் தியானித்து, அடியார்கள் வணங்க மகிழ்பவரே!
மலையரசன் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற உலகன்னையாகிய உமாதேவியாருடைய திருக்குமாரரே!
குறமகள் வள்ளிநாயகியாருக்கு இனிமையான மணவாளரே!
நினைப்பதற்கு அருமையான திண்ணிய திருத்தோள்களை உடையவரே!
சரவணப் பொய்கையில் தவழ்ந்தவரே!
குங்குமப் பூவுடன் சேர்ந்த சந்தனத்தை அணிந்துள்ள இரத்தின மணிகளுடன் கூடிய திருமார்பினரே!
பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!
எல்லோரும் புகழுகின்ற நீண்ட கதிர்களை உடைய சூரியனால் ஒலி வீசப் பெறுகின்ற உலகினில் அன்பர்களால் விரும்பப்படுகின்ற தேவரீர் திருஉலா வரும் தன்மையினாலே, அழகிய அநேக வளப்பங்களும், கொடையும் மிகுதியாகச் சிறந்தன. நிலவாலே இருள் நீங்கியது. மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்தது. உயர்வைத் தருவதாகிய தேவரீருடைய திருவடியைப் பாடி, சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழவும், அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் யாவரும் அகம் மகிழவும்,வரங்களைத் தந்து அருள் புரிவீர்.
விரிவுரை
பரவு நெடுங்கதிர் ---
சூரியன் எல்லோராலும் புகழப்படுபவன். ஒரு சமயம், ஒரு குலம், ஒரு மதம், ஒரு காலம் என்ற வரையறை இன்றி எல்லோரும் கதிரவனை வழிபடுகின்றனர். இப் பரதகண்டமே அன்றி ஏனைய கண்டத்தினரும் கதிரவனைக் கண்டு மகிழ்கின்றனர். மனிதர்களே அன்றி பறவைகள் சூரியோதயத்தை வரவேற்று வைகறையில் ஒலிக்கின்றன. செடி கொடிகளும் கதிரவன் ஒளியால் தழைக்கின்றன. உலகில் எல்லா நன்மைகளுக்கும் சூரியன் ஒளியே காரணமாகும். நக்கீரர் கூறுமாறு காண்க.
உலகம் உவப்ப வலன்நேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு.
சூரியன், ஆதித்தன் எனப்படுவான். "அருக்கனில் சோதி அமைத்தவன்" சிவன் என்பதால், சிவனைச் சூரியனிடமாகவும் வைத்து வழிபடுவது மரபு. எனவே, அச் சூரியறது சிறப்பினை, "ஆதித்த நிலை" என்று எடுத்துக் கொண்டு, அதனை நான்கு பகுதியாகப் பிரித்து, முதலில் வானில் விளங்குகின்ற ஆதித்தனை, "அண்ட ஆதித்தன்" என்றும், பிண்டம் என்னும் உடம்பில் உள்ள ஆதித்தனை, "பிண்டாதித்தன்" என்றும்,அவனை மனதில் வைத்து வழிபடுவதால், மனம் ஒளி (தூய்மை) பெறும் என்பதால், "மன ஆதித்தன்" என்றும்,அறிவு நிலையில் விளங்குவதால், "ஞான ஆதித்தன்" என்றும், இப்படி எல்லாமாக விளங்குவது சிவமே என்பதால், "சிவ ஆதித்தன்" என்றும் திருமூலநாயனார் வகுத்துக் காட்டினார்.
பவனி வரும்படி அதனாலே ---
முருகப் பெருமான் உலகில் திருவுலா வருவதால் உலகம் தழைக்கின்றது. திருக்கோயில்களில் இறைவனைத் திருவீதிகளில் திருவுலா வருமாறு செய்வதால் நலன்கள் பல விளைகின்றன. அதனால்தான் ஞானிகளும் மோனிகளும் திருவிழாக் காண்கின்றனர். "மண்ணினில் பிறந்தார் பெறும் பயன்.... கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
பகர வளங்களும் நிகர விளங்கிய---
பகரம் --- அழகு. நிகரம் --- கொடை. முருகன் திருவுலாவினால் அழகும் வளமும் தருமமும் உண்டாகின்றன.
இருளை விடிந்தது நிலவாலே---
அவருடைய திருவடியின் ஒளியினால் ஆணவ இருளும் புறத்தே உள்ள பூ இருளும் நீங்குகின்றன.
வரிசை தரும் பதம்---
எம்பெருமானுடைய திருவடி எல்லா உயர்வுகளையும் தரும். அவருடைய திருவடி தியானத்தின் பயனால் விளைகின்ற நலன்களை இராமலிங்க அடிகள் அழகாகக் கூறுகின்றனர்.
நீர்உண்டு, பொழிகின்ற கார்உண்டு, விளைகின்ற
நிலன்உண்டு, பலனும்உண்டு,
நிதிஉண்டு, துதிஉண்டு, மதிஉண்டு, கதிகொண்ட
நெறி உண்டு, நிலையும் உண்டு,
ஊர்உண்டு, பேர்உண்டு, மணிஉண்டு, பணிஉண்டு,
உடைஉண்டு, கொடையும் உண்டு,
உண்டுஉண்டு மகிழவே உணவு உண்டு, சாந்தம்உறும்
உளம் உண்டு, வளமும் உண்டு,
தேர்உண்டு, கரிஉண்டு, பரிஉண்டு, மற்று உள்ள
செல்வங்கள் யாவும் உண்டு,
தேன்உண்டு வண்டு உறு கடம்பு அணியும் நின்பதத்
தியானம் உண்டாயில் அரசே!
தார்உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!
அதுபாடி வளமொடு செந்தமிழ் உரை செய ---
முருகனுடைய திருவடியைச் செந்தமிழால் வளமுடன் பாடி வழிபடவேண்டும். அவ்வாறு பாடும் பணியை அருணகிரிநாதர் பெற்றனர். அதனை அடிகளே பாராட்டி உரைக்கின்றனர்.
அருணதள பாதபத்மம் அதுநிதமுமே துதிக்க
அரியதமிழ் தான்அளித்த மயில்வீரா... --- (சரணகமலாலய) திருப்புகழ்.
தமிழ் செம்மைப் பண்புடையது. செம்மைப் பண்பைத் தருவது. ஆதலின் செந்தமிழ் என்றனர். மொழிகளுக்குள் முதன்மையானது தமிழ்மொழி. இனிமையானது. ஆதலினால், தமிழால் இறைவனது திருவடி மலரைத் துதிப்பார்க்கு திருவருள் எளிதில் கிடைக்கும்.
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே---
அன்பர்கள் அனைவரும் மகிழுமாறு வரங்களை அருள்வீர் என்று அடிகள் வேண்டுகின்றனர். தன்னலம் கருதாதவர்களே ஆன்றோர் ஆவர். "உலகு இன்புறக் கண்டு காமுறுவது" கற்றார் தொழில். பிறர் மகிழ்ச்சியைத் தமது மகிழ்ச்சியாகக் கொண்டு மகிழ்வர்.
அரஹர---
அரன் - பாவங்களைப் போக்குபவர். அரகர என்று சதா கூறுபவர்களுடைய பாவங்கள் நீங்கும்.
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதிஒன்று அறியாமல்.... --- (கருவினுரு) திருப்புகழ்.
அரகர என்ன அரியது ஒன்று இல்லை;
அரகர என்ன அறிகிலர் மாந்தர்;
அரகர என்ன அமரரும் ஆவர்;
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே. --- திருமந்திரம்.
இத்தகைய சிறந்த அரன் நாமத்தைக் கூறாதவரைப் பற்றி அடிகள் பிறிதொரு திருப்புகழில் கூறுவர்..
அரகர எனா மூடர், திருவெணீறு இடாமூடர், கரைஏற
அறிவுநூல் கலா மூடர்... --- (இரதமான) திருப்புகழ்.
சுந்தர---
சுந்தரம் --- அழகு. முருகு --- அழகு. அழகுடைய தெய்வம் முருகன்.
அறமும் நிறமும் மயிலும் அயிலும்
அழகும்உடைய பெருமாளே. --- (தமருமமரு) திருப்புகழ்.
அறுமுக என்றுனி அடியர் பணிந்திட மகிழ்வோனே---
"உன்னி" என்பது னகரமெய் மறைந்து "உனி" என வந்தது. இறைவனை நெஞ்சார நினைந்து அடியவர்கள் பணிவார். அவ்வாறு பணியும் அடியவரது அன்பைக் கண்டு இறைவன் மகிழ்கின்றான்.
தினத்தினம் சதுர் மறைமுனி முறைகொடு
புனல் சொரிந்தலர் பொதிய வணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ மகிழ்வோனே.
பணிதல் நினைவுடன் கூடியிருத்தல் வேண்டும். நினைவு வேறுபட்ட தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. "நினைவொடு பணிபவர் வினைதுகள் பட" என்பார் கொலுவகுப்பில். நினைப்பது மனத்தின் தொழில். பணிவது காயத்தின் தொழில். உள்ளமும் உடம்பும் ஒருங்கு உட்பட வேண்டும். அறுமுக என்று, என்றதனால் துதிப்பது வாக்கின் தொழில். எனவே, மனம் வாக்கு காயம் என்ற மூன்று கரணங்களாலும் வழிபடவேண்டும்.
கருதரு திண்புய---
முருகனுடைய புயங்கள் ஆற்றல் குடிகொண்டவை. வீரமகள் தழுவிய புயங்கள்.
சீராடும் வீர மாது மருவிய
ஈராறு தோளும்.... --- (சீரானகோல) திருப்புகழ்.
கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி---
மதுரை வளமையான திருத்தலம். செம்பொன் கொழிக்கின்ற நகரம். அடிகள் திருவாக்கினால் இவ்வாறு கூறப்பெற்றதனால், இன்றைக்கும் மதுரை செழித்துக் குன்றா வளத்துடன் திகழ்கின்றது. "தென்னாடுடைய சிவனே போற்றி" என்ற திருவாக்கால் தென்னாடு சிறந்தது. முத்தும் முத்தமிழும் தோன்றியது தென்னாட்டில். தென்றல் பிறந்தது தென்னாட்டில். இத் தென்னாட்டின் தலைநகரம் மதுரை. தடாதகை திருஅவதாரம் செய்ததும், உக்கிரப் பெருவழுதியும் உருத்திரசன்மரும் அவதரித்ததும் மதுரையே. முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த சிவபெருமான்,வந்திக்கு ஆளாக வந்து மதுரை மண்ணைத் தன் தலையில் சுமக்க விரும்பினார் எனின், அம் மண்ணின் பெருமையை அளக்கமுடியாது. அத் தமிழ் மண்ணின் அருமையையும் பெருமையையும் இறைவரே அறிவார்.
சூடகம் முன்கை மடந்தைமார்கள்
துணைவ ரொடும்தொழுது ஏத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. --- திருஞானசம்பந்தர்.
வளர்ந்தருள் பெருமாளே---
"எழுந்தருள் பெருமாள்”, "இருந்தருள் பெருமாள்" என்று கூறாமல், "வளர்ந்தருள் பெருமாள்" என்ற அழகையும் உற்று நோக்குக.
மதுரை மாநகரும் வளர்கின்றது. அதில் வாழும் மக்களும் நன்னெறியில் வளர்கின்றனர். அங்கு செல்வமும் வளர்கின்றது. சிவநெறியும் வளர்கின்றது. இத்தனையும் வளர எம்பெருமானும் வளர்கின்றான்.
இவ்வண்ணம் பாடியருளிய அருணகிரிநாதரை அன்பர்கள் தமது குருமூர்த்தமாக எண்ணி வழிபடவேண்டும்.
கருத்துரை
முருகா! எங்கும் நிறைந்த உமது திருவடியைத் தமிழினால் பாடவும், அன்பர்கள் மகிழவும் அருள் புரிவீர்.
No comments:
Post a Comment