அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இலைச்சுருள் கொடுத்து (தனிச்சயம்)
முருகா!
இந்தப் பிறவி அற அருள்வாய்
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்
கிதத்தபுட் குரற்கள்விட் ...... டநுராகம்
எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்
தெடுத்திதழ்க் கடித்துரத் ...... திடைதாவி
அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்
தலக்கணுற் றுயிர்க்களைத் ...... திடவேதான்
அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்
டயர்க்குமிப் பிறப்பினித் ...... தவிராதோ
கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்
கொடித்திருக் கரத்தபொற் ...... பதிபாடுங்
குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்
குருத்துவத் தெனைப்பணித் ...... தருள்வோனே
தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்
தமிழ்த்ரயத் தகத்தியற் ...... கறிவோதுஞ்
சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்
தனிச்சயத் தினிற்பிளைப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இலைச்சுருள் கொடுத்து, அணைத்தலத்து இருத்தி, மட்டைகட்கு
இதத்த புள்குரல்கள் விட்டு, ...... அநுராகம்
எழுப்பி, மைக் கயல்கணை, கழுத்தை முத்தம் இட்டு அணைத்த்,
எடுத்து, இதழ்க் கடித்து, உரத் ...... திடைதாவி,
அலைச்சல் உற்று, இலச்சை அற்று, அரைப் பை தொட்டு உழைத்து உழைத்து
அலக்கண் உற்று, உயிர்க் களைத்- ...... திடவேதான்
அறத் தவித்து, இளைத்து உற, தனத்தினில் புணர்ச்சிபட்டு,
அயர்க்கும் இப் பிறப்பு இனித் ...... தவிராதோ?
கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்
கொடித் திருக் கரத்த! பொன் ...... பதிபாடும்
குறித்த நல் திருப்புகழ்ப் ப்ரபுத்துவ, கவித்துவ,
குருத்துவத்து எனைப் பணித்து ...... அருள்வோனே!
தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத்
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு ...... அறிஓதும்
சமர்த்தரில் சமர்த்த! பச்சிமத் திசைக்குள் உத்தமத்
தனிச்சயத்தினில் பி(ள்)ளைப் ...... பெருமாளே.
பதவுரை
கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும்--- உயிர்க்கொலை புரிவதில் பெரும் கொள்ளும் அரக்கர்களைக் கலங்கச் செய்வதில்,
மிக்க குக்குடக் கொடித் திருக் கரத்த--- வல்ல சேவல் கொடியைத் திருக்கையில் ஏந்தியவரே!
பொன் பதி பாடும் குறித்த--- அழகிய திருத்தலங்கள் தோறும் சென்று தேவரீரைப் பாடும் நோக்குடன்,
நல் திருப்புகழ்--- நல்ல திருப்புகழில்
ப்ரபுத்துவ--- அதிகாரியாகவும்,
கவித்துவ--- கவி பாடும் திறன் உள்ள,
குருத்துவத்து எனைப் பணித்து அருள்வோனே--- குரு என்னும் நிலையிலும் அடியேனை வைத்துப் பணித்து அருள் புரிந்தவரே!
தலைச் சுமைச் சடைச் சிவற்கு--- தலையில் சுமை போல் திருச்சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும்,
இலக்கணத்து இலக்கியத் தமிழ் த்ரயத்து அகத்தியற்கு--- ... இலக்கணம்,இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும்
அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த--- ஞான உபதேசம் செய்தவல்லவர்க்கு வல்லவரே!
பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில் பி(ள்)ளைப் பெருமாளே--- மேற்குத் திசையிரல் உள்ள உத்தமமான தனிச்சயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனாரின் திருமகன் என்னும் பெருமையில் மிக்கவரே!
இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி--- சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து,
மட்டைகட்கு இதத்த புள் குரல்கள் விட்டு அநுராகம் எழுப்பி--- பயனற்ற முட்டாள்கள் ஆகிய காமுகர்க்கு இதம் தருமாறு, பறவைகளின் குரல்களைத் தொண்டையிலிருந்து வெளிப்படுத்திக் காமப் பற்றை எழுப்பியும்,
மைக் கயல் க(ண்)ணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து எடுத்து--- மை தீட்டப்பட்ட,கயல்மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் இட்டு அணைத்துக் கையால் எடுத்தும்,
இதழ்க் கடித்து--- வாயிதழைக் கடித்தும்,
உரத்து இடை தாவி--- மார்போடு தாவி அணைத்தும்,
அலைச்சல் உற்று--- அலைச்சல் உற்று,
இலச்சை அற்று--- நாணம் அற்று,
அரைப் பை தொட்டு --- அரையிலே உள்ள பெண்குறியைத் தொட்டு,
உழைத்து உழைத்து--- காம லீலைகளில் மிகவும் ஈடுபட்டு,
அலக்கண் உற்று --- துன்பத்தை அடைந்து,
உயிர் களைத்திடவே தான்--- உயிர் களைத்துப் போகும் அளவுக்கு,
அறத் தவித்து --- மிகவும் தவித்து,
இளைத்து உற--- அதனால், உடலும் உள்ளமும் இளைக்கும்படி,
தனத்தினில் புணர்ச்சி பட்டு அயர்க்கும்--- மார்பகங்களைத் தழுவிப் புணர்ச்சியில் ஈடுபட்டுச் சோர்ந்து போகின்ற,
இப் பிறப்பு இனித் தவிராதோ--- இந்த பிறப்பு, இனியாவது நீங்காதோ?
பொழிப்புரை
உயிர்க்கொலை புரிவதில் பெருமை கொள்ளும் அரக்கர்களைக் கலங்கச் செய்வதில் வல்ல சேவல் கொடியைத் திருக்கையில் ஏந்தியவரே!
அழகிய திருத்தலங்கள் தோறும் சென்று தேவரீரைப் பாடும் நோக்குடன், நல்ல திருப்புகழில் அதிகாரியாகவும், கவி பாடுவதில் குரு என்னும் நிலையிலும் அடியேனை வைத்துப் பணித்து அருள் புரிந்தவரே!
தலையில் சுமை போல் திருச்சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும்,இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும் ஞான உபதேசம் செய்தவல்லவர்க்கு எல்லாம் வல்லவரே!
மேற்குத் திசையிரல் உள்ள உத்தமமான தனிச்சயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனாரின் திருமகன் என்னும் பெருமையில் மிக்கவரே!
சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து, பயனற்ற முட்டாள்கள் ஆகிய காமுகர்க்கு இதம் தருமாறு, பறவைகளின் குரல்களைத் தொண்டையிலிருந்து வெளிப்படுத்திக் காமப் பற்றை எழுப்பியும்,மை தீட்டப்பட்ட,கயல்மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் இட்டு அணைத்துக் கையால் எடுத்தும்,வாயிதழைக் கடித்தும், மார்போடு தாவி அணைத்தும், அலைச்சல் உற்று, நாணம் அற்று,அரையிலே உள்ள பெண்குறியைத் தொட்டு, காம லீலைகளில் மிகவும் ஈடுபட்டு, துன்பத்தை அடைந்து,உயிர் களைத்துப் போகும் அளவுக்கு மிகவும் தவித்து,அதனால், உடலும் உள்ளமும் இளைக்கும்படி ,மார்பகங்களைத் தழுவிப் புணர்ச்சியில் ஈடுபட்டுச் சோர்ந்து போகின்ற, இந்த பிறப்பு, இனியாவது நீங்காதோ?
விரிவுரை
இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி---
தாம்பூலத்தை வாயில் கொடுத்து, தம்மிடத்து வந்த காமுகரைப் படுக்கையில் இருக்க வைப்பர் விலைமாதர். தாம்பூலத்தைத் தமது வாயில் இட்டு, சிறிது மென்றும், வந்தவரின் வாயோடு, தமது வாயை வைத்துக் கொடுப்பர்.
மட்டைகட்கு இதத்த புள் குரல்கள் விட்டு அநுராகம் எழுப்பி---
மட்டை --- மூடன், பயனற்றவன்.
தம்மிடத்து வந்த மூடர்கள் ஆகிய காமுகர்க்கு, இதம் தருமாறு, தமது தொண்டையில் இருந்து விதவிதமான பறைவைகளில் குரலை எடுத்துக் கொஞ்சி, காமப் பற்று மிகுமாறு செய்வர்.
"மயில்காடை
கோகில நல்புற வத்தொடு குக்குட
ஆரணியப் புள் வகைக்குரல் கற்று,இகல்
கோல விழிக்கடை இட்டு மருட்டிகள்",
உரத்து இடை தாவி---
உரம் --- மார்பு. மார்போடு தழுவி அணைப்பர்.
இலச்சை அற்று---
இலச்சை --- நாணம், கூச்சம்.
அரைப் பை தொட்டு ---
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ,
கருத்து அறிந்து, பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும், அங்கு உள அரசஇலை தடவியும்,...... இருதோள் உற்று,
அணைத்தும்,அங்கையின் அடிதொறும் நகம்எழ,
உதட்டை மென்று, பல் இடு குறிகளும் இட,
அடிக் களம் தனில் மயில்குயில் புறவு என ......மிக,வாய்விட்டு,
உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய,
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உற, கையின் கனி நிகர் என இலகிய ......முலைமேல் வீழ்ந்து,
உருக் கலங்கி, மெய் உருகிட, அமுது உகு
பெருத்த உந்தியின் முழுகி, மெய் உணர்வு அற,
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ?
அலக்கண் உற்று ---
அலக்கண் --- துன்பம்.
பொன் பதி பாடும் குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ குருத்துவத்து எனைப் பணித்து அருள்வோனே---
பொன் பதி --- அழகிய திருத்தலங்கள்.
திருப்புகழைப் பாடுவதில் அதிகாரியாகவும், கவித்திறன் மிக்கவராகவும், எல்லோருக்கும் நல்வழி காட்டும் குருவாகவும் திகழும்படி, அருணகிரிநாதருக்கு அருள் புரிந்து, திருப்புகழை உலகமக்கள் உய்யும்படி பாடி அருளச் செய்தவன் முருகப் பெருமான். இதை அருணகிரிநாதப் பெருமானே தனது வாக்கால் காட்டி உள்ளார்.
"உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே". --- (முத்தைத் தரு) திருப்புகழ்.
பத்தர் கண ப்ரிய! நிர்த்தம் நடித்திடு
பட்சி நடத்திய ...... குக! பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள
பத்தர்கள் அற்புதம் ...... எனஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த, தி-
ருப்புகழைச் சிறிது ...... அடியேனும்
செப்ப என வைத்து, உலகிற் பரவ, தெரி-
சித்த அநுக்ரகம் ...... மறவேனே. --- திருப்புகழ்.
தலைச் சுமைச் சடைச் சிவற்கு அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த ---
மனத்தாலும் சொல்லாலும் உணரவொண்ணாத பிரணவத்தின் பெருமையை, சனகாதி முனிவர்களுக்கு, கல்லால மலத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, சொல்ல அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தி, சொரூப அனுபூதி காட்டி அருளியவர் சிவபெருமான். அது சொல்லாமல் சொன்ன நிலை.
கல்லாலின் புடை அமர்ந்து, நான்மறை, ஆறு
அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது,சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வணங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுக வள்ளல் சிறைப்படுத்தி,முத்தொழிலும் புரிந்து,தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.
பின்னர் ஒருகால் கந்தமாதன கிரியின் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள்,தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார் மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து,அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,
“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையான் ஆதல், உரிமைக் குறித்து ஆதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் பிரமதேவனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.
எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவன் ஆவது எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.
சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.
கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர்.
குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசம் எல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால்,அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.
கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற,கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி,வடதிசை நோக்கி நின்று,பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து,பிரணவ உபதேசம் பெற்றனர்.
எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு,தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க,அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக,உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.
சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா... --- திருப்புகழ்.
அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.
உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான். --- தணிகைப் புராணம்.
மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
தவளத்த நீறு அணியும் தடம்தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார்கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.
என வருவதும் அறிக.
`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
இலக்கணத்து இலக்கியத் தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த---
தமிழ்த் திரயம் --- முத்தமிழ்.
மலையரசனாகிய இமவானுக்கு,அவன் செய்த தவம் காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச் சிவபெருமான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, இமயமலையில் எழுந்தருளிய போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, எப்புவனத்திலும் உள்ள யாவரும் வந்து கூடினமையால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள் முதல் அனைவரும் ஏங்கி, சிவனை நோக்கி ஓலமிட்டார்கள். சிவபெருமான் அது கண்டு,திருமுறுவல் செய்து, அவர்களது குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை நோக்கி “முனிவனே! இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது. இதனால், உயிர்கள் மிகவும் வருந்துகின்றன. ஆதலால்,நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டில் சென்று பொதியை மலையின்மேல் இருக்கக் கடவாய்; உன்னைத் தவிர இதனைச் செய்ய வல்லவர் வேறு யார் உளர்! நீ ஒருவன் பொதியை மலையைச் சென்று சேர்ந்தால் பூமி சமனாகும்!” என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, “பரம கருணாநிதியாகிய பரமபதியே! அடியேன் யாது குற்றம் செய்தேன்? தேவரீரது திருமணக் கோலத்தைக் காணவொட்டாமல் கொடியேனை விலக்குகின்றீர்; எந்தையே! திருமால் இருக்க, திசைமுகன் முதலிய தேவர்கள் இருக்க, எளியேனை விலக்குவது யாது காரணம்? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள் உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் திருமாலும் உனக்கு நிகராகார்; ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லவன். இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும் முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்திய முனிவர், "பரமபிதாவே! தங்களுடைய திருமணக் கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, திருக் கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலை கொள்ளாமல்,பொதியமலைக்குச் செல்வாய். நாம் அங்கு வந்து நமது திருமணக் கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து தரிசிக்கலாம். நீ நம்மைத் தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில் வருவாயாக” என்று அருளிச் செய்தார்.
அத்தகைய அகத்திய முனிவர்,ஒருகாலத்தில் சிவபெருமானுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிச், "செந்தமிழ் மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகை மலைக்குச் சென்று முருகனை நோக்கித் தவம் செய்வாயாக. அவ்வாறு செய்யின் உன்னுடைய எண்ணம் நிறைவேறும். அத்தணிகைக்குப் போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும், அவ்வூர்ப் பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப் பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும்.அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களையெல்லாம் போக்குவதன்றிப் பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும் ஒழிக்கும்; மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும் ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச் செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் எய்தற்கு எண்ணினாலும் மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளை எல்லாம் அத்திருத்த நீராடலால் அடையலாம். அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை என்று ஒருகாற் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும் துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத் தணிகைமலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட் பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப் பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை அடைவதற்குக் காலத்தினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த தணிகை மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க்குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ,தொழின்முறைகளாலோ தணிகைக்குச் சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்தை அடைந்து இன்புறுவார்கள். தணிகைப்பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும். அப்பதியில் முருகக் கடவுள் இச்சை, ஞானம், கிரியை என்னும் மூன்று சத்திகளும் மூன்று இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி,ஞான சத்திதரன் என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள் அம்முருகப் பெருமானேயாவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.
இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக்கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு வந்தார். நந்தியாற்றில் நீராடினார். வீராட்டகாசத்தையும் முருகக் கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பல நாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர் முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம் உரைத்தருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார்.
என்று, சூர் உயிரைக் குடிக்கும் வேல்இறைவன்
இயம்பிய ஞானமுற்றும் உணர்ந்து,
நன்றுவீறு அன்பில் பன்முறை தாழ்ந்து,
நளினம் ஒத்து அலர்ந்ததாள் நீழல்
ஒன்றியாங்கு அடித்தொண்டு உஞற்றினன்,பன்னாள்
உறைந்து, பின் ஆரியன் அருளால்
மன்றல்சூழ் பொதியம் அடுத்து முத்தமிழை
வளர்த்து வாழ்ந்து இருந்தனன் முனிவன்.
அகத்திய முனிவருக்கு, முருகப்பெருமான் அருள் புரிந்த வரலாற்றை, தணிகைப் புராணத்தில் காணலாம்.
"குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த
குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே" --- திருப்புகழ்.
சிவனை நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ,இரு
செவிகுளிர,இனியதமிழ் ...... பகர்வோனே! --- திருப்புகழ்.
தென்றல்வரை முநி நாதர்,அன்று
கும்பிட, நல் அருளே பொழிந்த
தென்பழநி மலைமேல் உகந்த ...... பெருமாளே.
துட்ட நிக்ரக சத்தி தர! ப்ரபல
ப்ரசித்தல! சமர்த்த! தமிழ் த்ரய
துட்கரக் கவிதைப் புகலிக்கு அரசு ......எனும் நாமச்
சொற்கம் நிற்க சொல் லட்சண தட்சண
குத்தரத்தில் அகத்தியனுக்கு அருள்
சொல் குருத்வ மகத்துவ சத்வ சண் ...... முகநாத!
பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில் பி(ள்)ளைப் பெருமாளே---
பச்சிமத் திசை --- மேற்குத் திசை. தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது. பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
கருத்துரை
முருகா! இந்தப் பிறவி அற அருள்வாய்
No comments:
Post a Comment