அறிவு உடையார் எல்லாம் உடையார்.

 


அறிவு உடையார் எல்லாம் உடையார்

அறிவு உடையார் ஆவது அறிவார்

-----

 

     ஓர் அறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிர்களுக்கு, அவற்றின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவே இயல்பாக அமைந்து உள்ளது. ஓரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிர்கள், தமது நலம் ஒன்றையே கருதி, பிற உயிர்களை வஞ்சிப்பது இல்லை. பொறாமை கொள்ளுவது இல்லை. அறிவு நலங்களோடு, பண்பு நலங்களும் மிக்கது மனித இனமே ஆகும். நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து, தீமையை விலக்கி, நன்மையேத் தேக்கி வாழ்வதே மனிதப் பண்பு. அறிவோடு கூடிய பண்புகளால் மேம்பாடு அடைவது மனித இனம்.

 

     நன்மையைச் செய்வதற்கு மட்டும் அல்ல. தீமையைச் செய்வதற்கும் அறிவு வேண்டப்படுகின்றது. தீய பண்புகள் நிறையப் பெற்றால், தீய செயல்களில் நாட்டம் உண்டாகின்றது. நற்பண்புகள் அமையப் பெறாத இவரை நோக்கி, அறிவற்றவர், மடையர், மூடர், முரடர் என்றெல்லாம் சொல்வதை வைத்தே அவர்கள் பண்பு நலங்கள் வாய்க்கப் பெறாதவர் என்பது தெரியவரும். அறிவோடு பண்பு நலங்களும் வாய்க்கப் பெற்றவர்கள் மிக உயர்வாகப் போற்றப் பெறுகின்றார்கள். இவர்களை மற்றவர்கள் பின்பற்றி வாழ்ந்து உயர்நிலையை அடைகின்றார்கள்.

 

     அறிவு என்பது என்ன?திருவள்ளுவ நாயனார் விடை தருகின்றார். 

 

"சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ 

நன்றின்பால் உய்ப்பது அறிவு". 

 

     மனத்தை, அது சென்ற இடங்களிலேயே (பொறிவழியே) செல்லவிடாமல்தீமைகளிலிருந்து விலக்கிநன்மையில் மட்டுமே செல்ல விடுவது அறிவு ஆகும்.

 

     ஒருவரிடத்தில் புறத்தே வேறு எந்தப் பொருளும் இல்லையானாலும,அகத்தே அறிவு உள்ளவர், எல்லாச் செல்வங்களையும் ஒருங்கே பெற்றவர் ஆவார். உள்ளத்தில் அறிவு இல்லாதவர், உலகத்தில் எவ்வளவு செல்வங்களை அடைந்து இருந்தாலும், ஏதும் இல்லாதவராகவே அவர் கருதப்படுவார் என்று, அறிவின் பெருமையை அழகாகத் திருவள்ளுவர் விளக்கி உள்ளார்.

 

"அறிவு உடையார் எல்லாம் உடையார், அறிவிலார்

என் உடையர் ஏனும் இலர்."

 

     தீமைகளை விலக்கி, நன்மைகளையே செய்வதால், புண்ணியமும், பொருளும், புகழும் முதலிய உயர்நலங்கள் எல்லாம் விளைங்குவதால், அறிவு தெய்வீகமானதாகவும் போற்றப்படுகின்றது.

 

     பட்டை தீட்டப்பட்ட மணிக்குத் தான் பெருமை உண்டு. விலை மதிப்பு உண்டு. தாதுப் பொருளாக (ORE) உள்ள வரையில் பெருமை இல்லை. பட்டை தீட்டப்பட்ட மணிக்கு, அதன் ஒளி பெருமையைத் தருவது போல,மனிதனுக்கு அறிவு பெருமையைத் தருகின்றது. ஒளி இல்லாத மணி, இகழப்படுவது போலஅறிவு இல்லாதவன் இகழப்படுவான். அறிவு குறையக் குறையமனிதனிடத்தில் அவலம் மிகுந்து இருக்கும். உடலுக்கு ஆடை போல, உயிருக்கு அறிவு இன்றியமையாதது. ஆடை இல்லாமல், வெற்று உடம்பினை மீது அணிகலன்களை மட்டும் அணிந்து கொள்வது இகழ்ச்சிக்கு உரியது ஆகும். அதுபோல,அறிவு இல்லாமல், வேறு எவ்வளவு செல்வங்களை ஒருவன் பெற்று இருந்தாலும், அவற்றால் மதிக்கப்படுவது இல்லை.

 

"அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்,

பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்

மணி பொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணி எல்லாம் ஆடையின் பின்".

 

என்கின்றது "பழமொழி நானூறு" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

     அறிவினால் வந்த பெருமைகளே பெருமைகள் ஆகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாக எப்படி மதிக்கப் பெறுவான்? பொலிவு மிக்க இரத்தின ஆணிகலன்களும், பொன்னால் ஆன அணிகலன்களும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணிவகைகள் எல்லாம், ஒருவன் உடுத்துகின்ற ஆடைக்குப் பின்னரே மதிப்புப் பெறும். ஆடை இல்லாமல் ஒருவனுக்கு இவைகள் அழகு செய்வது இல்லை.

 

     பிற அணிகலன்கள் நிறைய இருந்தாலும், ஆடையே ஒருவனுக்கு முதன்மையானது. அதுபோல,பிற செல்வங்கள் நிறையப் பெற்று இருந்தாலும், அறிவு உடையவரே சிறந்தவர் ஆவார்.

 

     எதை எதையோ படித்துவிட்டு, தம்மைப் பெரிய அறிவாளிகளாக மதித்துக் கொள்பவர்கள், திருவள்ளுவர் குறித்ததைக் கூர்ந்து நோக்கி, உண்மையை ஓர்ந்து, உணர்ந்து கொள்ளவேண்டும். நூலறிவு நுண்ணறிவாகப் பரிமளிக்க வேண்டும்.

 

     நுண்ணிய அறிவு இல்லாது இருப்பது, ஒரு வகையில் வறுமை உற்று இருப்பதைப் பொன்றதே ஆகும். நுண்ணிய அறிவுத் திறம் பெற்று இருப்பது, பெரிய செல்வச் செழிப்பைப் பெற்று இருப்பது போல் ஆகும். என்னதான், பெண்ளுக்கு உரிய அணிமணிகளை அணிந்துகொண்டாலும், பேடி, தான் விரும்பிய பெண் தன்மையை அடைய முடியாது. அதுபோலத் தான், மனிதர்க்கு அழகு, கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கற்பதோடு நின்றுவிடாமல், கற்றதை உணர்ந்து ஒழுகுதல் வேண்டும் என்கின்றது "நாலடியார்".

 

நுண்ணுணர்வு இன்மை வறுமைஅஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்

பெண் அவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்.              --- நாலடியார்.        

 

     எதை அடைந்தால் எல்லாம் அடைந்ததாக ஆகுமோ, அதை அடைந்து கொள்ளுவதே அறிவுடைமை ஆகும். "தன்னை அறிவது அறிவு, பின்னை அறிவது பேயறிவு" என்றார் திருமூல நாயனார்.

 

     அறிவு, இயற்கை செயற்கை என இருவகை நிலையில் அமைந்தது. பிறப்பால் இயல்பாக உள்ள அறிவு இயற்கை அறிவு. கல்வி கேள்விகளால், இயற்கை அறிவில் இயல்பாகவே உள்ள ஈனங்கள் நீங்கும். உண்மை அறிவு விளங்கும். இயற்கை அறிவு குட்டையில் உள்ள நீர்போல் உள்ளது. செயற்கை அறிவு வானத்து மழைபோல் வந்து, குட்டையில் உள்ள நீரின் தன்மையை மேம்படச் செய்யும். இயற்கையாகக் கிடைக்கும் மணியானது, அறிவு உடைய ஒருவனால் பட்டை தீட்டப்பட்டால் ஒளி பெற்று, சிறப்படையும். அதுபோல,இயற்கையாக ஒருவனுக்கு உள்ள அறிவானது, கல்வி கேள்விகளால் மேம்பட்டு விளங்கும். அவ்வாறு மேம்பட்ட அறிவானது, ஆவதை அறியும் வல்லமை பெறும்.

 

     "அறிவுடையார் ஆவது அறிவார்அறிவிலார் அஃது அறிகல்லாதவர் என்றார் திருவள்ளுவ நாயனார். இதற்கு விளக்கமாபிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளியநீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சீதரனைப் பார்த்தன்அன்று சேர்ந்தான்,அரவு உயர்த்தோன்

யாதவரைச் சேர்ந்தான்,இரங்கேசா! --- ஓதில்

அறிவுஉடையார் ஆவது அறிவார்,அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர்.               

 

இதன் பொருள் ---

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! அன்று --- பாரதப் போருக்கு முன்புசீதரனை --- சீதேவி மணாளனாகிய கண்ணனைபார்த்தன் சேர்ந்தான் --- (படைத் துணைவனாகப் பெற்றுஅவனோடு) அருச்சுனன் சேர்ந்து கொண்டான். அரவு உயர்த்தோன் --- பாம்புக் கொடியோன் ஆகிய துரியோதனன்யாதவரைச் சேர்ந்தான் --- (கண்ணபிரானுடைய சேனா வீரர்களாகிய) யாதவரைப் படைத் துணைவராகப் பெற்றுஅவர்களோடு சேர்ந்துகொண்டான். (ஆகையால்இது) ஓதில் --- சொன்னால்ஆவது அறிவார் அறிவு உடையார் --- இனி வரும் காரியத்தை அறிய வல்லவர் அறிவு உடையவர் ஆவார்அஃது அறிகல்லாதவர் அறிவு இலார் --- அதை அறிய மாட்டாதவர் அறிவில்லாதவர் ஆவர் (என்பதை விளக்குகின்றது).

 

            ஆவது அறியான் அறிவிலான். முன்பின் அறியாதவன் மூடன்.

 

            பாரதப் போருக்கு சற்று முந்திதுரியோதனனும் அருச்சுனனும் கண்ணன் படைத் துணையை நாடிச் சென்றார்கள். அப்போது கண்ணன் அவர்களை நோக்கி, "போரில் நான் ஆயுதம் எடுக்க மாட்டேன்நிராயுதபாணியாகிய நான் வேண்டுமாஆயுத வீரர்களாகிய எனது சேனை வேண்டுமா?" என்றான். உடனே,அருச்சுனன், "நிராயுதபாணியானாலும் நீயே எனக்கு வேண்டும்" என்று கண்ணனோடு சேர்ந்து கொண்டான். துரியோதனன், "நிராயுதபாணியால் பலனில்லைஆயுதபாணிகளாகிய யாதவ வீரரே வேண்டும்" என்று அவர்களோடு கூடிக் கொண்டான். பிறகு யார் வென்றதுயார் தோற்றது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. அருச்சுனன் அறிவு உடையான். ஆகையால்இனி ஆவது அறிந்த கண்ணனோடு சேர்ந்துகொண்டான். துரியோதனன் அறிவிலான். ஆகையால்இனி ஆவது அறியாமல், யாதவ வீரரோடு கூடிக்கொண்டு தோற்று மடிந்தான்.

 

      பின்னால் விளையப் போவதை முன் கூட்டியே, காரிய காரண இயைபு பற்றி உய்த்து உணர்பவரே "அறிவுடையார்"எனப்படுவார். அவ்வாறு அறியமாட்டாதவர் அறிவில்லாதர் ஆவர். அறிவால் இன்பம் வருதலும்அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே,பின்னால் விளையப் போவதை முன்கூட்டி அறிந்து, வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள், பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்து அல்லல் படும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள், தன்னை யார் என்று அறிந்து, பின்னர் தனது தலைவனான இறைவனது அறிந்து, அவனது திருவருளிலே சென்று பொருந்தி இருந்து, அருளைப் பெற்று, முத்தி இன்பத்தை அனுபவிக்கும்.

 

ஆவது அறியா உயிர் பிறப்பால் உறும்,

ஆவது அறியும் உயிர் அருட்பால் உறும்,

ஆவது ஒன்று இல்லை அகப்புறத்து என்று அகன்று

ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே       

 

என்பது திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.

 

அறிவுக்கு அழிவு இல்லை; ஆக்கமும் இல்லை; 

அறிவிக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை; 

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு 

அறைகின்றன மறை ஈறுகள் தாமே. 

 

என்று அறிவின் மாண்பு குறித்து திருமூல நாயனார் இவ்வாறு அருளிச் செய்கின்றார்.

 

     அறிவு என்பது ஒரு பருப்பொருள் அல்ல. பருப்பொருள் எதுவும் அழிந்து போகும். அறிவு என்பது ஒரு பண்பு ஆகும். அது உயிருக்கு உள்ளது. உடம்புக்கு உள்ளது அல்ல. எனவே, அறிவுக்கு அழிவு கிடையாது. அறிவை யாரும் தோற்றுவிக்கவும் முடியாது என்பதால், அதற்கு ஆக்கம் இல்லை. அறிவு ஆக்கப்படுவது இல்லை. உயிர் அறிவு என்பது உயிருக்கு, கண்ணாடியில் படிந்துள்ள தூசியைப் போன்றும், ஆடையில் படிந்துள்ள அழுக்குப் போன்றும் விளங்காமல் உள்ளது. அதை விளங்கச் செய்தல் வேண்டும். அதற்கு ஒரு துணை வேண்டும். எனவே, அறிவுக்கு அறிவுதான் ஆதாரமாக இருக்கமுடியும். அது நிறை அறிவாக இருக்கவேண்டும். அது பேரறிவு, முற்றறிவு என்று சொல்லப்படும். அறிவு நிரம்பிய ஆசிரியரால் தான், அறிவு இல்லாத ஒருவனுக்கு அறிவை விளங்கச் செய்ய முடியும். அறிவு உள்ள ஒன்றுதான், அறிவு உள்ள வேறு ஒன்றை அறிந்துகொள்ள முடியும். எனவே, அறிவே அறிவை அறியும் என்று வேதங்களும், வேதமுடிவாக உள்ள உபநிடதங்களும் கூறுகின்றன என்று தெளிவிக்கின்றார் திருமூல நாயனார். அறிவு சிறிதும் இல்லாத ஒரு பைத்தியத்துக்கு, நூல்களைக் கற்கவும் முடியாது. கற்துபிக்கவும் முடியாது.  அறிவு விளக்கமும் பெறுவதில்லை.

 

     உயிருக்குத் தோற்றமும் இல்லை. அழிவும் இல்லை. உயிர்களுக்கு உடம்பதான் படைத்து அளிக்கப்படுகின்றது. இறைவனும் தோற்றமும் அழிவும் இல்லாதவன். உயிர் சிற்றறிவு படைத்தது. இறைவன் முற்றறிவு படைத்தவன். நன்றாக எரிந்துகொண்டு இருக்கின்ற விளக்கினைக் கொண்டு, இன்னொரு விளக்கினை ஏற்றுவது போல,சிற்றறிவு படைத்த உயிரானது, முற்றறிவு உள்ள பரம்பொருளால், சிறிது சிறிதாக அளிவு விளக்கம் பெறுகின்றது.

 

     எனவே, அறிவு உடையவர் எல்லா நலங்களையும் ஒருங்கே உடையவர் ஆவார். அவர் ஆவதை அறிந்து ஒழுகுவார். அறிவில்லாதவர்க்கு வேறு எந்த நலங்கள் வாய்த்து இருந்தாலும் அவற்றால் பயனில்லை. அவரால், ஆகப் போவதை அறிந்து கொள்ள முடியாது என்பதை திருவள்ளுவ நாயனாரும், திருமூல நாயனாரும் கூறியருளியதை அறிந்து பயன் பெறுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...