மதுரை --- 0964. அலகில் அவணரை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

அலகுஇல் அவுணரை (மதுரை)

 

முருகா! 

உம்மையே நினைந்து உருகும் அன்பை 

அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.

 

 

தனதன தனனத் தந்த தானன

     தனதன தனனத் தந்த தானன

     தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான

 

 

அலகில வுணரைக் கொன்ற தோளென

     மலைதொளை யுருவச் சென்ற வேலென

     அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக

 

அடியென முடியிற் கொண்ட கூதள

     மெனவன சரியைக் கொண்ட மார்பென

     அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ

 

கலகல கலெனக் கண்ட பேரொடு

     சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்

 

கலைகளு மொழியப் பஞ்ச பூதமு

    மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன

     கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்

 

இலகுக டலைகற் கண்டு தேனொடு

     மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்

     இனிமையி னுகருற் றெம்பி ரானொரு .......கொம்பினாலே

 

எழுதென மொழியப் பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ

 

வலம்வரு மளவிற் சண்ட மாருத

     விசையினும் விசையுற் றெண்டி சாமுக

     மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு

 

மரகத கலபச் செம்புள் வாகன

     மிசைவரு முருகச் சிம்பு ளேயென

     மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

அலகுஇல் அவுணரைக் கொன்ற தோள் என,

     மலைதொளை உருவச் சென்ற வேல் என,

     அழகிய கனகத் தண்டை சூழ்வன,...... புண்டரீக

 

அடி என,முடியில் கொண்ட கூதளம்

     எனவன சரியைக் கொண்ட மார்பு என,

     அறுமுகம் எனநெக்கு என்பு எலாம் உருகு......அன்பு உறாதோ?

 

கலகல கல என,கண்ட பேரொடு

     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்

     கதறிய,வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,

 

கலைகளும் ஒழிய,பஞ்ச பூதமும்

     ஒழி உற,மொழியில் துஞ்சு உறாதன

     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்?

 

இலகு கடலை கல்கண்டு,தேனொடும்,

     இரதம் உறு தினைப் பிண்டி,பாகுடன்,

     இனிமையின் நுகருற்றம் பிரான்ரு .......கொம்பினாலே

 

எழுது என மொழிய,பண்டு பாரதம்

     வடகன சிகரச் செம்பொன் மேருவில்

     எழுதிய பவளக் குன்று,தாதையை ...... அன்றுசூழ

 

வலம்வரும் அளவில்,சண்ட மாருத

     விசையினும் விசை உற்றுண் திசாமுக

     மகிதலம் அடையக் கண்டு,மாசுணம் ......உண்டு உலாவு

 

மரகத கலபச் செம்புள் வாகனம்

     மிசைவரு முருக! சிம்புளே! என

     மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு...... தம்பிரானே.

 

பதவுரை

 

            இலகு கடலை கல்கண்டு தேனொடும்--- நல்ல கடலைகற்கண்டுதேன் ஆகியவற்றோடு, 

 

            இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன்--- இனிமையான தினை மாவுசர்க்கரைப் பாகு முதலியவற்றைக் கலந்து

 

            இனிமையில் நுகர் உற்ற எம்பிரான்--- மகிழ்ச்சியுடன் உண்ணுகின்றவர் ஆகிய விநாயகப் பெருமான் ஆகிய மூத்த பிள்ளையார்,

 

            ஒரு கொம்பினாலே எழுது என மொழிய --- ஒப்பற்ற (தனது தந்தம் என்னும் ஒரு) கொம்பால் வியாசர் எழுதும்படி வேண்டிக்கொள்ள

 

            பண்டு பாரதம்--- முன்னாளில்பாரதமாகிய பெருங்கதையை

 

            வட கன சிகர--- வடதிசையில் மேன்மையுடன் திகழும் சிகரத்துடன் விளங்கி, 

 

            செம் பொன் மேருவில் எழுதிய பவளக் குன்று--- சிவந்த பொன்னிறம் பொருந்திய மேருமலையில் இருந்து எழுதியருளிய பவளக்குன்று போன்றவராகிய விநாயகப் பெருமான்,

            தாதையை அன்று சூழ வலம் வரும் அளவில்--- அந்நாளில் தனது தந்தையாராகிய சிவபெருமானை வலம் வரும் அந்த நேரத்திற்குள்ளாக,

            சண்ட மாருத விசையினும் விசையுற்று--- சூறாவளியின் வேகத்திலும் வேகமாக 

 

            எண் திசா முக மகிதலம் அடையக் கண்டு--- எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்துக்கொண்டு,

 

            மாசுணம் உண்டு உலாவு --- மாசுணம் என்னும் பெரும்பாம்பை உண்டு உலாவுகின்றதும்,

 

            மரகத கலபச் செம் புள் வாகன மிசை வரு முருக--- மரகதம் போன்ற பச்சைத் தோகையைக் கொண்டதும்செம்மைப் பண்புடைய மயில்வாகனத்தின் மீது வருகின்ற முருகவேளாகிய

 

            சிம்புளே என--- சரபமே என்று புகழ்ந்து,

 

            மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே--- தேவர்கள் மதுரையம்பதியில் வழிபட்டு தொழுகின்ற தனிப்பெரும் தலைவரே!

 

            கல கல கல என--- கலகலகல என்ற ஆரவாரத்துடன்

 

            கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க வாதிகள்--- எதிர்ப்பட்டவர்களுடன் எல்லாம் வாதிடும்படியான குற்றத்தினை உடைய சமயவாதிகள்

 

            கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும்--- உரக்கக் கத்திக் கூறிய பல சொற்களுடன் கூடிய குறைவும் ஆரவாரமும் நிரம்பிய

 

            கலைகளும் ஒழிய--- பொய்ச் சாத்திர நூல்கள் ஒழியவும்,

 

            பஞ்ச பூதமும் ஒழி உற---  ஐம்பெரும் பூதங்கள் ஒழியவும்,

 

            மொழியின் துஞ்சு உறாதன கரணமும் ஒழிய--- வெறும் சொற்களில் அடங்காதவையாகிய கரண வாதனைகள் ஒழியவும்,

 

            தந்த ஞானம் இருந்தவாறு என்?--- தேவரீர் எனக்கு உபதேசித்து அருளிய ஞானப் பொருளின் இன்பம் இருந்தவாறு கூறும் தரத்ததோ?

 

            அலகு இல் அவுணரை கொன்ற தோள் என--- கணக்கில்லாத அசுரர்களைக் கொன்று அழித்த திருத்தோள்கள் என்றும்,

 

            மலை தொளை உருவச் சென்ற வேல் என--- கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற வேலாயுதம் என்றும்,

 

            அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக அடி என--- அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரை போன்ற திருவடிகள் என்றும்,

 

            முடியில் கொண்ட கூதளம் என--- திருமுடியில் தரித்த வெண்கூதாள மலர் என்றும்,

 

            வன சரியைக் கொண்ட மார்பு என--- வனத்தில் வாழ்ந்திருந்த வேட்டுவச்சியான வள்ளியம்மையாரைத் தழுவும் திருமார்பு எனவும்,

 

            அறுமுகம் என--- ஆறு திருமுகங்கள் என்றும் துதித்துத் துதித்து,

 

            நெக்கு என்பு எலாம் உருக அன்பு உறாதோ --- எலும்புகள் எல்லாம் நெகிழ்ந்து உருகும்படியான அன்பு வந்து எனக்குப் பொருந்தாதோ?

            

பொழிப்புரை

 

            நல்ல கடலைகற்கண்டுதேன் ஆகியவற்றோடு, இனிமையான தினை மாவுசர்க்கரைப் பாகு முதலியவற்றைக் கலந்துமகிழ்ச்சியுடன் உண்ணுகின்றவர் ஆகிய விநாயகப் பெருமான் ஆகிய மூத்த பிள்ளையார்,ஒப்பற்ற தனது தந்தம் என்னும் ஒரு கொம்பால் வியாசர் எழுதும்படி வேண்டிக்கொள்ள,  முன்னாளில்பாரதமாகிய பெருங்கதையைவடதிசையில் மேன்மையுடன் திகழும் சிகரத்துடன் விளங்கி, சிவந்த பொன்னிறம் பொருந்தி இருந்த மேருமலையில் இருந்து எழுதியருளிய பவளக்குன்று போன்றவராகிய விநாயகப் பெருமான்அந்நாளில் தனது தந்தையாராகிய சிவபெருமானை வலம் வரும் அந்த நேரத்திற்குள்ளாகசூறாவளியின் வேகத்திலும் வேகமாக  எட்டு திசைகளிலும் பரவியுள்ள உலகங்கள் முழுவதையும் பார்த்துக்கொண்டுமாசுணம் என்னும் பெரும்பாம்பை உண்டு உலாவுகின்றதும்மரகதம் போன்ற பச்சைத் தோகையைக் கொண்டதும்செம்மைப் பண்புடைய மயில்வாகனத்தின் மீது வருகின்ற முருகவேளாகியசரபமே என்று புகழ்ந்துதேவர்கள் மதுரையம்பதியில் வழிபட்டு தொழுகின்ற தனிப்பெரும் தலைவரே!

 

            கலகலகல என்ற ஆரவாரத்துடன்,எதிர்ப்பட்டவர்களுடன் எல்லாம் வாதிடும்படியான குற்றத்தினை உடைய சமயவாதிகள் உரக்கக் கத்திப் பேசுகின்ற பல சொற்களுடன் கூடிய குறைவும் ஆரவாரமும் நிரம்பியபொய்ச் சாத்திர நூல்கள் ஒழியவும்ஐம்பெரும் பூதங்கள் ஒழியவும்வெறும் சொற்களில் அடங்காதவையாகிய கரண வாதனைகள் ஒழியவும்தேவரீர் எனக்கு உபதேசித்து அருளிய ஞானப் பொருளின் இன்பம் இருந்தவாறு கூறும் தரத்ததோ?

 

            கணக்கில்லாத அசுரர்களைக் கொன்று அழித்த திருத்தோள்களைக் கொண்ட பெருமான் என்றும்,கிரெளஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற வேலாயுதம் தரித்த பெருமான் என்றும்,அழகிய பொன்னாலாகிய தண்டைகள் சூழ்ந்துள்ள தாமரை போன்ற திருவடிகள் என்றும்திருமுடியில் தரித்த வெண்கூதாள மலர் தரித்த பெருமான் என்றும்வனத்தில் வாழ்ந்திருந்த வேட்டுவச்சியான வள்ளியம்மையாரைத் தழுவும் திருமார்பர் எனவும்ஆறு திருமுகங்களையும் என்றும் துதித்துத் துதித்துஎலும்புகள் எல்லாம் நெகிழ்ந்து உருகும்படியான அன்பு வந்து எனக்குப் பொருந்தாதோ?

 

விரிவுரை

 

அலகு இல் அவுணரைக் கொன்ற தோள் என ---

 

சூராதி அவுணர்கள் தோன்றும்போது மாயையின் வேர்வையில் தோன்றிய அவுணசேனை 200ஆயிரம் வெள்ளம். சிவபெருமான் அவன் தவத்திற்கு இரங்கி 1008அண்டங்களையும், 108யுக ஆயுளைத் தந்துஆயிரம் கோடி வெள்ளம் அவுண சேனைகளைத் தந்தனர். 108யுகங்கள் வரை அங்கே கூற்றுவனுக்கு வேலை இல்லை. பிறப்பைத் தவிரஇறப்பு இல்லை. எண்ணில்லாதனவாகப் பெருகின. அத்தனை அசுர சேனைகளையும் அழித்தது முருகவேளுடைய திருத்தோள்.

 

சிறந்த உறுப்ப தோள். வீர புருடனுக்குத் தோளே சிறந்தது. எல்லாவற்றையும் தாங்குவது தோளே. அதனாலேயே வாழ்த்துக் கூற வந்தபோது கச்சியப்பர் முதன்முதலாக "ஆறிரு தடந்தோள் வாழ்க" என்றனர்.

 

இராமச்சந்திரமூர்த்தி மிதிலாபுரிக்குச் சென்றபோதுஅங்குள்ள அறிவுடைய பெண்மக்கள் அவருடைய தோள்களைப் பார்த்தார்களாம். "தோள் கண்டார் தோளே கண்டார்”என்றும்"வாகை சூடிய சிலை இராமன் தோள்வலி" என்றும் பாடினார் கம்பநாட்டாழ்வார்.

அருணகிரிநாதர்அறுமுகப் பரம்பொருளின் திருத்தோள்களைச் சிறப்பித்துத்திருவாய் மலர்ந்து அருளிய புயவகுப்பை ஓதி மகிழ்தல் வேண்டும்.

 

மலை தொளை உருவச் சென்ற வேல் என---

 

மலை என்றது கிரவுஞ்சமலையைக் குறிக்கும். அது உயிர்களின் வினைத் தொகுதி ஆகும்.

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி,கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

 

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

 

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்துஅண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி,அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

 

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

 

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அனுபூதியில்.

 

சிவபூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண்பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனம் திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக் குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

 

நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக்கரையில் சிவபூசை செய்துகொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும்நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தனஇந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்துவிட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.

 

அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாய். நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதேபால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமேஎன் செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீங்கள் அஞ்சவேண்டாம். முன்னர் இலக்கத்து ஒன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால்,அவனது திருக்கையில் உள்ள ஞானசத்தியாகிய வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறிமுருகவேளை நினைத்து உருகினார். 

 

'உலகம் உவப்பஎன்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள்தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும்கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்துநக்கீரரையும்அவருடன் சேர்ந்த மற்றைவரையும் காத்து அருளியது.

 

அருவரை திறந்து,வன் சங்க்ராம கற்கிமுகி

 அபயம் இடஅஞ்சல் என்று அம் கீரனுக்கு உதவி”  --- பூதவேதாள வகுப்பு                                  

                                    

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு

    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக் குகையை

           இடித்துவழி காணும்                                        ---  வேல்வகுப்பு.

 

ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்

     உண்கின்ற கற்கி முகிதான்

ஒன்று குறை ஆகிவிடும் அன்று நக்கீரர்வர,

    ஓடிப் பிடித்து,அவரையும்    

காராய குன்றத்து அடைத்து,உரிய நியதிக்

    கடன் துறை முடிக்க அகலக்

கருதி முருகாறு அவர் உரைத்தருள,நீலக்

    கலாப மயில் ஏறி அணுகிப்

பேரான குன்றம் திறந்து,இவுளி முகியைப்

    பிளந்து, நக்கீரர் தமையும்

பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,

    பிரான் முகலி நதியின் மேவச்

சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி

    சிறுதேர் உருட்டி அருளே,

செய செயென அமரர்தொழஅசுரர் மிடி சிதறுமுனி

    சிறுதேர் உருட்டி அருளே.                         --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.

                                                

 

அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ---

 

இறைவனை நினைந்து நினைந்து அன்பினால் உருகவேண்டும். அன்பு மிகுந்தால் மிகுந்த கடினத் தன்மை வாய்ந்த எலும்பும் உருகுவது போன்ற தன்மையை உயிர் அடையும்.. அன்பு எளிதில் உண்டாகாது. பல பிறப்புக்களில் செய்த தவத்தின் ஈட்டத்தால் வருவது அன்பு.  அன்பே சிவம். ஆதலின்அன்பினால் சிவத்தை அடையவேண்டும்.

 

அன்பு வடிவாகிய கண்ணப்பருக்குத் திருக்காளத்தி மலையைக் கண்டபோதுஎன்பு நெக்கு உருகியது. அதனை மிக இனிய செஞ்சொற்களால் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

 

முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவு இலா இன்பமான

அன்பினை எடுத்துக் காட்ட,அளவிலா ஆர்வம் பொங்கி,

மன்பெரும் காதல்கூர,வள்ளலார் மலையை நோக்கி

என்பு நெக்குருகி உள்ளத்து எழுபெரும் வேட்கையோடும்.

 

"என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனேமாசிலா மணியே" என்பார் மணிவாசகனார்.

 

"என்பு நெக்குநெக்கு இயல் இடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசை எலாம் மெய்ய உறத் தளர்ந்திட"

 

என்பார் இராமலிங்க அடிகள்.

 

கலகலகலென …..  …..சமயப் பங்கவாதிகள்---

 

தெளிந்த அறிவு உள்ளவர்கள் ஒருபோதும் வாதம் புரியமாட்டார்கள். நூலறிவு மட்டுமே உள்ளவர்கள்தாம் உணர்ந்தவற்றையே உணர்ந்துஅவர்கள் உணர்ந்ததை நிறுவுவதற்காகபிறரோடு வாதம் புரிவார்கள்.

 

அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு. பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.

 

நிகரில் பஞ்ச பூதமும்,நினையும் நெஞ்சும்,ஆவியும்

   நெகிழ,வந்து நேர்படும்                    அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர! நிரவ யம்ப ராபர!

   நிருப அம் குமாரவெள்                     என,வேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                         அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்டரீகம் அது                       அருள்வாயே..  ---  திருப்புகழ்.

                                                                                                                        

இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். பத்திநெறியில் நின்று முத்தியை அடையவேண்டும். 

 

கலைகளும் ஒழிய ---

 

சமயவாதக் கலைகள் தொலைக என்று சலித்துக் கூறுகின்றனர். "விபரித சமய கலைகளும் அலம்அலம்" என்பார் 'அருவமிடையென'எனத் தொடங்கும் திருப்புகழில்.

 

உவலைச் சமயங்கள்ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல்உளனாய்க்கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்துகழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவிநாம்தெள்ளேணம் கொட்டாமோ.  --- திருவாசகம்.

 

 

கரணமும் ஒழியத் தந்த ஞானம் இருந்தவாறு என்---

 

முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்தவுடன்கருவி கரணங்கள் யாவும் கழன்றன. அந்த ஞானோபதேசத்தின் தன்மையை வியந்து கொள்ளுகின்றார்.

 

வரைஅற்றுஅவுணர் சிரம்அற்றுவாரிதி வற்றச்செற்ற

புரைஅற்ற வேலவன் போதித்தவாபஞ்ச பூதமும்அற்று,

உரைஅற்றுஉணர்வுஅற்றுஉடல்அற்றுஉயிர்அற்றுஉபாயம் அற்று,                                                   

கரைஅற்றுஇருள்அற்றுஎனதுஅற்று இருக்கும்அக் காட்சியதே.  ---  கந்தர் அலங்காரம்

                                                                                                             

தான் தானாய் இருந்து,தனியான தனியில்,தனிப் பரம்பொருள் உபதேசித்த தன்மையை எவ்வாறு எடுத்து உரைப்பது என்று அநுபூதியில் கூறுகின்றனர்.

 

செவ்வான் உருவில் திகழ் வேலவன்,அன்று

ஒவ்வாதது என உணர்வித்தது தான்,

அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

 

சிவபெருமானுடைய திருச்செவியில் மொழிந்த உபதேச மொழியைமுருகவேள் அருணகிரிநாதர் தவச் செவியில் உபதேசித்தார். அருணகிரியார் தவம் அளப்பரியது.

 

இதம்அகிதம் விட்டுஉருகிஇரவுபகல் அற்றஇடம்

எனதுஎன இருக்கைபுரி யோகப் புராதனனும்....   ---  வேடிச்சி காவலன் வகுப்பு.

                                                                                    

 

இலகுகடலை …..   …..இனிமையின் நுகருற்ற எம்பிரான் ---

 

குணங்கள் மூன்று --- சத்துவம்இராஜசம்தாமதம் என்பன.  இந்த முக்குணங்களும் உண்ணும் உணவினாலேயே விளைகின்றன. குண வேற்றுமையாலேயே மனிதனுக்கு உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன. 

 

மது மாமிச உணவினால் தாமத குணமும்

 

வெள்ளுள்ளிவெங்காயம்முள்ளங்கிசுரைக்காய் முதலிய உணவுகளினால் இராஜச குணமும்

 

கடலைஅவல்துவரைஅவரைதேன் முதலிய உணவுகளினால் சத்துவ குணமும் உண்டாகும்.  

 

மூலாதாரத்தில் எழுந்தருளி உள்ள விநாயகப் பெருமானுக்கு சத்துவகுண பதார்த்தங்களை நிவேதிக்க வேண்டும். அவைகளால் அவர் நமக்கு சத்துவகுணத்தைத் தருகின்றார்.

 

ஒரு கொம்பினைலே - பாரதம் - மேருவில் எழுதிய பவளக்குன்று---


வியாசமுனிவர் இமயமலையில் மூன்றாண்டு நிருவிகற்ப சமாதியில் நிலைத்து நின்றுஅந்த யோகக் காட்சியில் மகாபாரத வரலாற்றைக் கண்டார். அதனைக் காவியமாகப் பாடவேண்டும் என்று கருதினார்.  அவ்வாறு பாடும்பொழுது எழுதுவதற்குச் சிறந்த ஒருவர் வேண்டும் என்று எண்ணினார். அதற்கு ஏற்றவர் விநாயகப் பெருமானே ஆவார் என்று முடிவு செய்தார். விநாயகரை வேண்டித் தவம் புரியவேதாகமங்களுக்கு எட்டாத மூத்தபிள்ளையார் தோன்றி அருளினார்.  வேதவியாசர் அவரைப் பலகாலும் பணிந்து பாரதத்தை மேருகிரியில் இருந்து எழுதியருளுமாறு வேண்டினார். மூத்தபிள்ளையார், "என் எழுத்தாணி தடைபடாமல் ஒயாமல் சொல்வாயானால் எழுதுவோம்" என்று கூறியருளினார். வியாசர், "அவ்வண்ணமே கூறுவேன்பொருள் தெரிந்து எழுதவேண்டும்" என்றார். விநாயகரும் சரி என்று பொன்மேருகிரியிலே எழுதத் தொடங்கினார். இடையிடைய மிகக் கடினமான பாடலை வியாசர் கூறுவார். அதன் பொருள் யாது என்று விநாயகர் அரைக்கணம் சிந்திக்கும்போது ஆயிரம் இரண்டாயிரம் சுலோகங்களை மனதில் வியாசர் சிந்தித்துக்கொண்டு வேகமாகச் சொல்வார். இப்படியாகஅறுபது லட்சம் கிரந்தங்கள் வியாசர் கூற விநாயகர் எழுதி அருளினார்.

 

தாதையை அன்று சூழ வலம்வரும் அளவில்...  மரகத கலாபச் செம்புள் வாகனமிசை வரு முருக---

 

சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த தெய்வ மாதுளங்கனியை ஆனைமுகப் பெருமானும்ஆறுமுகப் பெருமானும் ஒருங்கே கேட்டனர். "உலகை ஒரு நாழிகைப் போதில் வலம் வருபவன் தேவ சிரேட்டன்" என்று அமரர் ஒருகால் எண்ணியதைத் திருவுளங்கொண்ட எந்தை அந்திவண்ணர், "உலகங்களை எல்லாம் ஒருகணப் பொழுதில் எவன் வலம் வருவானோஅவனுக்கு இக்கனி" என்று கூறியருளினார். அதுகேட்ட இளையிபிள்ளையார் ஆகிய ஆறுமுகக் கடவுள் மயில்மிசை ஊர்ந்து எல்லா உலகங்களையும் ஒரு கணப்பொழுதுக்குள் வலம் வந்தனர். மூத்தபிள்ளையார்,,எல்லா உலகங்களும் சிவத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றன என்று ஆயந்து சிவபெருமானை வலம் வந்து கனியைப் பெற்றனர்.

 

கேவலம் ஒரு கனி பொருட்டாக முருகவேள் உலகங்களை எல்லாம் வலம் வருவாராஒரு கனியை விரும்பி மூத்தபிள்ளையாரும்இளையபிள்ளையாரும்மாறுபடுவார்களா?  மாறு இல்லாதது தானே உடன்பிறப்பு?மாறுபட்டால்பங்காளி தானேஏன் சிவபெருமான் அக்கனியை இருவருக்கும் உடைத்துப் பகிர்ந்து தரக்கூடாதாஅல்லது வேறு கனியை உண்டாக்கித் தர எல்லாம் வல்ல இறைவரால் ஆகாதாகாரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இருகனி தந்தார் அல்லவா?தம்பிக்கே கனி கிடைக்கட்டுமே என்று விநாயகரும்தமையனுக்கே கனி கிடைக்கட்டும் என்றும் வேலவரும் எண்ணி அமையமாட்டார்களாஇது என்ன கதைஇப்படியும் நிகழ்ந்திருக்குமாபுனைந்துரையாபகுத்தறிவுக்குப் பொருந்துகின்றதாஎன்று பலப்பல ஐயங்கள் இதனால் எழலாம்.  இத்தனை வினாக்களுக்கும் விடை கூறுதும்.

 

கனி காரணமாக மாறுபட்டு வலம் வரவில்லை. வேறு என்இறைவர் எல்லாமாய் அல்லவுமாய் விளங்குபவர். அவரிடத்திலே எல்லாப் பொருள்களும் தங்கி இருக்கின்றன.  அவர் எல்லாப் பொருள்களிலும் தங்கி இருக்கின்றார். இந்த உண்மையை விளக்கும் பொருட்டே இந்தத் திருவிளையாடல் நிகழ்ந்துள்ளது. எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தவர் முருகவேள். எல்லாப் பொருள்களையும் சிவத்திலே பார்த்தவர் கணேசர். ஒன்றிலே எல்லாவற்றையும்ஒன்றை எல்லாவற்றுக்குள்ளும் பார்ப்பது. 

 

மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழும் தம்பிரானே---

 

மதுரை சிறந்த திருத்தலம். துவாதசாந்தத் தலமாக விளங்குவது.  முத்தமிழும் முழங்குவது. 

 

கருத்துரை

 

முருகா!உம்மையே நினைந்து உருகும் அன்பை அடியேனுக்குத் தந்து அருள் புரிவீர்.

 

                        

1 comment:

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...