மதியும் கதியும் பெற வேண்டும்
----
சினம் இறக்கக் கற்றாலும்,சித்தி எல்லாம் பெற்றாலும்,
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே.
உள்ளத்தில் தோன்றும் வெகுளியின் முனைப்பாய் முகத்தில் தோன்றும் சினம் எழாதவாறு பயின்றுகொண்டாலும், அகத்தவப் பயனாகிய அட்டமாசித்திகளை ஒருவன் எளிதில் பெற்றுவிட்டாலும், மனம் அடங்கும்படியாகப் பயின்று கொள்ளாதார்க்குப் பயனற்ற வாய்ப்பேச்சு மட்டும் இருப்பதால் பயன் யாது? (யாதுமில்லை.)
கற்ற அறிவால் மனப்பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டு விடலாம். அட்ட மாசித்திகளையும் சில பயிற்சிகளால் பெற்றுவிடலாம் போலத் தோன்றுகின்றது. எல்லாம் உண்டானாலும், மனம் மட்டும் அடங்காமல் எப்போதும் ஓயாது உழன்று கொண்டே இருக்கும். மனத்தை அடக்கி வைத்து இருப்பது ஒரு கணப் போதும் முடியாது என்றே அருளாளர்கள் எல்லோரும் சொல்லி உள்ளனர். நான், எனது என்னும் எண்ணம் உள்ளவரையில்,மனோ வியாபாரம் அடங்காது.
உலகத்தில் முடியாத செயல் என்று எவை எவை உள்ளனவோ, அவற்றை முடித்துக் கொள்ள உபாயத்தைத் தேடிக் கொள்ளலாம். ஆனால், மனத்தை அடக்கி வைத்து இருப்பது யாராலும் முடியாது. மனம் அடங்கி நிற்பதுவே பூரண சுகம். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்றார் அருணகிரிநாதர்."எல்லாம் ஒருங்கிய நிற்குணம் பூண்டு என்னை மறந்து இருந்தேன், அறந்தே விட்டது இவ்வுடம்பே" என்றும் சொன்னார்.
உண்மையை உணர்வதற்கு "மனம் இறத்தல்" அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின் தியானம்”என்பார் தாயுமானார். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரை அற்று இருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர். "நான்" என்னும் அகங்காரம் முற்றிலும் அறுவதே மனம் இறந்த நிலை. அகங்காரம் உள்ளவரையில், ஆன்மா உண்மைப் பொருளைத் தெளியமுடியாது. தெளிந்தது போல வேடமிட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் திரியலாம்.
உடம்போடு வாழும் காலத்திலேயே மனமானது சமாதி நிலையை அடைய வேண்டும். அது ஒருவனது முயற்சியால் வருவது இல்லை. திருவருளால் வாய்க்கும். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" நிற்கும் நிலை வாய்க்கவேண்டும். அந்த நிலையை அருளவேண்டும் என்று அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலில் வேண்டுகின்றார்.
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
அடங்கி,கைச் சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே,அறல் ஓதியர்...... விழியாலே
விரும்பத் தக்கன போகமும் மோகமும்,
விளம்பத் தக்கன ஞானமும் மானமும்,
வெறும் சுத்தச் சலமாய் வெளியாய்,உயிர் ......விடுநாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
கிடந்திட்டு, தமர் ஆனவர் கோ என,
இடம் கட்டிச் சுடுகாடு புகாமுனம்,...... மனதாலே
இறந்திட்டுப் பெறவே கதி ஆயினும்,
இருந்திட்டுப் பெறவே மதி ஆயினும்,
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர ...... இசைவாயே.
இதன் பொருள் ---
செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய இயமன் வசத்தில் அடங்கி,கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும், கருமணலைப் போல் நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு,விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும்,சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும்,எல்லாம் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில்,சுடுகாட்டில் அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு இரையாக அடியேனுடைய உடல் கிடக்கும்போதுசுற்றத்தார்கள் 'கோ'என்று கதற,சவத்தைக் கிடத்தும் இடமாகிய பாடையில் கட்டப்பட்டு சுடுகாட்டினை அடைவதற்கு முன்னே,எனது மனமானது சமாதி நிலையை அடைந்து நற்கதியைப் பெறும்படியாவது,இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறும்படியாவது,இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை அருள்வதற்கு தேவரீரே மனம் இசைந்து அருளவேண்டும்.
உயிரானது, உடம்பில் உள்ளபோதே சிறந்த மதியையும், நல்ல கதியையும் பெறுகின்றசிறந்த நிலையை அடைய முருகப் பெருமான் திருவருளை அடிகளார் வேண்டுகின்றார். "மதி வேண்டும்,நின் கருணை நிதி வேண்டும்" என்றார் வள்ளல்பெருமான்.
மதி உள்ள இடத்திலே நல்ல கதி இருக்கும். மதி இல்லையானால் நல்ல கதி இல்லை. கதி என்னும் சொல்லுக்கு, "நடை" என்றும் ஒழுக்கம் என்றும் பொருள் உண்டு. நடை என்பது, "நடத்தை" எனப்படும். ஒன்று இருக்கும் இடத்திலே ஒன்றி இருப்பவை பற்றி, "குமரேச சதகம்" கூறுமாறு காண்க.
சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
சார்ந்து திருமாது இருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
விண்டுவின் களைஇருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்
மிக்கான தயைஇருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்
பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு
பலாயனத் திறல்இருக்கும்;
வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
மன்னுயிர் சிறக்கும் அன்றோ?
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் --- உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில்திருமகள் சேர்ந்து இருப்பாள், திருமாது இருக்கும் இடந்தனில்சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் --- திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம்இருக்கும், மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்விண்டுவின் களை இருக்கும் --- உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம் இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும், விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் ---திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும், பத்தியுடன் இனிய தயை உள்ளவரிடந்தனில்பகர் தருமம் மிக இருக்கும் --- திருமாலிடத்து வைத்துள்ள அன்பும், இனியஇரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகைஎன்னும் அறம் இருக்கும், பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் --- சொல்லப்படும் அறம் உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும், இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ --- புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?
சீலமும் என்னும் ஒழுக்கமும்,சத்தியம் என்னும் உண்மையும் ஒன்றே. ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கும். இரண்டும் பிரிக்கமுடியாதவை. சீலம் உள்ள இடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் உள்ள இடத்தில் சீலம் இருக்கும். சீலம் உள்ள இடத்தில் தருமம் இருக்கும். தருமம் இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் இருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும். ஒழுக்கம் இருக்குமிடத்தில் பலம் இருக்கும்.பலமுள்ள இடத்தில் திருமகள் இருப்பாள். சீலம் இல்லையானால் இத்தனையும் இருக்கமாட்டா. ஆகவே சீலத்தை யாவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அந்த சீலம் என்பது கற்ற கல்வியால் பெற்ற அறிவின் தெளிவினால் உண்டாகும். வெறுமேன நூல்களைப் படித்துவிட்டு, பதவுரை, விளக்கவுரை சொல்லிக் கொண்டு, "நான் படித்தேன்" என்று பிதற்றிக் கொண்டு திரிவதால் உண்டாகாது. நூல்களைப் பொருள் உணர்ந்து ஓதி, அவற்றில் காட்டப்பட்டுள்ளபடி ஒழுகி வருதல் வேண்டும். அதுவே கல்வியின் பயன் ஆகும்.
இந்திரன் சீலத்தைப் பெற விரும்பினான். பிரமதேவரிடம் சென்று "சீலத்தை அருள வேண்டும்" என்று கேட்டான். பிரமதேவர் “இந்திரனே! சீலம் மிகவும் உயர்ந்தது. அது பிரகலாதரிடம் தங்கி இருக்கின்றது. அவரிடம் சென்று பெறக் கடவாய்” என்றார்.
இந்திரன் பிரகலாதரிடம் வந்து, பலகாலம் பணிவிடை புரிந்தான். அவன் பணிவிடையால் மனம் மகிழ்ந்த பிரகலாதர், "இந்திரனே! உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறேன்” என்றார். இந்திரன் அவரைப் பணிந்து “ஞானசீலரே! தங்களிடம் சீலம் என்ற ஒன்றை யாசிக்கிறேன்” என்றான்.
பிரகலாதர் உடனே “நல்லது, சீலத்தைத் தந்தேன்” என்றார். பிரகலாதரிடம் இருந்து ஓர் ஒளி உருவம் புறப்பட்டு இந்திரன் மேனியில் அடங்கியது. அந்த ஒளியுருவத்தைப் பிரகலாதர் பார்த்து, "நீ யார்?" என்று கேட்டார், "நான் சீலம்" என்று கூறியது அது. பின்னர் பிரகலாதர் உடம்பிலிருந்து மற்றொரு உருவம் புறப்பட்டது. “நீ யார்?" என்றார். "நான் தருமத்தின் அதி தேவதை. சீலமில்லாத இடத்தில் இருக்கமாட்டேன்” என்று கூறி, அவ்வொளியுருவம் இந்திரன்பால் சென்று மறைந்தது.
அடுத்து ஒரு ஒளியுருவம் அவர் மேனியிலிருந்து புறப்பட்டது. “நீ யார்?" என்று வினவினார். “நான் சத்தியம் தருமம் இல்லாத இடத்தில் என்னால் இருக்கமுடியாது’ என்று கூறி இந்திரன் மேனியில் அடங்கியது. அதற்குப் பின் பிரகலாதரிடமிருந்து மற்றோர் ஒளியுருவம் புறப்பட்டது. “நீ யார்?"என்று அவர் கேட்டார். “நான் ஒழுக்கம்.சத்தியத்தை விட்டு நான் பிரிந்திருக்க மாட்டேன்” என்று கூறி மறைந்தது.
அடுத்து ஒரு ஒளியுருவம் புறப்பட்டது. கண் கூசும்படியான அதனைப் பார்த்து பிரகலாதர், "நீ யார்?" என்றார். “நான் பலம்; ஒழுக்கமில்லாத இடத்தில் பலமாகிய நான் இருக்க மாட்டேன்” என்றது.
பின்னர், ஓர் அழகிய பெண் உருவம் ஒளிமயமாகப் புறப்பட்டது. “அம்மா! நீயார்?"என்று கேட்டார் “நான் மகாலட்சுமி. பலமில்லாத இடத்தில் நான் இருப்பதில்லை” என்று கூறி மறைந்தது.
ஆகவே, திருமகள் பொருந்தி உள்ள இடத்தில் வலிமையும், வலிமையுள்ள இடத்தில் ஒழுக்கமும், ஒழுக்கமுள்ள இடத்தில் சத்தியமும், சத்தியமுள்ள இடத்தில் தருமமும், தருமமுள்ள இடத்தில் சீலமும் இருக்கும். இத்தனைக்கும் சீலமே ஆணிவேர். அந்த சீலத்திற்கு ஆணிவேர் கல்வி. சீலம் இல்லாத கல்வி பயன் அற்றது.
மேலேகூறிய நலன்களில் அன்பு வைக்காமல், காமத்தின் மீதும், குரோதத்தின் மீதும், ஐம்பூத பரிணாமங்களின் மீதும், மிக்க ஆசை வைத்துவாழ்வது கூடாது.
உடம்பையே பெரிதாக மதித்து, அது நெடுநாள் நிலைத்து இருக்கும் என்று எண்ணி, அதை வளர்க்கவும் அழகு படுத்தவும் பொருள்களைத் தேடி, உடல் வளத்தால் காமம் மீதூரப்பட்டு, உடல் அழகைக் காட்டி மயக்கும் விலைமாதர் பின் சென்று, இதுவே கைகண்ட பலன் என்று வாழ்ந்து,அருமையாக ஈட்டிய பொருளை எல்லாம் இழந்த நிலையை ஆடவர் அடைவர்.
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் இப்படித்தான் சிதறும் என்று "விவேக சிந்தாமணி" கூறுகின்றது.
அன்னையே அனைய தோழி!
அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்,
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்,
என்னையோ புணருவோர்கள்
எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து,பாதப்
போதினில் வீழ்வது ஏனோ?
பொம்எனப் பணைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே!
கூறுவேன் ஒன்று,கேண்மோ,
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி,
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே!
இதனை, இரத்தினச் சுருக்கமாக, இரண்டு வகையான மனத்தை உடைய விலைமாதரும், கள்ளும், சூதாட்டமும் ஆகியவை திருமகளால் புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் என்றார் திருவள்ளுவ நாயனார்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
கொலை அஞ்சார்,பொய்ந் நாணார்,மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ?ஏனையவும் செய்வார்,- பழியோடு
பாவம் இஃது என்னார்,பிறிது மற்று என் செய்யார்?
காமம் கதுவபட் டார்.
என்றது நீதிநெறி விளக்கம்.
காமவெறி கொண்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல நாணமாட்டாரகள். மானத்தைக் காத்துக் கொள்ள மாட்டார்கள். திருட்டுத் தொழில் மட்டுமல்ல, மற்ற இழி தொழில்களையும் செய்யத் தலைப்படுவார்கள். பழிக்கும் பாவத்துக்கும் இடமான செயல் ஆயிற்றே என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் எண்ணத்திற்குத் தடையாக எது வந்தாலும்,அதை நீக்குவதற்கு,தகாத செயல்கள் செய்யவும் தயங்கமாட்டார்கள். அவ்வாறு காமம் மீதூரப்பட்டால், அறிவு, பொருள், கல்வி ஆகியவை யாவும் அழிவுறும்.
நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண்தொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். --- நல்வழி.
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் அழிவு அடையும் காலத்திலே, முறையே தாம் கொண்ட குஞ்சும், முத்தும், அரிசியும், குலையும் ஆகியவற்றை ஈனும். அதுபோல, அறிவும், செல்வமும், கல்வியும் அழிந்து போகும் காலம் வரும்போது,பிற மகளிர் மேல் ஆசையை வைப்பார்கள் ஆடவர்கள்.
மருவ இனிய சுற்றமும்,வான்பொருளும்,நல்ல
உருவும்,உயர்குலமும் எல்லாம்,- திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்,அவள்பிரிந்து
போம்போது அவளொடு போம். --- மூதுரை.
தழுவிய இனிய உறவும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வாகிய குலமும் என்னும் இவை எல்லாம், சீதேவி வந்து கூடும் பொழுது, அவளுடனே வந்து கூடும். அவள் நீங்கிப் போகும் பொழுது, அவளுடனே நீங்கிப் போகும்.
ஆகவே, விரும்பத் தக்கன ஆகிய போகமும் மோகமும், விளம்பத் தக்கன ஞானமும் மானமும்நிலைபெறாமல் நீங்கிவிடும் என்கின்றார் அடிகளார்.
வாழ்நாள் முடிவு வருகின்ற காலத்தில் உயிரானது, எல்லாம் இழந்த நிலையில்,பெற்றார்கள் சுற்றி அழ,உற்றார்கள் மெத்த அழ,காலன் கைப்பட்டு,உடலை விட்டு நீங்கும். உயிர் நீங்கிய உடலை, முருட்டு மெத்தையில் கிடத்துவதற்காக, பாடையில் கட்டி எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சுமந்து செல்வார்கள். அந்த நிலை வரும் முன்னர் உயிரானது தான் பெறவேண்டிய கதியைப் பெறவேண்டும்.
"மனதாலே இறந்திட்டுப் பெறவே கதி ஆயினும்,
இருந்திட்டுப் பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கதொர் ஊதியம் நீ தர இசைவாயே".
உடலோடு வாழுகின்ற காலத்தில், நல்லறிவைப் பெறவேண்டும். நல்லறிவு பெற்றதன் பலனாக மன அடக்கத்தை அடைய வேண்டும். இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை அருள்வதற்கு தேவரீரே மனம் இசைந்து அருள்வீராக என்று அடிகளார் வேண்டுகின்றார்.
எனவே, வாழுகின்ற காலத்திலேயே, சிறந்த கல்வியைப் பயின்று, மனம் அடங்கி, சமாதி நிலையை அடைந்திருக்க வேண்டும். உடம்பை விட்ட பிறகு, நல்ல கதியில் நிலைபெறவேண்டும். கல்வியைக் கொண்டு பெறுகின்ற மற்ற செல்வங்கள் யாவும் உயிருடன் கூட வருவதில்லை.
No comments:
Post a Comment