விதி மார்க்கம் --- பத்தி மார்க்கம்
----
விதி மார்க்கம், பத்தி மார்க்கம் என்ற இரண்டு வழிகளில் இறைவனை வழிபடும் பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருவது.
அபிடேகம், அலங்காரம், அருச்சனை, வழிபடுகின்ற முறை என ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது விதிமார்க்கம் ஆகும். விதிகளில் சொல்லப்பட்டுள்ளபடி, சிறிதும் வழுவாமல், பூசனை புரியவேண்டும் என்பது விதிவழிபாடு.
பத்தி மார்க்கம் எனப்படுவது, கிரியைகளுக்கு முதலிடம் தராமல், உணர்வு நிலையில் மட்டுமே மனத்தைச் செலுத்துவது. விதி மார்க்கத்தில் தோன்றியவர் திருஞானசம்பந்தர். ஆனாலும், பத்தி மார்க்கமே உயிர் நாடியைப் போன்றது என்றவர் அவர். நாயன்மார்கள் அனைவரும் பத்தி மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள்.
விதிமார்க்கமாவது முறையே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, அவற்றில் கூறியவாறு ஒழுகி, முறைப்படி இறைவனை வழிபட்டு மாறுபாடு இன்றி நிற்றல் ஆகும்.
பத்தி மார்க்கமாவது, ஓரே அன்பு மயமாக நிற்றல். அன்பு நெறியில் கலைஞானம் கூறும் விலக்குகள் எல்லாம் தீ முன் எரியும் பஞ்சுபோல் பறந்து ஒழியும்.
விதி மார்க்கத்தில் சென்றவர் சிவகோசரியார்.
பத்தி மார்க்கத்தில் நின்றவர் கண்ணப்பர்.
விதிமார்க்கத்தில் செல்பவர் அன்பு மார்க்கத்தினை அடைதல் வேண்டும். அதனாலே தான், சிவபெருமான் கண்ணப்பர் கனவிலே போய், "திண்ணப்பா! நீ ஊனை எனக்கு நிவேதிப்பதும், உனது வாயில் உள்ள நீரை என் முடிமீது உமிழ்வதும், செருப்பு அணிந்த காலுடன் நீ திருக்கோயிலுக்குள் வருவதும் நமக்கு அருவருப்பைத் தருபவை. அவைகளை இனி நீ செய்தல் கூடாது. நமது அன்பரான சிவகோசரியார் நாள்தோறும் வந்து பூசை செய்யும் விதியையும், மதியையும் எனக்குப் பின்னால் ஒளிந்து இருந்து நீ அறிந்து கொள்வாயாக" என்று கூறியருளவில்லை. ஏனெனில், அன்பு மார்க்கத்திற்கு விதிமார்க்கத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
மாறாக,விதிமார்க்கத்தில் நின்ற சிவகோசரியாருக்கு, பத்தி மார்க்கம் என்னும் அன்புநெறியின் அனுபவத்தைக் கண்கூடாகக் காட்டத் திருவுள்ளம் கொண்டு, சிவகோசரியாருக்குக் கனவிலே காட்சி தந்தார். "நீ அவனை வலிமை பொருந்திய வேடன் என்று எண்ணாதே. அவன் செயலை நான் கூறுகின்றேன், கேட்பாயாக" என்றார். "அவனுடைய வடிவம் எல்லாம் நம்மிடத்து அன்பு கொண்ட வடிவம் என்றும், அவனுடைய அறிவு எல்லாம் நம்மையே அறிகின்ற அறிவு என்றும், அவனுடைய செயல்கள் எல்லாம் நமக்கு இனியவாகும் என்றும் கூறி, அவனுடைய நிலை இத்தன்மையானது அதனை நீ அறிவாயாக. அன்பனே! திண்ணனாகிய வேடன் வந்து, என்மீது உள்ள பழைய மலர்களைச் செருப்பு அணிந்த தனது காலால் நீக்குகின்றான். அது எனது இளங்குமரன் திருமுருகன் செய்ய திருவடியினும் சிறப்பாக நமக்கு இன்பத்தைத் தருகின்றது. அவன் நமக்கு நீராட்டும் பொருட்டு, தனது வாயில் இருந்து உமிழும் எச்சில் நீரானது, கங்கை முதலிய புண்ணிய நீரினும் புனிதமானது. அவ் வேடர் கோமான் தனது அழுக்கு அடைந்த தலைமயிராகிய குடலையில் கொணர்ந்து, நமக்கு அன்புடன் சூட்டும் மலர்களுக்கு மாலயனாதி வானவர்கள் மந்திரத்துடன் சூட்டும் மலர்கள் யாவும் இணையாக மாட்டா. அவன் "வெந்து உளதோ" என்று மெல்ல கடித்தும், "சுவை உளதோ" என்று நாவினால் அதுக்கியும் பார்த்துப் படைத்த ஊனமுது, வேள்வியின் அவி அமுதினும் இனியதாகும். முனிவர்கள் கூறும் வேதாக மந்திரங்களினும், அச் சிலை வேடன் நெக்கு உருகி அன்புடன் கூறும் கொச்சை மொழிகள் மிகவும் நன்றாக என் செவிக்கு இனிக்கின்றன" என்று பலவாறாக சிவகோசரியாருக்குக் கனவில் தோன்றிய சிவபெருமான் உணர்த்தி அருளினார்.
அன்றுஇரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே
மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி
"வன்திறல் வேடுவன் என்று மற்றுஅவனை நீ நினையேல்
நன்றுஅவன்தன் செயல்தன்னை நாம்உரைப்பக் கேள்"என்று.
"அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய ஆம் என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறி நீ" என்று அருள்செய்வார்.
"பொருப்பினில் வந்து, அவன் செய்யும்
பூசனைக்கு முன்பு, என்மேல்
அருப்பு உறும் மென்மலர் முன்னை
அவை நீக்கும் ஆதரவால்,
விருப்பு உறும் அன்பு என்னும்
வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த
செருப்பு அடி, அவ்விளம்பருவச்
சேய் அடியின் சிறப்பு உடைத்தால்”,
"உருகிய அன்பு, ஒழிவு இன்றி
நிறைந்த அவன் உரு என்னும்
பெருகிய கொள்கல முகத்தில்
பிறங்கி, இனிது ஒழுகுதலால்
ஒருமுனிவன் செவி உமிழும்
உயர்கங்கை முதல் தீர்த்தப்
பொருபுனலின், எனக்கு அவன்தன்
வாய்உமிழும் புனல் புனிதம்",
"இம்மலை வந்து எனை அடைந்த
கானவன் தன் இயல்பாலே
மெய்ம்மலரும் அன்புமேல்
விரிந்தன போல் விழுதலால்,
செம்மலர்மேல் அயனொடு மால்
முதல்தேவர் வந்து புனை
எம்மலரும் அவன் தலையால்
இடும் மலர்போல் எனக்கு ஒவ்வா”,
"வெய்யகனல் பதம்கொள்ள
வெந்துளதோ எனும் அன்பால்
நையும் மனத்து இனிமையினில்
நையமிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர்
முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும் வரிச் சிலையவன்தான்
இட்ட ஊன் எனக்கு இனிய",
"மன்பெருமா மறைமொழிகள்
மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழித் தோத்திரங்கள்
மந்திரங்கள் யாவையினும்,
முன்பு இருந்து மற்று அவன்தன்
முகம் மலர அகம் நெகிழ
அன்பில் நினைந்து என்னைஅல்லால்
அறிவுறா மொழி நல்ல”.
எனவரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க.
இந்த திகழ்வை, அருணகிரிநாதப் பெருமான் தமது திருப்புகழில் வைத்துப் பின்வருமாறு பாடுகின்றார்.
"பொய்ச் சினத்தை மாற்றி,மெய்ச் சினத்தை ஏற்றி
பொன் பதத்து உள்ஆக்கு ...... புலியூரா!
பொக்கணத்து நீற்றை இட்ட ஒருத்தனார்க்கு
புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்
பச்சிலைக்கும்,வாய்க்குள் எச்சிலுக்கும்,வீக்கு
பைச் சிலைக்கும் ஆட்கொள் ...... அரன்வாழ்வே!
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட
பத்தருக்கு வாய்த்த ...... பெருமாளே".
இதன் பொருள் ---
உலகில் உள்ள பொய்யாகிய அடையாளங்களை மாற்றி, உண்மை அடையாளங்களை நிலை நிறுத்தி, பக்குவப்பட்ட ஆன்மாக்களை பொன்மயமான திருவடிக்குள் சேர்த்துக் கொள்ளும் சிதம்பர நாதரே!
பொக்கணம் என்று சொல்லப்படும் திருநீற்றுப் பையில் உள்ள திருநீற்றை அணிந்து கொள்ளும் ஒப்பற்றவராகிய சிவகோசரியாருக்கு,
அன்பு நெறி இதுவே என்று காட்டி மிகவும் அறிவை விளக்கிய, காட்டிலே வாழும் வேடராகிய கண்ணப்பர் அன்புடன் இட்ட பச்சிலைக்கும், வாயில் இருந்து உமிழ்ந்த எச்சில் நீருக்கும்,
நாண் கட்டிய வலிமை மிக்க வில்லுக்கும் உவந்து, அவரை அடிமை கொண்டு அருள் புரிந்த சிவபெருமானுடைய திருக்குமாரரே!
அன்பையும் அதனால் வரும் பயனையும் தெரிவித்து, சிவபெருமானுடைய திருவுள்ளத்தை மீட்டுக் கொண்ட, அன்பர்களுக்கு அருமையாகக் கிட்டிய பெருமையின் மிக்கவரே!
கண்ணப்பருடைய சிறந்த அன்பு நெறியை இதில் விளக்கிக் காட்டுகின்றார் அடிகளார். கண்ணப்பருடைய அன்பும் அவருடைய புனித வரலாறும் மாற்றம் மனம் கழிய நின்ற நிலையில் விளங்குபவை. வார்த்தைகளால் வடித்து விளக்க முடியாதவை.
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்,
கேளார் கொல், அந்தோ கிறிப்பட்டார், –-- கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தி உள்நின்ற
கண்ணப்பர் ஆவார் கதை.
என்கின்றார் நக்கீர தேவர். கண்ணப்பர் வரலாற்றை உணர்ந்து ஓதாமல் வாழ்நாளை வீணாகக் கழித்து, அறிவு மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர் மக்கள் என்றார்.
சிவபெருமானை வழிபடுவதற்கு மலர்களே வேண்டும் என்பது இல்லை. ஏதாவது ஒரு பச்சிலை போதும். கண்ணப்ப நாயானர் பறித்து வந்து அன்போடு இட்ட பச்சிலைகளைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்.
போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுஉண்டு,அன்
றே,இணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர் வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரை சென்று சார்வதற்கே. --- பதினோராம் திருமுறை.
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. --- திருமந்திரம்.
எல்லாம் உதவும் உனை,ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும்,ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல்யோக நெறியும் செயேன்,அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே.--- தாயுமானார்.
பூவும் இலையும் எடுத்துப் பூசிப்போர் முறைப்படி நீராடி, விடியற்காலையில் பூக் குடலையை நாபிக்குக் கீழ் தொங்கவிடாமல் உயர்த்தி, நந்தனவனம் சென்று, வண்டுகள் மொய்க்காத முன்னம் பத்திர புட்பங்களை எடுக்க வேண்டும். இது விதிமார்க்கம்.
அன்பு மார்க்கத்தில் நின்ற கண்ணப்பர், மலர்களையும் இலைகளையும் எடுத்துத் தன் தலைமயிராகிய குடலையில் வைத்துக் கொண்டு போயினார்.
திருமஞ்சனத்திற்கு நீர் கொணர்வோர், எச்சில் தெரிக்கும் என்று வாய் கட்டி, குடத்தில் நீர் கொணர்வது மரபு. கண்ணப்பர் வாயில் நீரை முகந்து கொண்டனர். அன்றியும், பன்றியைக் கொன்று, அதனுடைய ஊனை நெருப்பில் வதக்கி, நன்றாக வெந்து உள்ளதா என்று தனது வாயில் போட்டு, மென்றும் தின்றும் சுவை பார்த்துக் கொண்டு, கல்லையில் அதை வைத்து எடுத்துக் கொண்டு போனார்.
கூசாது வேடன் உமிழ்தரு நீராடி, ஊன்உண் எனும்உரை
கூறாமன் ஈய அவன்நுகர் ...... தருசேடம்
கோதுஆம் எனாமல் அமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.
என்று பிறிதொரு திருப்புகழிலும் இந்த அருள் வரலாற்றை வைத்துப் பாடி உள்ளார் அருணகிரிநாதர்.
அன்பு அதிகப்பட்டு விடுமானால், அன்பு உடையாருடைய எச்சில் அன்பு உடையாருக்கு அமிர்தமாகத் தோன்றும். அதுபோல், அன்பின் வடிவாகிய கண்ணப்பர் கொப்புளித்து உமிழ்ந்த நீர் மிகமிக புனிதமாகவும் குளிர்ச்சியாகவும் இறைவனுக்கு இன்பத்தை நல்கியது.
விதிமார்க்கத்தில் சென்று, பலகாலம் நோள்தோறும் பூசனை புரிந்த சிவகோசரியார் இறைவனைக் கனவில்தான் காண முடிந்தது. ஆனால், பத்தி மார்க்கத்தில் நின்ற கண்ணப்ப நாயனார், ஆறாவது நாளில் இறைவனை நேரில் காணும் பேற்றினைப் பெற்றார்.
இவ்வாறு கூறுவதால், சிவகோசரியாருக்கு இறைவன் மீது பத்தி இல்லை என்று கொள்ளக் கூடாது. கண்ணப்பர் அன்பு முற்றிலும் "நான்" என்னும் எண்ணம் இல்லாத அன்பு. "அன்பு பிழம்பாய்த் திரிவார்" என்று தெய்வச் சேக்கிழார் காட்டினார். தன்னை இழந்த அன்பு அது. அவருக்கு இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இல்லை. பயன் கருதாத அன்பு.
விதிமார்க்கத்தில் நிற்பவர்கள், தமது சிறுமையையும், இறைவனது பெருமையையும் அறிந்தவர்கள். ஒரு குறிப்பட்ட முறையை வகுத்துக் கொண்டு, அதில் நம்பிக்கையை வைத்து இறைவனை அறிய முற்பட்டவர்கள். தாங்கள் செய்யும் கிரியைகளில் பெருத்த நம்பிக்கை உடையவர்கள் இவர்கள் என்பதால், பிறர் சொல்லுவனவற்றை இவர்கள் நம்புவது இல்லை. இறைவனே வந்து கனவில், தோன்றி, கண்ணப்பரின் பெருமையைக் கூறியும், தமது கொள்கையை அவர் விடவில்லை.. கனவு கண்ட பின் விழித்து, முந்தைய நாள் செய்தது போலவே, மறுநாளும் செய்தார். விதிமார்க்கத்தில் அத்துணை நம்பிக்கை வைத்து இருந்தார்.
பொக்கண்ணத்தில் இருந்த (திரு)நீற்றை இட்டவரான,சிவகோசரியாருக்கு, கண்ணப்ப நாயானாரின் செயலானது, புத்தியைப் புகட்டியது என்பதை "பொக்கணத்து நீற்றை இட்ட புத்தி மெத்த காட்டு புனவேடன்" என்றார். அந்த வேடன் அன்புடன் இட்ட பச்சிலைக்கும், வாயில் இருந்து உமிழ்ந்த எச்சில் நீருக்கும்,நாண் கட்டிய வலிமை மிக்க வில்லுக்கும் உவந்து, அவரை அடிமை கொண்டு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்பதைக் காட்ட,"பச்சிலைக்கும்,வாய்க்குள் எச்சிலுக்கும்,வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன்" என்றார்.
திருநீலநக்க நாயனார் வரலாற்றின் வழியும், விதிமார்க்கம், பத்திமார்க்கம் இரண்டின் நிலை பெரியபுராணத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
எனவே, விதிமார்க்கம் சிறந்ததா? பத்தி மார்க்கம் சிறந்ததா? என்று வாதம் புரிவதால் பயனில்லை. விதிமார்க்கம், பத்திமார்க்கத்தில் முடியவேண்டும். பேசுவதால் உண்மை விளங்காது. கடைப்பிடித்தால் விளங்கும்.
No comments:
Post a Comment