மதுரை --- 0968. சீதவாசனை மலர்க்குழல்

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சீத வாசனை மலர் (மதுரை)

 

முருகா! 

காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்து அருள்வாய்.

 

 

தான தானதன தத்ததன தத்ததன

     தான தானதன தத்ததன தத்ததன

     தான தானதன தத்ததன தத்ததன ......   தத்ததான

 

சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக

     மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ

     தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ......தொங்கலாரம்

 

சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு

     வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி

     சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச்

 

சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை

     யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி

     சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ......பங்கினூடே

 

தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை

     பாவ மானபிற விக்கடலு ழப்பவனை

     தாரு லாவுபத பத்தியிலி ருத்துவதும் ...... எந்தநாளோ

 

வாத வூரனைம தித்தொருகு ருக்களென

     ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை

     வாசி யாமெனந டத்துவகை யுற்றரசன் ...... அன்புகாண

 

மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை

     யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்

     மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே

 

வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி

     பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற

     வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ......கொண்டசீலா

 

வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு

     ராம ரீணமயி லொக்கமது ரைப்பதியின்

     மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

சீத வாசனை மலர்க் குழல் பிலுக்கிமுக

     மாய வேல் விழி புரட்டிநகை முத்தம் எழ,

     தேமல் மார்பின் இள பொன்கிரி பளப்பள என,......தொங்கல்ஆரம்

 

சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கிவெகு

     ஆசை நேசமும் விளைத்துஇடை உற்ற வரி

     சேலை காலில்விழ விட்டுநடை இட்டுமயி ......லின் கலாபச்

 

சாதி ஆம் என வெருட்டிநடம் இட்டுவலை

     ஆன பேர் தமை இரக்க வகை இட்டுகொடி

     சாக நோய் பிணிகொடுத்து இடர் படுத்துவர்கள் ......பங்கின் ஊடே

 

தாவி மூழ்கிமதி கெட்டுவலம் உற்றவனை,

     பாவம் ஆன பிறவிக்கடல் உழப்பவனை,

     தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் ......  எந்தநாளோ?

 

வாதவூரனை மதித்து,ஒரு குருக்கள் என,

     ஞான பாதம் வெளி இட்டுநரியில் குழுவை

     வாசி ஆம் என நடத்து வகை உற்றுரசன் ......அன்புகாண,

 

மாடை ஆடை தர பற்றி முன் நகைத்துவைகை

     ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்துமகிழ்

     மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் ...... கந்தவேளே!

 

வேத லோகர்,பொன் நிலத்தர்தவ சித்தர்தி

     பார சீல முனி வர்க்கம் முறை இட்டு அலற,

     வேலை ஏவிவுணக் குலம் இறக்க நகை ......கொண்ட சீலா!

 

வேதம் ஈண கமலக்கணர்,மெய் பச்சைரகு

     ராமர் ஈண மயில் ஒக்கமதுரைப் பதியின்

     மேவி வாழ் அமரர்,முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.

 

பதவுரை

 

            வாதவூரனை மதித்து--- திருவாதவூரர் ஆகிய மணிவாசகரைக் குறிக்கொண்டு,

 

           ஒரு குருக்கள் என--- ஒப்பற்ற குருநாதராக எழுந்தருளி,

 

           ஞானபாதம் வெளி இட்டு--- (முக்திக்கு வழிகளான சரியை,கிரியை,யோகம்ஞானம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்து

 

           நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று--- நரிகளின் கூட்டத்தைக் குதிரைகள் ஆகும்படி செய்து அவற்ற நடத்திமகிழ்ந்து,

 

           அரசன் அன்பு காண--- பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட,

 

           மாடை ஆடைதர பற்றி முன் நகைத்து--- பொன்னாடையைக் கொடுக்க. அதனைப் பற்றி வாங்கிமன்னன் முன் நகைத்து,

 

            வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து--- வைகை ஆற்றங்கரையில் கூத்தாடிமண்ணை எடுத்துச் சுமந்து,

 

            மகிழ் மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்தவேளே---மகிழ்வோடுபிட்டுவாணிச்சி ஆகிய வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டு திருவிளையாடல் புரிந்த பித்தனாகிய சிவபெருமான் அருளிய கந்தவேளே!

 

            வேத லோகர் --- வேதம் ஓதும் அந்தணர்,

 

           பொன் நிலத்தர்--- தேவலோகத்தர்,

 

           தவசித்தர்--- தவத்தைப் புரிகின்ற சித்தர்கள்,

 

           அதிபார சீல முனி வர்க்க(ம்) முறை இட்டு அலற--- மிக்க பெருமை வாய்ந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டு அலற,

 

           வேலை ஏவி அவுணக் குலம் இறக்க--- வேலாயுதத்தை விடுத்து அருளிஅவணர் குலம் மடியுமாறு செய்து,

 

            நகை கொண்ட சீலா--- மகிழ்வோடு சிரித்த தூயவரே!

 

            வேதம் ஈண கமலக் க(ண்)ணர்--- அவணர்களால் கவரப்பட்ட வேதங்களை மீட்டுத் தந்த கமலக் கண்ணரும்,

 

           மெய் பச்சை ரகு ராமர் ஈண மயில் ஒக்க--- பச்சை நிறம் உடையவரும் ஆகிய இரகுராமர் ஆகிய திருமாலின் மக்களாகிய வள்ளிதேவயானை ஆகிய தேவிமார் இருவருடன்,

 

           மதுரைப் பதியில் மேவி வாழ்--- மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள

 

           அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே--- தேவர்களும்முத்தர்களும்சிவபத்தர்களும் போற்றிப் பணிகின்ற தனிப்பெரும் தலைவரே!

 

            சீதவாசனை மலர்க்குழல் பிலுக்கி--- குளிர்ச்சி பொருந்திய,நறுமணம் மிக்க மலர்களைச் சூடுகின்ற கூந்தலை அலங்கரித்து,

 

           முகம் மாய வேல்விழி புரட்டி--- முகத்தில் உள்ள மயக்கம் தருகின்ற வேல் போன்ற கண்களைப் புரட்டிப் பார்த்து,

 

           நகை முத்தம் எழ--- சிரிப்புத் தோன்,

 

            தேமல் மார்பின் இள பொன்கிரி பளப்பள என--- தேமல் படர்ந்த மார்பில் உள்ள இளமையான பொன்மலை போன்ற மார்பகங்களின் மீது பளப்பள என மின்னுமாறு,

 

          தொங்கல் ஆரம் சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி--- முத்துமாலைகளை அணிந்துள்ள ஓவியம் என்று சொல்லுமாறு உள்ள உடம்பை மினுக்கி,

 

           வெகு ஆசை நேசமும் விளைத்து--- அதிக ஆசையும் பற்றும் உண்டாகுமாறு செய்து,

 

           இடை உற்ற வரிசேலை காலில் விழவிட்டு --- அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு

 

            நடை இட்டு---  நடை நடந்து,

 

            மயிலின் கலாபச் சாதியாம் என வெருட்டி--- தோகைமயில் என்று சொல்லும்படிபார்ப்பவர்களைத்திகைக்கச் செய்து,

 

            நடம் இட்டு--- நடம் இட்டு வந்து,

 

            வலையான பேர் தமை இரக்க வகை இட்டு--- தமது வலையில் விழுந்த பேர்கள் தம்மைக் கெஞ்சும்படி செய்து,

 

            கொடி சாக நோய் பிணி கொடுத்து--- இறந்துபடும்படியான கொடிய நோயும் பிணியும் உண்டாகும்படி செய்து,

 

            இடர் படுத்துவர்கள் பங்கினூடே--- இடர் உண்டாக்குபவர்களான விலைமாதர்களிடத்தில்,

 

            தாவி மூழ்கி மதிகெட்டு--- அவர்கள் தரும் இன்பத்தில் வலிய மூழ்கி இருந்துஅதனால் அறிவானது கெட்டுப் போய்,

 

            அவலம் உற்றவனை --- துன்பம் அடைந்த அடியேனை,

 

            பாவமான பிறவிக்கடல் உழப்பவனை --- பாவத்துக்குக் காரணமான பிறவியாகிய கடலில் உழல்பவனான என்னை,

 

            தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ--- மாலைகள் விளங்குகின்ற தேவரீரது திருவடி அன்பில் இருத்தி வைப்பதும் எந்தநாளோ?

 

பொழிப்புரை

 

             திருவாதவூரர் ஆகிய மணிவாசகரைக் குறிக்கொண்டுஒப்பற்ற குருநாதராக எழுந்தருளிமுத்திக்கு வழிகளான சரியை,கிரியை,யோகம்ஞானம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்,ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்துநரிகளின் கூட்டத்தைக் குதிரைகள் ஆகும்படி செய்து அவற்ற நடத்திமகிழ்ந்து,பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட,பொன்னாடையைக் கொடுக்க. அதனைப் பற்றி வாங்கிமன்னன் முன் நகைத்து,வைகை ஆற்றங்கரையில் கூத்தாடிமண்ணை எடுத்துச் சுமந்து,மகிழ்வோடுபிட்டுவாணிச்சி ஆகிய வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டு திருவிளையாடல் புரிந்த பித்தனாகிய சிவபெருமான் அருளிய கந்தவேளே!

 

            வேதம் ஓதும் அந்தணர்தேவலோகத்தர்தவத்தைப் புரிகின்ற சித்தர்கள்மிக்க பெருமை வாய்ந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டு அலற,வேலாயுதத்தை விடுத்து அருளிஅவணர் குலம் மடியுமாறு செய்து,மகிழ்வோடு சிரித்த தூயவரே!

 

            அவணர்களால் கவரப்பட்ட வேதங்களை மீட்டுத் தந்த கமலக் கண்ணரும்பச்சை நிறம் உடையவரும் ஆகிய இரகுராமர் ஆகிய திருமாலின் மக்களாகிய வள்ளிதேவயானை ஆகிய தேவிமார் இருவருடன்,மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ளதேவர்களும்முத்தர்களும்சிவபத்தர்களும் போற்றிப் பணிகின்ற தனிப்பெரும் தலைவரே!

 

            குளிர்ச்சி பொருந்தியநறுமணம் மிக்க மலர்களைச் சூடுகின்ற கூந்தலை அலங்கரித்து,முகத்தில் உள்ள மயக்கம் தருகின்ற வேல் போன்ற கண்களைப் புரட்டிப் பார்த்து,சிரிப்புத் தோன்,தேமல் படர்ந்த மார்பில் உள்ள இளமையான பொன்மலை போன்ற மார்பகங்களின் மீது பளப்பள என மின்னுமாறுமுத்துமாலைகளை அணிந்துள்ள ஓவியம் என்று சொல்லுமாறு உள்ள உடம்பை மினுக்கி,அதிக ஆசையும் பற்றும் உண்டாகுமாறு செய்துஅரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டு,  நடை நடந்து,தோகைமயில் என்று சொல்லும்படிபார்ப்பவர்களைத் திகைக்கச் செய்துநடம் இட்டு வந்து,தமது வலையில் விழுந்த பேர்கள்,தம்மைக் கெஞ்சும்படி செய்துஇறந்துபடும்படியான கொடிய நோயும் பிணியும் உண்டாகும்படி செய்துஇடர் உண்டாக்குபவர்களான விலைமாதர்களிடத்தில்அவர்கள் தரும் இன்பத்தில் வலிய மூழ்கி இருந்துஅதனால் அறிவானது கெட்டுப் போய்,துன்பம் அடைந்த அடியேனைபாவத்துக்குக் காரணமான பிறவியாகிய கடலில் உழல்பவனான என்னைமாலைகள் விளங்குகின்ற தேவரீரது திருவடி அன்பில் இருத்தி வைப்பதும் எந்தநாளோ?

 

விரிவுரை

 

சீதவாசனை மலர்க்குழல் பிலுக்கி--- 

 

சீதம் --- குளிர்ச்சி. 

 

பிலுக்குதல் --- பகட்டுக் காட்டுதல். 

     

முகம் மாய வேல்விழி புரட்டி--- 

 

மாய --- மயக்க உணர்வைத் தருகின்ற.

 

தொங்கல் ஆரம் சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி--- 

 

ஆரம் --- முத்துமாலை.

 

ஓவியம் --- ஓவியப் பதுமையைப் போவிலைமாதர்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள்.

 

இடை உற்ற வரிசேலை காலில் விழவிட்டு நடை இட்டு ---  

 

அரையில் கட்டி உள்ள கோடுகள் கொண்ட புடவையை கணுக்கால் அளவு தொங்கும்படி விட்டுநடை நடந்து வருவார்கள்.

 

"உந்திச் சிற்று ஆடு அகை மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.

 

கொடி சாக நோய் பிணி கொடுத்து--- 

 

அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல்பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து,அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக,அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர்.

 

"அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து

     பிணியுழன்று சுற்றித் திரிந்த

    தமையுமுன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ”

                                                                    ---(கருவடைந்து) திருப்புகழ்

 

வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து

     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,

வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்

     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

 

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,

     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்

பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,

     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,     --- திருப்புகழ்.

                                         

 

பாவமான பிறவிக்கடல் உழப்பவனை --- 

 

பிறவி என்பது துன்பத்தைத் தருவதாகவே அமைகின்றது. எனவேஅருளாளர்கள் எல்லாம் பிறவி வேண்டாம் என்றார்கள். 

 

வாதவூரனை மதித்துஒரு குருக்கள் என,ஞானபாதம் வெளி இட்டுநரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்றுஅரசன் அன்பு காணமாடை ஆடைதர பற்றி முன் நகைத்துவைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்துமகிழ் மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன்--- 

 

மாடை ஆடை --- பொன்னாடை.

 

வாசி --- குதிரை.

 

மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன செல்வத்தைத் திருப்பணியில் செலவழித்து,குருந்தடியில் குருவருள் பெற்று சிவஞான போதச் செல்வராய் அமர்ந்திருந்தனர். சிவபெருமான் அவர் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி வேதப் புரவி மீது குதிரைச் சேவகராக மதுரையில் சென்று பாண்டியனிடம் குதிரை விற்று மணிவாசகரை ஆட்கொண்டருளினார்.

 

பரியென்ப நரிகள்தமை நடனங்கொடொருவழுதி

   பரிதுஞ்சவருமதுரை நடராஜன்”        --- (திரைவஞ்ச) திருப்புகழ்.

                                

ஏனைய அன்பர்கள் பற்பல செயற்கரும் செயல்களாம் திருத்தொண்டு புரிந்து பெருமானுக்கு அடிமைப்பட்டனர். சிவப்பிரகாச சுவாமிகள் கூறுமாறு காண்க.

 

கடல்நிற வண்ணன் கண்ஒன்று இடந்து

   மறைச்சிலம்பு அரற்று மலரடிக்கு அணியப்

   பரிதி கொடுத்த சுருதி நாயகற்கு

   முடிவிளக்கு எரித்தும்,கடிமலர்க் கோதைச்

   சுரிகுழல் கருங்கண் துணைவியை அளித்தும்,

   அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்,

   நென்முளை வாரி இன்னமுது அருத்தியும்,

   கோவணம் நேர் தனை நிறுத்துக் கொடுத்தும்,

   அகப்படு மணி மீன் அரற்கு என விடுத்தும்,

   பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும்,

   தலைஉடை ஒலிக்கும் சிலைஇடை மோதியும்,

   மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்,

   தந்தையைத் தடிந்தும்மைந்தனைக் கொன்றும்,

   குற்றம் செய்த சுற்றம் களைந்தும்,

   பூக்கொளும் மாதர் மூக்கினை அரிந்தும்,

   இளமுலை மாதர் வளமை துறந்தும்,

   பண்டைநாள் ஒரு சிலர் தொண்டராயினர்”

 

ஆனால் ஆராலும் காணாத அரனார் ---

 

  “மதுரை மா நகரில் குதிரை மாறியும்,

   விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்,

   நீற்று எழில் மேனியில் மாற்று அடிபட்டும்”.

   

மாணிக்கவாசகரைத் தொண்டு கொண்டனர்.

 

பாண்டிவள நாட்டின்கண் வாயுதேவன் வழிபட்ட தன்மையால் வாதவூர் என்னும் பெயர் பெற்ற திருத்தலத்தில் மானமங்கலத்தார் மரபிலே அமாத்தியர் குலத்து சிவகணத் தலைவரொருவர் வந்து உதித்தனர். அவர் பெயர் “வாதவூரர்”என்பர். அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதி உணர்ந்தார். அவர் வெற்றியைப் பாண்டியன் கேட்டு அவரை வரவழைத்து அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப் பட்டப் பெயர் சூட்டி,மந்திரித் தொழிலில் இருத்தினன். அவர் கலை வன்மையாலும்,சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர் தலைவனாயிருந்து பாவக் கடலினின்றும் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை நாடியிருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதிகளை அளித்து அனுப்பினான். பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலயம் சென்று மீனாட்சி அம்மையையும் சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய வேண்டுமென்று வணங்கிவேதியர் ஒருவர் எதிர்ப்பட்டு அளித்த திருநீற்றை அணிந்துகொண்டு,நற்குறி என்று வந்து சேனைகள் சூழப் புறப்பட்டு திருப்பெருந்துறையை அடைந்தார். அத்தலத்தைச் சாரும் முன்னரே,காயமும் நாவும் நெஞ்சும் ஒரு வழிபட்டு பேரன்பு மிகுதலால் கண்ணீர் மல்கிக் கசிந்து உருகி,சிரமிசைக் கரங்குவித்து,மயிர் சிலிர்த்து,அனலில் பட்ட மெழுகென உருகினார். பண்டைத் தவப்பயன் கைகூடப் பெற்ற வாதவூரர் அதிசயம் உற்று, “இத்தலத்தை அணுகுத் முன்னரே பேரன்பு முதிர்ந்தது. சிவத் திருத்தலங்களில் இதனை ஒத்தது வேறில்லைஇங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவம் செய்தோமோஎன்று தம்முள் நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்நானே அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக விடுத்தார்.

 

சிவபெருமான் மாணிக்கவாசகர் பொருட்டு காட்டில் உள்ள நரிக் கூட்டங்களை எல்லாம்குதிரைகள் ஆக்கிக் கொண்டுவேதப் பரி மீது சென்று அரிமர்த்தன பாண்டியன் முன் நடாத்திக் காட்டி அருளினார். அவன் மகிழ்ந்து அறித்த பொன்னாடையைத் தனது கோலால் வாங்கி அருள் புரிந்தார்.சர்க்கஸ் தொழில் நடத்துபவர் எல்லா விலங்குகளையும் அடக்கி மக்கள் முன் நிறுத்திக் காட்டுவர். ஆனால்நரி ஒன்று மட்டும் மனிதனுக்கு அடங்குவதில்லை. சர்க்கஸில் நரியைப் பார்க்க இயலாது. ஆகவேயாரும் செய்யாத செயலைச் சிவபெருமான் செய்து காட்டி அருளினார்.

 

பின்னர் வாதவூரர் பொய்கையில் நீராடித் திருநீறு தரித்து,சிவபெருமானை வணங்குதற்குத் தனியே ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்த மரத்தின் நிழலில் தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்னும்படியா,மாணவர் குழாம் சூழ குருவடிவம் தாங்கி சிவபெருமான் வீற்றிருந்தனர். அத் தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர் செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை தோயப் பன்முறை வணங்கி விண்மாரி என்ன கண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர். தன்வசமிழந்து நின்ற மெய்யடியாரைக் கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கஞ் செய்து அருகில் அழைத்து,முறைப்படி தீட்சை முதலியன செய்து ஐந்தெழுத்தை உபதேசித்து நல்லருள் பாலித்தனர்.

 

அன்னவர் ஒல்கி மெல்ல அஞ்சி அஞ்சலியிற் செல்லப்

பன்முறை முறுவல் கூர்ந்து பாவனை செய்து பண்பில்,

தன்னடி சூட்டி,நாமஞ் சாத்திஆசாரம் பூட்டிச்

சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்.

                                                            --- திருவிளையாடல் (புலியூர் நம்பி)

 

"பண்சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும்

பெண்சுமந்த பாகத்தன்,பெம்மான்,பெருந்துறையான்,

விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,

கண்சுமந்த நெற்றிக் கடவுள்,கலிமதுரை

மண்சுமந்து,கூலிகொண்டு,அக்கோவால் மொத்துண்டு,

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"--- திருவாசகம்.

 

சிவபெருமான் மண் சுமந்த வரலாறு

 

மதுரையில் நாள்தோறும் அவித்த பிட்டை ஆலவாய் அண்ணலுக்கு என்று நிவேதித்துஅதனை விற்று வாழ்ந்தனள் வந்தி. அந்த அம்மைக்கு மகப்பேறு இல்லை. அதனால் அப்பேரைப் பெற்றனள். அந்த அம்மை சோமசுந்தரக் கடவுளிடம் இடையறாத மெய்யன்பு பூண்டவள்.

 

வையை ஆற்றில் பெருவெள்ளம் சிவபெருமான் ஆணையால் பெருகியது. அரிமர்த்தன பாண்டியன் கரையை உயர்த்துமாறு கட்டளை இட்டனன். செல்வம் உடையவர்கள் ஆள் வைத்துக் கரையை உயர்த்தினார்கள். ஏழைகள் தாமே சென்று கரையை மேடு செய்தனர்கள். வந்திக்குப் பணமும் இல்லை. ஆளும் இல்லை. என் செய்வாள்?  ஏங்கினாள்இரங்கினாள்மீனவன் ஆணையால் நடுங்கினாள்அழுதாள்தொழுதாள்.

 

துணைஇன்றிமக்கள்இன்றிதமர்இன்றிசுற்றம் ஆகும்

பணையின்றிஏன்று கொள்வார் பிறர் இன்றிபற்றுக்கோடாம்

புணைஇன்றிதுன்பத்து ஆழ்ந்துபுலம்புறு பாவியேற்குஇன்று,

இணைஇன்றி இந்தத் துன்பம் எய்துவது அறனோ எந்தாய்.

 

தேவர்க்கும் அரியன் ஆய தேவனேஅன்பர் ஆவார்

யாவர்க்கும் எளியன்ஆகும் ஈசனேவேந்தன் ஆணைக்

காவல்செங் கோலார் சீற்றம் கடுகுமுன் கூலியாளாய்

ஏவல்செய் வாரைக் காணேன்ஏழையேன் இனிஎன் செய்வேன்.

 

என்று தளர்ந்த வயதுடைய வந்தியம்மை உள்ளம் தளர்ந்தாள். 

 

இறைவன் ஏழை பங்காளன். ஏழை --- பெண். பங்கு ஆளன் --- உமையை இடப் பாகத்தில் வைத்து ஆள்பவன்.

 

இப்போது ஏந்திழையாகிய வந்தியின் பங்குக்கு ஆளாக வருகின்றார். அவருடைய கருணையே கருணை. திருக் கயிலையில் இருந்தபடியே வந்தியின் பங்குக் கரையை சங்கல்பத்தினாலேயே உயர்த்தி விட்டு இருக்கலாம். வந்திக்கு ஆள்வேண்டும் என்ற கவலைதான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கின்படி எம்பெருமான் கூலியாளாக வந்தார். 

 

"திடங்காதல் கொண்டு அறவோர் 

     திருவேள்வி தரும் அமுதும்

இடங்காவல் கொண்டு உறைவாள் 

     அருத்து அமுதும் இனிது உண்டும்

அடங்காத பசியினர் போல்

     அன்னை முலைப் பால் அருந்த

மடங்காத பெருவேட்கை 

     மகவுபோல் புறப்பட்டார்".

 

அழுக்கடைந்த ஒரு பழந்துணியை உடுத்திசும்மாடு மேல் ஒரு பழங்கூடையைக் கவிழ்த்துதேய்ந்த மண்வெட்டியை தோள்மேல் வைத்துக்கொண்டார். 

 

"ஆலுமறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக்

கூலிகொடுத்து என்வேலை கொள்வார் உண்டோ என்றென்று

ஓலமறைத் திருமொழிபோல் உரைபரப்பிக் கலுழ்கண்ணீர்

வேலையிடைப் படிந்து அயர்வாள் வீதியிடத்து அணைகின்றார்".

 

வேதமுடிவாகிய அதர்வ சிகையில் விளங்கும் அவருடைய திருவடிக்கமலம் மதுரையின் வீதியில் படுகின்றது. நிலமகள் செய்த பெருந்தவம். "கூலியோ கூலி" என்று ஓலமறைத் திருமொழிபோல் வாய்விட்டுக் கூவுகின்றார்.  கண்ணீர்க் கடலில் முழுகி இருக்கும் வந்தியம்மை வீட்டிற்கு நேராக வந்து "கூலியோ கூலி" என்று கூவியருளினார்.  

 

தாய்தந்தை இல்லாத தற்பரனை வந்தி கண்டாள். ஆனந்தம் கொண்டாள்."அப்பா! இப்படி வா. உன்னைப் பார்த்தால் நன்றாக சுகத்தில் இருந்து வந்தவனைப் போல் காண்கின்றதே. ஏனப்பா இப்படி கூலியாளாக வந்தனை?” என்று வினவினாள்.  

 

கூலியாளாய் வந்த குருபரன், "பாட்டீ! எனக்குத் தாய் தந்தைகள் ஒருவருமில்லை. சுடலையில்தான் இருப்பேன். பேய்கள் தான் எனக்கு உறவு. என் மனைவி அன்னபூரணி. அறம் வளர்த்தாள். ஆனால் என்னை பிட்சாடனம் செய்ய விட்டுவிட்டாள்.  இன்னொருத்தி தலைமீது ஏறிக்கொண்டாள். மூத்தபிள்ளைக்கு மகோதரம். ஊரில் என்ன விசேடம் ஆனாலும் அவன் போய்த்தான் ஆகவேண்டும். இளைய பிள்ளை தகப்பன் சுவாமி ஆகிவிட்டான். என்ன செய்வேன்?விடத்தையும் உண்டேன். எனக்கு மரணம் இல்லையென்று எல்லோரும் கூறுகின்றனர். அதனால் மண்ணெடுத்துப் பிழைக்கலாம் என்று வந்தேன்" என்றார்.

 

வந்தியம்மை, "அப்பனே! பாவம் உன்னைப் பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகின்றது. இந்த ஊரில் பெரும் பெருந்தனவந்தர்கள் இருக்கின்றனர். அங்கெல்லாம் போயிருந்தால் நல்ல கூலி கிடைத்திருக்கும். நான் பரம ஏழை. என்னிடம் வந்து சேர்ந்தாய்.  என்னிடம் காசு பணம் இல்லை. பிட்டு வியாபாரம் செய்பவள். பிட்டைத் தருவேன். பிட்டுக்கு மண்ணெடுக்கவேணும். உனக்கு உடன்பாடா" என்று கேட்டாள்.  

 

கூலியாள், "பாட்டீ! மிகவும் நல்லது. நீ காசு பணம் தந்தால்நான் அதனை அப்படியே தின்னமுடியாது.கடையில் போய் ஆகாரம் வாங்கி அருந்தவேண்டும். நீ பிட்டாகவே தந்துவிட்டால்கடைக்குப் போகும் வேலை இல்லாது போகும். பிட்டுக்கே மண் சுமக்கிறேன்" என்றார். 

 

வந்தியம்மை, "அப்பனே! இன்னொரு சங்கதி. உதிர்ந்த பிட்டைத் தான் உனக்குத் தருவேன். உதிராத பிட்டை விற்றுநாளைக்கு அரிசி வாங்க வைத்துக் கொள்வேன். உனக்குச் சம்மதமா?” என்றாள்.  

 

எம்பிரான், "பாட்டீ! மிக நல்லது. உதிராத பிட்டைத் தந்தால்நான் உதிர்த்துத் தானே சாப்பிடவேண்டும். உதிர்ந்ததைத் தந்தால்உதிர்க்கின்ற வேலை இல்லாது போகும். அந்தக் கவலை உனக்கு வேண்டா. இப்போது சிறிது கொடு" என்றார்.

 

வந்தியம்மை ஐந்தெழுத்தைச் செபித்தவண்ணமாகவே,அவித்த,தூய்மையும் இனிமையும் உடைய பிட்டை எடுத்து, "அருந்துஅப்பா!” என்று இட்டாள்.  

 

பெம்மான் சும்மாட்டுத் துணியை விரித்து ஏந்தி, "ஆலவாய் அண்ணலுக்கு இது ஆகுக" என்று கூறி தலையை அசைத்து அசைத்து அமுது செய்தார்.  

 

ஆலமுண்ட நீலகண்டன் அடியாள் தந்த பிட்டைப் பெருமகிழ்ச்சியுடன் உண்டு, "பாட்டியம்மா! இனி நான் போய் மண் சுமப்பேன். இன்னும் மாவு இருந்தால் பிட்டு சுட்டு வையும்" என்று கூறிவிட்டுவையைக் கரையை அடைந்தார்.  

 

பதிவு செய்த புத்தகத்தில், 'வந்தியின் ஆள் சொக்கன்என்று பேர் பதிவு செய்தார்.

 

"வெட்டுவார்,மண்ணைமுடி மேல்வைப்பார்,பாரம் எனக்

கொட்டுவார்,குறைத்து எடுத்துக் கொடுபோவார்,சுமடுவிழத்

தட்டுவார்,சுமை இறக்கி எடுத்ததனைத் தலைபடியக்

கட்டுவார்டன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார்".

 

"இவ்வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்துஇளைத்துக்

கைவண்ண மலர் கன்றக் கதிர்முடிமேல் வடு அழுந்த

மைவண்ணன் அறியாத மலரடி செம் புனல்சுரந்து

செவ்வண்ணம் படைப்ப ஒரு செழுந்தருவின் மருங்கு அணைந்தார்".

 

"வானத்தில் மண்ணில் பெண்ணின்

            மைந்தரில் பொருளில் ஆசை

தான் அற்றுத் தமையும் நீத்துத்

            தத்துவம் உணர்ந்த யோகர்

ஞானக்கண் கொண்டே அன்றி,

            நாட அருஞ் சோதி,மண்ணோர்

ஊனக்கண் கொண்டும் காண

            உடன் விளையாடல் செய்வார்".

 

வெட்டுவார். மண்ணை முடிமேல் வைப்பார். பாரம் என்று கீழே கொட்டுவார். குறைத்து எடுப்பார். சும்மாடு விழத் தட்டுவார்.  சுமை இறக்கி சும்மாட்டைத் தலை படியக் கட்டுவார். மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கில் கொட்டுவார். அதனால் சிறிது உயர்ந்த கரையை உடைப்பார். ஆடுவார்.  இனிது பாடுவார். நகை செய்வார். எல்லோரும் தன்னையே பார்க்குமாறு குதிப்பார். மணல்களைக் குவிப்பார். ஓடுவார். மீள்வார். கூடையைத் தண்ணீரில் போட்டுஅதனை எடுக்க வெள்ளத்தில் குதித்துத் தவிப்பதுபோல் நடிப்பார். கரை ஏறுவார்.  வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் ஆசையற்றுதனையும் அற்ற யோகியர் ஞானக்கண் கொண்டே அன்றிநாடருஞ்சோதிமண்ணோர் ஊனக்கண் கொண்டுங்காண உடன் விளையாடுவார்.

 

அருளினால் உலகமெல்லாம் ஆக்கியும் அளித்தும் நீத்தும் பெருவிளையாடல் செய்யும் பிறைமுடிப் பெம்மான் இவ்வாறு விளையாடல் செய்ய,ஓச்சுகோல் கையராகி அருகு நின்று ஏவல் கொள்வார் அடைகரை காண வந்தார். எல்லாப் பங்கும் அடைபட்டு இருக்கின்றன. வந்தி பங்கு மட்டும் அடைபடவில்லை. 

 

"வந்திக்குக் கூலியாளாய் வந்தவன் யார்?” என்று ஓடிமன்மத மேனியராய் விளங்கும் பெருமானை நோக்கி,  "தம்பீ! அந்தப் பங்கெல்லாம் அடைபட்டனவேஏன் நீ இந்தப் பங்கை அடைக்காமல் வாளா கிடக்கின்றனை?” என்று வினவினார். விரிசடைப்பெருமான் சிரித்தனர்.  

 

"இவன் என்ன பித்தனோபேய் பிடித்த மத்தனோவந்தியை ஏமாற்ற வந்த எத்தனோஇந்திர சாலம் காட்டும் சித்தனோஇவன் யாரோ தெரியவில்லையே?” என்று திகைத்தார்கள்.

 

அரிமர்த்தன பாண்டியர் கரைகாண வருகின்றார். அமைச்சர் பலர் புடைசூழ்ந்து வருகின்றனர். ஏவலர் வெண்சாமரை இரட்டுகின்றனர். கரையைக் காண்பாராகி வந்த காவலன்வந்தியின் பங்கைக் கண்டார். "ஏன் இந்தப் பங்கு அடையவில்லை?” என்று கேட்டார். கண்காணிப்பாளர், "மன்னரேறே இது வந்தியின் பங்கு. அவள் ஒரு ஆளை வைத்தனள். அந்த ஆள் இதனை அடைக்காமல் உன்மத்தனைப் போல் இருக்கின்றான்" என்றார். "எங்கே அவன்?” என்று சீறினார் மன்னர்.

 

வள்ளல்தன் சீற்றம்கண்டு மாறுகோல் கையர்அஞ்சித்

தள்ளரும் சினத்தராகிதடக்கைதொட்டு ஈர்த்துப் பற்றி,

உள்ளொடு புறம்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்துநின்ற

கள்வனை இவன்தான் வந்தி ஆள்எனக் காட்டிநின்றார்.

 

எங்கும் நிறைந்து ஒளிந்திருக்கும் கள்வனை ஈர்த்துக் கொண்டுபோய், "இவன்தான் வந்தியின் ஆள்" என்று காட்டினார்கள்.

 

கண்டனன் கனன்று வேந்தன் கையில்பொன் பிரம்புவாங்கி

அண்டமும் அளவுஇலாத உயிர்களும் ஆகமாகக்

கொண்டவன் முதுகில்வீசிப் புடைத்தனன்கூடையோடு

மண்தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்தசோதி.

 

எல்லா உலகங்களையும்எல்லா உயிர்களையும் தனது உடம்பாக உடைய எம்பிரானைப் பிரம்பால் பாண்டியன் முதுகில் ஓங்கி அடித்தான். அந்த அடி எல்லா உயிர்களின் மீதும்,எல்லாப் பொருள்களின் மீதும் பட்டது. அவர் எங்கும் நிறைந்தவர். எம்பிரான் மறைந்தார். வந்திக்குக் காட்சி அளித்தார். திருக்கயிலையில் அவளைச் சேர்த்து அருளினார். பாண்டினுக்கு அசரீரியாக அருள் புரிந்தார்.

 

வேத லோகர்..... வேலை ஏவி அவுணக் குலம் இறக்கநகை கொண்ட சீலா--- 

 

முருகப் பெருமானுடைய விசுவ ரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்சஉலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தனன். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபன்மன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.

 

"நண்ணினர்க்கு இனியாய் ஓலம்ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம்பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம்யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்".

 

"தேவர்கள் தேவே ஓலம்சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம்வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம்பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம்ஓலம்".

 

"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கிவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய்நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.

 

"ஏய்என முருகன் தொட்டஇருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும்  அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீஅழல் சிகழி கான்று  சென்றிட அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே".

 

அதுகண்ட சூரபன்மன்வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவண் ஒளித்தனன். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.

 

திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்....         ---  வேல் வகுப்பு.                                                                                                                              

 

சூரபன்மன் அண்ட முகடு முட்டநூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்றுமண்ணும் விண்ணும் விழல் பரப்பிகிளைகளை அசைத்துஉலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான். அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திக்கயங்கள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகிமடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும்மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகிபழைய அசுர வடிவம் கொண்டுவாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்துவேதங்கள் ஆர்ப்பதேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்றுஅங்கியின் வடிவம் நீங்கிஅருள் வடிவைத் தாங்கிவான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.

 

"புங்கவர் வழுத்திச் சிந்தும்பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கிஅருள்உருக் கொண்டுவான்தோய்

கங்கையில் படிந்து மீண்டுகடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கைஎய்திவீற்று இருந்ததுஅன்றே".

 

சிவபெருமான் தந்த வர பலத்தால்சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகிமீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும்மற்றொரு கூறு மயிலுமாகிமிக்க சினத்துடன் சிறகுகளை வீசிஅதனால் உலகங்களைத் துன்புறுத்திமுருகவேள் திருமுன் வந்தான்.

 

தாவடி நெடுவேல் மீளத்தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டுமெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகிசினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடிஅமர்த்தொழில் கருதி வந்தான்.

 

அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கிதெளிந்த உள்ளமும்சிவஞானமும்அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும்மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல்கந்தவேள் கருணை நோக்கால்சூரன் மறவடிவு நீங்கிஅறவடிவு பெற்றான்.

 

"மருள்கெழு புள்ளே போல

     வந்திடு சூரன்எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த

     ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி

     நின்றனன்சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன்           

     ஆகிய இயற்கை யேபோல்".

 

"தீயவை புரிந்தா ரேனும்

     முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத்      

     தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ,          

     அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ

     வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்". ---  கந்தபுராணம்.

 

.....            .....            .....   "சகம்உடுத்த

வாரிதனில்புதிய மாவாய்க் கிடந்தநெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய்அடல் மயிலும்சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்துஎழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!"                                        --- கந்தர் கலிவெண்பா.

 

தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,

     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர்அத்

தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்துஇடம் புக்குத்

     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.                                     --- பொதுத் திருப்புகழ்.

 

கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்துஇரு கூறு எனவேஅது

     கதித்து எழுந்துஒரு சேவலும் மாமயில் ...விடும்வேலா!         --- அவிநாசித் திருப்புகழ்.

 

கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்

     குரைகடல் செம்பசக்- ...... கரவாளச்

சிலை பகஎண் திக்குத் திகிரிகளும் பத்துத்

     திசைகளினும் தத்த...... செகம் ஏழும்

திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!

     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.        --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.

 

கொலைகாட்டு அவுணர் கெடமாச் சலதி

     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு

     கொதிவேல் படையை ...... விடுவோனே!         --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.

 

வேதம் ஈண கமலக் க(ண்)ணர்--- 

 

கமலக்கண்ணர் --- தாமரை போன்ற கண்களை உடைய திருமால்.

 

சோமுகன் என்ற அரக்கன் பிரமதேவர்பால் இருந்த வேதங்களை அவர் அறியாவண்ணம் கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்தான் திருமால் கடலில் மீனாக அவதரித்து சோமுகனைக் கொன்றுநான்கு வேதங்களையும் கொணர்ந்து பிரமதேவர்பால் தந்து அருள் புரிந்தார்.

 

மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே--- 

 

சிவசாதனங்கள் மூன்று --- திருநீறுகண்டிகைதிருவைந்தெழுத்து.  இவற்றுள் முன் நிற்பது திருநீறு. கருநீறு படுத்தும் திருநீற்றின் பதிகம், "மந்திரமாவது நீறு" பெற்ற பழம்பதி மதுரையம்பதி. ஆதலின்மதுரை மிகச் சிறந்த திருத்தலம்.

 

 

 

கருத்துரை

 

முருகா! காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்து அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...