எல்லாம் அறிந்தவரும் இல்லை
ஏதும் அறியாதவரும் இல்லை
-----
"எல்லாம் அறிந்தவரும், ஏதும் அறியாதவரும்
இல்லை எனும் இவ்வுலக மீது,
ஏதும் அறியாதவன் எனப் பெயர் தரித்து, மிக
ஏழைக்குள் ஏழையாகிக்
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான்"
என்பார் தாயுமான அடிகளார்.
இந்த உலகில் அனைத்து நூலும் அறிந்த பேரறிஞர்களும், ஒன்று கூடத் தெரியாத முழுமூடர்களும் ஒருவரைக் கூடக் காணமுடியாது என்று சொல்லப்படும்போது, நான் ஒன்றும் அறியாத வெறும் அறிவிலிகளுக்கு எல்லாம் அறிவிலியாக உள்ளேன்.
எனக்கு எல்லாம் தெரியும் என்பவர்களை நிரம்பவே கண்டுள்ளது இந்த உலகம். ஏதும் அறியாதவன் நான் என்று, எல்லாம் அறிந்த ஞானிகளைத் தவிர யாரும் ஒத்துக் கொள்வதில்லை. அவரவர் அறிந்த வகையில், நான் அறிந்துள்ளவன் என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்வது வழக்கம் தான். அறியாத ஒன்றை, அறிந்த ஒருவர் அறியுமாறு சொன்னால், "உனக்கென்ன தெரியும்?" என்று எதிர்வாதம் புரிவதும் உலக வழக்கம். ஒருவர் ஒன்று சொன்னால், அதற்கு மாற்றாக இன்னொன்றைச் சொல்லி வாதம் புரிவதே இன்றைய உலக வாடிக்கை.
..... ..... ..... "கைவல்ய ஞானநீதி
நல்லோர் உரைக்கிலோ, கர்மம் முக்கியம் என்று
நாட்டுவேன், கர்மம் ஒருவன்
நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன், வடமொழியிலே
வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்,
வல்லதமிழ் அறிஞர் வரின், அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிது புகல்வேன்". --- தாயுமானார்.
இதன் பொருள் ---
வீடுபேறு தரும் இறைஞான (கைவல்லிய ஞானம்) நீதியை நல்லவர்கள் சொன்னால், அதைவிடக் கர்மமே முக்கியம் என்று நிலைநாட்டுவேன்.கர்மத்தின் சிறப்பைப் பேசுவோரிடம், ஞானமே சிறப்புடையது என்பேன். வடமொழியில் வல்லவர்கள் சொல்லும் கருத்தைத் தமிழ் நூல்கள் கொண்டு மறுப்பேன். நல்ல தமிழறிஞரைக் கண்டால், சில வடமொழி வசனங்களைக் கூறி அவரை மிரளச் செய்வேன்!" என்று சொன், தாயுமான சுவாமிகள்.
"வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தை என், முத்தி தருமோ?"
என்று வாதம் புரிவதன் விளைவு இன்னது என்று காட்டினார். கற்ற கல்வியைக் கொண்டு எவரோடும் வாதடுவதே வழக்கமாக இருக்குமாயின், அந்த அறிவினால் முத்தி வாய்க்காது என்றார். முத்தி வாய்க்காது என்பது மட்டுமல்ல,அந்த அறிவினால் யாதொரு பயனும் இல்லை.
கற்ற கல்வி அறிவைக் கொண்டு நாம் கற்றது தான் கல்வி என்று எண்ணமால், நூலறிவு பெற்றவரிடத்தில் கேட்டும் அறிவு பெறவேண்டும்.
"உணற்கு இனிய இன்னீர் பிறிதுழி இல் என்னும்
கிணற்று அகத்துத் தேரை போல் ஆகார், – கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின் கேட்டலே நன்று"
என்கின்றது "பழமொழி நானூறு" என்னும் நூல்.
முற்றப் பகலும் --- நாள்தோறும். முனியாது --- வெறுப்புக் கொள்ளாது. பொருள் விளங்காதபோது, நூலின்பால் வெறுப்புத் தோன்றுதல் இயல்பு.
கிணற்றிலே உள்ள தேரையானது, அந்தக் கிணற்று நீரையே உண்டு வாழும். கிணற்று நீர் இனிமையாக உள்ளது, இதைப் போல வேறு இனிமையான நீர் எங்குமே கிடைக்காது என்று கிணற்றில் வாழ்ந்திருந்த தவளை எண்ணியதாம். அந்தக் கிணற்றுத் தவளையைப் போல அறிவு உடையார் ஆகமாட்டார்கள். நூல்களை முழுவதுமாக நாள்தோறும், விருப்பு வெறுப்பு இல்லாமல் இனிதாகப் படித்து அறிதலைக் காட்டிலும், அவற்றைத் தக்கவர் சொல்லும்போது கேட்டு அறிந்து கொள்ளுதல் நன்மையைத் தரும். தானே கற்று வரும்போது சந்தேக விபரீதங்கள் தோன்றும். பொருள் அறிந்து கற்ற பெரியோர்களை நாடி இருந்து, கேட்டுத் தெளிவதே சிறப்பு. எனவேதான், "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.
ஒரு கிணற்றில் ஒரு தவளை நீண்ட காலம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் கடலில் வசித்து வந்த ஒரு தவளை அந்தக் கிணற்றில் விழுந்தது. உடனே அந்தத் தவளையைப் பார்த்து "நீ எங்கிருந்து வருகிறாய்?"என்று கேட்டது. "நான் கடலில் இருந்து வருகிறேன்" என்று சொன்னவுடன் "கடல் எவ்வளவு பெரியது" என்று கிணற்றுத் தவளை கேட்டது. "அது மிகப் பெரியது" என்று கடல் தவளை சொன்னது. கிணற்றுத் தவளை, அந்தக் கிணற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்குத் தாவி, "இவ்வளவு பெரிதாக இருக்குமா?" என்று கேட்டது.
கடல் தவளை, "கடல் என்பது மிகப் பெரியது" என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை பழைய இடத்துக்குத் திரும்பித் தாண்டியது. "இவ்வளவு பெரிதாக இருக்குமா?" என்று கேட்டது.கடல் தவளை, "நீ முட்டாள் ஆக உள்ளாய். கடல் மிகமிகப் பெரியது"என்று சொன்னது.
உடனே, "நான் இருக்கும் கிணற்றை விடப் பெரியதாக ஒரு இடம் இருக்க முடியாது" என்று சொல்லி அந்தத் தவளையைப் பொய்யன் என்று கூறி வெளியேறச் சொன்னது.
இப்படித்தான் நாம் கிணற்றுத் தவளையாக இருக்கின்றோம். நாம் அறிந்தது தான் உண்மை என்று நாமே முடிவுகட்டிக் கொண்டுள்ளோம். அவரவர் சார்ந்துள்ள சமய நெறியைக் கூட முழுதும் அறியாமல், முற்றும் அறிந்ததாகப் பறைசாற்றிக் கொள்கிறோம். சமய உண்மைகளை முற்றிலும் அறிந்தவர் யாரும் பிறரோடு பிணக்குக் கொள்ள மாட்டார். பிற சமயங்களையும் அறிந்து தெளிதல் இல்லாமல், உயர்வு தாழ்வு கற்பித்துப் பேசுவது கூடாது.
"நான் இந்துக் கிணற்றிலும், மற்றவர்கள் அவர்கள் கிணற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரவர்கள் அவர்கள் கிணறே உலகம் என்றிருக்கிறோம். இந்தச் சிறிய உலகத்தின் தடைகளைத் தகர்த்து எறிய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய கடவுள் உதவட்டும்" என்றார் சுவாமி விவேகாநந்தர் 150ஆண்டுகளுக்கு முன்.
இதையே, விவேகானந்தருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சொல்லுகிறார். மேலே உள்ள கதையில், தவளை என்பதற்குப் பதிலாக, கடல் ஆமை,கிணற்று ஆமையைச் சந்தித்ததாக அப்பர் பாடிய பாடல் இதோ:
"கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பது அரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே"
ஐந்தாம் திருமுறையில் வரும் "ஆதிபுராணத் திருக்குறுந்தொகை"யில் ஒரு தேவாரப் பாடல் இது.
கிணற்றில் வசிக்கும் ஆமையானது, கடல் ஆமையைப் பார்த்து, "நீ இருப்பதாகச் சொல்லும் கடலானது, இந்தக் கிணற்றின் அளவுக்குப் பெரிதாக இருக்குமா?" என்று கேட்டது. கிணற்றில் வாழ்ந்திருக்கும் ஆமைக்கு, கடலின் தன்மை இன்னது என்று தெரியாது. அதுபோல, பாவத்தையே பயின்று, மெய்ப்பொருள் உணரும் நுண்ணறிவு பெறாதோருக்கு சிவனுடைய பெரிய தன்மையை அறிய முடியாது.
சைவசமயம் சார்ந்தோர்க்கு இறைவன் சிவன். பிற சமயத்தோர்க்கு அவரவர் வணங்கும் வடிவில் ஆன கடவுள். இதுதான் சமயங்களின் உண்மை. "பின்னும் கருதுவார் கருதும் உருவம்" என்பது ஒன்பதாம் திருமுறை.
சமயம் கடந்த, ஒப்பற்ற தனிமுதல் ஞானியாகிய திருவள்ளுவ நாயனார், "மலர்மிசை ஏகினான்" என்றார். வைணவ சமயத்தைச் சார்ந்து இருந்தும், சமயக் காழ்ப்புணர்ச்சி இல்லாத பரிமேலழகர் இதற்கு, "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண், அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், 'ஏகினான்' என்று இறந்த காலத்தால் கூறினார்" என்று உரை வகுத்தார்.
இறந்த காலத்தால் 'ஏகினான்' என்று கூறுவது, 'ஏகின்றான்' என்று நிகழ்காலத்திற்கும், 'ஏகுவான்'என்று எதிர்காலத்திற்கும் பொருந்தி, முக்காலத்தையும் குறித்து நின்றது.
அவரவர் விருப்பப்படி இறைவனை வழிபடலாம். இப்படித்தான் புறத்திலே இருப்பான் என்பார்க்கும், இப்படித்தான் உள்ளத்திலே இருப்பான் என்பார்க்கும் அவரவர் கருத்துப்படி இருப்பான். உள்ளத்திலும் அவன் இல்லை, புறத்திலும் இல்லை என்பார்க்கு, அவரவர் கருத்துப்படியே வெளிப்பட விளங்காமல் மறைந்தே இருப்பான் என்கிறார் திருமூல நாயனார்.
"உள்ளத்தும் உள்ளன், புறத்து உளன் என்பார்க்கு,
உள்ளத்தும் உள்ளன், புறத்து உளன் எம் இறை,
உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பார்க்கு,
உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே.
யார் யார் எந்தெந்த வடிவில் வழிபடுகின்றார்களோ, அந்த வடிவத்தில் எழுந்தருளி அருள் புரிபவன் இறைவன். நாள்தோறும் எல்லோரும் கேட்டு மகிழும், "கந்தர் சஷ்டி கவசம்" கூறுவதும் இந்த உண்மையைத் தான்.
"எனைத் தடுத்து ஆட்கொள்ள,என் தனது உள்ளம்
மேவிய வடிவு உறும் வேலவ போற்றி!"
உள்ளத்தில் எந்த வடிவத்தோடு இறைவனை நினைந்து வழிபடுகின்றோமோ, அந்த வடிவத்தில் எழுந்தருள்பவன் இறைவன்.
"ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்து உள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்" என்றார் அப்பர் பெருமான். உள்குதல் --- தியானித்தல்.
எல்லாம் அறிந்தவரும் இல்லை; ஏதும் அறியாதவரும் இல்லை. கல்லாத புல்லறிவில் கடைப்பட்டவர் ஆகாமல் காத்துக் கொள்வது நல்லது.
தட்டுவார் இல்லாமல், வாத்தியத்தில் இனிய ஓசை உண்டாகாது. வாத்தியத்தை வைத்துக் கொண்டு பெருமை பேசுவதால் பயனில்லை. நூல்களைக் கற்பதனால் வரும் அறிவு மட்டுமே செல்லுபடியாகாது.
No comments:
Post a Comment