அற்பர்கள் நன்றி அறியாதவர்கள்

 


அற்பர்கள் நன்றி அறியாதவர்கள்

-----

 

     ஒரு மனிதனிடத்தில் இருக்கவேண்டிய குணங்களுள் முதன்மையானது நன்றியறிவு. மனிதனை உயர்த்துவது நன்றி மறவாமையே. ஆன்முலை அறுத்த பாவம். கள் குடித்த பாவம். கொலை புலை புரிந்த பாவம் ஆகிய எல்லாப் பாவங்களுக்கும் கழுவாய் உண்டு. கழுவாய் இல்லாத – உய்தி இல்லாத பாவம் நன்றி கோறல் ஒன்றே.."எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்உய்வு இல்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு".என்பார் திருவள்ளுவ நாயனார்.

 

     மேலும்நன்றி செய்தவன் பின்னொரு காலத்தில் கொன்றதை ஒத்த கொடுமையைப் புரிந்தாலும்அவன் முன்னர் தமக்குப் புரிந்த நன்றியை நினைத்துஅவனுக்குத் தீங்கு புரியாமல் நல்லவர்கள் ஒதுங்கி,அவன் முன் செய்த நன்றியைப் பாராட்டி அவனுக்கு நன்மையே செய்வர் என்பதைக் காட்ட,"கொன்றன்ன இன்னா செயினும்அவர்செய்தஒன்று நன்று உள்ளக் கெடும்" என்று அருளினார் நாயனார்.

 

     நன்றி மறந்த பாவிகள் ஒருபோதும் ஈடேறமாட்டார்கள். அவர்கள் விரைவில் அழிவர். அவரைக் கொல்வதற்குகூற்றுவன் வரவேண்டாம். அவர் மறந்த நன்றியே அவரைக் கொன்றுபோடும்.

 

ஒன்றுஒரு பயன்தனை உதவினோர் மனம்

கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்

புன்தொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே

கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ?.

 

என்பது கந்தபுராணம்.

 

     நன்றி பலசெய்துஒரு தீங்கு புரியினும்புல்லர் அந்த தீங்கையே பெரிதாக எண்ணிஎல்லா நன்றிகளையும் உடனே மறந்து விடுவர் என்பதை,

 

ஒன்று உதவி செய்யினும் அவ்உதவி மறவாமல்

பின்றை அவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக ஒருநவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முதுகயவர் நினையாரே.

 

என்று வில்லிபாரதம் கூறும்.

 

இதன் பொருள் ---

 

     ஒன்று உதவி செய்யினும் --- (ஒருத்தர்) ஓர் உதவி செய்தாரே ஆனாலும்அவ் உதவி மறவாமல் --- அந்த உதவியை மறந்திடாமல்பின்றை --- பிறகுஅவர் செய் பிழை --- முன்னர் அந்த உதவியைச் செய்தவர்செய்தபல குற்றத்தைபெரியோர் பொறுத்திடுவர் --- சான்றோர் பொறுத்துக் கொள்வர். முது கயவர் --- பழமையான கீழ்மக்கள்நன்றி பல ஆக --- (ஒருவர் செய்த) உபகாரம்மிகப்பலவாய் இருக்க(அந்த உபகாரஞ் செய்தவர்)ஒரு நவை புரிவர் ஏனும் --- ஒரு குற்றத்தைச் செய்வாரே ஆனாலும் (முன்னர் அன்னார் செய்த மிகப் பல நன்மைகளையும் மறந்துஅவர் செய்த ஒரு தீமைக்காக)கன்றிடுவது அன்றி --- (அவர் மீது) கோபிப்பதே அல்லாமல்நினையார் --- (அவர் செய்த நன்மையை) எண்ணி மன அமைதி கொள்ளமாட்டார்.

 

     ஓர் உதவியைச் செய்தவர்பின்னர் தமக்குப் பலநூறு தீமைகள் செய்திருந்தாலும்பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால்கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து இருந்துதவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டால்இந்த ஒரு தீமையால்,முன்னர் செய்த எழுநூறு நன்மையும் தீமையாய் விடும் என்பதை,

 

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்

எழுநூறும் தீதாய் விடும்.         

 

என்று நாலடியார் கூறுகின்றது.

 

     நன்றி மறந்தவன் நரகத்துக்குப் போவான் என்பதைப் பின்வரும் வரலாறு நமக்கு உணர்த்தும்.

 

            பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகட்கும் நிகழ்ந்த பதின்மூன்றாம் நாள் போரில் கௌரவர்கள் தனுர்மறைக்கு மாறாக,அதமத்தின் வழிநின்று அனேக வீரர்களாக வளைந்து அருச்சுனனுடையப் புத்திரனும்மகாவீரனும்அதிரதனும் ஆகிய அபிமன்யுவைக் கொன்றார்கள். தனஞ்சயன் கண்ணனுடன் சம்சப்தகர் மீது போர் புரியச் சென்றிருந்தான். தனஞ்சயன் நீங்கிய பாண்டவர் நால்வர்களையும் அவர்கள் படைகளையும் ஜயத்ரதன் உருத்திரரது வரத்தின் வன்மையால் தடுத்து அபிமன்யுவின் வதத்திற்குக் காரணமாக நின்றான். அதனை உணர்ந்த அருச்சுனன்,புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்டுப் பெரிதும் வருந்தி துன்பக் கடலில் ஆழ்ந்தான். ஒருவாறு தேறி சினங்கொண்டு கண்கள் சிவந்து நாளை சூரியன் மேற்கடலில் அத்தமிப்பதற்குள் அபிமன்யுவின் வதத்திற்குக் காரணமாக இருந்த ஜயத்ரதனைக் கொல்லப் போகிறேன். அங்ஙனம் ஜயத்ரதனைக் கொல்லாவிடில்..........

 

     அறமன்றத்தில் பொய்யாகச் சாட்சி கூறுபவர்களுக்கும்ஒரு சார்பாக நியாயம் கூறுபவர்களுக்கும்தந்தையுடன் எதிர்த்து நின்று அறிவற்ற சொற்களைக் கூளுகின்ற பதர்களுக்கும்தாயானவள் பசித்து இருக்கதனது பசியைத் தணித்துக் கொள்ளுகின்ற நாயைப் போன்றவருக்கும்தஞ்சம் என்று வந்தவருக்கு இடர் விளைக்கின்றவருக்கும்குருதார கமனம் செய்கிறவர்களுக்கும்,கோள் சொல்கிறவர்களுக்கும்,சாதுக்களைக் கண்டு வெறுக்கின்றவர்களுக்கும்,பிறர் மீது பழி கூறுகின்றவர்களுக்கும்,மனச் சாட்சிக்கு விரோதமாக நடப்பவர்களுக்கும்,நன்றி மறந்தவர்களுக்கும்  எந்த கதியுண்டாகுமோ,அந்த கோரமான கதியை நான் அடையக் கடவேன்" என இவை முதலான பற்பல சபதம் கூறி முடிவில், “அந்தப் பாவியாகிய ஜயத்ரதன் கொல்லப் படாமல் இருக்கும்பொழுது ஆதித்தன் அத்தமித்தானேயானால் உடனே அக்கினியில் நான் விழுந்து உயிர் துறப்பேன்” என்று பயங்கரமான சூளுரைக் கூறினான்.

 

            பதினான்காம் நாள் யுத்தத்தில் எதிரிகளால் வெல்லப்படாதவனும்மகாவீரனும்சவ்யசாசியுமாகிய விஜயன் கண்ணபிரானால் தூண்டப்படும் இரதத்தின் மீதூர்ந்து கௌரவ சேனையில் நுழைந்து கொழுந்து விட்டெரிகின்ற பெரிய அக்கினியைப்போல படைகளை அழித்துக் கொண்டு சென்றான். சிருதாயுதன்பூரிசிரவன் முதலிய அநேகரைக் கொன்றான். சூரர் என்று எண்ணம் கொண்ட துரியோதனாதிகளும் அவர்களின் சைன்யங்களும் அருச்சுனனை எதிர்த்துநெருப்பை எதிர்த்த விட்டில் பூச்சிகளுக்குச் சமானமாக ஆனார்கள்.

 

     மேற்கடலில் சூரியன் அத்தமிக்கும் முன் தனது அன்பனாகிய பார்த்தனைக் காப்பாற்றுவதற்காக கண்ணபிரான் தம்முடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து இருளை உண்டு பண்ணினார். சிந்து தேசாதிபதியாகிய ஜயத்ரதன் தலையை நீட்டி சூரிய அத்தமனத்தைப் பார்த்தான். உடனே கண்ணபிரான் அருச்சுனா! சிந்துராசன் தலையையும் கழுத்தையும் உயரத் தூக்கி சூரிய மண்டலத்தைப் பார்க்கிறான். அவனுடைய தலையை விரைவாக அரிந்து விடு” என்றார். சூரியனை மறைத்து இருளுண்டாக்கிய வாசுதேவரது கருணையை வியந்து தனஞ்செயன் வச்சிராயுதத்திற்கு நிகரானதும்தேவர்களாலும் தாங்க முடியாததும்கூர்மையுள்ளதும்சந்தன புட்பங்களால் ஆராதிக்கப்பட்டதுமான திவ்விய அத்திரத்தை எடுத்து விடுத்தான். அந்த அத்திரமானது விரைந்துச் சென்று,பருந்தானது மரத்தின் உச்சியிலுள்ள மற்றொரு பறவையைக் கவர்வதுபோல் ஜயத்ரதனுடையத் தலையைக் கவர்ந்தது.

 

     அந்தத் தலை கீழே விழுவதற்குள்கண்ணபிரான் காண்டீபதரனை நோக்கி கௌந்தேய! இந்தத் தலையானது பூமியில் விழாதபடி நீ செய்அதன் காரணத்தைக் கூறுகின்றேன்” என்றனர். கர வேகத்தாலுஞ் சர வேகத்தாலும் மிகுந்த பார்த்தன் அநேக பாணங்களை விடுத்து அத்தலையைக் குறுக்கிலும் மேலும் கீழும் சஞ்சரிக்கும்படி செய்தான்எல்லோரும் ஆச்சரியப்படும் படியாகவும் விளையாடுபவனைப் போலவும் அருச்சுனன் அத்தலையை அம்புகளால் கீழே விழாதபடி சமந்த பஞ்சகத்திற்கு வெளியே கொண்டு போனான். பின்னர் பார்த்தன் கேசவரை நோக்கி, “எவ்வளவு தூரம் நான் கொண்டு போவேன்ஏன் இத்தலையைப் பூமியில் தள்ளக்கூடாதுஇதனை எவ்விடம் கொண்டு போகும்படிச் செய்யவேண்டும்?என்று வினவினான்.

 

     கண்ணபிரான், “அருச்சுனா! ஜயத்ரதனுடைய தந்தையாகிய விருத்தச்சத்திரன் தன் மகனது தலையை எவன் ஒருவன் பூமியில் தள்ளுவனோ அவனுடைய தலையும் நூறு துணுக்காகச் சிதறவேண்டும் என்று சமந்த பஞ்சகத்திற்கு வெளியே கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறான். ஆதலால் ஜயத்ரதனுடையத் தலையை நீ பூமியில் விழும்படிச் செய்தால் உன் தலை நூறு துண்டாகப் போகும்ஐயமில்லை. குந்தி நந்தனா! கணைகளாலே இந்த ஜயத்ரதன் தலையை அவன் பிதாவாகிய விருத்தக்ஷத்திரன் மடியில் தள்ளு. இதனை அவன் அறியாதபடிச் செய். உன்னால் ஆகாத காரியம் மூன்று உலகத்திலும் இல்லை” என்றனர். அப்படியே அருச்சுனன் அந்தத் தலையை விருத்தக்ஷத்திரன் மடியில் கொண்டு போய்த் தள்ளினான். அவன் எழுந்தவுடனே அவனுடைய தலையும் நூறு துண்டுகளாக வெடித்துப் போய்விட்டது. விண்ணவரும் மண்ணவரும் புகழ்ந்தார்கள்.

 

     பல தீமைகள் செய்தாலும்,ஒரு நன்றி செய்தால்தீமையை மறந்து, நன்றியை நினைவில் வைப்பது நல்லோர் இயல்பு கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்தஒன்று நன்(று) உள்ளக் கெடும்என்பதுதிருவள்ளுவர் வாய்மொழி. ஆனால்எத்துணை நன்மைகள் செய்து இருந்தாலும்ஒரு தீமைசெய்தால் அத்துணை நன்றியையும் மறந்து தீமையை மறவாதிருத்தல் தீயோர்இயல்பு. நன்றாக விளக்கி வைத்தாலும்பித்தளைக்குக் களிம்பு நாற்றம் போகாதது போ,தீயவருடைய குணம் மாறாது என்கின்றது "தண்டலையார் சதகம்".

  

நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்

     ஒருதீது நேர வந்தால்,

அத்தனையும் தீதென்பார்! பழிகருமக்

     கயவர்குணம் அகற்றல் ஆமோ?

வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டில்

     சாம்பர்இட்டு விளக்கி னாலும்

எத்தனைசெய் தாலும்என்னபித்தளைக்குத்

     தன்நாற்றம் இயற்கை ஆமே.

 

இதன் பொருள் ---

 

     வித்தகம் சேர் தண்டலையார் வளநாட்டில் ---அறிவு நிறைந்த பெரியோர்கள் வாழுகின்ற திருத்தண்டலை இறைவரின் வளம் மிக்க நாட்டிலேசாம்பர் இட்டுவிளக்கினாலும் எத்தனை செய்தாலும் என்ன --- சாம்பலைக் கொண்டுதேய்த்தாலும் என்ன செய்தாலும்பயன் ஏதுபித்தளைக்குத் தன் நாற்றம்இயற்கை ஆம் --- பித்தளையின் களிம்பு நாற்றம் இயல்பானதே ஆகும்(அதுபோல)பழி கருமக் கயவர் - பழிப்புக்குரிய செயலைச் செய்யும்தீயவர்களுக்குநித்தம் எழுநூறு நன்றி செய்தாலும் --- நாள்தோறும்நூற்றுக்கணக்கான நன்மைகளைச் செய்தாலும்ஒரு தீது நேர வந்தால்அத்தனையும் தீது என்பார் --- ஒரு தீமை (நம்மை அறியாமலே) நேர்ந்துவிட்டால் அவ்வளவு நன்மையையும் தீது என்றே கூறிவிடுவர்குணம்அகற்றல் ஆமோ - (அவர்) பண்பை மாற்ற இயலுமோ?

 

     நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் இருக்கும்சிரத்தையாக படிப்பார்கள்படிக்க முடியாவிட்டால் கூட படித்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். அடடா என்ன அற்புதமான கருத்துகள் என்று உணர்ந்து,உண்மையாகவே பாராட்டுவார்கள்.ஆனால்அதை கடைப்பிடிப்பார்களா என்றால்மாட்டார்கள். கேட்டால்அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராதுவறட்டு வேதாந்தம் என்று ஏதாவது சொல்லிவிட்டு படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோஅப்படியே இருப்பார்கள். சிலர் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்று விவேக சிந்தாமணி கூறுகின்றது. நல்லதை நினைக்காதவர்கள் உண்டு.

 

கற்பூரப் பாத்தி கட்டிகத்தூரி எருப்போட்டு,

     கமழ்நீர் பாய்ச்சி,

பொற்பு ஊர உள்ளியினை விதைத்தாலும் 

     அதன் குணத்தைப்பொருந்தக் காட்டும்;

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக 

     வரும் எனவே சொல்லினாலும்,

நற்போதம் வாராதுஅங்கு அவர் குணமே 

     மேலாக நடக்கும்தானே.

 

என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்பு கட்டிகஸ்தூரியை எருவாக இட்டுவாசனை மிகுந்த நீரையே பாய்ச்சிஅழகு உண்டாகுமாறு உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும்,அப் பூண்டு தனக்கு இயல்பாக உள்ள கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும்அவர் தீய குணத்தையே காட்டுவர். 

 

            அற்பர்கள் நன்றி அறியாதவர்கள். அவர்களுக்கு நல்ல குணம் வராது.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...