அவிநாசி --- 0956. வனப்பு உற்று எழு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வனப்புஉற்று எழுகேதம் (அவிநாசி)

 

முருகா! 

அடியேன் மங்கையர் மையலில் வீழிந்து அழியாமல்

தவ வாழ்வை மேற்கொண்டு

உமது திருவடி ஞானத்தைப் பெற்று உய்ய அருள்.

 

 

தனத்தத்தன தான தான தானன

     தனத்தத்தன தான தான தானன

          தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான

 

 

வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்

     அழைக்கப்பொரு மார னேவ தாமலர்

          மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக

 

மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை

     பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி

          வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக்

 

கனக்கப்பறை தாய ளாவ நீள்கன

     கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்

          களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள்

 

கலைக்குட்படு பேத மாகி மாயும

     துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது

          கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன்

 

புனத்திற்றினை காவ லான காரிகை

     தனப்பொற்குவ டேயு மோக சாதக

          குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா

 

பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்

     சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்

          புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா

 

சினத்துக்கடி வீசி மோது மாகட

     லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி

          தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உந்திமீதே

 

செனித்துச்சதுர் வேத மோது நாமனு

     மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி

          திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வனப்பு உற்று எழு கேதம் மேவும் கோகிலம்

     அழைக்க, பொரு மாரன் ஏவ, தாம் மலர்

          மருத்துப்பயில் தேரில் ஏறி,மாமதி ...... தொங்கல்ஆக,

 

மறுத்துக் கடல் பேரி மோதவேஇசை

     பெருக்கபடை கூடி மேல் எழாஅணி

          வகுத்துக்கொடு,சேம மாக மாலையில் ...... வந்துகாதி,

 

கனக்கப்பறை தாய அளாவ,நீள் கன

     கருப்புச்சிலை காமர் ஓவுஇல் வாளிகள்,

          களித்துப்பொர,வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள்

 

கலைக்குஉட்படு பேதம் ஆகி மாயும்,

     அது எனக்கு ப்ரியமோ?க்ருபாகரா!இது

          கடக்கப்படு நாமம் ஆன ஞானம்அது ...... என்றுசேர்வேன்?

 

புனத்தில்தினை காவல் ஆன காரிகை,

     தனப்பொன் குவடு ஏயும் மோக சாதக!

          குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நல்குமாரா!

 

பொறைக்குப் புவி போலும் நீதி மாதவர்

     சிறக்கத் தொகு பாசி சோலை மாலைகள்

          புயத்து உற்று அணி பாவசூரன் ஆருயிர் ....கொண்டவேலா!

 

சினத்துக் கடி வீசி மோது மாகடல்

     அடைத்துப் பிசித அசன ஆதி மாமுடி

          தெறிக்கக் கணை ஏவு வீர மாமனும்,...... உந்திமீதே

 

செனித்துச் சதுர் வேதம் ஓதும் நாமனும்,

     மதித்துப் புகழ் சேவகாவிழா மலி

          திருப்புக்கொளியூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.

 

பதவுரை

 

     புனத்தில் தினை காவலான காரிகை --- தினைப் புனத்தில் காவல் புரிந்திருந்த,அழகு மிகுந்தவள்ளிப் பிராட்டியின்,

 

     தனப் பொன் குவடு ஏயும்--- அழகிய மலை போலும் மார்பகங்களில் பொருந்தும் 

 

     மோக சாதக--- மோகத்தினை உடையவரே! 

 

     குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா--- வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியுள்ள திருச்சடையினை உடைய சிவபெருமானுடைய திருக் குமாரரே!

 

     பொறைக்குப் புவி போலும்--- பொறுமைக்குக் காட்டாக உள்ள பூமியைப் போல்,

 

     நீதி மாதவர் சிறக்க--- நீதி நெறியிலே ஒழுகுகின்ற பெருந்தவர்கள் சிறந்து வாழும்படி 

 

     தொகு பாசி சோலை மாலைகள் --- நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை 

 

     புயத்து உற்று அணி --- திருத்தோள்களில் தரித்துக் கொண்டு,

 

     பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா ---  பாவச் செயல்களையே புரிகின்ற சூரபதுமனுடைய அரிய உயிரைக் கவர்ந்த வேலாயுதக் கடவுளே!

 

     சினத்துக் கடி வீசி மோது மாகடல் அடைத்து--- கோபத்துடன் வேகமாக அலைகளை எறிந்து மோதுகின்ற பெரிய கடலை அடைத்துஅணை கட்டி,

 

     பிசித அசன ஆதி மாமுடி தெறிக்க--- மாமிசம் உண்ணும் அரக்கர் குல முதல்வனாகிய இராவணனுடைய பெரிய முடிகள் அற்று விழும்படி 

 

     கணை ஏவும் வீர மாமனும்--- அம்பைச் செலுத்திய வீரம் பொருந்திய மாமனும்,இராமபிரானும் ஆகிய திருமாலும்,

 

     உந்தி மீதே செனித்துச் சதுர் வேதம் ஓது நாமனு(ம்)--- அவருடைய உந்திச் சுழியில் தோன்றிநான்கு வேதங்களையும் ஓதுகின்ற பிரமதேவனும்

 

     மதித்துப் புகழ் சேவகா--- போற்றிப் புகழ்கின்ற வீரரே!

 

     விழா மலி திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே--- திருவிழாக்கள் நிறைந்து விளங்கும் திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளதேவர்கள் போற்றும் தலைவரே!

 

     வனப்பு உற்று எழு--- அழகு மிக்குள்ளதும்,

 

     கேத மேவு கோகிலம் அழைக்க--- துன்பத்தை விளைப்பதுமான குயில் கூவி அழைக்க,

 

     பொரு மாரன் ஏவ தம் மலர்--- போரிட வந்த மன்மதன் தனது மலர் அம்புகளை ஏ,

 

     மருத்துப் பயில் தேரில் ஏறி--- தென்றல் என்னும் தேரில் ஏறி,

 

     மாமதி தொங்கலாக--- அழகிய சந்திரனைக் குடையாகக் கொண்டு,

 

     மறுத்துக் கடல் பேரி மோதவே இசை பெருக்க---  (அலைகள்) மாறி மாறி வீசும் கடல் அலைகளின் ஓசை முரசு போல் ஒலிக்ககுழலோசை பெருக,

 

     படை கூட்டி மேல் எழா --- சேனைகளோடு மேலெழுந்து,

 

     அணி வகுத்துக் கொடு சேமமாக மாலையில் வந்து காதி--- அணி வகுத்துக் கொண்டு மாலைக் காலத்தில் கொல்லுமாறு வந்து நிற்கவும்,

 

     கனக்கப் பறை தாய அளாவ--- மிகுதியாக பறை ஒலி விரிந்து பரவ,

 

     நீள் கன காமர் கருப்பு சிலை ஓ(ய்)வு இல் வாளிகள் களித்துப் பொர--- நீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசிப் போர் செய்வதால்,

 

     வாசம் வீசு வார்குழல்--- நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடைய 

 

     மங்கைமார்கள் கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும்--- மங்கையர்களின் வசமாகி அடியேன் இறந்து போவது,

 

     அது உனக்குப் ப்ரியமோ--- உமக்குப் பிரியமானதா?

 

     கிருபாகரா--- கருணைக் கடலே!

 

     இது கடக்கப்படு நாமம் ஆன--- இந்த அவல நிலையைக் கடக்கும் பெருமை வாய்ந்ததான 

 

     ஞானம் அது என்று சேர்வேன்--- ஞான நிலையினை அடியேன் என்று அடைவேன்.

 

பொழிப்புரை

 

     தினைப் புனத்தில் காவல் புரிந்திருந்தஅழகு மிகுந்தவள்ளிப் பிராட்டியின், அழகிய மலை போலும் மார்பகங்களில் பொருந்தும் மோகத்தினை உடையவரே!

 

      வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சடையினை உடைய சிவபெருமானுடைய திருக் குமாரரே!

 

            பொறுமைக்குக் காட்டாக உள்ள பூமியைப் போல்நீதி நெறியிலே ஒழுகுகின்ற பெருந்தவர்கள் சிறந்து வாழும்படிநெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை திருத்தோள்களில் தரித்துக் கொண்டுபாவச் செயல்களையே புரிகின்ற சூரபதுமனுடைய அரிய உயிரைக் கவர்ந்த வேலாயுதக் கடவுளே!

 

            கோபத்துடன் வேகமாக அலைகளை எறிந்து மோதுகின்ற பெரிய கடலை அடைத்துஅணை கட்டி,மாமிசம் உண்ணும் அரக்கர் குல முதல்வனாகிய இராவணனுடைய பெரிய முடிகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய வீரம் பொருந்திய மாமனும்இராமபிரானாகிய திருமாலும்அவருடைய உந்திச் சுழியில் தோன்றிநான்கு வேதங்களையும் ஓதுகின்ற பிரமதேவனும் போற்றிப் புகழ்கின்ற வீரரே!

 

            திருவிழாக்கள் நிறைந்து விளங்கும் திருப்புக்கொளியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளதேவர்கள் போற்றும் தலைவரே!

 

            அழகு மிக்குள்ளதும்துன்பத்தை விளைப்பதுமான குயில் கூவி அழைக்கபோரிட வந்த மன்மதன் தனது மலர் அம்புகளை ஏ,தென்றல் என்னும் தேரில் ஏறிஅழகிய சந்திரனைக் குடையாகக் கொண்டுஅலைகள் மாறி மாறி வீசும் கடல் அலைகளின் ஓசை முரசு போல் ஒலிக்ககுழலோசை பெருக,சேனைகளோடு மேலெழுந்துஅணி வகுத்துக் கொண்டு மாலைக் காலத்தில் கொல்லுமாறு வந்து நிற்கவும்மிகுதியாக பறை ஒலி விரிந்து பரவநீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசிப் போர் செய்வதால்நறுமணம் வீசும்  நீண்ட கூந்தலை உடைய மங்கையர்களின் வசமாகி அடியேன் இறந்து போவதுஉமக்குப் பிரியமானதாகருணைக் கடலே!இந்த அவல நிலையைக் கடக்கும் பெருமை வாய்ந்ததான ஞான நிலையினை அடியேன் என்று அடைவேன்.

 

விரிவுரை

 

வனப்பு உற்று எழு கேத மேவு கோகிலம் அழைக்க--- 

 

கேதம் --- துன்பம்.

 

கோகிலம் --- குயில்.

 

பொரு மாரன் தம் மலர் ஏவ --- 

 

மாரன் --- மன்மதன்காமவேள்.

 

மன்மதனுக்கு உரிய ஐம்பெருங் கணைகள் ஆவன,தாமரைப்பூமாம்பூமுல்லைப்பூஅசோகம்பூநீலோற்பலப்பூ என்ற மலர்கள். 

 

தாமரைப் பூ --- நினைப்பூட்டும்

மாம் பூ --- பசலை நிறந்தரும்

அசோகம் பூ --- உணர்வை நீக்கும்

முல்லைப் பூ --- படுக்கச் செய்யும்

நீலோற்பலப் பூ --- கொல்லும். 

 

தலைவனை நாடிய தலைவிக்கு அந் நினைவை அதிகப்படுத்துவது மன்மதன் விடுகின்ற தாமரைப் பூங்கணை.

 

நினைக்கும் அரவிந்தம்,நீள்பசலை மாம்பூ,

அனைத்துணர்வு நீக்கும் அசோகம்- வனத்தில் உறு

முல்லை இடைகாட்டும்,மாதே முழுநீலம்

கொல்லுமதன் அம்பின் குணம்       --- இரத்தினச் சுருக்கம்.

 

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும்அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

 

வனசம்செழுஞ்சூத முடன்அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்இவைசெயும் குணம்முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;

 

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லைநீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;

 

நினைவில்அது வேநோக்கம்வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல்அனம் வெறுத்திடல்காய்ச்சல்

     நேர்தல்மௌனம் புரிகுதல்,

 

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

            தாமரைவளமிகுந்த மாஅசோகுமுல்லைமலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

 

            இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

 

            இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல்மற்றொன்றில் ஆசை நீங்கல்பெருமூச்சுடன் பிதற்றுதல்உள்ளம் திடுக்கிடல்உணவில் வெறுப்புஉடல் வெதும்புதல்மெலிதல்பேசாதிருத்தல்ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

 

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

 

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

 

வஞ்சியர் பெருஞ்சேனைகைதைஉடை வாள்நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

 

சஞ்சரிக இசைபாடல்குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

 

அஞ்சுகணை மாரவேட் கென்பர்எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

 

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

 

---        கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

---        அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

---        உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

---        தேர் உலவும் தென்றல் காற்று ஆகும்.

---        குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

---        யானை அழியாத இருளாகும்.

---        மிகுபடை பெண்கள் ஆவர்.

---        உடைவாள் தாழை மடல் ஆகும்.

---        போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும்

---        கொடி மகர மீன் ஆகும்.

---        சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

---        பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

---        பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

---        குடை சந்திரன் ஆவான்.

---        காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

---        அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்  முடி ஆகும்.

---        எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

 

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

 

மருத்துப் பயில் தேரில் ஏறி--- 

 

மருத்து --- காற்று. வடமொழியில் மாருதம் எனப்படும். 

 

தென்றல் காற்ற் என்னும் தேரில் ஏறிமன்மதன் வருவான்.

 

மாமதி தொங்கலாக--- 

 

தொங்கல் --- குடை. 

 

மேலே காட்டியபடிசந்திரனே மன்மதனுக்குக் குடை ஆனவான்.

 

 

நீள் கன காமர் கருப்பு சிலை ஓ(ய்)வு இல் வாளிகள் களித்துப் பொர--- 

 

கனம் --- பெருமை.

 

காமர் --- அழகு. 

 

கருப்புச் சிலை --- கரும்பால் ஆன வில். 

 

வாளிகள் --- அம்புகள். இங்கே மலர் அம்புகளைக் குறிக்கும். 

 

மலர்க்கணைகளை வீசிமன்மதன் உயிர்கள் மீது காம்ப் போர் புரிவான்.

 

மங்கைமார்கள் கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும்--- 

 

மங்கைமார்கள் --- விலைமாதர்கள்.

 

கலை --- புணர்ச்சிக்கு உரிய காரணங்கள்.

 

பேதம் --- மனம் வேறுபடுதல். மயங்குதல்.

 

கிருபாகரா---

 

கிருபை --- கருணை.

 

ஆகரம் --- இருப்பிடம்.

 

     

இது கடக்கப்படும் நாமம் ஆன ஞானம்--- 

 

நாமம் --- புகழ். நிறைவு. 

 

அஞ்ஞானம் என்னும் அறியாமையால் புலன் வழி மயங்குதலை விடுத்துஞானம் என்னும் உண்மை அறிவைப் பெறுதல் வேண்டும். ஞானம் என்பது இறை உணர்வைத் தருவது.

 

மோக சாதக--- 

 

சாதகம் --- பிறவிக் குணம். 

     

 

குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா--- 

 

குனித்தப் பிறை --- வளைந்துள்ள பிறைச் சந்திரன்.

 

வேணி --- சடை.

            

பொறைக்குப் புவி போலும் நீதி மாதவர் சிறக்க--- 

 

பொறுமைக்கு உதாரணமாக பூமியைக் கூறுவது சான்றோர் மரபு.

 

உணவு கொள்ளாமல் நோன்பினை மேற்கொள்வோர் பெரியோரே ஆவர். அவரினும் பெரியவர் யார் என்றால்பிறர் கூறும் துன்பம் தரும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர். 

 

உண்ணாது நோற்பார் பெரியர்பிறர் சொல்லும்

இன்னாச் சொல் நோற்பாரின் பின்.               --- திருக்குறள்.

 

வரம்பு மீறிப் பிறர் வாயில் இருந்து வரும் கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுகின்ற வல்லமையை உடையவர்பற்றற்ற துறவியை விடவும் தூய்மையானவர்.

 

துறந்தாரின் தூய்மை உடையர்,இறந்தார்வாய்

இன்னாச் சொல் நோற்கிற்பவர்.                      --- திருக்குறள்.

 

பொறுமை என்பது எதைப் போல இருக்கவேண்டும் என்றால்தன்னைக் குத்தியும்வெட்டியும் தோண்டுவார்க்கு எந்தத் தீங்கையும் செய்யாதுஅத்தனைச் செயல்களுக்கும் இடம் தந்து,அவரையும் தாங்கிக் கொண்டு இருக்கும் நிலத்தைப் போலதம்மைப் பழிப்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல். இதுவே தலையாயது.

 

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலதம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                  --- திருக்குறள்.

 

தம்மை இகழ்ந்தவரைப் பொறுப்பது மட்டுமல்ல. "எம்மை இகழ்ந்த பாவத்திற்காக கொடிய நரகத்திலே விழுவாரே" என்று தம்மை இகழ்ந்தவர் மீது இரக்கம் கொள்ளுவதும் சான்றோருடைய கடமை ஆகும். 

 

தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி,மற்று

எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் --- உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூஉம் சான்றோர் கடன்.          …  நாலடியார்.

 

திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானைசுந்தரமூர்த்தி நாயனார் பித்தன் என்றார்.சுந்தரமூர்த்தி நாயனாரால் பித்தன் என்ற பெயரைப் படைத்தாலும்தன்னை வைதவராகிய நாயனாரைத் தமது தோழனாகக்கொண்டு,அவருக்குத் தன் பேரருளை வாரி வழங்கினார். 

 

பித்தன் எனத் தமக்குப் பேர் படைத்தும்எந்தைபிரான்

வைத்தவனைத் தோழன் என வாழ்வித்தார், --- நித்தம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.     ---  முதுமொழிமேல் வைப்பு.

 

"பொறுமை கடலினும் பெரிது" என்பது முதுமொழி.

 

சோழனிடத்தில் ஒருவன் வந்து "நான் பொறுமையில் சிறந்தவன் என்று பேர் போன சேரற்குக் கோபம் ஊட்டுகிறேன்" என்று சூள் உரைத்துச் சென்றுசேரனுடைய முற்றத்தில் வளர்ந்திருந்த சாதி மாமரத்தை மூர்க்கத் தனமாக வெட்டினான். அங்ஙனம் அவன் வெட்டியும் சேரற்குச் சற்றும் கோபம் மூளவில்லை. அவன் தாய் அம் மரவெட்டியை நோக்கி, "நீ யார்" என்றாள்.  அதற்கு அவன், "நான்தான் உன் நாயகன்" என்றான். அது கேட்ட பிறகும் சேரன் வேறொன்றும் கூறாமல்தன் தாயை நோக்கி, "அம்மணீஅவன் சொன்ன சொல்லால்அம் மரத்துக்கு உடையவன் அவனே" என்பதில் சந்தேகமில்லை என்றான். சேரன் வார்த்தையைச் செவியால் கேட்கஅவன் பொருமையை வியந்து வந்துஅவனுடைய பாதங்களில் பணிந்து, "அடியேன் கொஞ்ச மதியால் பிழைத்தேன். பொருத்தருள்க" என்று முகமன் கூறிச் சென்றான். சேரன் பொறுமையைக் கேட்ட சோழன் முதலியோர் வியந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.  

 

முந்தும் மரம்தரித்த மூர்க்கன்சொல் கேட்டும்அவன்

எந்தைபிரான் என்றான் இரங்கேசா - கொந்தி

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.              --- இரங்கேச வெண்பா.  

     

இது பற்றியே, "முந்தும் மரம் தரித்த மூர்க்கன்சொல் கேட்டும் அவன் எந்தைபிரான் என்றான் இரங்கேசா" என்றார். தன்னை வெட்டுகிறவர்களுக்குக் கிளைமேல் நிற்க இடம் தரும் மரமும்பூமியைப் போலவே அப்போது தாங்குவது மட்டும் அன்றிப் பிறகு தளிர்த்து வளர்ந்துஅன்று வெட்டினவர்க்கே நிழல் தருவதும் பொறுமைக்கு உத்தம இலக்கணம்.  

 

சினத்துக் கடி வீசி மோது மாகடல் அடைத்து பிசித அசன ஆதி மாமுடி தெறிக்ககணை ஏவும் வீர மாமனும்--- 

 

சினத்துக் கடி வீசி மோது கடல் ---நானாவிதமான எண்ணங்களாகிய அலைகளை ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய கடல்.

 

அந்தக் கடலில்,வைராக்கியமாகிய அணையைக் கட்டிகடந்து சென்றுகாமக்ரோதாதிகளாகிய அசுரர்களை இராமச்சந்திரமூர்த்தி அழித்தார்.

 

ஆழியில் அணை கட்டிய வரலாறு

 

இராமச்சந்திரமூர்த்தி கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி,வருணனை நினைத்துகரத்தைத் தலையணையாக வைத்துகிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ப் படுக்கையில் இருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான கடலரசன் இராமருக்கு முன் வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன்மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவாதிவ்விய அத்திரங்களையும் எடுத்துவா. கடலை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்ககோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான்இருள் சூழ்ந்ததுஎரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாத்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். இரட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

 

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல்கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றிகால காலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் இராமச்சந்திரமூர்த்தியிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான். 

 

இராமச்சந்திரமூர்த்தி,“நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது;இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துரும குல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்லஇராமர்உடனே அக் கணையை விடுத்தார். 

 

பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்விசுவகர்மாவினுடைய புதல்வன்தந்தைக்குச் சமானமானவன்தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணைகட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணைகட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே சிறந்ததுஅயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இச்சமுத்திரராஜன் தண்டோபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டிய வற்றைக் கொணரட்டும்” என்றான்.

 

இராமர் அவ்வாறே கட்டளையிடவானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்றுஆச்சாஅசுவகர்ணம்மருதம்பனைவெண்பாலைகர்ணீகாரம்மாஅசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். வெகுவிரைவில் 100யோசனை தூரம் அணைகட்டி முடித்தார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.

 

உந்தி மீதே செனித்துச் சதுர் வேதம் ஓது நாமனு(ம்)--- 

 

திருமாலின் உந்தியல் வந்தவர் பிரமதேவர். 

 

அவர் (சதுர்) நான்கு வேதங்களையும் ஓதுகின்ற புகழை உடையவர்.

     

மதித்துப் புகழ் சேவகா--- 

 

சேவகம் --- வீரம்.

 

திருமாலும்பிரமனும் மதித்துப் போற்றுகின்ற வீரம் மிக்கவர் முருகப் பெருமான். போற்றிப் புகழ்கின்ற வீரரே!

 

விழா மலி திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே--- 

 

திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.

 

இறைவர்     : அவிநாசிலிங்கேசுவரர்அவிநாசி ஈசுவரர்,

                                         அவிநாசியப்பர்பெருங்கேடிலியப்பர்.

இறைவியார்  : கருணாம்பிகைபெருங்கருணை நாயகி.

தல மரம்     : பாதிரி (ஆதியில் மாமரம்)

 

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டதுதற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. 

            

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும்சுப்பிரமணியர் சந்நிதியும்அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும்நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.

 

மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.

 

முதலை வாயினின்றும் பிள்ளையை அழைத்த வரலாறு:

 

வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார். வரும் நாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார்.  திருப்புக்கொளியூரை அடைந்தார். மாடவீதி வழியே நடந்தார்.

 

அப்பொழுது அங்கேஒரு வீட்டில் மங்கல ஒலியும்மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான்அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளேஇரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலிஇறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர்நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர்.  வன்தொண்டரை வணங்கினர். வன்தொண்டர்அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார். அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்என்று உள்ளம் கொண்டார். பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்துஅங்கே போனார்.  திருப்பதிகம் பாடினார். "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,

 

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,

அரைக்குஆடு அரவாஆதியும் அந்தமும் ஆயினாய்,

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

 

என்று வேண்டினார். உடனேகாலன்பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால்எந்த வயதை அடைந்திருப்பானோஅந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலைபிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர்புதல்வனை அழைத்துக் கொண்டு  அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார். பின்னர்அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர்நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.

 

அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.

 

கருத்துரை

     

முருகா!அடியேன் மங்கையர் மையலில் வீழிந்து அழிந்து ஒழியாமல்தவ வாழ்வை மேற்கொண்டுஉமது திருவடி ஞானத்தைப் பெற்று உய்ய அருள்.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...