அவிநாசி --- 0955. மதப்பட்ட விசால



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மதப்பட்ட விசால  (அவிநாசி)

 

 

தனத்தத்தன தானன தானன

     தனத்தத்தன தானன தானன

          தனத்தத்தன தானன தானன தந்ததான

 

 

மதப்பட்டவி சாலக போலமு

     முகப்பிற்சன வாடையு மோடையு

          மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி

 

வயிற்றுக்கிடு சீகர பாணியு

     மிதற்செக்கர்வி லோசன வேகமு

          மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல

 

விதப்பட்டவெ ளானையி லேறியு

     நிறைக்கற்பக நீழலி லாறியும்

          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம்

 

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு

     பிரப்புத்வகு மாரசொ ரூபக

          வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே

 

இதப்பட்டிட வேகம லாலய

     வொருத்திக்கிசை வானபொ னாயிர

          மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள

 

இசைக்கொக்கவி ராசத பாவனை

     யுளப்பெற்றொடு பாடிட வேடையி

          லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற்

 

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை

     யவிழ்த்திட்டவி நாசியி லேவரு

          திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன்

 

செறிப்பித்த கராவதின் வாய்மக

     வழைப்பித்தபு ராணக்ரு பாகர

          திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

மதப்பட்ட விசால கபோலமும்,

     முகப்பில் ச(ன்)ன ஆடையும்,ஓடையும்,

          மருக் கற்புர லேப லலாடமும்,...... மஞ்சைஆரி

 

வயிற்றுக்கு இடு சீகர பாணியும்,

     மிதல் செக்கர் விலோசன வேகமும்,

          மணிச்சத்த கடோர புரோசமும் ...... ஒன்று,கோல

 

விதப்பட்ட வெ(ள்)ளானையில் ஏறியும்,

     நிறைக் கற்பக நீழலில் ஆறியும்,

          விஷத் துர்க்கம் அன சூளிகை மாளிகை ....இந்த்ரலோகம்

 

விளக்க,சுரர் சூழ்தர வாழ்தரு

     பிரப்புத்வ குமார! சொரூபக!

          வெளிப்பட்டுஎனை ஆள்வய லூரில் ......இருந்தவாழ்வே!

 

இதப்பட்டிடவேகமல ஆலய

     ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம்

          இயற்றப் பதிதோறும் உலாவிய ...... தொண்டர்,தாள

 

இசைக்கு ஒக்க இராசத பாவனை

     உ(ள்)ளப் பெற்றொடு பாடிட வேடையில்

          இளைப்பு உக்கிட வார் மறையோன் என ......வந்து,கானில்

 

திதப்பட்டு எதிரே பொதி சோறினை

     அவிழ்த்திட்டுஅவிநாசியிலே வரு

          திசைக்கு உற்ற சகாயனும் ஆகி ......மறைந்துபோம்முன்

 

செறிப்பித்த கரா அதின் வாய் மகவு

     அழைப்பித்த புராண!க்ருபாகர!

          திருப்புக்கொளியூர் உடையார் புகழ் ...... தம்பிரானே.

 

பதவுரை

 

            மதப்பட்ட விசால கபோலமு(ம்)--- மதநீர் பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும்,

 

           முகப்பில் ச(ன்)ன ஆடையும் ஓடையும்--- முன் புறத்தில் சன்னமான ஆடையினால் ஆகிய முகபடாமும் நெற்றிப் பட்டமும்,

 

            மருக் கற்புர லேப லலாடமும்--- வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய 

 

            மஞ்சை ஆரி--- யானையின் முதுகில் அம்பாரி பொருந்த,

 

            வயிற்றுக்கு இடு சீகர பாணியு(ம்)--- வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும்,

 

            மிதல் செக்கர் விலோசன வேகமு(ம்)--- நன்கு சிவந்த கண்களும்அதிவேகமாகச் செல்லும் நடையும்,

 

           மணிச் சத்த கடோர புரோசமும் ஒன்று --- மணிகளின் ஓசை மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி,  

 

            கோல விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு(ம்)--- அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும்,

 

            நிறை கற்பக நீழலில் ஆறியும்--- நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும்,

 

            விஷத் துர்க்க(ம்) அ(ன்)ன சூளிகை மாளிகை இந்த்ரலோகம் விளக்கச் சுரர் சூழ்தர வாழ்தரு பிரபுத்வ குமார சொரூபக--- மலைக் கோட்டை போன்றனவும்,நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவரே!

 

            வெளிப்பட்டு எனை ஆள் வயலூரில் இருந்த வாழ்வே--- என் முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளியவயலூரில் வீற்றிருந்தருளும் செல்வரே!

 

            இதப் பட்டிடவே--- இன்பம் அடையுமாறு

 

            கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் இயற்ற--- திருவாரூரில் இருந்த ஒப்பற்ற துணைவியாகிய பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னை இறைவரிடம் பெ,

 

            பதி தோறும் உலாவிய தொண்டர்--- தலங்கள் தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர்

 

            தாள இசைக்கு ஒக்க--- தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி 

 

            இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடு பாடிட--- உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில்,

 

            வேடையில் இளைப்பு உக்கிட--- கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க,

 

            வார் மறையோன் என வந்து கானில் திதப்பட்டு எதிரே--- நேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன்சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி,

 

            பொதி சோறினை அவிழ்த்து இட்ட--- (தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும்,

 

            வரு திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம்---  சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்,

 

            அவிநாசியிலே முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த புராண க்ருபாகர--- அவிநாசி என்னும் திருத்தலத்தில் முன்பு மடுவில் இருந்த முதலையின் வாய்ப்பட்ட பிள்ளையை வரச் செய்த பழையவராகிய கருணை உள்ளவரும்,

            

            திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே--- திருப்புக்கொளியூர் என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தனிப்பெரும்தலைவரே!

 

பொழிப்புரை

 

           மதநீர் பெருகுகின்ற அகலமான தாடையும்முன் புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் பட்டமும்வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய யானையின் முதுகில் அம்பாரி பொருந்தவயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும் விளங்க,நன்கு சிவந்த கண்களும்அதிவேகமாகச் செல்லும் நடையும்,

மணிகளின் ஓசை மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்திய,  அழகு விளங்கும் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும்,நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும்,

மலைக் கோட்டை போன்றனவும்நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவரே!

 

            என் முன்னே வந்து தோன்றி என்னை ஆட்கொண்டு அருளிய,வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வரே!

 

            இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற துணைவியாகிய பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னை இறைவரிடம் பெ,தலங்கள் தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர்தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில்கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்கநேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன்சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி(தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும்சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்அவிநாசி என்னும் தலத்தில் முன்பு மடுவில் இருந்த முதலையின் வாயில் பட்ட பிள்ளையை வரச் செய்த பழையவராகிய கருணை உள்ளவரும்திருப்புக்கொளியூர் என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தனிப்பெரும்தலைவரே!

 

விரிவுரை

 

முழுதும் துதி மயமான பாடல் இது.

 

வெளிப்பட்டு எனை ஆள் வயலூரில் இருந்த வாழ்வே ---

 

வயலூர் என்னும் திருத்தலத்தில் முருகப் பெருமான் தன்னை ஆட்கொண்ட அருளைசுவாமிகள் வியந்து பாடுகின்றார்.

 

இதப்பட்டிடவேகமல ஆலயஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம்இயற்றப் பதிதோறும் உலாவிய தொண்டர் ---

 

தொண்டர் என்பதுதிருவாரூர்ப் பெருமானால் "வன்தொண்டர்" என்று அழைக்கப் பெற்றநம்பியாரூரைக் குறிக்கும்.

 

மற்று நீ வன்மை பேசி "வன்தொண்டன்" என்னும் நாமம்

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;ஆதலால் மண் மேல் நம்மைச்

சொல் தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார். --- பெரியபுராணம்.

                                                  

கமலாலயம் என்பது திருவாரூரைக் குறிக்கும்.

 

ஒருத்தி என்பது,சுந்தரமூர்த்தி சுவாமிகளின் துணைவியாரான பரவை நாச்சியாரைக் குறிக்கும். "வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமேகோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்'என்று வன்தொண்டர் பெருமான் பாடியுள்ளதை நோக்கபரவைநாச்சியார் வருந்தாமல் இதப்பட்டது தெளிவாகும்.  

 

சுந்தர மூர்த்தி சுவாமிகள் பொன் வேண்டிஇறைவரைதிருப்புகலூர்திருவீழிமிழலைதிருப்பாச்சிலாச்சிராமம்திருமுதுகுன்றம்திருஓணகாந்தன்தளிமுதலாய பல திருத்தலங்களில் வழிபட்டார்.

 

வேடையில்இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து,கானில்

திதப்பட்டு எதிரே பொதி சோறினைஅவிழ்த்திட்டு---

 

சுவாமிகள் திருக்குருகாவூர் என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய போது வழியில் பசியும் தாகமும் வருத்தின. சிவபெருமான் ஒரு வேதியராய் வழியில் ஓரிடத்தில் ஓரிடத்தில் பந்தர் அமைத்துத் தண்ணீர்பொதிசோறு முதலியன வைத்து இருந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பந்தரின் கீழ் அமர்ந்துதிருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டு இருந்தார். அருகே இருந்த வேதியர்வன்தொண்டரைப் பார்த்து, "நீர் மிகப் பசித்து இருக்கிறீர். என்னிடத்தில் பொதிசோறு இருக்கிறது. அதை உண்டு தண்ணீர் அருந்தி,இளைப்பு ஆறும்" என்றார். வேதியர் தந்த பொதி சோற்றைசுவாமிகளும் அவரோடு வந்த அடியவர்களும் உண்டனர். அது எல்லாருக்கும் பயன்படு முறையில் வளர்ந்தது. எல்லோரும் உண்டு பசியாறினர். சுவாமிகள் வேதியருடன் பேசிக்கொண்டே உறங்கினர். மற்றவர்களும் உறங்கினார்கள்.  சுவாமிகள் திருக்கண் விழித்து எழிந்தபோதுவேதியரும் பந்தரும் இல்லை.

 

இறைவனின் பெருங்கருணையை வியந்த சுவாமிகள், "இத்தனை ஆமாற்றை அறிந்திலேன் எம் பெருமான்" என்று திருப்பதிகம் பாடி வழிபட்டார்.

 

வரு திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் ---

 

வன்தொண்டப் பெருமான் திருக்கூடலையாற்றூர் சாரச் செல்லும் போதில்இறைவர் ஒரு வேதியராய் பெருமான் முன்பு வந்தார். "அடியேன் திருமுதுகுன்றம் செல்ல வழி யாது" என்று கேட்டார். "திருக்கூடலையாற்றூர் ஏறச் சென்றது இவ்வழி தான்" என்று சொன்ன இறைவரைப் பின் தொடர்ந்தார். தொடரும்போதே இறைவர் மறைந்தார். "அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன்" என்று பாடி,வன்தொண்டர் திருக்கூடலையாற்றூர் சேர்ந்தார்.

 

நின்றவர் தம்மை நோக்கி

            நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்

"இன்றுயாம் முதுகுன்று எய்த

            வழிஎமக்கு இயம்பும்" என்னக்

குன்றவில் லாளி யாரும்

            "கூடலை யாற்றூர் ஏறச்

சென்றதுஇவ் வழிதான்" என்று

            செல்வழித் துணையாய்ச் செல்ல.

 

கண்டவர் கைகள் கூப்பித்

            தொழுதுபின் தொடர்வார்க் காணார்

வண்டுஅலர் கொன்றை யாரை

            "வடிவுடை மழு"என்று ஏத்தி

"அண்டர்தம் பெருமான் போந்த

            அதிசயம் அறியேன்" என்று

கொண்டுஎழு விருப்பி னோடும்

            கூடலை யாற்றூர் புக்கார்.    ---  பெரியபுராணம்.

 

முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த புராண க்ருபாகர ---

 

வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு வந்தார்.  வருநாளில் அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று.  வன்தொண்டர் திருவாரூரை விடுத்துப் பல திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார். திருப்புக்கொளியூரை அடைந்தார்.  மாடவீதி வழியே நடந்தார்.

 

அப்பொழுது அங்கேஒரு வீட்டில் மங்கல ஒலியும்மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான்அது குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள், "அடிகளேஇரண்டு சிறுவர்கள் ஐந்து வயதுடையவர்கள் மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடைபெறுகிறது. இம்மங்கல ஒலிஇறந்தவன் நினைப்பைப் பெற்றோருக்கு எழுப்பி இருக்கிறது" என்றார்கள். அவ்வுரை கேட்ட நம்பியாரூரருக்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர்நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர். வன்தொண்டரை வணங்கினர்.  வன்தொண்டர்அவர்களைப் பார்த்து, "மகனை இழந்தவர் நீங்களா" என்று கேட்டார்.  அவர்கள், "அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் கூடிற்று" என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர், 'இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு. இறைவனருளால் நான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவநாசி அப்பனைத் தொழுவேன்என்று திருவுள்ளம் கொண்டார்.  பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்து, "மடு எங்கே இருக்கிறது" என்று கேட்டார். அவர்கள் வாயிலாக மடு உள்ள இடத்தைத் தெரிந்துஅங்கே போனார். திருப்பதிகம் பாடினார்.  "எத்தால் மறக்கேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். திருப்பதிகத்தில் நான்காவது பாடலில்,

 

உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்,

அரைக்குஆடு அரவாஆதியும் அந்தமும் ஆயினாய்,

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

 

என்று வேண்டினார். உடனேகாலன்பிள்ளை பூமியில் வாழ்ந்து இருந்தால்எந்த வயதை அடைந்திருப்பானோஅந்த வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலைபிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது.  தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார்.  தாயாரும் தந்தையாரும் நம்பியாரூரரை வணங்கினர். செயற்கரும் செய்கை கண்ட வானும் மண்ணும் வியப்பு எய்தின. வன்தொண்டர்புதல்வனை அழைத்துக் கொண்டு  அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார்.  பின்னர்அப் பிள்ளையின் வீட்டுக்குப் போனார். அவனுக்கு உபநயனம் செய்வித்தார்.  அங்கும் மங்கல ஒலி எழுந்தது.  பின்னர்நம்பியாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கிச் சென்றார்.

 

அவிநாசி - விநாசம் இல்லாதது. அழிவற்றது.

 

திருமுறைகளில் திருப்புக்கொளியூர் என்பது திருத்தலத்தின் பெயர். இறைவர் திருப்பெயர் அவிநாசியப்பர். மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகின்றது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ. கோவையில் இருந்து 40 கி.மீ.

 

இறைவர்     : அவிநாசிலிங்கேசுவரர்அவிநாசி ஈசுவரர்அவிநாசியப்பர்பெருங்கேடிலியப்பர்.

இறைவியார்  : கருணாம்பிகைபெருங்கருணை நாயகி.

தல மரம்     : பாதிரி (ஆதியில் மாமரம்)

 

தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்டதுதற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. 

            

அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோயிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும்சுப்பிரமணியர் சந்நிதியும்அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும்நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது.

 

மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை (கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் தேர்களில் அவிநாசிக் கோயில் தேரும் ஒன்றாகும்.

 

அவிநாசியப்பர் கோயிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப் பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...