அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கலைஞர்எணும் கற்பு (கொடும்பாளூர்)
முருகா!
அருளுபதேசம் புரியவேண்டும்.
தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
தனதனனந் தத்தத் ...... தனதான
கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்
கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்
அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
றரவியிடந் தப்பிக் ...... குறியாத
அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ
கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா
கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்
சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்
திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கலைஞர் எணும் கற்புக் கலியுக பந்தத்துக்
கடன் அபயம் பட்டு,...... கசடு ஆகும்
கரும சடங்கச் சட்சமயிகள், பங்கு இட்டுக்
கலகல எனும் கொட்பு உற்று,...... உடன்மோதும்
அலகுஇல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று அற்று,
அரவி இடம் தப்பி,...... குறியாத
அறிவை அறிந்து, அப் பற்று அதனினொடும் சற்று உற்று,
அருள் வசனம் கிட்டப் ...... பெறல்ஆமோ?
கொலைஞர் எனும் கொச்சைக் குறவர், இளம் பச்சைக்
கொடி மருவும் செச்சைப் ...... புயமார்பா!
கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.
பதவுரை
கொலைஞர் எனும் கொச்சைக் குறவர்--- கொலைஞர்கள் என்று சொல்லக்கூடிய, அறிவற்றவர்களான, குறவர்களிடம் வளர்ந்த
இளம் பச்சைக் கொடி மருவும் செச்சைப் புய மார்பா--- இளமை வாய்ந்த பச்சைக் கொடி போன்ற வள்ளி நாயகி தழுவும் வெட்சி மாலை அணிந்த திருத்தோள்களையும்,திருமார்பையும் கொண்டவரே!
கொடிய நெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டு --- கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கி வந்து போரிட்ட சூரன் அழிந்துபட்டு,
குரை கடல் செம்ப--- ஒலிக்கின்ற கடல் பொங்கி எழ,
சக்கரவாளச் சிலை பக--- சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட,
எண் திக்குத் திகிரிகளும் பத்துத் திசைகளினும் தத்த--- எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும் சிதற,
செகம் ஏழும் திருகு சிகண்டிப் பொற்குதிரை விடும் செட்டித் திறல--- ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவரே!
கொடும்பைக்குள் பெருமாளே--- கொடும்பாளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமைய்யில் மிக்கவரே!
கலைஞர் எ(ண்)ணும் கற்பு--- கலைகளில் வல்லவர்கள் மதிக்கின்ற கல்வியிலும்,
கலியுக பந்தத்துக் கடன் அபயம் பட்டு--- கலியுகம் சம்பந்தமான தளைகளில் உண்டான கடமைகளிலும் அடைக்கலம் புகுந்து,
கசடு ஆகும் கரும சடங்க--- குற்றங்கள் பொருந்தியவையும்,பயனற்ற செயல்களும் ஆகிய சடங்குகளைக் கூறுகின்ற,
சட்சமயிகள் பங்கிட்டு --- ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் கூடியிருந்து,
கலகல என்னும் கொட்பு உற்று--- ஆரவாரத்துடன் மனச் சுழற்சி அடைந்து,
உடன் மோதும்--- ஒருவரோடு ஒருவர் மோதுகின்ற,
அலகுஇல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று அற்று--- அளவில்லாத பெரிய ஆதம் புரிகின்ற பலவிதமான கலைகளின் மீது கொண்டு பற்றினை விட்டொழித்து,
அரவியிடம் தப்பி--- அந்தக் கூச்சலில் இருந்து தப்பி
குறியாத அறிவை அறிந்து--- சுட்டி அறியாத முடியாத மெய்யறிவு வடிவாக உள்ள பரம்பொருள் இன்னது என்பதை அறிந்து,
அப்பற்று --- முன்னே சமயகலைகளின் மீது கொண்டிருந்த பற்றைப் போல,
அதனினொடும் சற்று உற்று--- அந்த உண்மைப் பொருளினிடம் பற்று சிறிதே உண்டாகி, (அதன் பயனாக)
அருள் வசனம் கிட்டப் பெறுவேனோ --- திருவருள் உபதேசம் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?
பொழிப்புரை
கொலைஞர்கள் என்று சொல்லக்கூடிய, அறிவற்றவர்களான, குறவர்களிடம் வளர்ந்த, இளமை வாய்ந்த பச்சைக் கொடி போன்ற வள்ளி நாயகி தழுவும் வெட்சி மாலை அணிந்த திருத்தோள்களையும், திருமார்பையும் கொண்டவரே!
கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கி வந்து போரிட்ட சூரன் அழிந்துபட்டு, ஒலிக்கின்ற கடல் பொங்கி எழ, சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும் சிதற, ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவரே!
கொடும்பாளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமைய்யில் மிக்கவரே!
கலைகளில் வல்லவர்கள் மதிக்கின்ற கல்வியிலும், கலியுகம் சம்பந்தமான தளைகளில் உண்டான கடமைகளிலும் அடைக்கலம் புகுந்து, குற்றங்கள் பொருந்தியவையும், பயனற்ற செயல்களும் ஆகிய சடங்குகளைக் கூறுகின்ற,ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் கூடியிருந்து,ஆரவாரத்துடன் மனச் சுழற்சி அடைந்து, ஒருவரோடு ஒருவர் மோதுகின்ற,அளவில்லாத பெரிய ஆதம் புரிகின்ற பலவிதமான கலைகளின் மீது கொண்டு பற்றினை விட்டொழித்து, அந்தக் கூச்சலில் இருந்து தப்பி, சுட்டி அறியாத முடியாத மெய்யறிவு வடிவாக உள்ள பரம்பொருள் இன்னது என்பதை அறிந்து, முன்னே சமயகலைகளின் மீது கொண்டிருந்த பற்றைப் போல,அந்த உண்மைப் பொருளினிடம் பற்று சிறிதே உண்டாகி, அதன் பயனாகத் திருவருள் உபதேசம் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?
விரிவுரை
கலைஞர் எ(ண்)ணும் கற்பு---
கலை --- நூல்கள்,கலைகள்.
கற்பு --- கல்வி.
கலைஞர்கள் விரும்புவது நூலறிவு. அவர்கள் மதிப்பது நூலறிவை. நூலறிவை மட்டும் கொண்டு,மெய்யறிவு பெற முடியாது. முடியாது எனவே, மெய்ப்பொருளை உணர முடியாது.
கலியுக பந்தத்துக் கடன் அபயம் பட்டு---
கலியுகம் --- கலிகாலம். கலி --- துன்பம். துன்பத்தைத் தரும் பாவங்கள் நிறைந்தது கலிகாலம்.
கலியினால் உண்டான பந்தங்கள். அந்த பந்தங்களால் கற்பிக்கப்பட்ட கடமைகள். அவைகளையே ஒரு பொருட்டாக எண்ணி இருத்தல். கலியுகம் என்பது பாவம் மிகுந்த யுகம் எனப்படும். பாவம் மிகுந்த இந்தக் கலியுகத்திலும் புகழப் பெறுவது சிவபதம்.
கலிகாலத்தின் கொடுமையால், பொருளையே கருதுகின்ற விலைமாதரின் தொடக்கில் ஆட்படாமல், பிரமபதம், விஷ்ணுபதம், முதலிய எல்லாப் பதங்களிலும் சிறந்தது சிவபதம் என்பதால் அதனைத் தனக்கு அளித்து அருள் புரியுமாறு அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் வேண்டுகின்றார்.
"கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து ஆடி, நல்
கயல்விழிப் பார்வையில் ...... பொருள்பேசி,
கலை இழுத்தே, குலுக்கு என நகைத்தே, மயல்
கலதி இட்டே, அழைத்து, ...... அணைஊடே
செருமி, வித்தார சிற்றிடை துடித்து ஆட, மல்
திறம் அளித்தே, பொருள் ...... பறிமாதர்
செயல் இழுக்காமல், இக் கலியுகத்தே புகழ்ச்
சிவபதத்தே பதித்து ...... அருள்வாயே."
இதன் பொருள் ---
யானையின் இரு கொம்புகள் போன்ற தனங்களை அசைத்து நடனம் ஆடியும், நல்ல கயல் மீன் போன்ற கண்பார்வையாலேயே பெரும் பொருள் தரவேண்டும் என்று பேசியும், மேல் முந்தானையை இழுத்து இழுத்து விட்டும், குலுக்கென்று அடிக்கடி சிரித்தும், மயக்கமான கெடுதியைத் தந்தும், அழைத்துக் கொண்டுபோய் படுக்கையில் நெருங்கி, அலங்கரித்த சிறு இடை துடித்து அசையவும், வளமையான இன்பத்தைத் தந்து பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் செயல் அடியேனை இழுக்காமல், இக்கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவபதத்தில் என்னைப் பொருந்துமாறு அருள் புரிவீர்.
கலிகாலம் எப்படிப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல்களால் அறிவோம்....
"எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
இணையிலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
இணையிலாக் கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகுகோர ரூபத்தை உடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
ஆண்மை மிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்பது என்னோ?
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்
இதன் பொருள் ---
அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே --- நெருப்பைப் போலத் தோன்றி வந்த ஆலகால விடத்தை உண்ட கண்டத்தை உடையவனே! அமலனே --- குற்றம் அற்றவனே!, அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை இணை இலாச் சேடன் என்றும் --- எழுதவும் படிக்கவும் வழியறியாத அறிவு அற்றவனை ஒப்பற்ற கல்வியில் சிறந்த ஆதிசேடன் என்றும்,
ஈவது இல்லாத கனலோபியைச் சபை அதனில் இணை இலாக் கர்ணன் என்றும் --- பொருளைப் பிறருக்குக் கொடுத்து அறியாத பெரிய அறியாதவனாகிய உலோபியை, அவையிலே ஒப்பற்ற கொடையில் சிறந்த கர்ணன் என்று புகழ்ந்தும்,
அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் --- அழகு இல்லாத,மிகுந்த அருவருப்பான உருவம் உடையவனைப் பேரழகு உடைய மன்மதன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை ஆண்மை மிகு விசயன் என்றும் --- ஆயுதத்தை ஏந்தவும் பழகாத ஆண்மை அற்றவனை வீரத்தில் அருச்சுனன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் --- எக்காலமும் பொய்யையே பேசித் திரிகின்ற வஞ்சகனை, சொல்லில் அரிச்சந்திரன் என்றும்,
இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது என்னோ --- இவ்வாறு பழைமையான இந்த உலகத்தில் பாவாணர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசி, தகுதி இல்லாதவர்களிடம் இரப்பது என்ன காரணமோ?
"துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும் நல் கவியை மெச்சார்;
துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார்; வரும்
தூயரைத் தள்ளி விடுவார்;
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; *கறுப்பு
என்னிலோ போய்ப்* பணிகுவார்;
ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
நன்றாகவே பேசிடார்;
நாளும் ஒப்பாரியாய் வந்த புத்துறவுக்கு
நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ்புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தரு சதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ----
அத்தனே --- தலைவனே!, அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் --- எல்லோரும் தீமை பயக்கின்ற விதத்தில் விகடமாகப் பாடல் புனையும் கவிஞனைப் புகழ்வார்கள்,
சொல்லும் நல் கவியை மெச்சார் --- புகழ்ந்து கூறத்தக்க நல்ல கவிஞரைப் புகழமாட்டார்கள்,
துர்ச்சனருக்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் --- தீயவருக்கு மனமகிழ்ச்சியுடன் வேண்டிய உபசாரங்களைச் செய்வார்,
தூயரைத் தள்ளி விடுவார் --- நல்லோரைத் தள்ளி வைப்பார்கள்,
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார் --- விருப்பமான தெய்வத்தை நினைந்து வழிபட மாட்டார்கள்,
கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் --- பேய் என்றால் சென்று வணங்குவர்,
ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் --- தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைச் சிறிதும் மதிக்க மாட்டார்கள்,
வேசை என்னிலோ காலில் வீழ்வார் --- விலைமகள் என்றால் அவள் காலில் விழுந்து வணங்குவார்,
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே பேசிடார் --- இன்ப துன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார்,
ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல நன்மை செய்வார் --- ஒப்புக்கு என்று வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பல நன்மைகளையும் செய்வார்,
அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை --- எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகத்தின் கலிகாலப் பெருமை இது ஆகும்.
அடுத்து, கலிகாலத்தைப் பற்றி, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
"தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்; உயர்
தந்தையைச் சீறு காலம்;
சற்குருவை நிந்தை செய் காலம்; மெய்க் கடவுளைச்
சற்றும் எண்ணாத காலம்;
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்; நல்
பெரியர் சொல் கேளாத காலம்;
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்; மிகு
சிறியவன் பெருகு காலம்;
செருவில் விட்டு ஓடினார் வரிசைபெறு காலம்;வசை
செப்புவோர்க்கு உதவு காலம்;
வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு
வாய்த்த கலி காலம்; ஐயா!
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
ஐயா --- ஐயனே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் --- பெற்றெடுத்த தாய் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கின்ற காலம்;
உயர் தந்தையைச் சீறு காலம் --- மேலான தந்தையைச் சீறி, வெறுத்து உரைக்கும் காலம்;
சற்குருவை நிந்தைசெய் காலம் --- நல்லாசிரியரை நிந்திக்கின்ற காலம்;
கடவுளைச் சற்றும் எண்ணாத காலம் --- தெய்வத்தைச் சிறிதும் நினையாத காலம்;
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் --- பேயைத் தெய்வம் என்று போற்றி வழிபாடு செய்யும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம் --- ஏமாற்றுகின்றவர்க்குத் தகுந்த காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் --- மனைவி வைதாலும் பொறுத்துக் கொள்ளுகின்ற காலம்; (மனைவியின் ஊதியத்தில் வாழுகின்ற காலம்)
நல் பெரியர் சொல் கேளாத காலம் --- நல்ல பெரியோர் சொல்லும் சொற்களைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாத காலம்;
பெரியவன் தேய்வுடன் சிறுமை உறு காலம் --- முன் பிறந்தவனாகிய அண்ணன் என்பவன் கலங்கித் தாழ்வு அடையும் காலம்; (பெரியவன் என்பதை அறிவில் பெரியவன் என்றும் கொள்ளலாம்)
மிகு சிறியவன் பெருகு காலம் --- பின் பிறந்தவன் பெருமை அடைகின்ற காலம். (சிறியவன் என்பதை அறிவில் சிறியவன் என்றும் கொள்ளலாம்.)
(குறிப்பு --- மூத்தவனாகப் பிறந்து, குடும்ப பாரத்தை, தந்தையைப் போல் சுமக்கின்ற பெரியவர்கள், தனக்கென வாழாமல், தனது பின் பிறந்தார்களுக்கு என்றே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து,பின்னர் வாழ்வில் சிறுமையை அடைவதை இன்றும் காணலாம்)
செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறு காலம் --- போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுகின்ற காலம்; (போருக்குப் பயந்து புறமுதுகு இட்டு ஓடியவர்கள் என்றும் கொள்ளலாம்)
வசை செப்புவோர்க்கு உதவு காலம் --- இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யும் காலம்;
வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் --- வாய்க் கொழுப்போடு இறுமாப்பாகப் பேசிடும் நியாயம் இல்லாத ஒழுங்கீனர்களுக்குப் பொருந்திய கலிகாலம்.
"பொருட் பாலை விரும்புவார்கள், *காமப்பால்
இடைமூழ்கிப் புரள்வர், *கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
விரும்பார்கள், அறிவொன்று இல்லார்,
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால்
புரவலர்பால் கொடுக்கக் கோரார்,
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி
செம்பொன் சேவித்து இடுவார்". --- விவேக சிந்தாமணி.
இதன் பொருள்---
அறிவு சிறிதேனும் இல்லாத மூடர்கள், நிலையற்ற செல்வத்தின் தன்மையை விரும்புவார்கள். (அவ்வாறு விரும்பிச் செல்வம் தேடிய செருக்கு காரணமாக) பெண்ணாசை என்னும் கடலில் விழுந்து புரளுவார்கள். செல்வத்தால் தேட வேண்டிய புகழைப் பற்றியும், அறம் செய்து அருளைத் தேட வேண்டியதைப் பற்றியும், கனவிலும் விரும்பமாட்டார்கள். குருவுக்கோ,கடவுள் பூசைக்கோ, அந்தணர்களுக்கோ, அறச் செயல்களைப் பாதுகாத்து நடத்தும் புரவலர்களுக்கோ தாம் தேடிய செல்வத்தை ஈய சிறிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்களைப் பிடித்து செருப்பாலே அடித்துத் துன்புறுத்தும் திருடர், துட்டர் முதலியோருக்கு, மனம் விரும்பி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பொன்னைக் கொடுப்பார்கள்.)
இங்கே இன்னொரு தனிப் பாடலையும் கருத்தில் கொள்ளலாம்...
"அண்டின பேரைக் கெடுப்போரும்,
ஒன்று பத்தா முடிந்து
குண்டுணி சொல்லும் குடோரிகளும்,
கொலையே நிதம் செய்
வண்டரைச் சேர்ந்து இன்பச்
சல்லாபம் பேசிடும் வஞ்சகரும்,
சண்டிப் பயல்களுமே,
கலிகாலத்தில் தாட்டிகரே".
இதன் பொருள் ---
தன்னைச் சேர்ந்தவரைக் கெடுப்போரும், ஒன்றைப் பத்தாக்கி, பொய் பேசி பகைமையை உண்டாக்கும் கோடரிக் காம்பு போன்றவர்களும், நாள்தோறும் கொலை செய்யும் கொடியவர்களுடன் பழகும் அந்தணர்களும், குதர்க்கம் பேசுபவர்களும் கலிகாலத்தில் ஆற்றல் வாய்ந்தவர் ஆவர்.
குண்டணி-- கோள்சொல்லுதல்.
குடோரி-- கோடரிக்காம்பு.
தாட்டிகர் -- வன்மைஉள்ளவர்.
திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான் கலிகாலத்தைப் பற்றி மேலும் விளக்கி உள்ளார்.
"கோழை, ஆணவ மிகுத்த வீரமே புகல்வர், அற்பர்,
கோதுசேர் இழிகுலத்தர்,.... குலமேன்மை
கூறியே நடு இருப்பர், சோறுஇடார், தருமபுத்ர
கோவும் நான் என இசைப்பர், ..... மிடியூடே
ஆழுவார், நிதி உடைக் குபேரனாம் என இசைப்பர்,
ஆசுசேர் கலியுகத்தின்..... நெறி ஈதே.
ஆயும் நூலறிவு கெட்ட நானும் வேறுஅல அதற்குள்,
ஆகையால் அவையடக்க..... உரை ஈதே.
இதன் பொருள் ----
பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும், குற்றம் உள்ள இழி குலத்தவராக இருப்பினும், சிலர் தங்கள் குலப்பெருமை பேசியே சபை நடுவே வீற்றிருப்பர். பசித்தவருக்குச் சோறு இடாத சிலர், தருமபுத்ர அரசன் நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்வார்கள். ஏழ்மை நிலையிலே ஆழ்ந்து கிடந்தாலும் சிலர், செல்வம் மிக்க குபேரன் நான்தான் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். குற்றம் நிறைந்த கலியுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆயவேண்டிய நூலறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன்.
கசடு ஆகும் கரும சடங்க சட்சமயிகள் பங்கிட்டு கலகல என்னும் கொட்பு உற்று அலகுஇல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று அற்று உடன் மோதும்---
கசடு --- குற்றம். உயிர்க்குற்றம்.
சடங்குகள் --- சமயக் கிரியைகள்.
கொட்பு --- மனம் சுழற்சி அடைதல்.
தர்க்கப் பலகலை பற்று --- தங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு வீணான வாதங்களைப் புரிவதில் பற்றுக் கொண்டவர்கள்.
நூங்களைக் கற்றதன் பலனாக, உண்மை அறிவைப் பெற்று,உயிர்க்குற்றங்கள் ஆகிய காமம்,வெகுளி, மயக்கம் ஆகியவை அற்று,நன்னெறியில் நின்று,பிறரையும் நெறிப்படுத்த வேண்டும்.
"தர்க்கமிடும்தொல்நூல் பரசமயம்" என்றார் குமரகுருபர அடிகள். தத்தம் சமயமே சிறந்தது என நாட்டி வாதம் புரிகின்ற சமய நூல்கள். தெளிந்த அறிவு அற்றவர்கள், தாம் கற்ற சமய நூற்கருத்துகளையே உண்மையானது என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள்.
அரவியிடம் தப்பி---
அவரம் --- ஆரவாரம், கூச்சல்.
தெளிந்த அறிவு உள்ளவர்கள் ஒருபோதும் வாதம் புரியமாட்டார்கள். ஆர்ப்பரிக்க மாட்டார்கள். நூலறிவு மட்டுமே உள்ளவர்கள், தாம் உணர்ந்தவற்றையே உணர்ந்து, அவர்கள் உணர்ந்ததை நிறுவுவதற்காக, பிறரோடு வாதம் புரிவார்கள்.
அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு. பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென். --- (அலகில்) திருப்புகழ்.
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம தருள்வாயே..
வம்பு அறாச் சில கன்னம் இடும்,சம-
யத்துக் கத்துத் ...... திரையாளர்,
வன் கலாத்திரள் தன்னை அகன்று,
மனத்தில் பற்றுஅற்று,...... அருளாலே,
தம் பராக்கு அற,நின்னை உணர்ந்து, உரு-
கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,
தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ? --- திருப்புகழ்.
இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். பத்திநெறியில் நின்று முத்தியை அடையவேண்டும்.
குறியாத அறிவை அறிந்து அப்பற்று,அதனினொடும் சற்று உற்று,அருள் வசனம் கிட்டப் பெறுவேனோ---
குறியாத அறிவு --- சுட்டி அறிய முடியாத மெய்யறிவு.
பற்று --- பற்றுவது பற்று. உலகப் பொருள்களில் பற்று உண்டானால் அறிவில் தெளிவு உண்டாகாது. மெய்ப்பொருளை உணர முடியாது. அவலகப் பற்றுக்களை அறுத்து, பெய்ப்பொருளில் பற்று வைக்கவேண்டும். அறிவை அறிவால் அறிந்து நிறைவாகும் தன்மையை அநுபவத்தால் அறிந்து இன்புறுவது அன்றி, எழுத்தாலும் சொல்லாலும் விளக்கும் எளிமை உடையது அன்று. சிவபெருமான் குகப்பெருமானை வழிபட்டு “குடிலை மந்திரத்தின் பொருள் யாது” என வினாவ குமகுருவாகிய சத்திவேலாயுதர் “அறிவை அறிவது பொருள்” என்று விளக்கியருளிய பெருமிதம் உடையது.
அரவுபுனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே”. --- (குமரகுருபர) திருப்புகழ்
இவ் அருமைத் திருப்புகழின் ஆழ்ந்த கருத்தை உன்னி உன்னி உணர்வு தலைப்பட்ட தாயுமான அடிகள்,
அறிவை அறிவதுவே ஆகும் பொருள்என்று
அறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ”
என்று திருவாய் மலர்ந்தருளியதை எண்ணுவோர்க்கு இதன் அருமை புலனாகும்.
பாச அறிவும், பசு அறிவும் போய்ப் பதி அறிவு பெற்று,அவ் அறிவால் அறிவே வடிவாகவுள்ள இறையை அறிந்து,அறிவு வடிவைப் பெற்று,அறிவு மயமாகி நிறைவு பெறுவர் ஆன்றோர்.
“அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன் அருண சரணாரவிந்தம் என்று பெறுவேனோ” என்று நம் அருணையடிகளின் அருள் மொழியைச் சிந்திப்பார்க்கு சித்தம் தித்திக்கும். “அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில் பிறவொன்று அற நின்ற பிரான்” என்ற அநுபூதியின் அருமையையும் சிந்தித்தல் வேண்டும். அது தன்னந்தனியே இருந்து எண்ணும் தோறும் இன்பக் கடலில் முழுக வைக்கும் அனுபவத் திருவாக்கு.அழுக்கை அழுக்கால் நீக்குவது போலும், முள்ளை முள்ளால் எடுப்பது போலும் அறிவை அறிவால் அறிதல் வேண்டும். “அறிவை அறிவதுவே இன்பம்” என்றார். வேறோரிடத்தில், “அறிவை அறிபவர் அறியும் இன்பந் தனை” (அகரமுத திருப்புகழ்)
அருமறைகளே நினைந்து,மநுநெறியிலே நடந்து,
அறிவை அறிவால் அறிந்து,...... நிறைவு ஆகி,
அகில புவன ஆதி எங்கும் வெளியுற, மெய்ஞ் ஞான இன்ப
அமுதை, ஒழியாது அருந்த ...... அருள்வாயே.
கொலைஞர் எனும் கொச்சைக் குறவர்---
கொச்சைக் குறவர் --- அறிவு அற்ற பாமரத் தன்மை உடைய வேடர்கள்.
செட்டி ---
"செட்டி எனும் ஓர் திரு நாமக் கார" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக தினைவனம் போனார். “காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே”என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.
கடலிலே மரமாக எழுந்திட்ட சூரனைத் தடிந்த செட்டி ஆகிய முருகவேளுக்கு அப்பன், திருவாரூரிலே கோயில் கொண்டு இருக்கும் சிவபிரான் என்னும் முகமாக "செட்டி அப்பன்" என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.
"செட்டி வடிவைக் கொடு தினைப்புனம் அதில் சிறு குறப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி! குரு வெற்பில் உறை சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே" என்று "சுத்திய நரப்புடன்" எனத் தொடங்கும் திருவேரகத் (சுவாமிமலை) திருப்புகழிலும், "செட்டி என்று வனம் மேவி, இன்பரச சக்தியின் செயலினாளை அன்பு உருக தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் பெருமாளே”என்று "கட்டிமுண்டக" எனத் தொடங்கும் திருப்புகழிலும் அருணகிரிநாதர் போற்றி உள்ளார். "செட்டி எனும் ஓர் திரு நாமக் கார!" என்று "விட்ட புழுகு" எனத் தொடங்கும் பொதுத் திருப்புகழிலும் வைத்து அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.
"........ ........ ........ அயில்விடும்
புத்தி ப்ரியத்தன், வெகு வித்தைக் குணக்கடல்,
புகழ்ச் செட்டி, சுப்ரமணியன்,
செச்சைப் புயத்தன், நவரத்ன க்ரீடத்தன், மொழி
தித்திக்கும் முத்தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முனிவர்க்கு உரைத்தவன்
சேவல் திருத்துவசமே".
என்று சேவல் வகுப்பிலும் அருணகிரிநார்,முருகப் பெருமானை, "செட்டி" எனப் போற்றி உள்ளார்.
... ... ... ... ... ... ... “வள்ளி
கை வளையல் ஏற்றி, இரு காலில் வளைந்து ஏற்றி,
மை வளைய நெஞ்ச மயல் ஏற்றி, - வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய் செட்டி, - வெருட்டி
ஒரு வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச்செட்டி, - பாடாநல்
கீரனைப் பூதத்தால் கிரிக் குகையுள் கல்சிறை செய்து
ஓர் அரிய பாவை உகந்து அணைந்து - கீரனுக்கு
வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, -ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, - பூ ஏந்திக்
கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, - தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன் இளம் செட்டி,
குதிரை மயில் ஆம் குமர செட்டி, சதிர் உடனே
சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி - பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், - இப்போதுஎம்
வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு, வா எனச் சீர்
ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்”
என்று தணிகை உலா என்னும் நூலில் முருகப் பெருமான் செட்டி என்று புகழப்பட்டு உள்ளார்.
"இனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி" என்று "சண்முக கவசம்" என்னும் அதியற்புத நூலில், பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.
இருபொருள் பட, சிலேடையாகப் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் காளமேகப் புலவர்.
திருவேரகம் (திரு + ஏர் + அகம்) என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதப் பெருமானை, "திருவேரகச் செட்டி" என்று விளித்து, இந்த (காயம்) உடம்பை ஒழித்து, இனிப் பிறவாமல் இருக்கும் பெருவாழ்வை அருளுமாறு ஒரு வெண்பாவைப் பாடினார்.
அது வருமாறு...
வெங்காயம் சுக்கு ஆனால், வெந்தயத்தால் ஆவது என்ன?
இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை? -- மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்,
ஏரகத்துச் செட்டியாரே.
இப் பாடலின் முதற்பொருள் (உலகியல் பொருள்) வருமாறு ---
திரு ஏரகம் என்ற ஊரில் உள்ள செட்டியாரே!,வெங்காயம் சுக்குப் போல உலர்ந்து வற்றி விடுமானால், வெறும் வெந்தயம் என்னும் ஒரு பொருளால் மட்டும் ஆவது என்ன? இந்தச் சரக்கை எவர் சுமந்து இருப்பார். மங்குதல் இல்லாத சீரகத்தைத் தந்தால், நான் பெருங்காயத்தைத் தேட மாட்டேன்.
விளக்கம் ---
வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்பவை உணவுப் பொருள்கள்.
ஏரகத்துச் செட்டியார் - திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் வணிகம் செய்கின்றவர்.
இப் பாடலுக்கு இரண்டாவதாகக் கூறப்படும் (அருளியல்) பொருள் ---
திரு ஏரகம் என்னும் (சுவாமிமலை) திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் முருகப் பெருமானே! கொடிய வினைகளால் ஆன இந்த உடல், வெறும் உடல் (இன்பத்தை மட்டுமே கருதி, உணவு வகைகளை உண்டு கொழுத்துப் பெருக்காமல், உண்டி சுருக்குதல் முதலான தவத்தால்) சுக்குப் போல வற்றிப் போகுமானால், கொடிய வினைகளால் வரக் கூடிய துன்பம் ஏதும் இல்லை. வினைகளால் வரக் கூடிய துன்பங்கள் நீங்கிவிட்டால், இந்த உடலை யார் சுமந்து இருப்பார்கள்? பெருமைக்கு உரிய வீடுபேறு என்னும் மோட்சத்தை எனக்கு அருளிச் செய்தால், இனிப் பலவாகிய உடல்களைத் தேடிப் பிறக்க மாட்டேன்.
விளக்கம் ---
வெங்காயம் --- வெம்மை + காயம்.
வெம்மை --- கொடிய.
காயம் --- உடல். வெங்காயம். கொடிய இந்த உடல். வெந்து போகப் போகின்ற உடல் என்றும் பொருள் கொள்ளலாம்.
"வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் தீர்ந்தால் தினைப் போது அளவும் நில்லாது" என்று பட்டினத்தடிகள் பாடி உள்ளார். வினைகளை அனுபவித்தற்கு, இந்த உடல் இறையருளால் நமக்கு வந்தது. வினைகள் துன்பத்திற்கு இடமாக அமைவதால் கொடியவை ஆயிற்று. துன்பத்திற்குக் கொள்கலமாக இந்த உடல் இருப்பதால் கொடிய உடல் எனப்பட்டது.
சுக்கு - வற்றிய பொருள்.
விரதம், தவம் முதலியவற்றால் உடம்பு இளைக்க வேண்டும்.
உணவு முதலியவைகளால் கொழுப்பதால் ஒரு பயனும் இல்லை.
"திருத்தணிகைத் திருமாமலை வாழ் தேவா! உன் தன் சந்நிதிக்கு வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே" என்றும், "கொழுத்த உடலை எடுத்தேனே" என்றும் வள்ளல் பெருமான் பாடி உள்ளார். இடம்பு கொழுத்தால் உள்ளமும் கொழுக்கும். உடம்பு இளைத்தால், உள்ளம் உருகும். "ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி" என்பது மணிவாசகர் அருளிய திருவாசகம்.
வெந்த + அயம், வெந்தயம் என்று ஆனது.
அயம் என்றால் பஸ்பம் என்று பொருள்.
வெந்த பின் கிடைப்பது அயம்.
அயம் என்பது இங்கு, அயச் செந்தூரப் பொடியைக் குறிக்கும்.
உடம்பு நோயால் இளைத்தால் செந்தூரம் என்னும் மருந்து வேண்டும். தவத்தால் இளைத்தால் அம் மருந்து தேவை இல்லை. இதை உணர்த்த, "வெந்தயத்தால் ஆவது என்ன" என்று பாடினார்.
சரக்கு --- பொருள். இங்கே உடலைக் குறித்தது.
"சரக்கு அறைத் திருவிருத்தம்" என்று ஒரு திருப்பதிகத்தையே பாடி உள்ளார் அப்பர் பெருமான்.
தவம் முற்றிய பிறகு, இந்த உடலைச் சுமந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், "இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை" என்று பாடினார். "இந்த உடலோடு இருப்பது அருவருப்பே" என்றார் பட்டினத்தார்.
சீரகம். சீர் + அகம். சிறந்த வீடு. சிறந்த வீடாகிய மோட்சத்தை இது குறிக்கும்.
தமிழில் வீடுபேறு எனப்படும். வீடு பேற்றினை இறைவன் அருள் புரிந்தால், இந்தப் பெரிய உடம்பு (பெரும் + காயம். காயம் = உடம்பு) என்பதை ஆன்மா தேடவேண்டிய அவசியம் இல்லை என்பதைக் குறிக்க, "சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்" என்று பாடினார்.
ஏரகத்துச் செட்டி --- முன்னர்ப் பலவாறாக அருளாளர்கள் பலரும் துதித்து வணங்கியபடி, ஏரகத்துச் செட்டி என்பது திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு இருக்கும் முருகப் பெருமான் ஆவார்
கொடும்பைக்குள் பெருமாளே---
கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி- மதுரை சாலையில் அமைந்துள்ளது. வேகப் பேருந்துகள் நிற்காமல் செல்லலாம். அதனால் விராலிமலையில் இறங்கி நகரப் பேரூந்துகள் மூலம் கொடும்பாளூர் வந்து சேரலாம். புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளன. அவற்றில் ஏறினால் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடும்பாளூர். (மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர்). அல்லது புதுக்கோட்டையிலிருந்து விராலிமலையை அடைந்து, அங்கிருந்து நகரப் பேரூந்துகளைப் பிடிக்கலாம்.
கருத்துரை
முருகா! அருளுபதேசம் புரியவேண்டும்.
No comments:
Post a Comment