தனிச்சயம் --- 0963. உரைத்த சம்ப்ரம

 



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

உரைத்த சம்ப்ரம (தனிச்சயம்)

 

முருகா! 

மரணத் தருவாயில் வந்து, அபயம் தந்து காத்தருள்.

 

 

தனத்த தந்தன தனதன தந்தத்

     தனத்த தந்தன தனதன தந்தத்

     தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

 

 

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்

     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்

     தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி

 

உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்

     டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்

     டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்

 

டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்

     பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்

     றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்

 

அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்

     துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்

     கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே

 

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்

     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்

     டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ

 

திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்

     டிடக்கை துந்துமி முரசு முழங்கச்

     செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்

 

தரித்து மண்டையி லுதிர மருந்தத்

     திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்

     தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா

 

தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்

     படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்

     றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி,

     கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சுஒத்து,

     ஒலித்திடும் செவி செவிடுஉற, ஒண்கண் ...... குருடாகி,

 

உரத்த வெண்ப(ல்)லும் நழுவி, மதம் கெட்டு,

     இரைத்து கிண்கிண் என்இருமல் எழுந்திட்டு,

     உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்- ......தமும் மேல்கொண்டு,

 

அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சிப்

     பழுத்து, உளம் செயல் வசனம் வரம்பு அற்று,

     அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து, ...... அனைவோரும்

 

அசுத்தன் என்றிட, உணர்வு அது குன்றி,

     துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு

     அவத்தை வந்து,உயிர் அலமரும் அன்றைக்கு.....அருள்வாயே

 

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்

     டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்

     டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ

 

திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு

     இடக்கை துந்துமி முரசு முழங்க,

     செருக்க ளந்தனில் நிருதர் தயங்க, ...... சிலபேய்கள்

 

தரித்து மண்டையில் உதிரம் அருந்த,

     திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க,

     தருக்கு சம்புகள் நிணம்அது சிந்தப் ...... பொரும்வேலா!

 

தடச் சிகண்டியில், வயலியில், அன்பைப்

     படைத்த நெஞ்சினில், இயல்செறி கொங்கில்,

     தனிச்சயதம் தனில் இனிது உறை கந்தப் ...... பெருமாளே. 

 

பதவுரை

 

        திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்  டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு--- திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்

டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி என்ற ஒலிகளை எழுப்பிக்கொண்டு,

 

       இடக்கை துந்துமி முரசு முழங்க--- இடக்கை, துந்துமிபேரிகை வகைகள் முழக்கம் இட,

 

       செருக் களந்தனில் நிருதர் தயங்க--- போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள,

 

       சில பேய்கள் தரித்து மண்டையில் உதிரம் அருந்த--- சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் ஏந்தி இரத்தத்தைக் குடிக்க,

 

       திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க--- கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க,

 

      தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த --- களிப்பு மிக்க நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற,

 

     பொரும் வேலா--- போர் புரியும் வேலாயுதரே!

 

      தடம் சிகண்டியில்--- பெருமை வாயந்த மயிலின் மீதும்,

 

     வயலியில்--- வயலூர் என்னும் திருத்தலத்திலும்,

 

     அன்பைப் படைத்த நெஞ்சினில்--- அன்பு பூண்ட அடியார்கள்

நெஞ்சத்திலும்,

 

       இயல் செறி கொங்கில்--- தகுதி நிறைந்த கொங்கு நாட்டில் உள்ள

 

      தனிச்சயம் தனில் இனிது உறை கந்த--- தனிச்சயம் என்னும் திருத்தலத்திலும்  இனிமையாக வீற்றிருக்கும் கந்தசுவாமியே! 

 

     பெருமாளே--- பெருமையில் மிக்கவரே!

 

      உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி--- எல்லாரும் புகழும்படி இருந்த சிறந்த அழகிய உடம்பு சுருங்கி,

 

      கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து--- கறுத்து இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி,

 

      ஒலித்திடும் செவி செவிடு உற--- ஒலியைக் கேட்கும்படி இருந்த காதுகளும் செவிடுபட்டு,

 

     ஒள் கண் குருடாகி--- ஒளி பொருந்திய கண்கள் குருடாகி,

 

      உரத்த வெண் ப(ல்)லும் நழுவி--- பலத்துடன் இருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுந்து,

 

      மதம் கெட்டு--- நான் என்ற இறுமாப்பு அழிந்து,

 

      இரைத்து--- மூச்சு இரைத்து,

 

     கிண் கிண் என் இருமல் எழுந்திட்டு--- கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி,

 

      உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு--- வேதனையுடன் தலை கிறுகிறு என்னும்படி பித்தமும் மேல் கொண்டு எழ,

 

      அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து--- இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து,

 

      உளம் செயல் வசனம் வரம்பு அற்று--- மனம்வாக்குசெயல் ஆகியவை அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து,

 

      அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து--- கூடியுள்ள பெண்களும் நான் எதிரில் வருவதைக் கண்டு, இகழ்ந்து பேச,

 

     அனைவோரும் அசுத்தன் என்றிட--- எல்லோரும் என்னை அழுக்கன் என்று இகழ,

 

     உணர்வு அது குன்றி--- உணர்ச்சி குன்றிப் போய்,

 

     துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு--- நாடித் துடிப்பு சிறிதே உள்ளது என்றும் இல்லை என்றும் சொல்லும்படியாக,

 

     அவத்தை வந்து--- அவத்தையை அடைந்து,

 

     உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே--- உயிரானது வேதனைப்படும் அந்த நாளில் வந்து அருள் புரியவேண்டும்.

 

பொழிப்புரை

 

     திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி என்ற ஒலிகளை எழுப்பிக்கொண்டு,இடக்கை, துந்துமிபேரிகை வகைகள் முழக்கம் இட,போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள,சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் ஏந்தி இரத்தத்தைக் குடிக்க,கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க,களிப்பு மிக்க நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற,

போர் புரியும் வேலாயுதரே!

 

            பெருமை வாயந்த மயிலின் மீதும், வயலூர் என்னும் திருத்தலத்திலும், அன்பு பூண்ட அடியார்கள் நெஞ்சத்திலும்,தகுதி நிறைந்த கொங்கு நாட்டில் உள்ள தனிச்சயம் என்னும் திருத்தலத்திலும்  இனிமையாக வீற்றிருக்கும் கந்தசுவாமியே! 

 

     பெருமையில் மிக்கவரே!

 

            எல்லாரும் புகழும்படி இருந்த சிறந்த அழகிய உடம்பு சுருங்கிகறுத்து இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி,ஒலியைக் கேட்கும்படி இருந்த காதுகளும் செவிடுபட்டு, ஒளி பொருந்திய கண்கள் குருடாகி,உறுதியாக இருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுந்து, நான் என்ற இறுமாப்பு அழிந்து,மூச்சு இரைத்து, கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகிவேதனையுடன் தலை கிறுகிறு என்னும்படி பித்தமும் மேல் கொண்டு எழ,இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து,மனம்வாக்குசெயல் ஆகியவை அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து,கூடியுள்ள பெண்களும் நான் எதிரில் வருவதைக் கண்டு, இகழ்ந்து பேச,எல்லோரும் என்னை அழுக்கன் என்று இகழஉணர்ச்சி குன்றிப் போய்,நாடித் துடிப்பு சிறிதே உள்ளது என்றும் இல்லை என்றும் அவரவரும் சொல்லும்படியாக,அவத்தையை அடைந்து, உயிரானது வேதனைப்படும் அந்த நாளில் வந்து அருள் புரியவேண்டும்.

 

விரிவுரை

 

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி--- 

 

சம்பிரமம் --- சிறப்பு, நிறைவு, மனக்களிப்பு.

 

திரங்கி --- வற்றிச் சுருங்கி.

 

கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து---

 

இளமையில் கருத்து இருந்த தலைமயிர் முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால்அவன் "நரன்" என்ற நாமத்தை உடையவன் ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கைபன்றியானைகரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும்.

 

சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும் செய்கின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றதுஇதற்குள் நரைத்து விட்டதேதேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன என்பதை அவர் அறியார். 

 

"அவனன்றி ஓரணுவும் அசையாது", "அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது",  "எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படிஉயர்ந்த பிறவியாகிய இம் மனிதப் பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்?  மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக் கூடாதுஅது ஆண்டவனுக்கு அருமையும் அல்ல. அதானல் நட்டமும் இல்லை.சிலர் வெளுத்த மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

 

மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம் பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும் உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று. எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி கிடைத்தது.

 

"பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்

பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்"

 

என்பார் திருமூலர்.

 

இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப் பெற்றுபிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்துஅவநெறியில் சென்று அலைந்து உழலாவண்ணம்இவ் உடம்பு ஒரு படித்தாக இராது என்றும்முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூர்தல் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத் தந்து இருக்கின்றான். நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னமாகும். நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும்.  மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்துசன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே! நரை வந்து விட்டதேஇனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே?கூற்றுவன் பாசக் கயிறும் வருமேஇதுகாறும் என் ஆவி ஈடேற்றத்திற்குரிய சிந்தனையை ஏழையேன் செய்தேனில்லை. இதுகாறும் உன்னை அடையும் நெறியை அறிந்தேனில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

நரை வந்தும் நல்லுணர்வு இன்றி அலையும் மனிதர் மிகவும் கீழ்மக்கள் ஆவர். இதுபற்றிசங்க காலத்துப் புலவராகிய நரிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.

 

பல்சான் றீரே! பல்சான் றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பில் பல்சான் றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ?

நல்லது செய்தலு ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தலு ஓம்புமின்,அதுதான்

எல்லாரும் உவப்பதுஅன்றியும்

நல்லாற்றுப் படூஉ நெறியும் ஆர்அதுவே.     --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! பலவான குணங்கள் அமையப் பெற்றவர்களே! மீன் முள்போல நரைத்து திரைத்த தாடையுடன் கூடி ஒரு பயனும் இல்லாமல் மூத்துக் கிடக்கும் பலராகிய மூத்தோர்களே.

  

மழுவாகிய கூர்மையான படையைத் தாங்கிய ஒருவன் (கூற்றுவன்) இனி விரைவில் வருவான். உங்கள் உழிரைப் பற்றி இழுத்துக் கொண்டு போகும்போது நீங்கள் வருந்துவீர்கள்வீணே அழுது புலம்புவீர்கள்.

 

நல்லது செய்தல் இனி உங்கள் தளர்ந்த வயதில் முடியாமல் இருக்கலாம். ஆயினும் நல்லது அல்லாதாவது செய்யாமல் இருக்க முயலுங்கள். அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அந்தப் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது செய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்.

 

கருமை நிறம்,அழுந்தல் குணம் என்னும் தாமதகுணத்தைக் குறிக்கும். வெண்மை நிறம் அமைதிக் குணம் என்னும் சத்துவகுணத்தைக் குறிக்கும். வயது ஏற ஏறசத்துவகுணம் அடைய வேண்டும் என்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் நமக்கு நரையைத் தந்து அருளினான். 

 

தாமதகுணம் மிகுந்து இருந்தால்அத் தாமதகுணத்தின் அடையாளமான எருமையின் மீது வந்துஉடம்பில் இருந்து உயிரைக் கூறுபடுத்திஇயமன் கொண்டு போவான்.

 

சத்துவகுணம் மிகுந்து இருந்தால்வெண்மை நிறமுடையதும்இரண்டாயிரம் தந்தங்களை உடையதும் ஆகிய,அயிராவணம் என்னும் வெள்ளை யானையுடன் வந்து,சிவகணங்கள்நமது உயிரைஉடம்பில் இருந்து கூறுபடுத்திசிவலோகத்துக்கு வெள்ளையானையின் மேல் அமரச் செய்து அழைத்துச் செல்வார்கள்.

 

ஒரே நாளில் திடீர் என்று எல்லா மயிர்களும் ஒன்றாக நரைத்து விடுவது இல்லை. ஒவ்வொன்றாக நரைக்கின்றது. அங்ஙனம் நரைக்கும் தோறும் நல்லுணர்வு பெறவேண்டும். ஒவ்வொரு மயிர் நரைக்கும்தோறும் நம்மிடம் உள்ள ஒவ்வொரு தீக்குணத்தையும் விடவேண்டும்.

 

"நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வுசற்றும் இலீர்,
எத்துக்கு மூத்தீர்? இழிகுலத்தேன் தன்னை வெஃகிப்
பித்துகொண்டார் போல் பிதற்றுகிறீர், இவ்வேடர்
குலத்துக்கு எல்லாம் ஓர் கொடும்பழியைச் செய்தீரே"

 

 என்று கிழவடிவில் வந்து தன்னை விரும்பிய முருகவேளைக் குறித்துவள்ளியம்மையார் கூறினார்.

 

இவற்றை எல்லாம் நுனித்து ணர சுவாமிகள்"கறுத்த குஞ்சியும் வெளிறி" என்றும், "தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து" "கறுத்து குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து" என்றும் அருளினார் சுவாமிகள்.

 

ஒலித்திடும் செவி செவிடு உற, ஒள் கண் குருடாகி, உரத்த வெண் ப(ல்)லும் நழுவி, மதம் கெட்டு,இரைத்து,கிண் கிண் என் இருமல் எழுந்திட்டு--- 

 

உடம்பு எடுத்த நமக்கு மிகுந்த துன்பத்தை தருவது முதுமைப் பருவம். அதை நினைத்தால் மனம் பதைக்கும். முதுமையில் கண் பார்வை குன்றும். செவி மந்தமாகும். நடக்கவோ நிற்கவோ இயலாது. உண்ட உணவு செறிக்காது. ஆசையும் வளர்ந்து நிற்கும். வீட்டில் உள்ளவர்கள் அவமதிப்பார்கள். இருமல் முதலிய நோய்கள் வந்து இடர்ப்படுத்தும். கருவி கரணங்கள் யாவும் நம்முடன் ஒத்துழைக்க மாட்டா. உயிர் வாழ்விலேயேபெருந் துன்பத்தைத் தருகின்ற காலம் அந்த மூப்புப் பருவம்.

 

அதனால் அடிகளார்ஒரு திருப்புகழில் இளமை கிழம்படு முன்பதம் பெற அருள்வாயே” என்று ஆண்டவனிடம் விண்ணப்பம் கொடுக்கின்றார். இந்த மூப்பிலே விளையும் கொடுமைகளைச் சுவாமிகள் அடியில் வரும் திருப்புகழ்ப் பாடலில் சித்திரிக்கின்றார்.

 

முனைஅழிந்தது,மேட்டி குலைந்தது,

     வயது சென்றதுவாய்ப்பல் உதிர்ந்தது,          

    முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது,.....ப்ரபையான

 

முகம்இழிந்தது,நோக்கும் இருண்டது,

    இருமல் வந்ததுதூக்கம் ஒழிந்தது,

    மொழி தளர்ந்ததுநாக்கு விழுந்தது,..... அறிவேபோய்

 

நினைவு அயர்ந்ததுநீட்டல் முடங்கலும்

    அவச மும்பல ஏக்கமும் உந்தின,

    நெறிமறந்ததுமூப்பு முதிர்ந்தது,.....பலநோயும்

 

நிலுவை கொண்டது,பாய்க்கிடை கண்டது,

    சல மலங்களின் நாற்றம் எழுந்தது

    நிமிஷம் இங்குஇனி ஆச்சுதுஎன் முன்புஇனிது.....   அருள்வாயே                                                                                             

 

உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு--- 

 

உளைப்பு --- உடம்புக் குடைச்சல், மனம் வருந்துதல், வேதனைப் படுதல்.

 

அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து--- 

 

அரத்தம் --- இரத்தம். குருதி. 

 

புழுவின் உடலில் குருதி இருக்காது. அதனால் அதன் உடல் வெளுத்து இருக்கும். மனிதனுக்கும், மூப்பு வந்த காலத்து, குருதி வற்றிப் போய் உடல் வெளுத்துப் போகும், மூச்சு இரைக்கும்.

 

உளம் செயல் வசனம் வரம்பு அற்று--- 

 

மனம்வாக்குசெயல் ஆகியவை ஒரு வரம்புக்குள் இல்லாமல், ஒழுங்கீனமான நிலையை அடையும்.

 

துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு அவத்தை வந்து--- 

 

இறுதியதொடு அறுதி என,வாழ்நாள் முடிகின்ற காலத்தில், எல்லாம் ஒடுங்கிப் போய், பாயே கதியாக உடம்பு கிடக்கும். அந்த வேளையில் நாடித் துடிப்பு உள்ளதா என்று பிடித்துப் பார்த்து, உள்ளது என்றும் இல்லை என்றும் அவரவர் கூறுவார்கள். சிறிதே உள்ளது என்றும் இல்லை என்றும் சொல்லும்படியாக உயிரானது அவத்தையை அடையும்.

 

உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே--- 

 

உயிர் சொல்லொணாத துயரத்தை அடைந்து வருந்துகின்ற காலத்தில், "அஞ்சேல்" என்று அபயம் தந்து காத்து அருள் புரிவது இறைவன் ஒருவனால்தான் இயலும்.

 

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி 

     அறிவு அழிந்திட்டு, ஐம்மேல் உந்தி,

அலமந்த போதாக, அஞ்சேல் என்று 

     அருள்செய்வான் அமருங்கோயில்,

வலம்வந்த மடவார்கள் நடமாட 

     முழவு அதிர மழை என்று அஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரம் ஏறி 

     முகில் பார்க்கும் திருவையாறே. --- திருஞானசம்பந்தர்.

 

தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த --- 

 

சம்பு --- நரி.

 

தடம் சிகண்டியில், வயலியில், அன்பைப் படைத்த நெஞ்சினில், இயல் செறி கொங்கில் தனிச்சயம் தனில் இனிது உறை கந்த---

 

இறைவன் வீற்றிருக்கும் இடங்கள் இன்னின்ன என்று அடிகளார் இங்கே காட்டுகின்றார்.

 

மயிலின் மீது விளங்குவான். வயலூரில் எழுந்தருளி இருப்பான். அன்புள்ளம் கொண்ட அடியவர்கள் நெஞ்சமே கோயிலாக எழுந்தருளி இருப்பான். தனிச்சயம் என்னும் திருத்தலத்தில் இருப்பான் என்பதால், எல்லாத் திருத்தலங்களிலும், எங்கெங்கு அடியவர்கள் வழிபடுகின்றார்களோ அங்கெல்லாம் விளங்குவான் என்பது பொருள்.

 

"கொந்து வார் குரவு அடியினும்,அடியவர்

    சிந்தை வாரிஜ நடுவினும்,நெறிபல

         கொண்ட வேதநல் முடியினும் மருவிய ....குருநாதா!

கொங்கில் ஏர்தரு பழநியில் அறுமுக!

    செந்தில் காவல! தணிகையில் இணைஇலி",   ---திருத்தணிகைத் திருப்புகழ்.                                                                                  

 

இமையவர் முடித்தொகையும், வனசரர் பொருப்பும்எ, னது

    இதயமும் மணக்கு ம்இரு பாத ச்சரோருகனும்        --வேடிச்சி காவலன் வகுப்பு

                                                                                  

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு

   மரகத மயூரப்  பெருமான் காண்     ---(திருமகளுலாவு) திருப்புகழ்.

 

துரியநிலையே கண்ட முத்தர் இதயா கமலம்

    அதனில் விளையா நின்ற புத்தமிர்த போதசுக

    சுயபடிக மாஇன்ப பத்மபதம்            --- (சுருதிமுடி) திருப்புகழ்.

 

தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது. பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.

 

கருத்துரை

 

முருகா! மரணத் தருவாயில் வந்து, அபயம் தந்து காத்தருள்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...