குருசாமியார், குருசாமி யார்?
-----
உயிர்கள் நலம் பெறுவதற்குத் தொடக்க நிலையிலும், முடிந்த நிலையிலும் வழியாய் அமைவது இறைவழிபாடு ஒன்றுதான். அது, குரு, இலிங்கம், சங்கமம் என மூன்று இடங்களில் அமையும் என்று சைவசித்தாந்தம் வரையறுத்து உள்ளது.
இந்த மூன்றில் இலிங்கம் என்பது அருவுரு. உருவமும் அருவமும் கலந்த நிலை. குரு மற்றும் சங்கமம் என்பது உருவ நிலையைக் குறிக்கும். குரு,இலிங்க,சங்கமம் என்னும் மூன்றும், தாவரம், சங்கமம் என்று இருவகையாகப் பகுக்கப்பட்டு உள்ளன. தாவரம் என்பது அசையாப் பொருளைக் குறிக்கும். இலிங்கம் தாபரம் ஆகும். சங்கமம் என்பது அசையும் பொருளைக் குறிக்கும். அடியார்களும் அவர்களில் ஒருவரான குருவும் சங்கமம்.எனவே, இறைவன், "தாபர சங்கமங்கள் எனும் இரண்டு உருவில் நின்று, மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்" என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.
இதில் குருவடிவம் சங்கமத்துள் அடக்கம். இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடுகளுடன், குரு வழிபாடு வேறுபடுத்திக் கூறப்பட்டு உள்ளது. "மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்" என்பதில் "பூசை" என்றது, குரு, இலிங்க, சங்கம வழிபாட்டை. "அருள்" என்றது, "உலக இன்பம், வீட்டு இன்பம்" என்னும் இரண்டையும் தருகின்ற அருள் ஆகும்.
குரு என்பவர்,தெரியாத ஒன்றைத் தெரிவிக்கின்றவர். ஞானத்திற்கு மட்டும்தான் குரு தேவை என்பதில்லை. உலகியலில் கூட ஒவ்வொருவர்க்கும் குரு வேண்டியவர். உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ ஒரு குருவை உடையவராக இருக்கின்றனர். எல்லோருக்கும் முதலில் அறிவைத் தருபவர் தாயும், தந்தையும். எனவே, தாய்தந்தையர் "இருமுதுகுரவர்" எனப்பட்டனர். அதன் பின்னர் எழுத்தை அறிவிக்கின்றவர் குரு. உயர்கல்வி கற்பிக்கின்றவர்களில் ஒருவரோ, சிலரோ குரு ஆகின்றனர். வாழ்க்கைக்கு வேண்டிய அறிவைக் கற்பிக்கின்றவர் குரு. அலுவலுகத்தில் கோப்புகளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பவரும் குரு. "தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்றபடி, குரு இல்லாமல் யாருக்கும் எதுவும் விளங்குவது இல்லை. "குரு இல்லா வித்தை பாழ்" என்பது முதுமொழி. "குரு இல்லா வித்தை..... வையத்து இருந்து என் பயன்" என்பது குமரேச சதகம்.
அறிவிக்க அறியும் இயல்பினை உடையது ஆன்மா. எனவே, ஒருவர் இது இன்னது என்று அறிவித்தால் ஒழிய, அறிந்துகொள்ள முடியாது. அப்படி அறிவிப்பவர் குரு ஆவார்.தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியார், மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான "திருவருட்பயன்" என்னும் நூலில், ஆசிரியரின் இன்றியமையாமை குறித்து பின்வருமாறு விளக்குகின்றார்.
"எமக்கு என்? எவனுக்கு எவை தெரியும் அவ்வ
தமக்கு அவனை வேண்டத் தவிர்".
இதன் பொருள் ---
எந்த ஒருவனுக்கு எந்தக் கலை தெரியுமோ, அந்தக் கலையை அறிந்து கொள்வதற்கு, அந்த ஒருவனது துணையையே நாட வேண்டியுள்ளது. அப்படியிருக்க, ஞானமாகிய அரிய பொருளை அறிய விரும்பும் நாம், அந்த ஞானத்தை உணர்த்தும் வல்லமை உடைய ஞானாசிரியரின் துணையை அல்லவா நாட வேண்டும்? அப்படிச் செய்யாமல், ஞானாசிரியரின் துணை இல்லாமலே ஞானத்தைப் பெறலாம் என்று கருதுவது பேதமையாகும்.
பதப் பொருள் ---
எவனுக்கு எவை தெரியும் --- எவன் ஒருவனுக்கு எக் கலைகள் நன்கு தெரியுமோ,அவ்வ தமக்கு --- அக் கலைகளைத் தாம் தெரிந்து கொள்ளுதல் பொருட்டு,அவனை வேண்ட --- அவனது துணையையே உலகத்தார் நாடி நிற்றல் எங்கும் காணப்படும் இயல்பாக இருக்க,எமக்கு தவிர் என்? --- ஞானத்தைப் பெற விரும்பும் எமக்கு , அதனை உணர்த்த வல்ல ஞானாசிரியரின் துணையைத் தவிர்த்தல் எவ்வாறு கூடும்?
வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் ஓர் இளைஞன், உணவகத்தில் உண்பது உடலுக்கும், பொருளாதாரத்திற்கும் பொருந்தாது என்பதை அறிந்து, சமையல் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள விரும்பினான். கடைக்குச் சென்று "சமையல் செய்வது எப்படி" என்பது பற்றிய வகைவகையான புத்தகங்களில் சிலவற்றை வாங்கி வந்தான். அவற்றைப் படித்துப் பார்த்தபோது அவனுக்குக் குழப்பந்தான் உண்டானது. ஒன்றில் உள்ளது போல, மற்றொன்றில் இல்லை. ஏதோ ஒரு வகையாகத் தாளில் குறிப்பெடுத்துக் கொண்டு சிற்றுண்டி செய்து பார்த்தான். நூல்களைப் படித்துப் பார்த்து, பொருள்களை வாங்கிய அவனால் எதையும் ஒழுங்காகச் சமைத்து உண்ண முடியவில்லை. சமைத்த பொருளைக் கீழே கொட்டுவதைத் தவிர வேறுவழியில்லை. பார்த்துப் பார்த்து, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். சமையல் புத்தகங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்தான். சமையல் தெரிந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டான்.
எளிய சமையலுக்குக் கூட நூல்கள் கைகொடுத்து உதவாதபோது, இசை நாட்டியம் போன்ற நுண் கலைகளை அவை பற்றிய நூல்களைப் பயின்றே ஒருவர் தெரிந்து கொண்டு விடலாம் என்று கூறுவது அறியாமை தானே. அந்தந்தக் கலைகளில் வல்ல ஆசிரியரைத் துணையாகக் கொண்டே, அக்கலைகளை நாம் அனுபவமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு அவ்வாசிரியரிடம் பல காலம் முறையாகப் பயில வேண்டும். அவரது வழிகாட்டுதல் மூலமாகவே அக்கலைகளைப் பற்றிய நுணுக்கங்களைப் பெற முடியும்.
உலகியல் கலைகளின் நிலையே இவ்வாறு இருக்க, உலகியல் கடந்த பொருளாகிய ஞானத்தை,ஞானாசிரியர் இல்லாமலே நூல்கள் வழியாகப் பெற்றுவிட முடியும் என்று கூறுவது அப்பட்டமான அறியாமையே. ஞானாசிரியன் இல்லாமல் கற்கும் போது, ஞான நூல்களின் பொருள் விளங்காமல் நிற்கும். அல்லது மாறுபாடாகத் தோன்றும். ஆதலால் ஞானநூல்கள் ஞானகுரு இன்றிப் பொருள் தெளிவைத் தரமாட்டா.
மெய்ந்நிலையை அடைந்தாருக்கும் குரு வேண்டுமா? என்னும் ஐயம் எழும். பிறவியிலேயே கண்ணில்லாதவன் ஒருவன் மருத்துவ முறையினால் கண்பார்வை பெற்றான் என்றால், அவன் பொருள்களைக் காணும் திறனை மட்டுமே பெற்றவன் ஆகிறான். ஆனால், இது இன்னபொருள் என்பதை அவனால் உணரமுடியாது. அந்தப் பொருளை அறிந்த வேறொருவன் உணர்த்தவே, அவன் அதனை உணர்தல் கூடும். அதுபோல, பக்குவநிலையில் ஆணவமல மறைப்பு நீங்கப் பெற்றவர், பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணருகின்ற ஆற்றலைப் பெறுவர். ஆனால், அவற்றின் இயல்பையெல்லாம் உணர்ந்த ஞானாசிரியர் உணர்த்தவே அவற்றை உணர்ந்து கொள்ள முடியும். எனவே, எப்பேர்ப்பட்டவர்க்கும் குரு அவசியம்.
உயிருக்கு உள்ள அறியாமை என்னும் இருள் நீங்குவது குருவின் திருநோக்கால் மட்டுமே என்பதை, உமாபதி சிவாச்சாரியார் பின்வருமாறு காட்டினார்...
"விடம் நகுலம் மேவினும் மெய்ப் பாவகனின் மீளும்
கடனில், இருள் போவது இவன் கண்.
இதன் பொருள் ---
பாம்பு கடித்து ஏறிய விடமானது, பாம்புக்குப் பகையாகிய கீரியே வந்து கடிபட்டவன் உடல் மீது விழுந்து புரண்டாலும் நீங்காது. ஆனால், மாந்திரிகன் ஒருவன் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவித்து அந்த மந்திர வடிவேயாக நின்று பார்க்கும் பார்வையினால் அந்த விடம் நீங்கும். உயிரில் உள்ள அறியாமையாகிய இருள் நீங்குவதும் இம்முறைமையில் ஆகும். இறைவன் உயிர்க்கு உயிராக இருந்தபோதிலும், அறியாமை நீங்குவது இல்லை. இறைவனாய் நிற்கும் ஞானகுருவின் திருநோக்கத்தாலேயே அது நீங்குவதாகும்.
இறைவன்தான் ஆன்ம அறிவில் எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறானே. அவ்வாறு இருக்கின்ற அவன் உள்ளிருந்தபடியே ஆணவமலத்தை நீக்கக் கூடாதா? என்னும் ஐயம் எழலாம். அதற்கு விடையாகவே, மாந்திரிகனை உவமை காட்டி மேற்கூறிய ஐயத்தைத் தெளிவிக்கிறார்.
எதையும் இன்னது என்று அறிவித்து அறிவு புகட்டும் ஆசிரியர் இன்றி, எந்த நிலையிலும் எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது.
அடிமை வழிக்குஓர் ஆள்எனக் கொண்டு,
அருட்பால் புகட்டி, மருட்பிறவி
அறுக்கும் படிவந்து, எழுத்து அறிவித்து,
அஞ்சுஆறு ஏழுஎட்டுஎனும் பருவத்து
உடைமைப் படுத்தி, அஞ்செழுத்தும்
உபதேசித்து, என் உயிர்க்கு உயிராய்,
உணர்வுக்கு உணர்வாய்ப் பயின்று அறியும்
உருவில் குருவாய் உடன்கலந்து,
மடமை தவிர்த்து, வழிபாடு
திருத்தி, மழலைத் திறம்திருத்தி,
மதுரக் கவி நாவரத் திருத்தி,
வலியப் பிடிசோறு அமுதுஅருத்தி,
குடுமி திருத்தி எனை வளர்த்த
குருவே வருக, வருகவே!
குடுமிச் சுடர்வேல் படை உடைய
கோமான் வருக வருகவே.
தொண்டு செய்யும் வகைக்கு என்னை ஆளாக அட்கொண்டு, அருளாகிய பாலை எனக்குப் புகட்டி, மயக்கத்தைத் தருவதாகிய பிறப்பை நான் அறுத்துக் கொள்ளும்படி வந்து, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு என்னும் வயதுப் பருவம் வந்த காலத்தில், என்னைத் தனக்கு உடைமையாகச் செய்து,எனது பக்குவ நிலைக்கு ஏற்ப ஆட்கொண்டு அருளி (அஞ்சு வயதில் எழுத்தறிவித்தல், ஏழு வயதில் மந்திர உபதேசம் செய்து திருவைந்தெழுத்தாகிய நமசிவாய என்னும் ஒப்பற்ற மந்திரத்தை உபதேசித்து) எனது உயிருக்கு உயிராகவும், உணர்வுக்கு உணர்வாகவும் இருந்து, வெளித் தோற்றத்தில் குரு என்னும் திருவுருவத்தோடு என்னோடு கலந்து இருந்து, என்னுடைய உயிரில் கலந்திருந்த அறியாமை என்னும் ஆணவ இருளை ஒழித்து, வழிபாட்டு நெறியிலே என்னைப் பயிற்றுவித்து, சிறுகுழந்தையைப் போல் அறியாமையால் எதை எதையோ கற்று, கற்ற வழியில் நில்லாமல், கற்றதையே பேசிக் கொண்டிருந்த என்னுடைய நிலையை மாற்றி, அறிவில் சிறந்தவனாக்கி, நால்வகைக் கவியுள் ஒன்றாகிய இனிமை பொருந்திய மதுரகவியைப் பாடும் திறத்தை என் நாவில் நின்று உணர்த்தியருளி, வலிந்து வந்து பிடிசோறு எனப்படும் ஞான அமுதத்தை எனக்கு ஊட்டி, என்னுடைய தலையை அலங்கரித்து, என்னை வளர்த்த குருவே வருவாயாக. ஒளிபொருந்திய வேற்படையை உடைய கோமகனே வருவாயாக. வருவாயாக.
இது குற்றாலத்திற்கு அருகில் உள்ள "திரு இலஞ்சி" என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள முருகப்பெருமான் மீது கவிராச பண்டாரத்தையா என்னும் பெரியார் பாடியருளிய "திருஇலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ்" என்னும் நூலில், வாரானைப் பருவத்தில் வரும் பாடல்.
உயிர்களை ஆட்கொண்டு அருள்புரிய, மனித வடிவில் குருநாதனாகத் திருமேனி தாங்கி, பரம்பொருளே எழுந்தருளுவான் என்பது நூல்களின் துணிபு. "அட்டாட்ட விக்கிரக லீலை" என்னும் அருட்பாடல் பாம்பன் சுவாமிகள் அருளியது. இறைவன் உயிர்களுக்கு, அறிவு விளக்கத்தைத் தரும் பொருட்டு மேற்கொள்ளும் 64திருமேனிகளுள் "சுசி மாணவ பாவம்" என்பதும், "சற்குரு மூரத்தம்", "தட்சிணாமூர்த்தம்" என்பனவும் சொல்லப்படுகின்றன.
திருவேரகம் என்னும் சுவாமிமலையில், முருகப் பெருமானிடம் பிரணவமந்திரப் பொருளைக் கேட்டுப் பெற மாணவ பாவத்திலே இருந்தது அந்தப் பரம்பொருள். "மாணவ பாவம்" என்றால் என்ன என்பதை உயிர்களாகிய நாம் அறிந்து விளக்கம் பெற வந்த மூர்த்தம் அது. எவ்வளவுதான் அறிவில் சிறந்தவராகக் கருதப்பட்டாலும், அவர்களுக்கும் அறிவு விளக்கம் தேவைப்படும். விளக்குக்குத் தூண்டுகோல் தேவைப்படுவது போல. அவ்வாறு தேவை உண்டாகும் போது, அதை யாரிடமிருந்து பெறுகின்றோமோ, அவரைக் குருவாக வணங்கி, மாணவ பாவத்தோடு கேட்டால்தான் பொருள் விளங்கி, அறிவு சிறக்கும்.
அது போலவே, பரம்பொருளானவர், குருநாதனாகத் திருமேனி தாங்கி, சனகாதி முனிவர்களுக்கு மெய்ப்பொருளை உபதேசித்தது தட்சிணாமூர்த்தம் என்னும் "தென்முகக் கடவுள்" திருமூர்த்தம். திருப்பெருந்துறையிலே, குருநாதனாக எழுந்தருளி இருந்து, பக்குவ ஆன்மாவாகிய மணிவாசகப் பெருமானை ஆட்கொண்டு அருள் புரிந்தது "சற்குருமூர்த்தம்".
"சொல் ஆர்ந்த சற்குரு சுத்தசிவம் ஆமே" என்றும், "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்றும் திருமூல நாயனார், திருமந்திர நூலிலே தெளிவுறக் காட்டினார்.
அந்த சுத்தசிவமாகிய ஐம்முகப் பரம்பொருள் தான், ஆறுமுகப் பரம்பொருளாக வந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்திதான். "தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதை இடப்பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, ஆங்கு ஒரு நாள், வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி, ஐந்து முகத்தோடு, அதோ முகமும் தந்து, திருமுகங்கள் ஆறு ஆகி" என வரும் "திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா"ப் பாடல் வரிகள் இதைனைத் தெளிவுபடுத்தும். முருகப் பெருமானுடைய திருக்கையில் விளங்கும் வேலாயுதமே, திருவைந்தெழுத்தாகிய நமசிவாயம் தான் என்பார் அருணகிரிநாதப் பெருமான்.
"செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவம் அஞ்செழுத்தை முந்த ...... விடுவோனே"
என வரும் திருப்புகழப் பாடல் வரிகளின் வழி, வேலாயுதமே திருவைந்தெழுத்து என்பதும், அதுதான், "ஞானசத்தி" என்பதும், ஆணவமே உருக் கொண்டிருந்த சூரபதுமன் மீது, அது பட்டதும், அவனை தூயவன் ஆகி, இன்றும் நாம் வணங்குகின்ற முருகப் பெருமானுடைய மயிலும் சேவலும் ஆகி, உயர் கதியைப் பெற்றான் என்பதும் தெளிவாகும். அந்த "ஆடும் பரியையும்" "அணி சேவலையும் தான்" நாம் இன்று வழிபட்டு வருகின்றோம்.
"தீயவை புரிந்தாரேனும்,குமரவேள் திருமுன் உற்றால்,
தூயவர் ஆகி, மேலைத் தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள்செய்த
மாயையின் மகனும் ஆன்றோவரம்புஇலா அருள் பெற்று உய்ந்தான்"
என்று நமது சொந்தப் புராணம் ஆகிய "கந்த புராணம்" கூறுமாறும் அறிக.
திருஇலஞ்சி முருகன் குருநாதனாக எழுந்தருளித் தன்னை ஆட்கொண்டு அருளிய திறத்தை, கவிராச பண்டாரத்தையா என்னும் பெரியவர் மேற்குறித்த, பிள்ளைத்தமிழ்ப் பாடலில் காட்டினார்.
இப் பாடலில், "உயிர்க்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய், பயின்று அறியும் உருவில் குருவாய் உடன் கலந்து" என்னும் அற்புதமான வரிகள் சிந்தனைக்கு உரியன. இறைவன் உயிருடன் அறிவில் ஒன்றாயும், உடனாயும், வேறாயும் இருப்பதன் உண்மை கூறப்பட்டு உள்ளது.
"வலியப் பிடிசோறு அமுது அருத்தி" என்னும் சொற்றொடரும், அற்புதமான செய்தியை நமக்கு அறிவுறுத்துவது. குழந்தையாக இருக்கும் போது, உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், உணவு இன்றியமையாதது. ஆனால், அதன் தேவை பற்றிய அறிவு குழந்தைக்கு இல்லாமையால் உணவு கொள்ள மறுக்கிறது. தாயானவள், குழந்தைக்கு வலிய சோறு ஊட்டி ஊட்டி வளர்ப்பாள். இது தாயின் கருணை.
"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்றார் அப்பர் பெருமான். அன்னம் என்பது, உயிர்கள் அனுபவிக்க வேண்டிய வீட்டின்பத்தைக் (அருளுகின்ற திருவடி ஞானத்தைக்) குறிக்கும். உண்ணுகின்ற சோற்றை அல்ல. அன்னம் --- வீட்டின்பம்.
"பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என்னும் திருவாசகத்தில் "சோறு" என்பது பேரின்பம் என்னும் பொருள் பற்றியே வந்துள்ளது. அன்னம் பாலித்தலை, சோறு இடுதலை, உணவு வழங்குதலை, "அமுது படைத்தல்" என்றே நமது முன்னோர் வழங்கினர். சோறு ஆக்குதலையும், அமுது ஆக்குதல் என்றே பெரிபுராணத்தில் குறிக்கப்பட்டு உள்ளதும் அறிந்து இன்புறத் தக்கது. அது குறித்தே, இறைவனை அமுதம் என்றே குறித்தனர். நாம் என்னவென்றே அறியாத தேவாமிர்தத்தை இது குறித்தது அல்ல என்பதை நன்கு உணர்தல் வேண்டும்.
"பிழைத்த தன் தாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததுஓர் அமுதம் ஈந்தார்
குறுக்கை வீரட்டனாரே".
என்னும் அப்பர் தேவாரத்தில் "அமுதம் என்னும் சொல், வீடுபேற்றையே குறித்து வந்ததைக் கொண்டு, "சோறு" என்னும் சொல்லுக்கும் வீடுபேறு என்றே கொள்ளல் வேண்டும்.
உயிர்கள் ஆணவமலத்தின் காரணமாக உண்மை அறிவைப் பெறமுடியாமல் துன்பத்திற்கு ஆளாகும். அறிவு என்று எண்ணிக்கொண்டு, அறிவில்லாத மடமை என்னும் அறிவற்ற செயல்களிலே ஈடுபட்டு, உண்மை அறிவை இழந்து அல்லல் உறும். அறிவுள்ளவர்கள் அறிவைப் புகட்டினால், அதை ஏற்க மறுப்பது உயிரின் இயல்பு. அதனால் தான், மாணவ நிலையில் இருக்கும் போது ஆசிரியர், தக்க தண்டனை வழங்கியாவது அறிவை நமக்குப் புகட்டுகின்றார். அதுபோல, உயிர்களுக்கு உண்மை அறிவாகிய அமுதத்தை, இறைவன் குருநாதனாக வந்து, வலியப் புகட்டி அறிவில் தெளிவை உண்டாக்குவதைத் தான், "வலிய பிடிசோறு அமுது அருத்தி" என்று இப்பாடலில் காட்டப்பட்டது.
"குடுமி திருத்தி" என்னும் சொற்பொருளும் அறிந்து இன்புறத் தக்கது. தலைமுடி என்பது தூய்மையுடனும் அழகுடனும் இருக்க வேண்டியது அவசியம். "ஒண் சிகை ஞானம்" என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அதன் தன்மை, குழந்தைக்குத் தெரியாது என்பதால், தாய் தினமும் அந்தக் குடுமி திருத்துகின்ற வேலையைச் செய்கிறாள். உயிர்களுக்கு, தலையாய அறிவு விளங்க வேண்டும். "தலை அறிவு இல்லேனை நெறி நிற்க, நீ தீட்சை தரவேணும்" என்பார் அருணகிரிநாதப் பெருமான். தீட்சை நெறியை நமக்கு வழங்கி, தலையாய அறிவை நாம் பெறுவதற்குத் துணை புரிவதைத் தான், "குடுமி திருத்தி எனை வளர்த்த குருவே" என்றார்.குருநாதர் என்பவர் எப்படி எல்லாம்இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவது இந்தப் பாடல்.
இற்றைக்குச் சற்று ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எனது பிறந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்வை இங்குச் சுட்டிக் காட்டுதல் தெளிவைத் தரும்.
மிகவும் ஏழ்மையில் உள்ளவர்க்கு இலக்கணமாக, உடம்பும் ஆடையும் கொண்ட ஒரு பெரியவர், தெருக்கோடியில் உள்ள கோயிலில் இருந்துகொண்டு, தன் முன்னர் இருந்து நான்கு பெரியவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பதைக் கண்டேன். என்னதான் நடக்கின்றது என்பதை அறிய ஆவல் கொண்டு, சற்றுத் தொலைவில் அமர்ந்து கேட்டேன். வேதாந்தச் செய்திகளை அந்தப் பெரியவர் மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு இருந்தார். கேட்கக் கேட்க எனக்கு ஆவலும், வியப்பும் அதிகரித்தது. அவரது தோற்றத்திற்கும், சொற்களுக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை. வகுப்பு முடிந்த போது, இவருக்கு குரு யாராக இருக்க முடியும் என்பதை அறிய ஆவல் கொண்டு, "ஐயா! தங்களுக்கு குரு யார்?" என்று கேட்டேன். "யார் இந்தப் பையன்?" என்று தன் எதிரில் இருந்தவர்களைக் கேட்டார். "என் மகன்" என்று எதிரில் இருந்த எனது தந்தையார் கூறினார். "ஏம்பா! என் குருவைப் பற்றி அறிய அவ்வளவு ஆசையா?" என்று என்னைக் கேட்டார். தவறு செய்து விட்டேனோ என்னும் அச்சத்தில், "தவறு என்றால் மன்னிக்க வேண்டும், ஐயா" என்றேன். "இதில் என்ன தவறு? என் மனைவிதான் எனது குரு" என்றார். அதைக் கேட்டதுமே, அடுத்த முறை ஊருக்கு வந்தால், சோளிங்கபுரத்துக்கு அருகில் உள்ள "கொடைக்கல்" என்னும் அவரது ஊருக்குச் சென்று, அவரது துணைவியாரைத் தரிசித்து வணங்கி வரவேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அடுத்த கணத்தில் அவர் சொன்னார், "அவள் மட்டும் கொஞ்சம் என்னிடத்தில் அன்போடு இருந்திருந்தால், நான் அவளது புடவைத் தலைப்பிலேயே இருந்திருப்பேன். இங்கே வந்திருக்க மாட்டேன்" என்றாரே. எனது குறிப்பை அறிந்த அந்தப் பெரியவர், மேலும் "எல்லாம் விதிப்படியே நடக்கின்றது. செய்வதைச் செய்துவிட்டு, வந்த பின் வருந்தலாமா? விதைத்தது தானே முளைக்கும்" என்று சொன்னார். எவ்வளவு நல்ல உள்ளம்! நான் உடனே அவரது திருவடியில் விழுந்து வணங்கினேன். பின்னர் பல ஆண்டுகள் அப் பெருமானாரை, சமயம் வாய்க்கும்போதெல்லாம், கண்டு வணங்கி மகிழும் பேறு பெற்றிருந்தேன்.
மனைவியை அடித்துத் துன்புறுத்துகின்ற பெரியவர்களும் உண்டு. அவ்வாறு அவரும் செய்திருக்கலாமே என்றால், அவ்வாறு செய்வது மேலும் வினையைப் பெருக்குவதாக அமையும். வினையை அனுபவித்துக் கழிக்கத் தானே இந்த உலகில் வந்தோம். மனைவியால் துன்பத்தை அனுபவித்த அவருக்கு, வினையின் பயன் இது என்னும் தெளிவு பிறந்தது. தெளிவிக்க வந்தவரைத் துன்புறுத்துதல் கூடாது. அது பெரும்பாவம்.
"நடை இல்லையேல் பயன் இல்லை. ஒழுக்கமே உயர்வு தரும்" என்று எல்லோருக்கும் உபதேசித்தது மட்டுமல்லாமல், சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர், கொடைக்கல் பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய ஞானதேசிக சுவாமிகள். நடை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள்.
குருசாமி யார்? துணைவியாரே முதல் குரு.
தாய்க்குப் பிறகு நல்தாரம் எனச் சொன்ன அவ்
வாய்க்குப் பெருமை வழங்குகின்றார்,--- காய்க்கும்
கனிமரத்தைப் பேணும் கடமைபோல், கொண்ட
மனைநலம் பேணல் மதி. --- தருமதீபிகை.
உள்ளம் உருகி மேலான அன்புடன் பிள்ளையைப் பேணுவதில் தாயே தலை சிறந்தவள். தாய்க்குப் பின் தாரமே ஒருவனுக்குத் தாரகமாய் நின்று ஆதரித்து அருள் புரிகின்றாள். இந்த முதுமொழிக்குப் பெருமை சேர்ப்பவர் வாழ்க்கைத் துணை. பழம் தரும் மரத்தைப் பாதுகாத்தல் போன்று, ஆவித் துணையாய் அமைந்துள்ள தேவியை அருமையுடன் பாவித்தல் வேண்டும்.
No comments:
Post a Comment