பேரூர் --- 0957. தீராப் பிணி தீர



அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தீராப் பிணிதீர (பேரூர்)

 

முருகா! 

பிறவி நோய் தீர ஆன்மஞானம் பெறும் பொருட்டு 

உபதேசித்து அருளுவீர்.

 

 

தானாத் தனதான தானாத் ...... தனதான

 

 

தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான

 

ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே

 

பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே

 

பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தீராப் பிணி தீர,சீவ ஆத் ...... தும ஞான

 

ஊராட்சி அது ஆன ஓர்வாக்கு ...... அருள்வாயே.

 

பாரோர்க்கு இறை சேயே! பாலாக் ...... கிரி ராசே!

 

பேரால் பெரியோனே! பேரூர்ப் ...... பெருமாளே!

 

 

பதவுரை

 

 

            பாரோர்க்கு இறை சேயே--- உலகத்தில் உள்ளவர்க்கெல்லாம் தலைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

 

            பாலா--- என்றும் இளையவரே!

 

            கிரி ராசே --- மளைகளுக்கெல்லாம் அரசரே!

 

            பேரால் பெரியோனே--- புகழினால் எவரினும் மேம்பட்ட பெரியவரே!

 

            பேரூர்ப் பெருமாளே --- பேரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

 

            தீராப் பிணி தீர--- தீராத நோயாகிய பிறவி நோய் தீரும் பொருட்டு,

 

            சீவ ஆத்தும ஞான --- உயிரை அறிந்து கொள்வதாகிய ஞானத்தை அடையும் பொருட்டு,

 

            ஊராட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே --- உலகமெங்கும் ஆட்சியில் இருப்பதாகிய ஒப்பற்ற உபதேச அருள் வாக்கை அருள் புரிவீர்.

 

பொழிப்புரை

 

 

            உலகத்தில் உள்ளவர்க்கெல்லாம் தலைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

 

            என்றும் இளையவரே!

 

            மலைகளுக்கெல்லாம் அரசரே!

 

            புகழினால் எவரினும் மேம்பட்ட பெரியவரே!

 

            பேரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

 

            தீராத நோயாகிய பிறவி நோய் தீரும் பொருட்டுஉயிரை அறிந்துகொள்வதாகிய ஞானத்தை அடையும் பொருட்டுஉலகமெங்கும்  ஆட்சியில் இருப்பதாகிய ஒப்பற்ற உபதேச அருள் வாக்கை அருள் புரிவீர்.

 

 

விரிவுரை

 

தீராப் பிணி ---

 

உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே. 

 

எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசிகாமம்பிறவி என அறிக. 

 

பசி உடம்பைப் பற்றியது. 

காமம் உள்ளத்தைப் பற்றியது. 

பிறவி உயிரைப் பற்றியது.

 

பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்ல உரையில் அடங்கா.

 

பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள்தாம் உலகில் இல்லை.விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை என்ன என்ன உருவில் உட்செலுத்துகின்றனர்?. பசி நோய் வந்தபோதுநடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம்குலம்கல்விவண்மைபொருளுடைமைதானம்தவம்உயர்ச்சிமுயற்சிவேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.

 

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்து போம்.                 --- நல்வழி.

 

பசி நோயைத் தணிக்கத் தானே உயிர்கள் ஓயாது உழைக்கின்றன?  பசி நோய் மிக்கபோது கண்ணொளி மங்குகின்றது.  கரசரணாதிகள் தடுமாறுகின்றன. ஏனைய கருவிகரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன.  நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர்.  சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.

 

பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள்.  அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.

 

எட்டரும் பொருளேதிருச்சிற்றம்பலத்தே

            இலகிய இறைவனேஉலகில்

பட்டினி உற்றார்,பசித்தனர்,களையால்

            பரதவிக்கின்றனர் என்றே,

ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

            உளம் பகீர்என நடுக்குற்றேன்;

இட்ட உவ்வுலகில் பசிஎனில்,எந்தாய்!

            என்உளம் நடுங்குவது இயல்பே.             ---  திருவருட்பா.

 

பசி நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள். பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி" என்றார்.  

 

"அற்றார் அழிபசி தீர்த்தல்அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புஉழி".                 --- திருக்குறள்.

 

பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும். ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.

 

"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்".           

 

என்று அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.

 

இத்தகைய பொல்லாத பசியை முருகவேளுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி உரைத்து மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர் அருணகிரிநாதர்...

 

குகனெ குருபர னேயென நெஞ்சில்

     புகழ,அருள்கொடு நாவினில் இன்பக்

     குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் ...... பசிஆறி....---  திருப்புகழ்.

 

யாவராலும் மாற்றமுடியாத பசிப்பிணியை மாற்றும் மருந்து திருவேலிறைவன் திருநாமங்கள் என அறிக.

 

காம நோய்---

 

இக் காம நோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி போதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. ஆனை மேல் பவனிவரும் இந்திரன்இதனால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான். இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான்.  கலைகளை ஆய்ந்தாரும்பகைவரைக் காய்ந்தாரும் காமநோயால் வீந்தார்கள். இதன் வலிமைதான் என்னேமுடி துறந்தான் ஒருவன். தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அவளுடன் அமையாதுபுன் மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்றுபார்த்தவர் பரிகசிக்கபொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்துசன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.

 

"உடம்பினால் ஆயபயன் எல்லாம்உடம்பினில் வாழ்

உத்தமனைக் காணும் பொருட்டு".

 

என்பதனை அறியாமல்உடம்பையும் பாழ்படுத்துகின்றனர்.  காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான். காகாசுரன் கண்ணிழந்தான்.

 

இந் நோயை அறவே அகற்றினாரும் உள்ளனர்.   வீடுமரும்அநுமரும்குமரகுருபரரும்சிவப்பிரகாசரும்அப்பர் பெருமானும் என்க.

 

அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தனர். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என உணர்க.

 

கடத்தில் குறத்தி பிரான் அருளால்கலங்காத சித்தத்

திடத்தில் புணைஎன யான் கடந்தேன்சித்ர மாதர்அல்குல்

படத்தில்கழுத்தில்பழுத்த செவ்வாயில்பணையில்உந்தித்

தடத்தில்தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.     ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                            

பிறவிப் பிணி---

 

இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம் நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில் நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.

 

எண்ணிலாத நெடுங்காலம்

            எண்ணிலாத பலபிறவி

எடுத்தே இளைத்து இங்கு அவைநீங்கி

            இம்மானிடத்தில் வந்து உதித்து,

 

மண்ணில் வாழ்க்கை மெய்யாக

            மயங்கி உழன்றால்அடியேன்உன்

மாறாக் கருணை தரும்பாத

            வனசத் துணைஎன்று அடைவேனோ

 

கண்ணின் மணியே உயிர்க் கனியே

            கருணைப் பயுலே சுகக் கடலே

கச்சித் தாய் உச்சியை மோந்து

            கண்ணோடு அணைக்கும் திருத்தாளா

 

புண்ணியோர் எண்ணிய கரும்பே

            பொழிமும் மதவாரண முகத்தோன்

பொற்புஆர் துணையே அற்புதனே

            போரூர் முருகப் பெருமாளே.---  திருப்போரூர்ச் சந்நிதி முறை.

 

"பிறப்பு என்னும் பேதைமை நீங்கசிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு".

 

என்பது பொய்யாமொழி. 

 

செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது எதுஅதுதான் முருகனுடைய திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும்அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்”."செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளை உன்னி உணர்க.

 

"அநுபவ சித்த பவக்கடலில் புகாதுஎனை

வினவி எடுத்து அருள் வைத்தகழல் க்ருபாகரன்"...   ---  பூதவேதாள வகுப்பு.

                                                                                                           

"உறவுமுறை மனைவிமகவு எனும்அலையில் எனதுஇதய

உருவுடைய மலினபவ சலராசி எறவிடும் உறுபுணையும்"....  ---  சீர்பாத வகுப்பு.                                                                                                            

 

"பலகாலும் உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துஉடன் வாழ ...... அருள்வேளே,

பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே".       ---  (நிலையாத) திருப்புகழ்.

                                                                                    

எனவேமுருகவேளின் திருநாமத் துதியினால் உடல்பிணியாகிய பசியையும்திருவடித் தியானத்தினால் உள்ளப் பிணியாகிய காமப் பிணியையும்திருவடி தியானத்தினால் உயிர்ப் பிணி ஆகிய பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.

 

சீவாத்தும ஞான---

 

ஆன்மாவைப் பற்றி நன்கு அறிந்து கொள்வது ஆத்மஞானமாகும்.

 

" நான்ஆர்என் உள்ளம் ஆர்?ஞானங்கள்

    ஆர்ன்னை யார் அறிவார்?

வானோர் பிரான் என்னை

    ஆண்டிலனேல்,மதிமயங்கி

ஊன் ஆர் உடைதலையில்

    உண்பலிதேர் அம்பலவன்

தேன் ஆர் கமலமே

    சென்று ஊதாய் கோத்தும்பீ "        --- மணிவாசகம்.

 

"தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே! ஒரு

தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே".. ---  திருவருட்பா.

 

வயிற்றில் உண்டான பசித் துன்பம் உணவைத் தேடச் செய்தது. வயிற்றோடு கலந்த உணவால் பசித் துன்பம் தீர்ந்தது.

 

உடல் பசியான காமத் துன்பமானதுஅதைத் தணித்துக் கொள்ள ஒரு துணையைத் தேடச் செய்தது. துணையோடு கலந்த உறவால் காமப் பசியால் உண்டான துன்பம் தீர்ந்தது.

 

இத் துன்பங்களை விடவும்மிகக் கொடுமையான துன்பம் பிறவித் துன்பம். பிறவித் துன்பம் தீரவேண்டுமானால்அதைத் தீர்க்கும் வல்லமை உடைய பரம்பொருளின் துணை தேட வேண்டும்.

 

உணவை உட்கொண்டதால்பசித் துன்பம் தீர்ந்ததே ஒழிய,உண்டதனால் இன்பம் விளையவேண்டும் என்றால் உண்டது அற்றுப் போகவேண்டும். உண்ட உணவு அப்படியே வயிற்றில் இருந்தால் என்ன ஆகும்எனவே, "உணலினும் உண்டது அறல் இன்பம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

காமப் பசி எடுக்கும்தோறும் கலந்து மகிழலாம் என்றால்அதனால் விளையும் இன்பத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க,கலத்தலை விட,ஊடுதல் தேவைப்படுகின்றது. எனவே, "காமம் புணர்தலின் ஊடல் இனிது" என்றும், "ஊடுதல் காமத்திற்கு இன்பம்" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார்.கலந்து மகிழ்வதை விட,ஊடி மகிழ்தல் இன்பம்.

 

அதுபோலவேபிறவியால் வரும் துன்பம் நீங்கவேண்டுமானால்அந்த நிலையை விட்டு நீங்கி,பிறப்பு இறப்பு இல்லாத பரம்பொருளுடன் கூடி இருக்கவேண்டும். அந்தப் பரம்பொருளைப் பற்றி நிறைய நூல்களைப் படித்துவிட்டுஉண்மைப் பொருளை உணராமல்இருந்தால் பயனில்லை. முதலில்,தன்னை யார் என்று உணரவேண்டும். தன்னை உணரத் தலைப்பட்டாலேகேடு அற்ற நிலையை அடையத் தலைப்பட்டு விட்டோம் என்று பொருள். 

 

"தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை,

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்."

 

என்றார் திருமூலர்.

 

தன்னை அறிந்தபின்,அந்த அறிவுக்கு முதலாக இருந்தவன் யார் என்று அறிதல் கூடும். அறிந்த பின்அவனையே தனது தலைவனாகக் கொள்ளும் நிலை உண்டாகும். தலைவனை உணர்ந்துஅவனைத் தலைப்படும் நெறியில் நின்றுஅவனோடு கூடி விட்டால்அவனை வணங்குகின்றவர்கள்அவனுக்கு ஒப்பாகத் தன்னையும் வணங்கும் நிலை உண்டாகும்.

 

"தன்னை அறியும் அறிவை அறிந்தபின்,

தன்னையே அரிச்சிக்கத் தான் இருந்தானே"

 

என்றார் திருமூலர்.

 

பள்ளிக்குச் செல்லும் முன்னர் அவன் ஒரு சிறுவன். பள்ளிக்குச் சென்ற பின்னர்அவன் தன்னை ஒரு மாணவன் என்று உணரவேண்டும். அறிவு பெறத்தான் பள்ளிக்கு வந்தோம் என்பதை உணரவேண்டும். அறிவை யார் புகட்டுவார்?ஆசிரியர் புகட்டுவார். சிறுவனாக ஓடியாடித் திரிந்தபோது,அவனால் ஆசிரியர் யார் என்றோஅவருடைய அருமை என்னவென்றோ உணரமுடியாது. தன்னை ஒரு மாணவன் என்றும்,தான் இருப்பது பள்ளி என்றும் உணர்ந்தபின்ஆசிரியர் இன்னார் என்று அறிந்துகொள்வான். தன்னை ஒரு மாணவனாக உணர்ந்துகொள்ளாதவனால்தன்னுடைய ஆசிரியரின் தன்மையை உணர்ந்துகொள்ள முடியாது. அந்த நிலையின் தான் ஆசிரியரைஅவர் காணாத நிலையில் கேலி செய்வதும்அவர்க்குப் புனைப் பெயர்கள் வைப்பதும் போன்ற செயல்கள் நிகழ்கின்றன. ஆசிரியர் அறிவித்த பாடங்களை ஒழுங்காகஅவர் காட்டிய நெறியில் நின்றுபடித்தால் மட்டும் போதாது. படித்தத்தை மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாதுபாடத்தின் பொருளை உணரவேண்டும். உணர்ந்தால் உயர்நிலை அடையலாம். பின்னர் அவனே ஒரு ஆசிரியன் என்னும் நிலையை அடையலாம். அப்படி ஆனபிறகுஅவன் முன்னர் ஓர் ஆசிரியரை வணங்கியதுபோல,தன்னை ஒருவர் ஆசிரியர் நிலையில் வைத்து வணங்கும் நிலை உண்டாகும்.

 

தனி ஒருவராக இருந்த வரையில் ஒன்றும் பயனில்லை. தன்னை ஒரு இல்லாள் என்று உணர்ந்தால்தான்தன்னுடைய கணவனையும்,அவனது தன்மையையும் அறிந்துகொள்ள முடியும். இல்லற நெறி இன்னதுதான் என்று உணர்ந்த ஒருவனோஒருத்தியோஇல்லறம் என்பதன் தன்மை குறித்துப் பெரியவர்கள் காட்டிய நெறியில் நின்று ஒழுகி வரதாய் அல்லது தந்தை என்னும் நிலையை அடையலாம். அந்த நிலையில் உயரபாட்டிதாத்தா என்னும் நிலையை உடையலாம். 

 

உண்ணுகின்ற உணவு நமது கண் முன்னர் இருப்பது துவித நிலை. உணவைக் காணும்போது ஒரு இன்பம். காண்டபதாலேயே பசித் துன்பம் தீராது. உண்ணவேண்டும். உணவு வயிற்றில் சென்ற பிறகு அடைவது விசிட்டாத்துவித நிலை. உண்டு மகிழ்ந்தோம் என்னும் இன்பம். உணவு வயிற்றில் கூடி உள்ளது. கூடி இருக்கின்ற துவித நிலை. உண்ட உணவு அப்படியே வயிற்றில் இருந்தால்துன்பம். செரிமானம் ஆகி விட்டால்,இரண்டற்ற அத்துவித நிலை. உண்டதன் முழுப் பயனைப் பெற்றுவிட்டோம் என்னும் மேலான இன்பம்.

 

எனவேஅறிவு என்பதுவெறும் நூல்களை அறிவது மட்டும் அல்ல. உலகியல் பொருள்களை அறிந்து கொள்வது மட்டும் அல்ல. நூல்கள் கூறும் உண்மையையும்உலகியல் பொருள்களின் மெய்த் தன்மையையும் உணர்ந்துகொள்வதே அறிவு. அதற்கு,முதற்படிஅறியப் புகுந்த தான் யார் என்று உணர்ந்து கொள்வதே.

 

முன்னை அறிவினில் செய்த முதுதவம்,

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்;

தன்னை அறிவ(து) அறிவாம் அஃது அன்றி,

பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே .           --- திருமந்திரம்.

 

பொருள் ---

 

அறிவு என்பது முயற்சியால் விளைவதுதவம் என்பது சிறப்பிக்கத் தக்க முயற்சி. அறிவுத் தவம். செய்த தவத்தின் மேன்மையை எவ்வாறு அறிவதுஅந்தத் தவத்தால் விளைந்த அறிவைக்கொண்டே அறியலாம். பெற்ற அறிவு தன்னை அறியும் அறிவானால்அதற்காகச் செய்த முயற்சி தவம்தான். தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. தன்னை உள்ளவாறு அறியாமல்பிறவற்றை அறிந்து கொள்ளும் அறிவு எல்லாம் மயக்க அறிவே ஆகும். ஆவதைவிட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு. பேய் பிடிப்புண்டவர்கள் பேயின் நிலையையே அடைவார்கள். பேயறிவு படைத்தவர்கள் அந்த அறிவின் நிலையிலேயே இருப்பார்கள். அது நெறிப்படாத அறிவு ஆகும்.

 

ஊராட்சி---

 

எங்கும் ஆட்சியில் இருப்பது முருகவேளின் உபதேசம் என்க. அவருடைய உபதேசம் யாது?

 

"அறிவை அறிவது பொருள்" என்றுதான் குகமூர்த்தி சிவமூர்த்திக்கு உபதேசித்தனர். அறிவை அறிவது பற்றி வெறுக்கவோ மறுக்கவோ வல்லார் யாவர்?

 

பாரோர்க்கு இறை ---

 

சிவபெருமானே உலகங்கட்கு எல்லாம் ஒப்பற்ற தலைவர்.

 

தலையே நீ வணங்காய் - தலை

மாலை தலைக்கு அணிந்து

தலையாலே பலிதேரும் தலைவனை

தலையே நீ வணங்காய்.                   --- அப்பர்.

 

பேரூர்---

 

பெரு ஊர் - பேரூர். பண்டைக் காலத்தில் இது பெரிய ஊராக இருந்தது. இப்போது பெரிய ஊர் கோயம்புத்தூர். அது முற்காலத்தில் கோயன் என்றவன் புதிதாக உண்டாக்கிய சிறிய ஊர். பெரியது சிறியதாகவும்சிறியது பெரியதாகவும் மாறுவது கால இயல்பு.

 

பேரூர் ஒரு சிறந்த திருத்தலம். கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்று கல் தொலையில் உள்ளது. மேலைச் சிதம்பரம் எனப்படும். அநேக அற்புதங்களை உடையது. பிறவாப்புளிஇறவாப்பனை முதலியன இன்னும் இருக்கின்றன. நடராஜர் சந்நிதியும் அதன் மண்டபத்துள்ள கல்சித்திரங்களும் காணத் தகுந்தவை. கச்சியப்ப முனிவர் பாடியருளிய அருமையான தலபுராணம் உண்டு.

  

கருத்துரை

 

 

முருகா! பிறவி நோய் தீர ஆன்மஞானம் பெறும் பொருட்டு உபதேசித்து அருளுவீர்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...