அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தரங்க வார்குழல் (குளந்தைநகர்)
முருகா!
நீயே அருளவில்லையானால்,
வேறு யார் அருள் புரிவார்கள்?
தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகண் ...... மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தரங்க வார் குழல்,தன் நுதல்,...... விழி ஆலம்,
தகைந்த மாமுலை,துடி இடை ...... மடமாதர்,
பரந்த மால் இருள் படுகுழி ...... வசம் ஆகிப்
பயந்து,காலனுக்கு உயிர்கொடு ...... தவியாமல்,
வரம் தரா விடில்,பிறர் எவர் ...... தருவாரே?
மகிழ்ந்து தோகையில் புவிவலம் ...... வருவோனே!
குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா!
குளந்தை மாநகர்த் தளி உறை ...... பெருமாளே.
பதவுரை
மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே--- மனம் மகிழ்ந்து மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவரே!
குரும்பை மாமுலைக் குறமகள் மணவாளா--- தென்னங் குரும்பைப் போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப் பெண் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!
குளந்தை மாநகர் தளி உறை பெருமாளே--- குளந்தை என்னும் பெரியகுளத்தில் உள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
தரங்க வார் குழல்--- அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல்,
தனு நுதல் --- வில்லைப் போன்ற நெற்றி,
விழி ஆலம்--- ஆலகால விடத்தைப் போன்ற கண்கள்,
தகைந்த மா முலை--- காண்போர் மனத்தைக் கவரும் பெரிய முலைகள்,
துடி இடை மடமாதர்-- உடுக்கை போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள் (மீது கொண்ட)
பரந்த மால் இருள்--- நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த
படுகுழி வசமாகி--- பெரிய குழியில் அகப்பட்டு,
பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல்--- இயமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான் தவிக்காதபடிக்கு,
வரம் தரா விடில்--- தேவரீர் அடியேனுக்கு வரம் தராவிட்டால்
பிறர் எவர் தருவாரே--- வேறு எவர் தான் கொடுப்பார்கள்?
பொழிப்புரை
மனம் மகிழ்ந்து மயிலின் மீது ஏறி பூமியை வலமாகச் சுற்றி வந்தவரே!
தென்னங் குரும்பைப் போன்ற சிறந்த மார்பகங்களைக் கொண்ட குறக் குலத்துப் பெண் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!
குளந்தை என்னும் பெரியகுளத்தில் உள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
அலைபோலப் புரளுகின்ற நீண்ட கூந்தல்,வில்லைப் போன்ற நெற்றி,ஆலகால விடத்தைப் போன்ற கண்கள்,காண்போர் மனத்தைக் கவரும் பெரிய முலைகள்,உடுக்கை போன்ற சுருங்கிய இடுப்பு இவைகளைக் கொண்ட அழகிய விலைமாதர்கள் மீது கொண்ட நிரம்பிய மோகம் என்னும் இருள் நிறைந்த பெரிய குழியில் அகப்பட்டு,இயமனுக்கு அஞ்சி உயிர் நடுங்க நான் தவிக்காதபடிக்கு, தேவரீர் அடியேனுக்கு வரம் தராவிட்டால், வேறு எவர் தான் கொடுப்பார்கள்?
விரிவுரை
தரங்க வார் குழல்---
தரங்கம் --- அலை. கடல்.
வார் குழல் --- வார்ந்து உள்ள கூந்தல்.
தனு நுதல் ---
வில்லைப் போன்ற நெற்றி.
விழி ஆலம்---
விலைமாதரின் கண்கள் விடத்தைப் போன்றவை. விடமானது உண்டாரைத் தான் கொல்லும். விலைமாதர் கண்கள், கண்டாரையும் கொல்லும் தன்மை உடையவை.
தகைந்த மா முலை---
தகைதல் --- அழகு மிகுந்து இருத்தல்.
பரந்த மால் இருள் படுகுழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல்---
பரந்த --- மிகுதியாக விளைகின்ற,
மால் இருள் --- காம மயக்கத்தால் உண்டான துன்பம்.
விலைமகளிரது சாகசத்தில் மயங்கி காமாந்தகாரத்தால் கண்கெட்டு, தீவினைகள் பல புரிந்து, திவினையின் பயனாக நரகத்தில் கிடந்து வேதனை உற்று, மீட்டும் மீட்டும் பல்வேறு நரகங்கட்கு மாறி மாறிச் சென்று உழல்வர். பிணை எருது வட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும். கொடிய நரகங்களில் சுழல்வர். ஆழமுள்ள மடுவில் வீழ்ந்தோர்கள் கரை சேர்வது எத்துணை அரிதோ, அத்துணை அரிது விலைமாதரின் உந்தித் தடத்தில் வீழ்ந்தோர்களும் முத்திக் கரை சேர்வது.
நஞ்சினும் கொடியது காமம். நஞ்சு உண்டாரைக் கொல்லுமே அன்றி நரகிடைச் சேர்க்காது. காமம், கொலை புலை கள் பொய் சூது வாது முதலிய பல பாவங்களைப் புரிவித்து நரகமே காணி வீடாகச் செய்யும்.
கள்ளினும் கொடியது காமம். கள் உண்டவரையே மயங்கச் செய்யும். காமம் நினைத்தவரையும் கண்டவரையும் மயங்கச் செய்யும்.
தீயினும் கொடியது காமம். தீ அருகில் உள்ளாரேயே சுடும். தீப்பட்டார் நீரில முழுகி உய்வு பெறலாம். காமம் சேய்மையில் நின்றாரையும் சுடும். நீருள் குளிப்பினும் சுடும். குன்று ஏறி ஒளிப்பினும் சுடும்.
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும். --- நாலடியார்.
காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்க வந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புகட்டி வைக்கும் கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழி அடைக்கும் கபாடம்
காமமே அனைவரையும் பகையாக்கிக் கழுத்துஅரியும் கத்திதானே.
அவத்தமாய்ச் சில படு குழி தனில்விழும்
விபத்தை நீக்கி, உன் அடியவருடன் எனை
அமர்த்தி,ஆட்கொள மனதினில் அருள்செய்து, ...... கதிதனைத் தருவாயே.
--- (பழிப்பர்) திருப்புகழ்.
“பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி இடைவிழு பஞ்ச பாதகன் என்று சேர்வேன்.
ஆழமாகிய பெரிய படுகுழியில் விழுந்தோர்கள், புணையின் துணை இல்லாமல், எவ்வாறு கரையேறுதல் முடியாதோ, அவ்வாறே காம மயக்கத்தால் உண்டான படுகுழியில் விழ்ந்தவர்கள், வடிவேல் பரமனது தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கைகள் கொஞ்சும் திருவடித் தாமரையைப் புணையாகப் பற்றினாலவ் அன்றி, உய்ந்து முத்தி என்கிற கரை சேர்ந்து முடிவிலா இன்பத்தை நுகர முடியாது. கலங்காத சித்தத் திடம் வேண்டும். அது முருகன் திருவருளால் பெறுதல் கூடும்.
கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்தில் புணைஎன யான் கடந்தேன்,சித்ர மாதர்அல்குல்
படத்தில் கழுத்தில் பழுத்தசெவ் வாயில் பணையில்உந்தித்
தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.
வரம் தரா விடில் பிறர் எவர் தருவாரே---
“முருகா! உம்மை ஒழிய ஒருவரையும் நம்புகிலா நாயேனை நீர் ஆட்கொள்ள மறுத்துவிட்டால், ‘கருணைக் கடவுள் என்று வேதாகமங்கள் கந்தவேளைப் புகழ்வது அத்தனையும் பொய். அருணகிரி பலகாலும் தொழுது அழுது வழிபட்டும் ஆறுமுகன் ஆட்கொள்ளவில்லை.ஆதலால் ஆறுமுகனை வழிபடுதல் வீண் செயல் என்று தேவரீரையும், “அருணகிரி இத்தனை காலம் வீணான முயற்சி செய்து முருகா முருகா என்று எய்த்து ஒழிந்தான்” என்று என்னையும் உன்னையும் உலகம் பழிக்கும் என்று சுவாமியை பேதிக்கின்றார்.
ஒரு சிறு குழந்தையானது, தனது தந்தையின் முன்னர் ஓடி வந்து, தனது பவளவாய் துடிக்கக் கண்ணீர் வடிக்க, எந்தத் தந்தையும் எடுத்து அணைத்து ஆதரிக்காமல் இரான். யாரும் உடனே எடுத்து, கண்ணீரைத் துடைத்து, இன்னுரை கூறி, இனிது அணைத்து, குழந்தையின் துன்பத்தைப் போக்குவர். அடியவர்களுக்குப் பரம தந்தையாக விளங்கும் முருகப் பெருமான், தன்னையே எண்ணி இருந்து, உள்ளம் உருக வழிபடும் ஆன்மாக்களுக்கு அருளைப் புரியவில்லையானால், வேறு யார் அருள் புரிவர்.
ஏது புத்தி,ஐயா, எனக்கு? இனி
யாரை நத்திடுவேன்?அவத்தினி-
லே இறத்தல் கொலோ? எனக்கு நீ ...... தந்தைதாய்
என்றேஇருக்கவும்,நானும் இப்படியே
தவித்திடவோ? சகத்தவர்
ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்து, இடை ஆதரித்து, எனை
தாளில் வைக்க நியே மறுத்திடில்,
பார் நகைக்கும் ஐயா,தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப்
பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது எனா வெறுத்துஅழ,
பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ? --- திருப்புகழ்.
ஏறுமயில் வாகன! குகா! சரவணா! எனது
ஈச! என மானம்உனது என்றும்ஓதும்
ஏழைகள் வியாகுலம் இது ஏது? என வினாவில் உனை
ஏவர் புகழ்வார்? மறையும் என்சொலாதோ?
மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே---
நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தார். அத் தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு மாதுளங் கனியை அவருக்குத் தந்தார். அக் கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகப் பெருமானும், தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால்,சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த வரலாற்றின் உட்பொருள்
(1) விநாயகப் பெருமான், முருகப் பெருமான் என்ற இருவரும் கனியைக் கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தந்து அருள் புரிந்து இருக்கலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர் தானே சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை, சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன. இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
அல்லாமல், சூரசம்மாரம் முடித்த பின்னர் முருகப் பெருமான், மயில் மீது ஏறி உலகை வலம் வந்தார் என்றும் அருணை அடிகள் கூறுகின்றார்.
....... ....... ....... மயில்ஏறி
அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே.
திடுக்கிடக் கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட,சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா!
குரும்பை மாமுலைக் குறமகள் மணவாளா---
குரும்பை --- தென்னங் குரும்பை. பெண்களின் முலைக்குத் தென்னங் குரும்பையை உவமை கூறுவது மரபு.
குரும்பை போன்ற முலைகளை உடையவர் வள்ளிநாயகியார்.
அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடு உடன்கை அனல்வீசிச்
சுரும்புஉண் விரிகொன்றைச் சுடர்பொன் சடைதாழ
விரும்பும் அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
குறிப்பினொடும் சென்றுஅவள்தன் குணத்தினைநன்கு அறிந்து
விரும்பும்வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்புஅருகே சுரும்புஅருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடம்ஆடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்புஅருகே கரும்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகம்மலரும் கலயநல்லூர் காணே.
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்து
ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினும்
சொல்லும்நா நமச்சி வாயவே. --- சுந்தரர் தேவாரம்.
குளந்தை மாநகர் தளி உறை பெருமாளே---
குளந்தை என்பது, தற்காலத்தில் பெரியகுளம் என்று வழங்கப்படுகின்றது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் ராஜேந்திர சோழீசுவரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.
இக்கோவிலில் சிவபெருமான், பார்வதிதேவி மற்றும் முருகப் பெருமான் என்று மூன்று சன்னிதிகளுக்கும் தனித்தனியாக மூன்று கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இராஜேந்திர சோழனால் கட்டப்பெற்ற இக்கோயிலைப் பெரியகுளத்தில் இருப்பவர்கள் ‘பெரியகோயில்’என்றே அழைக்கின்றனர். கோயிலின் மூலவராகச் சிவபெருமான் இருக்கின்ற போதும்,‘பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்’என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.
கருத்துரை
முருகா! நீயே அருளவில்லையானால், வேறு யார் அருள் புரிவார்கள்?
No comments:
Post a Comment