கீரனூர் --- 0960. ஈரமோடு சிரித்து

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஈரமோடு சிரித்து (கீரனூர்)

 

முருகா! 

விலைமாதர் உறவு தவிர அருள்.

 

 

தான தானன தத்தன தத்தன

     தான தானன தத்தன தத்தன

     தான தானன தத்தன தத்தன ...... தனதான

 

 

ஈர மோடுசி ரித்துவ ருத்தவும்

     நாத கீதந டிப்பிலு ருக்கவும்

     ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன்

 

ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும்

     வீதி மீதுத லைக்கடை நிற்கவும்

     ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி

 

ஆர பாரத னத்தைய சைக்கவு

     மாலை யோதிகு லைத்துமு டிக்கவும்

     ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக

 

ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு

     மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும்

     ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ

 

பார மேருப ருப்பத மத்தென

     நேரி தாகஎ டுத்துட னட்டுமை

     பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப்

 

பாதி வாலிபி டித்திட மற்றொரு

     பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி

     பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு

 

கீர வாரிதி யைக்கடை வித்ததி

     காரி யாயமு தத்தைய ளித்தக்ரு

     பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே

 

கேடி லாவள கைப்பதி யிற்பல

     மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய

     கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

ஈரமோடு சிரித்து வருத்தவும்,

     நாத கீத நடிப்பில் உருக்கவும்,

     ஏவர் ஆயினும் எத்தி அழைக்கவும்,...... மதராஜன்

 

ஏவின் மோது கண் இட்டு மருட்டவும்,

     வீதி மீது தலைக்கடை நிற்கவும்,

     ஏறு மாறு மனத்தில் நினைக்கவும்,...... விலைகூறி

 

ஆர பார தனத்தை அசைக்கவும்,

     மாலை ஓதி குலைத்து முடிக்கவும்,

     ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும்,......அதிமோக

 

ஆசை போல்மன இட்டம் உரைக்கவும்,

     மேல் விழா வெகு துக்கம் விளைக்கவும்,

     ஆன தோதக வித்தைகள் கற்பவர் ...... உறவுஆமோ?

 

பார மேரு பருப்பதம் மத்துஎன

     நேரிதாக எடுத்து உடன் நட்டுமை

     பாகர் ஆர படப்பணி சுற்றிடு ...... கயிறுஆக,

 

பாதி வாலி பிடித்திட,மற்று ஒரு

     பாதி தேவர் பிடித்திட,லட்சுமி,

     பாரிசாதம் முதல் பல சித்திகள் ...... வருமாறு

 

கீர வாரிதியைக் கடை வித்துதி

     காரி ஆய் அமுதத்தை அளித்தக்ரு-

     பாளு ஆகிய பச்சுஉரு அச்சுதன் ...... மருகோனே!

 

கேடி இலா அளகைப் பதியில் பல

     மாட கூடம் மலர்ப்பொழில் சுற்றிய

     கீரனூர் உறை சத்தி தரித்து அருள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு--- கனத்த மேரு மலையை மத்து எனத் தேர்ந்து, அதனை உடனே நட்டு வைத்து,

 

            உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக--- உமாதேவியைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும்,படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்னும்) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி

 

            பாதி வாலி பிடித்திட--- ஒரு பாதியை வாலி பிடித்துக் கொண்டும்,

 

            மற்றொரு பாதி தேவர் பிடித்திட--- மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்துக் கொண்டும்,

 

           லட்சுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு--- திருமகள்பாரிஜாதம் முதலான பெறற்கரும் பொருட்கள் வெளிவர.

            

          கீர வாரிதியை கடைவித்து--- திருப்பாற்கடலைக் கடைவித்து,

 

          அதிகாரியாய் அமுதத்தை அளித்த க்ருபாளு ஆகிய--- அதிகாரியாக இருந்து தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்து அருளிய தயாளுவும், 

 

           பச்சு உரு அச்சுதன் மருகோனே--- பச்சை மாமலை போல் திருமேனியனும் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

            கேடிலா அளகைப் பதியில்--- கேடு இல்லாத அளகாபுரி போல,

 

           பல மாடகூட மலர்ப் பொழில் சுற்றிய--- பல மாடகூடங்களும் சோலைகளும் நிறைந்துள்ள,

 

          கீரனூர் உறை சத்தி தரித்து அருள் பெருமாளே--- கீரனூர் என்னும் திருத்தலத்தில் சத்திவேலைத் தரித்து அருள் புரிகின்ற பெருமையில் மிக்கவரே!

 

            ஈரமோடு சிரித்து வருத்தவும்--- உள்ளத்தில் அன்பு உள்ளது போல சிரித்து, (காமுகரின்) உள்ளத்தை வருத்தவும்,

 

           நாத கீத நடிப்பில் உருக்கவும்--- இசையாலும், நடனத்தாலும் உள்ளத்தை உருக்கவும்,

 

            ஏவராயினும் எத்தி அழைக்கவும்--- யாராக இருந்தாலும் அவரை வஞ்சித்து அழைக்கவும்,

 

            மதராஜன் ஏவின் மோது கண் இட்டு மருட்டவும்---காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு (வந்தவரை) மயக்குதற்கும்

 

            வீதி மீது தலைக் கடை நிற்கவும்--- தெருவில் தலைவாசல் படியில் வந்து நிற்கவும்,

 

           ஏறு மாறு மனத்தினில் நினைக்கவும்--- தாறுமாறான எண்ணங்களை மனதில்    நினைப்பதற்கும்,

 

           விலை கூறி--- (தாம் அளிக்கும்) சுகத்துக்கான விலையைப் பேசி முடித்து,

 

           ஆர பார தனத்தை அசைக்கவும் --- முத்து மாலை அணிந்துள்ள பருத்த மார்பகங்களை அசைப்பதற்கும்

 

            மாலை ஓதி குலைத்து முடிக்கவும்--- மலர்மாலை அணிந்துள்ள கூந்தலைக் கலைத்து முடிக்கவும்,

 

           ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும்--- ஆடை சோரும்படியாக வேண்டுமென்றே செய்து, அவிழ்த்து பின்னர் இடுப்பில் சுற்றவும்,

 

            அதி மோக ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும்--- அதிக மோகம் கொண்டவர்களைப் போல், தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை ஆசை உண்டாகும்படியாக எடுத்துச் சொல்லுவதற்கும்,

 

            மேல் விழா --- மேலே விழுந்து,

 

           வெகு துக்கம் விளைக்கவும் ஆன--- மிக்க துக்கத்தை உண்டுபண்ணுவதான (காம மயக்கத்தை விளைவிக்கவும்)

 

           தோதக வித்தைகள் கற்பவர்--- வஞ்சகமான வித்தைகளைக் கற்றவர்களான (விலைமாதர்களின்)

 

           உறவு ஆமோ --- தொடர்பு நன்மையைத் தருமா? (தராது)

 

பொழிப்புரை

 

     சாவா நிலையில் வைக்கும் அமுதம் வேண்டி, தேவர்கள் பாற்கடலைக் கடைய எண்ணி, கனத்த மேருமலையை மத்து எனத் தேர்ந்து, அதனை உடனே பாற்கடலில் நட்டு வைத்து, உமாதேவியைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும்படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்னும்) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி, ஒரு பாதியை வாலி பிடித்துக் கொண்டும்,மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்துக் கொண்டும், திருமகள்பாரிஜாதம் முதலான பெறற்கரும் பொருட்கள் முதலில் வெளிவரும் வகையில் திருப்பாற்கடலைக் கடைவித்து, அதிகாரியாக இருந்து தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்து அருளிய தயாளுவும், பச்சை மாமலை போல் திருமேனியனும் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

     கேடு இல்லாத அளகாபுரி என்னும் குபேரப் பட்டணம் போலபல மாடகூடங்களும் சோலைகளும் நிறைந்துள்ள,கீரனூர் என்னும் திருத்தலத்தில் சத்திவேலைத் தரித்து அருள் புரிகின்ற பெருமையில் மிக்கவரே!

 

            உள்ளத்தில் அன்பு உள்ளது போல சிரித்து, (காமுகரின்) உள்ளத்தை வருத்தவும், இனிய இசையாலும், நடனத்தாலும் உள்ளத்தை உருக்கவும், யாராக இருந்தாலும் அவரை வஞ்சித்து அழைக்கவும், காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு வந்தவரை மயக்குதற்கு தெருவில் தலைவாசல் படியில் வந்து நிற்கவும், தாறுமாறான எண்ணங்களை மனதில் கொண்டு இருந்து, வந்தவரிடம் தாம் அளிக்கும் சுகத்துக்கான விலையைப் பேசி முடித்து, முத்து மாலை அணிந்துள்ள பருத்த மார்பகங்களை அசைப்பதற்கும்மலர்மாலை அணிந்துள்ள கூந்தலைக் கலைத்து முடிக்கவும், ஆடை சோரும்படியாக வேண்டுமென்றே செய்து, அவிழ்த்து பின்னர் இடுப்பில் சுற்றவும், அதிக மோகம் கொண்டவர்களைப் போல், தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை ஆசை உண்டாகும்படியாக எடுத்துச் சொல்லுவதற்கும்,மேலே விழுந்து, மிக்க சுகம் போன்று இருந்து, பின்னர் துக்கத்தை உண்டுபண்ணுவதான காம மயக்கத்தை விளைவிக்கவும் வஞ்சகமான வித்தைகளைக் கற்றவர்களான விலைமாதர்களின் தொடர்பு நன்மையைத் தருமா? (தராது)

 

 

விரிவுரை

 

ஈரமோடு சிரித்து வருத்தவும்--- 

 

ஈரம் --- அன்பு.

 

"ஈர அன்பினர் யாதும் குறைவிலர்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

உள்ளத்தில் அன்பு பூண்டவர்களைப் போல,வெளியில் வஞ்சகமான சிரிப்பை வெளிப்படுத்தி, காமுகர்களைத் தம் வயப்படுத்தி, சிற்றின்பத்துக்காக ஏங்கி வருந்துமாறு செய்பவர் விலைமாதர்கள்.

 

நாத கீத நடிப்பில் உருக்கவும்--- 

 

தம்மிடத்து வந்தவரை மயக்குவதற்கென்றே இனிய இசையையும், நடனத்தையும் கற்றவர்கள். தமது இசையாலும், நடிப்பாலும், வந்தவர் உள்ளத்தை உருக வைப்பார்கள்.

 

ஏவராயினும் எத்தி அழைக்கவும்--- 

 

ஏவர் ஆயினும் --- யாராக இருந்தாலும்.

 

எத்தி --- வஞ்சித்து, ஏமாற்றி.

 

"நீசரோடும் இணங்கிகள்" என்று பிறிதொர திருப்புகழில் அடிகளார் காட்டினார்.குணத்தாலும் குலத்தாலும் ஒழுக்கத்தாலும் எத்துணை இழிந்தவர்களாய் இருப்பினும், பொருள் படைத்தவர்களாக் இருப்பின், அவர்களுடன் கலந்து மகிழ்வர் பொதுமகளிர்.

 

தம்பால் வந்து மருவியுள்ள ஆடவர்களது பணம் காலி ஆனவுடன்அவர்களை முடுக்கி ஓட்டுவர். பின் வந்தவர்களிடம் மிகவும் அன்புடன் பழகி, “உம்மை என் உயிர் பிரிகின்ற வரை பிரியமாட்டேன்இது சத்தியம்” என்றெல்லாம் கூறிஅவர்கள் பால் உள்ள செல்வம் முழுவதும் பறித்துக் கொண்டுஅவர்களையும் அகற்றிபின்னே எவன் வருவான் என்று எதிர்பார்த்து நிற்பர்.அவ்வாறு எதிர்பார்த்தபடி தம்பால் வந்த ஆடவர்களிடம் பலப்பல பதங்களைப் பாடியும்இரகசிய வார்த்தைகளைப் பேசியும் ஏமாற்றிப் பணம் பறிப்பர்.

 

மதராஜன் ஏவின் மோது கண் இட்டு மருட்டவும்---

 

மதராஜன் --- காமவேள், மன்மதன்.

 

மன்மதனுக்கு கரும்புதான் வில். மலர்களே அம்புகள். மன்மதனுக்கு அம்பாக உள்ள மலர் போன்ற கண்பார்வையினாலேயே காமுகர் உள்ளத்தை அவர்கள் மயக்குவார்கள்.

 

வீதி மீது தலைக் கடை நிற்கவும்---

 

மாலைதனில் வந்து,வீதிதனில் நின்று,

     வாசமலர் சிந்து ...... குழல்கோதி,

வார்இரு தனங்கள் பூணொடு குலுங்க,

     மால்பெருகி நின்ற ...... மடவாரை,

 

சாலைவழி வந்து போம்அவர்கள் நின்று,

     தாழ்குழல்கள் கண்டு,...... தடுமாறி,

தாகமயல் கொண்டு,மால் இருள் அழுந்தி,

     சாலமிக நொந்து ...... தவியாமல்,

 

தெருவில் தலைவாசல் படியில் வந்து நின்று விலைமாதர்கள் புரியும் சாகசங்களை அடிகளார் இன்னொரு திருப்புகழில் காட்டியுள்ளது அறிக.

 

ஏறு மாறு மனத்தினில் நினைக்கவும்--- 

 

வீதிவழியே போகும் காமுகர்களை எவ்விதம் மயக்கலாம் என்று மனதில் தாறுமாறான எண்ணங்கள் விலைமாதர் உள்ளத்தில் தோன்றும். வந்தவரிடம் எவ்விதங்களில் பொருளைப் பறிக்கலாம் என்றும் தாறுமாறான எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் உருவாகும்.

 

விலை கூறி--- 

 

தமது உடல் சுகத்தை விலை கூறுபவர்கள் என்பதால் விலைமாதர் என்னும் பெயர் உண்டானது.

 

ஆர பார தனத்தை அசைக்கவும் --- 

 

ஆரம் --- முத்துமாலை. பாரம் - பருத்த.

 

மாலை ஓதி குலைத்து முடிக்கவும், ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும்--- 

 

நன்றாக முடிந்து வைத்திருக்கும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்த்து முடிப்பதும், ஆடை சோருவதைப் போலப் பாவனே செய்து, அவிழ்த்துப் பின்னர் சுற்றுவதும் ஆகிய இவையெல்லாம் விலைமாதர் புரியும் சாகசங்கள்.

 

வெகு துக்கம் விளைக்கவும் ஆன தோதக வித்தைகள் கற்பவர்--- 

 

தோதகம் --- வஞ்சகம்.

 

சிற்றின்பம் முதலில் இனிமையானதாகத் தோன்றும். பின்னர் துக்கத்தை விளைவிக்கும்.

 

பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு--- உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக.......அதிகாரியாய் அமுதத்தை அளித்த க்ருபாளு ---

 

கீரம் --- பால்.  வாரிதி --- கடல்.


தேவர்கள் எல்லாம், தாம் என்றும் சாவாமல் இருக்க ஆசைப்பட்டுஅமுதம் பெறவேண்டி பாற்கடலை கடையப் புகுந்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும்சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். வாசுகி பாம்பின் ஒருபுறம் தேவர்களும்மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். 

 

இறைவன் ஒருவன் உண்டு என்னும் எண்ணம் இல்லாமலேயே தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் வேண்டும் என்னும் ஆசையினால் கடைந்தார்கள். சாவாமல் வாழவேண்டும் என்னும் ஆசை யாருக்குத் தான் உண்டாகாதுதம்முடைய வலிமையினால் அது முடியும் என்று எண்ணிக் கடைந்தார்கள். 

 

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது.  திருமால் ஆமையாக அவதாரம் எடுத்துமந்திர மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.

 

கடைந்தபோதுமுதலில் அமுதம் தோன்றவில்லை. கற்பகம்சிந்தாமணிதிருமகள்ஐராவதம் முதலியவை கிடைத்தன. இவை எல்லாவற்றுக்கும் மேலான அமுதம்தானே தமக்குத் தேவை என்பதை எண்ணி,முதலில் வந்த இவைகளை ஓதுக்கி இருக்கவேண்டும். ஆசை யாரை விட்டதுஅவரவர்கள் தங்கள் தங்களுக்கு என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.

 

அப்போது எதிர்பார்த்த அமிர்தத்திற்கு எதிரிடையாகஆலகால நஞ்சு அதிக பயங்கரமாகத் தோன்றியது. திருமால் சிவபெருமானை வேண்டிஎங்களுக்குத் தேவரீர்தானே தலைவர்,  அடிமைகளாகிய நாங்கள் செய்த முயற்சியில் முதலில் விளைந்த இதனை முதன்மையான தேவரீர் பெறவேண்டும் என்று கூறி அவரிடம் ஈந்தனர். பின்னர் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்கட்குப் பங்கிட்டு உதவினார்.

 

தமர மிகு திரை எறி வளை கடல் குடல்

     மறுகி அலைபட,விட நதி உமிழ்வன,

     சமுக முக கண பண பணி பதி நெடு ...... வடமாகச்

சகல உலகமும் நிலைபெற நிறுவிய,

     கனக கிரி திரிதரவெகு கரமலர்

     தளர,இனியது ஒர்அமுதினை ஒருதனி ...... கடையாநின்று

அமரர் பசிகெட உதவிய க்ருபை முகில்,

     அகில புவனமும் அளவிடு குறியவன்,

     அளவு நெடியவன்ளவிட அரியவன் ...... மருகோனே!  --- திருப்புகழ்.

                                         

 

பச்சு உரு அச்சுதன் மருகோனே--- 

 

பச்சு உரு --- பச்சை மாமலை போல் மேனியன்.

 

அச்சுதன் --- திருமால்.

 

கேடிலா அளகைப் பதியில் பல மாடகூட மலர்ப் பொழில் சுற்றிய கீரனூர்---

 

அளகைப் பதி --- குபேரப் பட்டணம் ஆகிய அளகாபுரி போன்ற செழிப்பினை உடையது கூரனூர் என்னும் திருத்தலம் என்கின்றார் அடிகளார். இத் திருத்தலம், பழநிக்கு வடக்கே தாராபுரம் செல்லும் வழியில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் உறவு தவிர அருள்.

                        

 

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...