ஆத்திசூடி --- 28. அழகு அல்லாதன செய்யேல்

 


                                            28. அழகு அலாதன செயேல்.

 

     (பதவுரை) அழகு அலாதன --- சிறப்பில்லாதஇழிவானசெயல்களை

செயேல் --- செய்யாதே.

 

      (பொழிப்புரை) இழிவான செயல்களைச் செய்யாதே.

 

     இவ்வாறு பதவுரைபொழிப்புரை காணப்பட்டு உள்ளது.விளக்கமாகப் பார்ப்போம்....

 

     அழகு என்னும் சொல்லுக்குவனப்பு. சுகம்சிறப்புநற்குணம் என்றுபொருள்சொல்லப்பட்டு உள்ளது.அது பிறரால் விரும்பப்படும் தன்மை உடையது. அழகு இல்லாதவைஅழகீனம் ஆவன. எனவேபிறர் விரும்பும் நற்செயல்களைச் செய்துஅதனால் பெருமை பெறுக என்றும்பிறர் விரும்பாத இழிதொழில்களைச் செய்துஅதனால் பழியையும்பாவத்தையும் தேடிக் கொள்ளக் கூடாது என்பது வற்புறுத்தப்பட்டது. அழகு செய்துகொள்ளதே என்று ஔவையார் சொல்லவில்லை. அழகு அல்லாத செயல்களைத்தான் செய்தல் கூடாது என்றார்.

 

     அழகு இரண்டு வகைப்படும். ஒன்று புற அழகு. மற்றொன்று அக அழகு. புற அழகு என்பதை புலன்களால் நுகரப்படும்,ஒரு பொருளால் உண்டாகும் இனிமை என்றும் சொல்லலாம். அக அழகு உள்ளத்தால் உணர்ந்து அனுபவிப்பது.

 

     புலன்களால் நுகரப்படுவது பெரும்பான்மையும் புற அழகே ஆகும். புற அழகிலும் ஒருவருக்கு அழகாகத் தோன்றுவதுஇன்னொருவருக்கு அழகு அல்லாததாகத் தோன்றும். மேலும்புற அழகு என்றும் நிலையாக இருப்பதும் இல்லை. பண்டங்கள் அனைத்துமே மாறுதலுக்கு உட்பட்டவை. எனவேஅவற்றின் அழகு மாறுதலை அடையும். ஆனால்பண்புகள் எப்போதும் ஒரு தன்மையாக இருப்பவை. நற்பண்புகள் எக்காலத்திலும் எல்லோராலும் விரும்பப்படுவது ஆகும்.

 

     அழகு என்று சொல்லும்போதுபெரும்பாலும்புற அழகையே சொல்லுதல் வழக்கம். புலன்களுக்கு உடனடியாக இன்பத்தைக் தரக்கூடியது புற அழகு. நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால்எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவேஇந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். அந்த வனப்பை மெருகு ஏற்றபுனைதல் அல்லது ஒப்பனை செய்து கொள்வது உண்டு. ஆனால்நாளாக நாளாகநம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியேஅதை அழகு செய்வதும்உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம்.  

 

     "மேய புய பல வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள்" என்கின்றது அறப்பளீசுர சதகம். பொருந்திய தோள் வலிமை,இளமைஅழகு,ஆகிய இவை எல்லாம்காலையிலும் மாலையிலும் காணப்படும் மஞ்சள் நிறமுள்ள இளவெயில்மஞ்சள் நிறமுள்ள வெயில் எப்போதும் நிலைத்து இருப்பது இல்லை. அது உடம்புக்கும் கண்ணுக்கும் இதமாளவே இருக்கும். உச்சி வெயில் ஆகும்போது அதனுடைய கொடுமை தெரியும்.

 

"நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே,

    நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்,

அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன்;

     அஞ்சினேன் நமனார் அவர் தம்மை"

 

என்கின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

   

     நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும். அவை வந்தால்இந்த உடம்பு அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகு இழந்து ஒழியும். இவற்றை அறிந்தேன். ஆயினும்நன்மை இல்லாத செயல்களையே பற்றாகத் துணிந்து செய்துஅவற்றால் இளைத்துப் போனேன்.அதனால்கூற்றுவனுக்கு அஞ்சுதல் உடையவன் ஆயினேன்.

 

     எனவே, "குணம் இலோர்க்கு அழகு இல்லை". நல்ல பண்புகள் வாய்க்காதவர்க்குஅரவது புறஅழகினாலே பயன் இல்லைஎன்கின்றது குமரேச சதகம்.ஆகையால்அக அழகேஉண்மையான அழகு என்பது பெறப்படும்.

 

     எது உண்மையான அழகு என்று "நாலடியார்" மற்றும் "ஏலாதி" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அறிவுறுத்துவதைக் காணலாம்.

 

குஞ்சி அழகும்,கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும் அழகு அல்ல,- நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்,

கல்வி அழகே அழகு.                 --- நாலடியார்.

 

     வாரி விடப்பட்ட கூந்தல் அழகும்நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும்முகத்தில் ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும்ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராக வாழும்நடுநிலை தவறாத நல்ல நெறியிலே செலுத்தும் கல்வி தான் ஒருவருக்குச் சிறந்த அழகினைத் தரும் அணிகலன் ஆகும்.

 

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,

நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல, எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு.            --- ஏலாதி

 

     இடையின் அழகும்தோளின் அழகும்பெருமையின் அழகும்நடையின் அழகும்நாணுடைமையினால் வரும் அழகும்புடை அமைந்த கழுத்தின் அழகும் அழகு அல்ல.ஒருவர்க்கு எண்ணும் எழுத்தும் அறிதலாகிய அழகே அழகு.

 

     "எண் என்ப,ஏனை எழுத்து என்ப,இவ்விரண்டும் கண் என்ப,வாழும் உயிர்க்கு" என்னும் திருக்குறள் கருத்து சிந்தனைக்கு உரியது.

 

     அக அழகு என்பது,உள்ளத்தில் பொருந்திய நற்பண்புகளைக் குறிக்கும். அந்தப் பண்புளால் உண்டாகும் பயனைப் பொறுத்துஅவர் இன்னார் என்று உணரப்படுவார்.

 

     ஒன்றை விளக்கம் பெறச் செய்வதுமேன்மை உறச் செய்வது அழகு. எதற்கு எது அழகுஎன்று "அறப்பளீசுர சதகம்" கூறுவதைக் காணலாம்.

 

வாழ்மனை தனக்கு அழகு குலமங்கைகுலமங்கை

     வாழ்வினுக்கு அழகு சிறுவர்;

  வளர் சிறுவருக்கு அழகு கல்வி;கல்விக்கு அழகு

     மாநிலம் துதிசெய் குணமாம்;

 

சூழ்குணம் அதற்குஅழகு பேரறிவுபேரறிவு

     தோன்றிடில் அதற்கு அழகுதான்

  தூயதவம்மேன்மைஉபகாரம்விரதம்பொறுமை

     சொல்லரிய பெரியோர்களைத்

 

தாழ்தல்பணி விடைபுரிதல்சீலம்நேசம்கருணை

     சாற்றும் இவை அழகுஎன்பர்காண்;

  சௌரிமலரோன்அமரர்முனிவர்முச்சுடரெலாம்

     சரணம் எமை ரட்சி எனவே,

 

ஆழ்கடல் உதித்து வரு விடம்உண்ட கண்டனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     சௌரிமலரோன்அமரர்முனிவர்முச்சுடர் எலாம் சரணம் எமை ரட்சி என--- திருமால்,பிரமன்,வானவர்,முனிவர்முதலியோரும்,சந்திரன்சூரியன்அக்கினி ஆகியமுச்சுடர்களும்,"அடைக்கலம் எங்களை ஆதரிப்பாயாக" என்று வேண்டி நின்றபோதுஆழ்கடல் உதித்துவரும் விடம் உண்ட கண்டனே ---- ஆழ்ந்த பாற்கடலில் தோன்றி வந்த நஞ்சத்தை உண்டு அருளி அவர்கள் எல்லோரையும் காத்து அருள் புரிந்தஉண்ட நீலம் பொருந்திய கண்டத்தை உடையவனே! அண்ணல் எமது அருமை மதவேள் --- தலைவனாகியஎம்முடைய அருமையானமதவேள் என்பான்அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

 

     வாழ் மனை தனக்கு அழகு குலமங்கை --- வாழுகின்ற இல்லத்திற்கு அழகு நல்ல குடியிலே பிறந்த மங்கையாவாள்.

 

     குலமங்கை வாழ்வினுக்கு அழகு சிறுவர் --- அந்தக் குலமங்கையின் வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள் ஆவர்.

 

     வளர் சிறுவருக்கு அழகு கல்வி --- வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி.

 

      கல்விக்கு அழகு மாநிலம் துதி செய் குணம் ஆம் --- கல்விக்கு அழகாவது பெரிய உலகத்தில் உள்ளோர் புகழுகின்ற நல்ல பண்பாகும்.

 

      சூழ்குணம் அதற்கு அழகு பேரறிவு --- கல்வியின் பயனாகப் பொருந்திய அந்த நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு

 

     பேரறிவு தோன்றிடில் அதற்கு அழகுதான் --- பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவைஅவன்பால் விளங்கும், தூய தவம் --- உற்ற நோய் நோன்றலும்உயிர்க்கு உறுகண் செய்யாமையாகிய நல்ல தவ உணர்ச்சி.மேன்மை --- பெருந்தன்மை

உபகாரம் --- பிறருக்கு உதவி செய்யும் உதார குணம்.விரதம் --- உண்டி சுருக்கல் முதலியவைகளால் ஐம்புலன்களை அடக்குதல்,  பொறுமை --- தன்னைப் போற்றாதவர்களையும்தனக்குத் தீங்கு இழைத்தவர்களையும்பொறுத்துக்கொள்ளுகின்ற பொறைசொல் அரிய பெரியோர்களைத் தாழ்தல் --- புகழ்தற்குரிய பெரியோர்களை வணங்குதலும்பணிவிடைபுரிதல் --- அவர்கட்கு வேண்டும்உ பகாரங்களையும்பணிவிடைகளையும் புரிதல்.சிவநேசம் --- அன்புடைமை. (அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் - திருமூலர்) கருணை --- பிற உயிர்கள் பால் செலுத்தும் அருள். (அன்பு இருந்தால் அருள் பிறக்கும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவர்)

 

     சாற்றும் இவை அழகு என்பர்---என்று கூறப்பட்ட இவையே அழகாகும் அறிஞர்கள் கூறுவர்.

 

     ஒப்பனை அல்லது அழகு செய்வது என்பதுஒன்றை விளக்கம் உறச் செய்வது. எதை விளக்குவது எது என்ற "குமரேச சதகம்" கூறுவதைக் காணலாம்.

 

பகல்விளக்குவது இரவிநிசி விளக்குவது மதி,

     பார் விளக்குவது மேகம்,

பதி விளக்குவது பெண்குடி விளக்குவது அரசு,

     பரி விளக்குவது வேகம்,

 

இகல் விளக்குவது வலிநிறை விளக்குவது நலம்,

     இசை விளக்குவது சுதிஊர்

இடம் விளக்குவது குடிஉடல் விளக்குவது உண்டி

     இனிய சொல் விளக்குவது அருள்,

 

புகழ் விளக்குவது கொடைதவம் விளக்குவது அறிவு,

     பூ விளக்குவது வாசம்,

பொருள் விளக்குவது திருமுகம் விளக்குவது நகை

     புத்தியை விளக்குவது நூல்,

 

மகம் விளக்குவது மறைசொல் விளக்குவது நிசம்,

     வாவியை விளக்குவது நீர்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

 

     இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     பகல் விளக்குவது இரவி --- பகல் பொழுதை விளக்கம் உறச் செய்வது கதிரவன் ஆகும்,

 

     நிசி விளக்குவது மதி --- இரவை ஒளிசெய்வது திங்கள் ஆகும்,

 

     பார் விளக்குவது மேகம் --- நிலத்தைச் செழிப்புறச் செய்வது மழை பொழியும் மேகம் ஆகும்

 

     பதி விளக்குவது பெண் --- கணவனை விளக்கமுறச் செய்பவள் பெண் ஆவாள்

 

     குடி விளக்குவது அரசு --- குடிகள் அச்சம் இல்லாமல் வாழுமாறு காப்பவன் அரசன் ஆவான்,

 

     பரி விளக்குவது வேகம் --- குதிரைக்கு விளக்கம் தருவது அதனுடைய வேகம்,

 

     இகல் விளக்குவது வலி --- பகைமைக்கு விளக்கம் தருவது வலிமை,

 

     நிறை விளக்குவது நலம் --- ஒழுக்கம் விளக்குவது அழகு

 

     இசை விளக்குவது சுதி--- இசைக்கு இனிமை தருவது சுருதி என்னும் இசைக் கருவி

 

     ஊர் இடம் விளக்குவது குடி --- ஊரை அழகுறச் செய்வது குடிவளம்

 

     உடல் விளக்குவது உண்டி --- உடம்பை வளர்த்து அழகு படுத்துவது உணவு,

 

     இனிய சொல் விளக்குவது அருள் --- இனிய சொல்லால் அருள் விளக்கம் பெறும்,

 

     புகழ் விளக்குவது கொடை --- புகழைப் பரப்புவது வரையாது வழங்கும் பண்பு ஆகும்

 

     தவம் விளக்குவதுஅறிவு --- தவத்தை விளக்கம் பெறச்செய்வது அறிவு

 

     பூ விளக்குவது வாசம் --- மலரை விளக்ககுறக் காட்டுவது அதன் மணம்

 

     பொருள் விளக்குவது திரு --- செல்வத்தை எடுத்துக் காட்டுவது திருமகளின் அருள்,

 

     முகம் விளக்குவது நகை --- முகத்தை அழகாக்குவது புன்சிரிப்பு,

 

     புத்தியை விளக்குவது நூல் --- அறிவை விளக்கம் பெறச் செய்வது நூலைக் கற்பது,

 

     மகம் விளக்குவது மறை --- வேள்வியை விளங்கச் செய்வது வேத மந்திரம் ஓதுதல்,

 

     சொல் விளக்குவது நிசம் --- சொல்லுக்கு அழகு உண்மை

 

     வாவியை விளக்குவது நீர் --- குளத்திற்கு அழகு நீர் நிறைந்து இருத்தல்.

 

     மக்களில் யார் யாருக்கு எது அழகு என்பதை, "நறுந்தொகை" என்றும் "வெற்றிவேற்கை" என்றும் அறியப்படும் நீதிநூல் வகைப்படுத்திக் காட்டுகின்றது...

 

கல்விக் கழகு கசடு அற மொழிதல்.

 

            ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றம் அறச் சொல்லுதல்.

 

            கசடு, --- ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும்திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும். பிறர் உள்ளத்தில் உள்ள கசடு (குற்றம்) அறும்படியாகவும் சொல்லுதல் வேண்டும்.

 

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.

 

            செல்வம் உடையோர்க்கு அழகாவதுசுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.

 

             கிளை போன்று இருப்பதால்,சுற்றம் என்பது கிளை எனப்படும். செழுங்கிளை என்பது நல்ல உறவு என்றும்தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும். எனவேநமக்கு அழகு செய்கின்ற நல்ல உறவைப் பாதுகாத்தல் வேண்டும்.

 

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்.

 

            மறையோர்க்குஅழகாவனவேதம் ஓதுதலும்நல்லொழுக்கம் குன்றாது இருத்தலும் ஆகும்.

 

     வேதத்தில் சொல்லப்பட்டுள்ள அறங்களின்படி ஒழுகுவது ஒழுக்கம் ஆகும். ஒழுக்கம் இல்லாமல் வேதம் ஓதுவதால் பயன் இல்லை. வேத வாக்கியத்தை மறந்துவிட்டாலும்ஓதிக் கொள்ளலாம். ஒழுக்கம் குன்றிவிட்டால்அந்தணர் என்னும் நிலை குன்றிப் போகும். "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும்பார்ப்பான் பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

            

மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை.

 

            அரசருக்கு அழகாவது நீதிநெறிப்படி ஆட்சி புரிதல். 

 

             நீதியானது செவ்விய கோல் போன்று இருத்தலின்அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசர் ஆகார் என்பதாம்.

 

வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல்.

 

            வணிகர்க்கு அழகாவது,மேன்மேலும் வளருமாறு பொருளைச் சேர்த்தல்.

 

     அப்படிப் பொருளைச் சேர்க்கும்போதுநியாயமான முறையில் செய்யவேண்டும். பணத்தை நிறையப் பெற்று,பொருளைக் குறையக் கொடுத்தலும்நல்ல பொருள் ஒன்றைக் காட்டிவேறு ஒரு பொருளைக் கொடுத்தலும் கூடாது. (சில இடங்களில் பார்வைக்கு (SAMPLE)என்று ஒரு பொருளை வெளியில் வைத்து இருந்துஉள்ளே சென்று வேறு ஒரு பொருளை அளந்து வரும்போது கட்டிக் கொடுத்தல் நிகழ்கின்றது)

 

உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்.

 

            உழவர்க்கு அழகாவது,  இந்த நிலத்தில்உழுது பயிர் செய்துஉண்டு வாழ்தலைவிரும்புதல்.

            

மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.

 

     அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங்காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் (தலைவனுக்குச்) சொல்லுதல்.

 

     இன்ன குறிப்பால் இன்னது விளையும். இன்னது செய்தால் இன்னது விளையும் என்று அறிவித்துநல்ல செயல்களைச் செய்ய ஊக்குவிப்பதும்அல்லாத செயல்களைச் செய்வதால் விளையும் தீமைகளை எடுத்துக் காட்டித் தவிர்த்தலும் அமைச்சருக்கு அழகு. 

 

     "பின்னும் முன் நோக்கும் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி" என்று திருவிளையாடல் புராணம் கூறும். மேல் வருவனவற்றையும் முன் நிகழ்ந்தனவற்றையும் ஆராய்ந்துகாணும் சூழ்ச்சித் திறத்தில் பெரிய தகுதியினையுடைய முதல்மந்திரியாகிய சுமதி.

 

     சுமதி --- சு --- நல்ல.  மதி --- அறிவு. நல்ல அறிவு உடையவரைச் சுமதி என்பர். அமைச்சருக்கு இன்னொரு பெயர் சுமதி என்பது.

 

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை.

 

            படைத்தலைவனுக்கு அழகாவன அஞ்சாமையும் ஆண்மையுமாம்.

 

            தந்திரம் --- சேனைதந்திரி --- சேனையை உடையவன்.

 

உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்

 

            உணவிற்குஅழகாவதுவிருந்தினருடன்உண்ணுதல்.

 

     விருந்து என்றால்சுற்றத்தாரையும்நண்பரையும் குறிக்காது. விருந்து --- புதிது. உணவுக்கு வழி இல்லாமல் வந்த அதிதிகளைக் குறிக்கும்.

 

அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்.

 

            அறிவுடையோர்க்குஅழகாவதுகற்கவேண்டிய நூல்களை எல்லாம்) கற்றுஅவற்றின் பொருள்களை அறிந்துமனம்அடங்கி இருத்தல்.

 

     மனம் அடங்குதலாவது --- கற்றோம் என்னும் செருக்கு இல்லாமல் இருத்தல். கற்ற நூல்களில் சொல்லியவாறு மனம் அடங்கி நல்வழியில் நடத்தல். அவ்வாறு அடங்காதவன் கற்றிருந்தாலும்அறிவற்றவன் ஆகவே கருதப்படுவான் என்பது, "ஓதியும் உணர்ந்தும்பிறர்க்கு உரைத்தும்தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்" என்னும் திருக்குறளால் அறியப்படும்.

 

வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.

 

            வறுமையுடையோர்க்கு அழகாவது வறுமையுற்ற காலத்தும் செம்மை குன்றாது இருத்தல்.

 

            செம்மை என்பதுமானத்தை விட்டுப் பிறரிடம் சென்று இரவாமலும்வறுமையைப் போக்கும் முகத்தான் தீய செயல்களைச் செய்யாமலும்,இருத்தல்.

 

     "இலன் என்று தீயவை செய்யற்செய்யின் இலன் ஆகும் மற்றும் பெயர்த்து" என்றார் திருவள்ளுவ நாயனார். வறுமை உள்ளது என்பதற்காக தீய செயல்களைச் செய்யாது ஒழிக. செய்தால்வறுமை மேலும் அதிகமாகும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...