எப்போது இடர் தீர்ப்பாய், இறைவா!
----
தேவர்கள் எல்லாம் தான் என்றும் சாவாமல் இருக்க ஆசைப்பட்டு, அமுதம் பெறவேண்டி பாற்கடலை கடையப் புகுந்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். அரக்கர்கள்தான் அறிவில்லாதவர்கள். தேவர்களுக்குமா அறிவில்லை? இவ்வளவு பெரிய செயலைச் செய்ய எண்ணும்போது, இறைவனை வணங்கி அவனது இருறைப் பெற்றுச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் தேவர்களுக்கும் உண்டாகவில்லை. தாம் முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாக, பொன்னுலகத்தில் போகத்தையே அனுபவிக்கின்றவர்கள் தேவர்கள்.
சாதாரண மனிதர்களாகிய நம்மில் பலரும், தமக்குத் துன்பம் வந்தபோதுதான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்னும் எண்ணமே வரும். துன்பம் போனதுமே இறைவன் இருப்பு மறந்து போகும். சிறுகுழந்தையானது, தாய் அழைத்தாலும் கேளாமல், விளையாட்டிலேயே ஈடுபட்டு இருந்து, அடிபட்டபோது, "அம்மா" என்று தாயை நாடி ஒடிவருவது போல. இது குழந்தைத் தனம். சிறுபிள்ளத் தனம் அல்லது குழந்தைத் தனம் (CHILDISH means lack of maturity)என்றால் அறிவின்மை, முட்டாள்தனம் என்று பொருள்.
இறைவன் ஒருவன் உண்டு என்னும் எண்ணம் இல்லாமலேயே தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் வேண்டும் என்னும் ஆசையினால் கடைந்தார்கள். சாவாமல் வாழவேண்டும் என்னும் ஆசை யாருக்குத் தான் உண்டாகாது? தம்முடைய வலிமையினால் அது முடியும் என்று எண்ணிக் கடைந்தார்கள்.
மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.
கடைந்தபோது, முதலில் அமுதம் தோன்றவில்லை. கற்பகம், சிந்தாமணி, திருமகள், ஐராவதம் முதலியவை கிடைத்தன. இவை எல்லாவற்றுக்கும் மேலான அமுதம்தானே தமக்குத் தேவை என்பதை எண்ணி,முதலில் வந்த இவைகளை ஓதுக்கி இருக்கவேண்டும். ஆசை யாரை விட்டது? அவரவர்கள் தங்கள் தங்களுக்கு என்று பங்கு போட்டுக் கொண்டார்கள். அப்பொழுதாவது, அமுதம் வேண்டுமே என்று இறைவனை நினைக்கவில்லை.
ஆனால் பேராபத்து வந்தது. நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி என்னும் பாம்பு,வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினைக் கக்கியது. அதன் வாடையே தேவர்களுக்கு மயக்கத்தைத் தந்தது. எல்லா உலகங்களையும் அழித்துவிடும் உக்கிரத்தோடு அது எழுந்தது. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நடுங்கினர். அப்போதுதான், சிவபரம்பொருளின் நினைவு வந்தது. ஓடோடிச் சென்று இறைவன் திருவடியில் விழுந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். "இப்போதுதான் நினைவு வந்ததா?பாற்கடலைக் கடையப் புகும் முன்னர் எனது நினைவு வரவில்லையா?" என்று இறைவன் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவன் எல்லையற்ற கருணை வடிவானவன். தாயினும் இனியவன். சிறுபிள்ளைத் தனம் அவனுக்கு இல்லை.
தேவர்கள் மட்டுமல்லாது, அனைத்து உயிர்களின் மீதும் கருணை வைத்து, அந்த விடத்தை எடுத்து உண்டான் சிவபிரான். பயந்த அம்பிகை, இறைவன் கண்டத்தைத் தனது திருக்கைகளால் பிடித்துக் கொண்டதால், நஞ்சானது, அவனது கண்டத்திலேயே நின்றது. கண்டம் கறுத்தது.
இறைவரின் கண்டத்தைப் பிடித்து, விடத்தைஉட்புகாமல் தடுத்தது உமாதேவியார் என்றாலும், உண்மையில் தடுத்தது நாம் செய்த தவமே, உலகத்து உயிர்கள் செய்த தவம் காரணமாகவே அப்படி நிகழ்ந்தது என்பார் சேக்கிழார் பெருமான்.
"புவனங்கள் உய்ய ஐயர்
பொங்கு நஞ்சு உண்ண,யாம்செய்
தவம்நின்று தடுத்தது என்னத்
தகைந்து, தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னைத்
திருநீல கண்டம் என்பார்".
அந்தத் திருநீலகண்டம், "நிறம் திகழும் கண்டம்" என்று ஆனது. நிறம் என்றால் அழகு என்று பொருள். கருமையும் அழகு.
நளிர் சுரத்தால் அடியார்கள் அவதிப் படுகின்றார்கள் என்று கேள்வியுற்ற, திருஞானசம்பந்தப் பெருமானாரின் கருத்தில், அந்தத் திருநீலகண்டம் தோன்றுகின்றது. "செய்வினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" என்று திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டுத் திருப்பதிகம் பாடினார்.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், இறைவனின் நீலகண்டத்தைக் கண்ணுற்றார். "எம்பெருமானே! உயர்ச்சி பொருந்திய தேவர்கள் கடல் கடைந்த பொழுது தோன்றிய விடம் என்னும் இருளோடு, அடியேனின் ஆணவ இருளும் கலக்குமானால், தேவரீரது கழுத்தில் கருமை அழகு மிகுந்து விளங்கி மயங்கச் செய்யும்" என்று பாடினார்.
ஏண்உறும் அமரர் கடைகடல் அளித்த
இருளொடு மணிமிடற்று, அடியேன்
ஆணவ இருளும் கலந்திடில், கருமை
அழகுமிக்கு இலங்குறும் கண்டாய்;
மாண்எழில் வராகம் உழும்புழை அனந்தன்
மணிஒளிப் பிழம்புஎழல், சிறுதீத்
தாணுவின் முருகன் எழுதல்நேர் சோண
சைலனே கைலைநா யகனே. --- சோணசைல மாலை.
"ஆலகால விடத்தின் கருமையை ஏற்றுக் கொண்ட பெருமானே! அதை விடவும் மிகக் கருநிறம் ஆணவ வல்லிருளானது என்னிடத்தில் உள்ளதே, அதையும் வாங்கிக் கொண்டால், உமது கண்டத்தில் உள்ள கருமை இன்னும் அழகாக விளங்குமே" என்று வேண்டினார் சுவாமிகள்.
இந்த "நிறம் திகழும் மைஞ்ஞான்ற கண்டம்" காரைக்கால் அம்மையாரின் உள்ளத்தில் படர்ந்தது.
உலகத்தில் எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன. மனிதர்களும் பிறக்கின்றார்கள். மரம் செடி கொடி, விலங்குகள், மனிதர்கள் ஆகிய எல்லா உயிர்களுக்கும் நாளடைவில் உடம்பு வளர்கின்றது. உள்ளமும் வளர்கின்றது. விலங்கினங்கள், பறவைகள் யாவும் பக்கவாட்டில் வளர்கின்றன. காரணம், அவை ஒன்றை ஒன்று உண்டு வாழ்வன. அவைகளிடத்தில் சீவகாருண்ணியம் இல்லை. மனிதன் மட்டுமே நெடுக வளர்கின்றான். காரணம், அவனது அறிவு நேராக வளர்ந்து, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை ஆகிய சீவகாருண்ணிய உணர்வு அவனிடத்தில் வளரவேண்டும். மற்ற உயிரினங்களுக்கு எல்லாம் வாக்கு வளம் உண்டாவது இல்லை. வாய் இருந்தும் பேச முடியாமையால்,மற்ற உயிரினங்கள் வாயில்லாப் பிராணிகள் ஆயின. மனிதன் ஒருவன் மட்டும்தான் வாய் உடையவன் ஆகின்றான். பிறந்து, வளர வளர, மொழி தெரிந்து, தனது கருத்தை வாயால் சொல்லவும்,மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்ளவும் பழகி, தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லும் ஆற்றல் அவனுக்கு மொழியைப் பழகுவதால் உண்டாகின்றது.
அப்படிப் பிறந்து மொழி பயின்றவர் காரைக்கால் அம்மையார். ஆனால், தேவர்களைப் போல், தமக்குத் துன்பம் வந்த காலத்து மட்டும் இறைவனை நினைக்காது, மொழியைப் பயின்றபோது எல்லாம் இறைவன் திருநாமங்களையே பயின்றவர் அம்மையார். அதனால், இறைவனிடத்தில் பத்தி உணர்வு என்னும் காதல் உண்டாகியது. அதனால், இறைவன் திருவடியிலேயே அவருடைய மனம் சேர்ந்து இருந்தது.
"மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்,
நிலமிசை நீடு வாழ்வார்"
என்னும் திருக்குறளில், பரிமேலழகர், "சேர்தல் ஆவது, இடைவிடாது நினைத்தல்" என்றது போல, காரைக்கால் அம்மையார், "காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்" என்றார். "சேவடியே" என்றதால், மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களாலும், பிறந்து மொழி பயிலத் தொடங்கிய காலம் தொடங்கி, இறைவன் திருவடியையே எண்ணி வாழ்ந்தார்.
இறைவன் திருவருள் தமக்கு வாய்க்கவில்லையே என்னும் ஏக்கத்தால், அவருக்கு திருநீலகண்டம் நினைவுக்கு வந்தது. அந்தத் திருநீலகண்டம் தானே வானோரும் ஏனோரும் அழியாமல் காத்து அருள் புரிந்தது. வானவர்கள் முதலில் இறைவனை நினைக்கவில்லை. தமக்குத் துன்பம் வந்தபோதுதான் நினைத்தார்கள். அவர்களுக்கு உடனே அருள்புரிந்த பெருமான்,பிறந்து, மொழி பேசத் தொடங்கியது முதல், பலகாலமாக வழிபட்டு வரும் தமது துயரைத் தீர்த்து அருளவில்லையே என்று எண்ணினார்.
அந்த நினைவின் பயனாகவும்,நமது முன்னைப் பெருந்தவத்தின் விளைவாகவும் உதித்தது, "அற்புதத் திருவந்தாதி" என்னும் அருள் நூல். முதல் பாடலிலேயே, "தேவர்கள் வேண்டிய போதே அவர்களுக்கு அருள் புரியக் கருணை கூர்ந்து, ஆலகால விடத்தை அயின்று, மைஞ்ஞான்ற கண்டத்தனாக இருக்கும் நீ,பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து, உனது திருடியையே இடைவிடாது நினைத்திருக்கும் எனது துன்பத்தை எப்போது தீர்க்கப் போகின்றாய்" என்று வேண்டினார்.
பிறந்து மொழிபயின்ற பின் எல்லாம்,காதல்
சிறந்து, நின் சேவடியே சேர்ந்தேன்,- நிறம் திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே!
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்.
No comments:
Post a Comment