திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
16 - பொறை உடைமை
யாதொரு காரணம் பற்றியோ, அறிவு இன்மையாலோ பிறர் தமக்குச் செய்யும்
பிழைகளைப் பொறுத்துக் கொள்வதோடு, அவ்வாறான செயல்களை அவர்க்குத் திருப்பிச்
செய்யாது விடுத்தல் பொறை உடைமை ஆகும்.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "தன்னைத்
தோண்டுபவரை,
விழாமல்
சுமக்கும் நிலத்தைப் போல, தம்மை அவமதிப்பவரைப் பொறுத்தல் தலையாய அறம்
ஆகும்" என்கின்றது.
தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம் என்றதனால், தம்மைக் கொலை
செய்வதை ஒத்த குற்றம் செய்தாரையும் பொறுப்பதும், பொறுத்து இருந்தை
அவர்களைக் காப்பதும் சிறந்த அறம் ஆயிற்று.
தெரிவரும்
பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி
அளவில் பயத்தலும்,
மருவிய
நன்னில மாண்பு ஆகும்மே. --- நன்னூல்.
பொறை
எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல். ---
கலித்தொகை.
திருக்குறளைக்
காண்போம்...
அகழ்வாரைத்
தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.
இதற்குப் பரிமேலழகர்
உரை ---
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல --- தன்னை
அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல;
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை --- தம்மை
அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
(இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில்
இருந்து ஒரு பாடல்...
பித்தன் எனத்தமக்குப்
பேர் படைத்தும், எந்தைபிரான்
வைத்தவனைத் தோழன் என வாழ்வித்தார், --- நித்தம்
அகழ்வாரைத்
தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.
எந்தை பிரான் ---
திருவெண்ணெய் நல்லூரில் உள்ள சிவபெருமான். பித்தன் ஏனப் பேர் படைத்தும் ---
சுந்தரமூர்த்தி நாயனாரால் பித்தன் என்ற பெயரைப் படைத்தாலும். வைத்தவனை --- வைதவனை
என்பதன் விரித்தல் விகாரம். தோழன் என --- சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத்
தம்பிரான் தோழர் என்பது ஒரு திருநாமம். இதில் கண்ட வரலாறு பெரியபுராணத்திலும், "பித்தா பிறை சூடி"
என்னும் தேவாரத் திருப் பதிகத்தாலும் விளங்கும்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்குத்
திருத்தொண்டு புரிந்து வந்த ஆலாலசுந்தரர் திருத்தொண்டத் தொகை வெளிப்படுதற்கு ஏதுவாக, பூக்கொய்ய வந்த சேடியர் இருவர்பால்
சிறிது மனத்தைச் செலுத்த, சிவபெருமான் கட்டளைப்படி
திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதிசைவ அந்தணர் குலத்தில் சடையனாருக்கும்
இசைஞானியாருக்கும் மகனாகத் தோன்றி நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று
வளர்ந்தார்.
திருக்கயிலையில் இருந்து நீங்கும் முன்னர், ஆலாலசுந்தரர், சிவபெருமான்
திருவடிகளில் வணங்கி, "பெருமானே! நான் மானுடமாய்ப் பிறந்து, மாயவலையில்
சிக்கி மயங்கும்போது, அடியேனைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.
அவ்வண்ணமே அருள் புரிந்தார் சிவபரம்பொருள்.
மணப்பருவம் அடைந்த நம்பியாரூரருக்குப்
புத்தூரில் சடங்கவி சிவாசாரியாருடைய மகளைத் திருமணம் புரிவிக்க ஏற்பாடு செய்தனர். திருமணம்
நிகழ்ந்த மணப்பந்தரில் சிவபெருமான் தாம் முன்பு கயிலையில் அளித்த வாக்கின்படி
கிழவேதியராக வந்து ஓலைகாட்டி, ஆரூரரைத் தமக்கு
அடிமை என்றார்.
நம்பியாரூரர், கிழவேதியரைப் பார்த்து, "அந்தணர் வேறு ஓர்
அந்தணருக்கு ஆடிமை ஆதல் இந்த உலக வழக்கில் இல்லை. என்னை உமக்கு அடிமை எனச் சொன்ன
நீர் பித்தரோ?"
என்றார்.
கிழவேதியர், திருவெண்ணெய்நல்லூரில் வழக்கிட்டு
வென்றார். அந்த வேளையில், சபையார், கிழவேதியரைப்
பார்த்து,
"முதியவரே!
நீர் காட்டிய ஓலையில் உமது ஊர், இந்த ஊர் என்று உள்ளது. நீர் வசிப்பது எங்கே?" என்று கேட்டனர்.
"இங்குள்ள ஒருவரும் ஏன்னை அறியீர் ஆகில், காட்டுகின்றேன், வாரும்" என்று
சொல்லி நடந்தார் கிழ வேதியர். நம்பியாரூரரும் மற்றவரும்
அவரைத் தொடர்ந்து சென்றனர். கிழவேதியர் அந்த ஊரில் உள்ள திருக்கோயிலின் உள் சென்று
மறைந்தார். எல்லோரும் வியந்தனர்.
அப்போது சிவபெருமான் உமாதேவியாருடன்
மழவிடைமேல் தோன்றி, "நம்பியாரூரா! முன்பு நீ நமக்குத் தொண்டன். நமது
ஏவலின்படி மண்ணில் பிறந்தாய். இந்த உலக பாசம் உம்மைத் தொடராதபடி, நாமே வந்து
தடுத்து ஆட்கொண்டோம்" என்றார்.
"முன்புநீ நமக்குத்
தொண்டன்,
முன்னிய வேட்கை கூரப்
பின்புநம்
ஏவ லாலே
பிறந்தனை மண்ணின்
மீது,
துன்புஉறு
வாழ்க்கை நின்னைத்
தொடர்வுஅறத்
தொடர்ந்து வந்து
நன்புல
மறையோர் முன்னர்
நாம்தடுத்து
ஆண்டோம்" என்றார்.
இதன்
பொழிப்புரை
---
முற்பிறப்பில் நீ நமக்கு அடியனாய் இருந்தாய்.
மாதரைக் கருதிய விருப்பு மிகுதியால் பின் நம்முடைய ஆணையால் இந்நிலவுலகில்
தோன்றினாய். அதனால் துன்பத்தை விளைவிக்கும் இல்வாழ்க்கையானது உன்னைத் தொடராமல்
நாமே வலியத் தொடர்ந்து வந்து நல்லுணர்வினை உடைய மறையவர்களுக்கு முன்னே
தடுத்தாட்கொண்டோம் என்றார்.
என்றுஎழும்
ஓசை கேளா
ஈன்றஆன் கனைப்புக்
கேட்ட
கன்றுபோல்
கதறி நம்பி
கரசரண ஆதி அங்கம்
துன்றிய
புளகம் ஆகத்
தொழுதகை தலைமேல் ஆக,
"மன்றுஉளீர் செயலோ
வந்து
வலியஆட்
கொண்டது" என்றார்.
இதன்
பொழிப்புரை
---
இவ்வாறு, சிவபெருமான் அருளிச் செய்த திருவாக்கைக்
கேட்ட நம்பியாரூரர், ஈன்ற பசுவின்
கனைப்பினைக் கேட்ட கன்றைப் போல அலறி, கைகால்
முதலிய உறுப்புக்களில் நெருங்கி எழுந்த மயிர்க்கூச்செறிதல் உண்டாக, தொழுத கை தலைமீது ஏற, திருமன்றுள் ஆடல் செய்தருளும் பெருமானே!
உம்முடைய செய்கையோ இவ்வாறு வலிய வந்து தடுத்தாட்கொண்டது என்று விண்ணப்பம்
செய்தார்.
"மற்றுநீ வன்மை பேசி
வன்தொண்டன் என்னும்
நாமம்
பெற்றனை, நமக்கும் அன்பில்
பெருகிய சிறப்பின்
மிக்க
அற்சனை
பாட்டே ஆகும்,
ஆதலால், மண்மேல் நம்மைச்
சொல்தமிழ்
பாடுக" என்றார்
தூமறை பாடும் வாயார்.
இதன்
பொழிப்புரை
---
தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த
சிவபெருமான், மேலும் "நீ
என்னுடன் வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், `வன்றொண்டன்` என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும்
அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கு இடுதல்
முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். ஆதலின்
இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக!" என்றருளிச்
செய்தார்.
"வேதியன் ஆகி என்னை
வழக்கினால் வெல்ல
வந்த
ஊதியம்
அறியா தேனுக்கு
உணர்வு தந்து உய்யக்
கொண்ட
கோதுஇலா
அமுதே, இன்றுஉன்
குணப்பெருங் கடலை
நாயேன்
யாதினை
அறிந்துஎன் சொல்லிப்
பாடுகேன்"
எனமொழிந்தார்.
இதன்
பொழிப்புரை
---
மறையவனாய் அடியேனை வழக்கிட்டு வெல்ல வந்த
ஊதியத்தை அறியாத அடியேனுக்கு, முன்னைய உணர்வைக்
கொடுத்து, உலக வாழ்வினின்றும்
விலகுமாறு தடுத்தாட்கொண்ட குற்றமற்ற அமுதாக விளங்குபவனே! இன்று உம் மேலான
குணநலன்களாம் பெருங்கடலில், நாயை ஒத்த
சிறுமைக்குணம் உடையவனாகிய யான்,
எவ்வளவில்
முகந்து எக்குணத்தை அறிந்து எவ்வண்ணம் பாடுகேன்? என்று விண்ணப்பம் செய்தார்.
அன்பனை
அருளின் நோக்கி
அங்கணர் அருளிச்
செய்வார்,
"முன்புஎனைப் பித்தன்
என்றே
மொழிந்தனை, ஆதலாலே
என்பெயர்
பித்தன் என்றே
பாடுவாய்"
என்றார் நின்ற
வன்பெருந்
தொண்டர் ஆண்ட
வள்ளலைப் பாடல்
உற்றார்.
இதன்
பொழிப்புரை
---
இவ்வாறு வேண்டிய அடியவராகிய நம்பியாரூரரைக்
கருணையோடும் பார்த்து, அழகிய பேரருட்பெருங்
கருணையை உடைய சிவபெருமான் அருளிச் செய்வார் `முன்னே என்னைப் பித்தன் என்றே கூறினாய், அதனால் இப்பொழுதும் என் பெயரைப் பித்தன்
என்றே வைத்துப் பாடுக!` என்று அருளினார்.
அதனைக் கேட்டு நின்ற பெருமைமிக்க தொண்டராகிய நம்பியாரூரரும், தம்மைத் தடுத்தாட்கொண்ட கருணை வள்ளலாகிய
பெருமானைப் பாடத் தொடங்கினார்.
பித்தன் என்று தம்மை இகழ்ந்ததைப்
பொறுத்து அருள் புரிந்தார் இறைவர்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"
என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
முந்தும்
மரம்தரித்த மூர்க்கன்சொல் கேட்டும்அவன்
எந்தைபிரான்
என்றான், இரங்கேசா! - கொந்தி
அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.
இதன்
பதவுரை ---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!
முந்தும் --- தன்னெதிரில் உள்ள, மரம் தரித்த --- மாமரத்தை வெட்டின, மூர்க்கன் சொல் --- மூடனுடைய அந்த
வார்த்தையை, கேட்டும் --- கேட்ட
பிறகும், அவன் --- அந்த
மூர்க்கன், எந்தை பிரான் --- என்
தந்தையாய்ச் சிறந்தவன், என்றான் --- என்று
சேரமாண்டார் சொன்னார். (ஆகையால்,
இது)
கொந்தி --- கொத்தி, அகழ்வாரை ---
தோண்டுகின்றவர்களை, தாங்கும் ---
பொறுமையோடு தாங்கிக் கொண்டிருக்கும், நிலம் போல-- - பூமியைப் போல, தம்மை --- ஒருவர் தம்மை, இகழ்ந்தார் --- நிந்தித்துப்
பேசுகிறவர்களை, பொறுத்தல் ---
பொறுத்துக்கள்வது, தலை --- மேலான செயல்
ஆகும் (என்பதை விளக்குகின்றது).
விளக்கவுரை --- சோழனிடத்தில்
ஒருவன் வந்து "நான் பொறுமையில் சிறந்தவன் என்று பேர் போன சேரற்குக்
கோபமூட்டுகிறேன்" என்று சூள் உரைத்துச் சென்று, சேரனுடைய முற்றத்தில் வளர்ந்திருந்த
சாதி மாமரத்தை மூர்க்கத் தனமாக வெட்டினான். அங்ஙனம் அவன் வெட்டியும் சேரற்குச்
சற்றும் கோபம் மூளவில்லை. அவன் தாய் அம் மரவெட்டியை நோக்கி, "நீ யார்"
என்றாள். அதற்கு அவன், "நான் தான் உன்
நாயகன்" என்றான். அது கேட்ட பிறகும் சேரன் வேறொன்றும் கூறாமல், தன் தாயை நோக்கி, "அம்மணீ, அவன் சொன்ன சொல்லால், அம் மரத்துக்கு உடையவன் அவனே"
என்பதில் சந்தேகமில்லை என்றான். சேரன் வார்த்தையைச் செவியால் கேட்க, அவன் பொருமையை வியந்து வந்து, அவனுடைய பாதங்களில் பணிந்து, "அடியேன் சிறு மதியால்
பிழைத்தேன். பொருத்தருள்க" என்று முகமன் கூறிச் சென்றான். சேரன் பொறுமையைக்
கேட்ட சோழன் முதலியோர் வியந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதுபற்றியே, முந்தும் மரம் தரித்த மூர்க்கன்சொல்
கேட்டும் அவன் எந்தைபிரான் என்றான் இரங்கேசா என்றார். தன்னை வெட்டுகிறவர்களுக்குக்
கிளைமேல் நிற்க இடம் தரும் மரமும்,
பூமியைப்
போலவே அப்போது தாங்குவது மட்டும் அன்றிப் பிறகு தளிர்த்து வளர்ந்து, அன்று வெட்டினவர்க்கே நிழல் தருவதும் பொறுமைக்கு
உத்தம இலக்கணம்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
தொடத்தொடப்
பொறுக்குந் திண்மைத்
தொல் நிலம் அனையான் இல்லா
இடத்து, அவன் தேவி பால்போய்
இடன் உண்டே இடன் உண்டே
என்று,
அடுத்தடுத்து
அஞ்சாது என்றும்
கேட்டுக்கேட்டு அகல்வா
னாக
நடைத்தொழில்
பாவை அன்ன
நங்கை வாளா இருந்தாள். --- தி.வி.புராணம், அங்கம் வெட்டின படலம்.
இதன்
பதவுரை ---
தொடத் தொடப் பொறுக்கும் திண்மைத் தொல் நிலம்
அனையான்
--- தோண்டப் தோண்டப் பொறுக்குந் திண்ணிய பழமையாகிய நிலத்தினைப் போலும் பொறுமையுடைய
அவ்வாசிரியன், இல்லா இடத்து அவன்
தேவிபால் போய் --- இல்லாதபொழுது அவன் மனைவியிடத்துச் சென்று, இடன் உண்டே இடன் உண்டே என்று --- சமயம்
உண்டோ சமயம் உண்டோ என்று, என்றும் அடுத்து
அடுத்து அஞ்சாது கேட்டு கேட்டு அகல்வானாக ---
நாள்தோறும் அடுத்தடுத்துச் சிறிதும் அஞ்சாது கேட்டுக் கேட்டு நீங்க, நடைத்தொழில் பாவை அன்ன நங்கை வாளா
இருந்தாள் --- நடக்குந் தொழிலையுடைய பாவை போன்ற அம்மாதராள் ஒன்றும் பேசாது சும்மா
இருந்தாள்.
தோண்டுந் தோறும் பொறுக்கும் நிலம் போலும் பொறுமை என்னும்
கருத்தினை,
"அகழ்வாரைத் தாங்கு
நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப்
பொறுத்த றலை"
என்னும்
திருக்குறளில் காண்க.
அன்னை
தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின்
அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை
வேசி
துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில்
இவையுடையாள் பெண். --- நீதிவெண்பா.
இதன்
பொருள் ---
சொல்லப் புகுமிடத்து, தாயைப் போன்ற அன்பும், வேலையாளைப் போலத் பணிபுரிதலும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளைப்
போல அழகும், நிலத்தைப் போல
பொறுமையும், அழகிய தனங்களை உடைய
விலைமாதரைப் போலத் துயிலும் முன் தரும் இன்பமும், திறன் மிகுந்த
அமைச்சரைப் போல அறிவும் ஆகிய ஆறு பண்புகளையும் உடையவளே நன்மனையாள் என்று
சொல்லத்தக்கவள் ஆவாள்.
தம்மை
இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி,மற்று
எம்மை
இகழ்ந்த வினைப் பயத்தால் --- உம்மை
எரிவாய்
நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம்
சான்றோர் கடன். --- நாலடியார்.
இதன்
பதவுரை
---
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி ---
காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் --- எம்
போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை --- மறுமையில், எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று ---
ஒருகால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும் சான்றோர் கடன் --- இரங்குவதும்
தவம் நிறைந்தவரது கடமையாகும்.
தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமும்
கொள்ளவேண்டும்.
வேற்றுமை
இன்றிக் கலந்து இருவர் நட்டக்கால்,
தேற்றா
ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றுந்
துணையும் பொறுக்க, பொறான் ஆயின்
தூற்றாதே
தூர விடல். --- நாலடியார்.
இதன்
பதவுரை
---
வேற்றுமையின்றிக் கலந்து இருவர் நட்டக்கால் ---
வேறுபாடில்லாமல் மனங் கலந்து இரண்டு பேர் நேசித்தால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ---
தக்கதென்று பெரியோரால் தெளியப்படாது ஒதுக்கிய தகாத நடத்தை ஒருவனிடத்தில் உண்டானால், ஆற்றுந் துணையும் பொறுக்க --- பொறுக்கக்
கூடுமளவும் மற்றவன் பொறுத்துக்கொள்க; பொறானாயின்
--- அதன்மேற் பொறுக்கக் கூடாதவன் ஆயின், தூற்றாதே
தூரவிடல் --- அக் குற்றத்தைப் பலரும் அறியப் பழிக்காமல் அவன் தொடர்பை, மீண்டும் அணுகவொட்டாதபடி நெடுந்
தொலைவில் விட்டு விடுக.
நண்பனிடத்தில் பொறுக்குமளவும் பொறுமை
கொள்க. பொறுக்கக் கூடாதவிடத்து அவனுக்குத் தீங்கு ஏதும் செய்யாமல் தூர
விலகிக்கொள்க.
நேர்
அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்து
இருத்தல் தகுதி, மற்று --- ஓரும்
புகழ்மையாக்
கொள்ளாது பொங்குநீர் ஞாலம்,
சமழ்மையாக்
கொண்டு விடும். --- நாலடியார்.
இதன்
பொருள் ---
கீழோர் தகாத வார்த்தைகளால் தம்மைத்
திட்டினாலும்,
அதைத்
தாங்கிக் கொள்வதே பெரியோருக்கு அழகு ஆகும். அப்படி இல்லாமல், அவர்களும்
கீழோர் மீது இழிசொல் வீசினால், கடலால் சூழப்பட்ட இந்த உலகம், அத்தகைய
பெரியோர் புகழைப் போற்றாமல், அவர்களையும் இழிந்த கீழோராகவே கருதி விடும்.
அகழ்வாரைத்
தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப்
பொறுத்தல் தலை.
திறன்
அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன்
அல்ல செய்யாமை நன்று.
என்பது முதலாக வரும்
"பொறையுடைமை" அதிகாரத் திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணிக்
கொள்ளுக.
அன்னம்
அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,
கன்னல்
மொழியார்க்கு கற்பாமே, -
மன்னுகலை
கற்றோர்க்கு
அழகு கருணையே, ஆசைமயக்கு
அற்றோர்க்கு
அழகு பொறையாம். ---
நீதிவெண்பா.
இதன்
பொருள் ---
அன்னப் பறவை போன்றவளே, குயிலுக்கு உள்ள அழகு இனிய இசையே.
அதுபோல, கரும்புபோல்
இனிக்கும் மொழியை உடைய பெண்களுக்கு அழகு கற்பே ஆகும். நிலைத்த கல்வியைக்
கற்றவர்களுக்கு அழகு இரக்கமே ஆகும். பேராசை மயக்கத்தை விட்டவர்களுக்கு அழகு
பொறுமையே ஆகும்.
கறுத்து
ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து
ஆற்றிச் சேறல் புகழால் - ஒறுத்து ஆற்றின்
வான்ஓங்கு
மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன்
றிடவரும் சால்பு. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
வான் ஓங்கும் மால் வரை வெற்ப --- வானளவு
உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!, தான்
நோன்றிட வரும் சால்பு --- ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம், (ஆகையால்) கறுத்து ஆற்றி தம்மை கடிய
செய்தாரை --- சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, பொறுத்து ஆற்றி சேறல் புகழால் --- அவர்
தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும், ஒறுத்து ஆற்றின் பயன் இன்று ---
கோபித்துத் தாமும் தீயசெய்கைகளைச் செய்தால் அதனால் புகழ் உண்டாதல் இல்லை.
மண்
திணிந்த நிலனும்
நிலன்
ஏந்திய விசும்பும்
விசும்பு
தைவரு வளியும்
வளித்தலைஇய
தீயும்
தீமுரணிய
நீரும் என்றாங்கு,
ஐம்பெரும்
பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப்
பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும்
தெறலும் அளியும் உடையோய்.. --- புறநானூறு.
இதன்
பொருள் ---
திண்மையான மண்ணை உடைய இந்த நிலமும், இந்த நிலத்தின் மேல் விரிந்துள்ள வானமும், அவ் வானத்தில்
மிதந்து வரும் காற்றும், அக் காற்றில் பற்றிய தீயும், தீயில் இருந்து
மாறுபட்ட நீரும், ஆகிய ஐம்பெரும்பூதங்களைப் போல, பகைவர் செய்த பிழையைப்
பொறுப்பதும்,
அப்பகையை
வெல்லும் வழியைப் பார்ப்பதும் ஆகிய குணங்களுடன், அவரை அழிக்கும்
மனவலியும்,
படை
வலியும் கொண்டு இருப்பதோடு, பணிவோர்க்கு அருள் சுரக்கும் மன வளமும் உடையவேனே!
நல்லவர்
தீயவர் என்னாது எவரையுமே
புவிதாங்கும், நனிநீர் நல்கும்,
செல்அருணன்
ஒளிபரப்பும், கால்வீசும்
அந்தரமும் சேரும்
ஒப்பு ஓன்று
இல்லாதான், தீயவர்க்கா இரங்கி, மனு
வேடம் உற்றான் எனில், அன்னார்பால்
செல்லாது
உன் சினம், மனமே! பொறுமையே
பெருமே அன்றோ செப்புங் காலே. --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
நெஞ்சே! நிலம், நல்லவர் தீயவர் என்று கருதாமல்
எல்லாரையும் சுமக்கும். தண்ணீர் மிகுதியும் வழங்கும். ஞாயிறு பெருக ஒளி தரும்.
காற்று வீசும். வானம் இடம் தரும். தனக்குவமை யில்லாத கடவுளும் தீயோர்பால்
அருளிரக்கங்கொண்டு மக்கள் கோலங்கொண்டு எழுந்தருளினன். அதனால், அவர்களிடம் உன் சினம் செல்லாது.
சொல்லுமிடத்துப் பொறுமையே பெருமையாகும்.
No comments:
Post a Comment