018. வெஃகாமை - 10. இறலீனும்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "பின் விளைவை அறியாமல், பிறனுடைய பொருளை விரும்பினால் அழிவு உண்டாகும். பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் ஆனது, வெற்றியைத் தரும்" என்கின்றது.

     பிறர் பொருளை விரும்புகின்றவனுக்கு அழிவும், விரும்பாதவனுக்கு வெற்றியும் உண்டாகும்.

     "வேண்டாம் அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை, யாண்டும் அஃது ஒப்பது இல்" என்று நாயனார் அருளி இருத்தலால், வேண்டாமையே ஒருவனுக்கு மேலான செல்வம் என்பது அறியப்படும்.

திருக்குறளைக் காண்போம்...


இறல் ஈனும் எண்ணாத வெஃகின், விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எண்ணாது வெஃகின் இறல் ஈனும் --- பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்;

     வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் --- அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.

          [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்து இருத்தலைக் காணலாம்...

ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.  ---  நீதிவெண்பா.

இதன் பொழிப்புரை ---

     ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் குற்றம் அற்ற நல்ல அடிமை ஆவான். உலகத்தில் உள்ள யாவர்க்கும் என்பது குறிப்பு. ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே, உலகத்தைத் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

மக்களும் மக்கள் அல்லாரும் எனஇரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம், --- மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண்பொருள் ஒன்றோ
துளக்குறு வெள்வளையார் தோள்.   ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     குண்டு நீர் வையகம் --- ஆழமாகிய கடல் சூழ்ந்த உலகம், மக்களும் மக்களல்லாரும் என இரண்டு குப்பைத்தே --- மனிதரும் மனிதர் அல்லாதாரும் என்ற இரண்டு குவியல்களை உடையது, மக்கள் அளக்குங் கருவி --- மக்களை அளந்து காட்டுங் கருவிகள், ஒண் பொருள் ஒன்றோ துளக்குறுவெள் வளையார் தோள் --- சிறந்த செல்வமும் விளக்குகின்ற சங்க வளையலை அணிந்த மகளிரது தோளுமாம்.

     பிறர் பொருள்களையும், பிறர் மனைவியரையும் விரும்பாதவர்களே மக்களாவர் என்பது கருத்து.


'செய்வன செய்தல், யாண்டும்
      தீயன சிந்தியாமை,
வைவன வந்தபோதும் வசை
      இல இனிய கூறல்,
மெய்யன வழங்கல், யாவும்
      மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடு
      உயர்வன:  உவந்து செய்வாய். ---  கம்பராமாயணம், அரசியல் படலம்.

இதன் பதவுரை ---

     யாண்டும் --- (மேற் கூறிய நண்பர் பகைவர் நொதுமலர் என்னும் மூவகையோருள்) எவரிடத்தும்; செய்வன செய்தல் --- செய்யத்தக்க காரியங்களைச் செய்தல்; தீயன சிந்தியாமை --- தீமை பயக்கும் செயல்களைச் செய்யக் கருதாமை; வைவன வந்த போதும் --- பிறர் இகழ்ந்து பேசும் தீய சொற்கள் செவியினை அடைந்த போதும்; வசை இல இனிய கூறல் --- (அவர்களிடத்தும்) பழிச்சொற்களை நீக்கி இனிய சொற்களைப் பேசுதல்; மெய்யன வழங்கல் --- மெய்ம்மையோடு பொருந்திய சொற்களையே பேசுதல்; யாவும் மேவின வெஃகல் இன்மை --- பிறரிடத்துப் பொருந்திய பொருள்களை விரும்பாமை, (ஆகிய இத்தகைய செயல்கள்); உய்வன ஆக்கி --- தம்மைக் கடைப்பிடிப்பாரை நற்கதி அடையச் செய்து; தம்மோடு உயர்வன --- அவ்வுயிர்களோடு தாமும் மேம்பட்டு விளங்குவனவாகும். உவந்து செய்வாய் --- (ஆகவே) இவற்றை நீ உவந்து செய்வாய்.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...