020. பயனில சொல்லாமை - 06. பயனில்சொல்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "பயனில்லாத சொற்களைச் சரி என்று பல தரமும் சொல்லுகின்றவனை மனிதன் என்று சொல்லவேண்டாம். அவனை மக்களுள் பதர் என்று சொல்லுக" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

பயன்இல் சொல் பாராட்டுவானை, மகன் எனல்,
மக்கட்பதடி எனல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க,

     மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக.

         (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இதனால், பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

சேக்கிழார் சிந்தாமணிப் பயிற்சி தீதுஎனவே
தூக்கி உபதேசித்தார், சோமேசா! - நோக்கில்
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

         பயனில சொல்லாமையாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடும்சொல், பயனில்சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள்,  பொய் துறந்தார்க்கல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து, இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள், கடும்சொல் இனியவை கூறலானும், (குறளை - பழிமொழி, புறங்கூறல்.) குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில்சொல் இதனால் விலக்குகின்றார்.

இதன்பொருள்---

         சோமேசா! நோக்கின் --- ஆராயின், பயன் இல் சொல் பாராட்டுவானை --- பயனில்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை, மகன் எனல் --- மகனென்று சொல்லற்க, மக்கள் பதடி எனல் --- மக்களுட் பதரென்று சொல்லுக. 

         சேக்கிழார் --- சேக்கிழார் நாயனார், தூக்கி --- ஆராய்ந்து, சிநாதமணி பயிற்சி தீது என --- சீவகசிந்தாமணி என்னும் நூலிற் பழகுதல் கெடுதியே என்று, உபதேசித்தார் --- இதோபதேசம் செய்தார் ஆகலான் என்றவாறு.

         தொண்டை நாட்டில் குன்றத்தூரில் வேளாள மரபில் அவதரித்த சேக்கிழார் நாயனாருடைய அறிவு ஆற்றல் முதலியன, பலர் சொல்லக் கேட்ட அநபாயன் என்னும் சோழன், அவரை வரவழைத்து அவர் திறத்தைத் தான் நேரே அறிந்து அமைச்சராக்கினான். அந் நாளில், சீவக சிந்தாமணி என்னும் சமண நூலைப் பலரும் ஆதரத்துடன் கற்றார்கள். அரசவைக்கு வந்த சிலர் சிந்தாமணிப் பாக்களில் சில எடுத்துக் கூறி அவற்றின்கண் நயங்களையும் கூறினார்கள். அது கேட்டிருந்த சேக்கிழார் பெருமான், "அந் நூற்கதை அவகதையாய் முடிதலின், அதனைக் கற்றலாகாது, சிவகதைகள் எத்தனையோ உள, அவை கற்பின் இம்மை, மறுமைப் பயன் பெரிதுண்டு" என்றார்.  அநபாயன்,  "அங்ஙனமாயில் சிவகதைகளில் சில கூறுக" என்றான். சேக்கிழார் பெருமான், நாயன்மார் கதைகளில் சிலவற்றையும் அவற்றின் வரலாற்று முறைமையையும் கூறவே, கேட்டு வியந்த சோழன் திருத்தொண்டர் புராணம் பாடும்படி வேண்டச் சிதம்பரத்தில் இருந்து ஓராண்டின் முடித்து அரங்கேற்றினார். இது சேக்கிழார் புராணத்து உள்ளது.

     பயன்தராததை பதடி என்றார். சீவகசிந்தாமணி நூல் உயிரின் ஈடேற்றத்திற்குப் பயன் தராது என்பதால் அது பதடி ஆயிற்று. அகு இர்ளை நீக்குதற்குப் பயன் தருவது பெரியபுராணம் என்பதை....
"இங்குஇதன் நாமம் கூறின்
     இவ்வுல கத்து முன்னாள்
தங்குஇருள் இரண்டில் மாக்கள்
     சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்
     புறஇருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்கும்
     திருத்தொண்டர் புராணம் என்பாம்.

என்னும் பெரியபுராணப் பாடலால் அறியலாம்.

இதன் பொழிப்புரை ---

     இவ்விடத்து இவ்வரிய பனுவலின் பெயரைக் கூறுமிடத்து, இவ்வுலகில் தோற்றமில் காலந்தொட்டு இருந்துவரும் புறவிருள் அகவிருள்களில், புற இருளைப் போக்குகின்ற கதிரவனைப் போல, மாக்களின் உயிரிடத்துப் பொருந்தி நிற்கும் அக இருளாகிய ஆணவத்தைப் போக்குகின்ற திருத்தொண்டர் புராணம் என்று சொல்வாம்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடியருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

மன்அவையில் சொன்ன வசையால் சிசுபாலன்
சின்னம் உற்றான் அன்றோ? சிவசிவா! - என்னில்
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்.

     மன் அவை --- அரச அவை. வசை --- பழிமொழி. சிசுபாலன் --- கண்ணனால் கொல்லப்பட்ட ஓர் அரசன்.

     சிசுபாலன் மகாபாரத இதிகாசத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். கிருஷ்ணனின் அத்தை மகன். சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையும் உடையவனாய் இருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்ன என்று வியக்கும்போது, "யார் இவனைத் தொடுகையில் இவனது கைகள் இரண்டும், மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்" என்று வானொலி கூறிற்று. அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டதும் மறைந்தன, அதனால் இவனைக் கொல்பவன் கண்ணனேஎன்றறிந்த சிசுபாலனின் தாய், யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாதுஎன்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கண்ணன் இவன் எனக்கு நூறு பிழை செய்யும் அளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன்.

     பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் எதிரி என்பதை இளமையிலேயே அறிந்து பகைமையைப் பாராட்டி, எப்பொழும் கண்ணனை நிந்திப்பதே தொழிலாக இருந்தான். இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்து வைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து மணஞ்செய்து கொண்டது முதல் இவன் கண்ணனிடத்து மிக்க பகைமை வைரங்கொண்டனன்.

     பின்பு இந்திரப்பிரஸ்தத்தில் நாரதர் சொன்னாற் போல ராஜசூய யாகம் இனிதே நடந்தது. வந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆரம்பித்தது. யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது. பீஷ்மர் மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து கண்ணனுக்கு முதல் மரியாதை என்று தீர்மானிக்க. அதன்படி சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.

     இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தர்மரின் மனதைப் புண்படுத்தினான். ஆடு மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் இடையன் என்றும் கண்ணனை ஏசினான். கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான். சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலில் இருந்து அறுத்தெறிந்தது.

     சிசுபாலன் பயனில்லாத கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியதால், பலருடைய மனம் புண்பட்டது. இதனால் அவன் பதடி போல் பயனற்று ஒழிந்தான்.

     அடுத்து, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக வரும் ஒரு பாடல்...

"நட்புஅடி யார்க்கு அருள் புல்லைப் பிரான் திருநாமம் மனத்து
உள்பயன் ஈதுஎன்று உரையாத மாந்தர், ஐயோ! கடல்சூழ்
மட்கட் பயனில் சொல் பாராட்டு வானை மகன் எனல்மக்
கட்பதடி எனல் என்று ஓத வள்ளுவர் காட்டியதே". 
     தன்பால் அன்பு கொண்ட அடியார்களுக்கு அருள் புரிகின்ற, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள திருமாலின் திருநாமத்தை மனத்தில் இருத்தி, இதுவே நற்கதியை அருள்வது என்று கொண்டு, அதனைச் செபிப்பதே பயன் தருவதாகும்; அல்லாதது யாவும் பயனற்ற சொற்களே என்று உணராத மனிதர்களை, கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் என்று சொல்லாமல், அவர்களை பயனற்ற பதர்கள் என்றே சொல்லவேண்டும் என்று திருவள்ளுவ நாயானர் காட்டினார்.
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.     --- நறுந்தொகை.

இதன் பதவுரை ---

     கல்லா ஒருவன் --- கல்வி கல்லாத ஒருவன், குல நலம் --- தனது குலத்தின் மேன்மையை, பேசுதல் --- சொல்லுதல், நெல்லினுள் பிறந்த --- நெற்பயிரில் உண்டாகிய, பதர் ஆகும் --- பதடியாகும்.

     கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர் போலப் பயனற்றதாகும்.

அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், ம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.       ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் --- அருளை மனத்திடத்து நிறைத்து வையாதவனும்; பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் --- செல்வத்தைத் தானும் நுகராது, பிறர்க்குங் கொடாமல் பூமியில் மறைத்து வைக்கின்றவனும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும் --- தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும் சொற்களை சொல்லவல்லவனும்;

         இ மூவர் பிறந்தும் பிறந்து இலதார் --- ஆகிய இம் மூவரும் மக்கட் பிறப்பிற் பிறந்திருந்தும் பிறவாதவராவர்.

         அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது.

     நெல்லோடு பிறந்தும் பயன் படாத பதரைப் போன்று, மக்களுள் ஒருவராகப் பிறந்து இருந்தும் பயனற்றவர்கள் இன்னின்னார் எனப்பட்டது.

விழுத்திணைத் தோன்றா தவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், - என்றும்
இறந்துரை காமுறு வானும், ம் மூவர்
பிறந்தும் பிறவா தவர்.               ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     விழுத் திணை தோன்றாதவனும் --- அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய சிறந்த குலத்தில் பிறவாதவனும்; எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும் --- இலக்கண நூலை, எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத பேதையும்; என்றும் இறந்து உரை காமுறுவானும் --- எப்பொழுதும் முறைதப்பி, சொற்களைப் பேச விரும்புகின்றவனும்;

         இ மூவர் பிறந்தும் பிறவாதவர் --- ஆகிய இம் மூவரும் மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறப்பின் பயனை அடையாமையால் பிறவாதவர் ஆவார்.

         நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது.

துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்;
என்னை! என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா!
                  ---  இராமாயணம், பள்ளிபடை படலம்.

இதன் பதவுரை ---

     துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் --- நெருங்கிய வளப்பமான அடிமரத்தை உடைய தென்னையின்; பன்னு வான் குலை --- பலராலும் பாராட்டப் பெறுகின்ற இறந்த குலையில்; பதடி ஆயினேன் --- உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று காத்த என் அன்னையார் --- என்னைச் சுமந்து பெற்றுவளர்த்த என் தாயார்;  எனக்கு அழகு செய்தவா --- எனக்கு நன்மை செய்தவாறு; என்னையே --- என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?’

     தாழை என்பதற்குத் தென்னை என்பது நேர்பொருள் பதடி என்பது மக்களுக்குப் பயன்படும்பொருள் அற்ற நெல், தேங்காய் முதலியவற்றைக் குறிக்கும் உள்ளீடு இல்லாத தேங்காயை ஊமைக்காய் என்பர்.             

'இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், ''கோடியால் விலைக்கு'' எனும் பதடியின், விட்டான் 
கருப்புக் கார் மழை வண்ண!- அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம்.
                  --- இராமாயணம், இராவணன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     கருப்பு --- கடும் பஞ்ச காலத்தில் (பெய்தற்கு முற்பட்ட); கார் மழை வண்ண --- கரிய முகில் நிற முடையாய்!; இருப்புக் கம்மியற்கு --- இரும்பினால் பணிசெய்கின்ற கொல்லனுக்கு; இழை நுழை --- நூலிழை நுழைகின்ற; ஊசி ஒன்று இயற்றி ---
ஓர் ஊசி செய்து; விருப்பின் --- ஆசையோடு; விலைக்குக் கோடியால் --- விலைக்குப் பெற்றுக்கொள்;  எனும் --- என்று உரைக்கும்; பதடியின் --- அறிவிலான் போன்று; அக்கடுந் திசைக் களிற்றின் --- அந்தக் கடுமை வாய்ந்த திசையானையின்; மருப்பு --- கொம்பினால்;  கல்லிய --- துளைக்கப்பட்ட;  தோளவன் --- தோள்களையுடைய இராவணன்; மீள அரும் மாயம் --- தப்புதற்கு அரிதான மாயாஸ்திரத்தை; விட்டான் --- எய்தான்?

     மாயனாகிய உன் மீது மாயாஸ்திரத்தை விடுவது, கொல்லனிடமே ஊசி விற்பது போன்றது என்றான். பதடி - உள்ளீடில்லாத பதர் போன்றவன்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...