திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்
அதிகாரம் 17 -
அழுக்காறாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், " பொறாமை என்பது, பகைவர் இல்லாமலே
தீமையைத் தருவது. எனவே, பொறாமைக் குணம் உடையார்க்கு, கேட்டினைத்
தருதற்குப் பகைவர் வேண்டாம், அவர் கொள்ளும் பொறாமையே போதும்" என்கின்றது.
திருக்குறளைக்
காண்போம்....
அழுக்காறு
உடையார்க்கு அது சாலும்,
ஒன்னார்
வழுக்கியும்
கேடு ஈன்பது.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது --- அழுக்காறு
பகைவரை ஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்;
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ---
அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தர் ஆகிய மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்...
அன்பரைக் கண்டு, அழுக்காறு ஆம்சமணர்
தம்வாயால்
துன்பம்உற்றார்
வெங்கழுவில், சோமேசா! ---
வன்புஆம்
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.
அழுக்காறு என்பது
ஒருசொல். அந்தச்சொல் அழுக்காற்றைச் செய்யாமை என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும், மகார ஐகார விகுதியும் பெற்று
அழுக்காறாமை என நின்றது. இப் பொறாமையும் பொறைக்கு மறுதலையாம்.
இதன் பதவுரை ---
சோமேசா! வன்பு ஆம் ---
கடுமை ஆகிய, அழுக்காறு --- பொறாமையானது, ஒன்னார் வழுக்கியும் --- பகைவரை
ஒழிந்தும், கேடு ஈன்பது --- கேடு
பயப்பதொன்று ஆகலின், உடையார்க்கு அது
சாலும் --- அப் பொறாமையுடையார்க்குப் பகைவர் வேண்டா, கேடு பயப்பதற்கு அதுதானே அமையும்,
அன்பரை ---
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை,
கண்டு
--- பார்த்து, அழுக்காறு ஆம் சமணர்
--- பொறாமை கொண்ட சமணர்கள், தம் வாயால் --- தமது
வார்த்தையால், வெம் கழுவில் துன்பம்
உற்றார் --- கொடிய கழுவினிடத்தே துன்பம் அடைந்தார்கள் ஆகலான் என்றவாறு.
கேடு பயத்தற்கு
அழுக்காறு தானே அமையும். பகைவர் கெடுக்குதல் தப்பியும்........ வேண்டுதல் இன்றி
வரும் என்பது எஞ்சி நின்றது என்பர் தெய்வச்சிலையார் (தொல். சொல் - 424 உரை).
இதனால் உயிர்க்குக்
கேடு வரும் என்பது சித்தித்தமை காண்க.
பாண்டி நாட்டை சமணக் காடு
மூடவே, கூன் பாண்டியனும் அவ்
வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக
வருந்தி, என்று பாண்டியன்
நல்வழிப்படுவான் என்று இருக்கும் காலத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையார்
திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து, அவ் இருவரும் விடுத்த
ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமெனக்
குறையிரந்தமையான், பிள்ளையார் அவர்க்கு
விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச்
செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிட, பிள்ளையார் அத் தீ, "பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப்
பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள்
எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை
வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை
வாதுக்கு அழைத்து அனல்வாதம், புனல்வாதங்களில்
தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்...
வெள்ளி
கொடுத்தல் விலக்கி,விழி தோற்று உலகில்
எள்ளல்
உற்றான் அன்றோ? இரங்கேசா! -
உள்ளத்து
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங்
கேடீன் பது.
இதன்
பதவுரை
---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வெள்ளி ---
சுக்கிரன், கொடுத்தல் விலக்கி ---
மாபலிச் சக்கரவர்த்தி திருமாலுக்குக் கொடுப்பதைத் தடுத்து, விழி தோற்று --- கண் இழந்து, எள்ளல் உற்றான் அன்றோ --- இகழ்ச்சி
அடைந்தான் அல்லவா, (ஆகையால், இது) உள்ளத்து --- மனத்தில், அழுக்காறு உடையார்க்கு --- பொறாமை
உடையவர்களுக்கு, ஒன்னார் ---
பகைவர்கள், வழுக்கியும் --- கேடு
செய்யத் தவறினாலும், கேடு ஈன்பது ---
கேட்டைத் தருவதாகிய, அது சாலும் --- அப்
பொறாமையாகிய பகையே போதுமானது (வேறு பகை வேண்டியதில்லை என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- பொறாமை உடையவர்கள் (பகைவர் இன்றியும்) தாமே
கெடுவார்கள்.
விளக்கவுரை --- மாபலிச்
சக்கரவர்த்தி, மேல் நடு கீழ்
என்னும் மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி ஆளுகையில், அருமையான யாகம் முடித்து வேதியர்களுக்கு
அவ் உலகங்களைத் தானம் செய்வானாயினான். அதனால் தங்களுக்கு இருக்க இடம் இல்லாமல்
போகும் என்று உணர்ந்த தேவர்கள்,
அவன்
கொடுமையைப் பொறாமல், அதினின்றும்
விடுவிக்கும்படி திருமாலை வேண்டிக் கொண்டார்கள். பிரகலாதனனுக்குக் கொடுத்திருந்த
வரத்தின்படி திருமால், மாபலியை நேரில் சென்று
கொல்லக் கூடாதாகையால், அவன் செய்யும்
பூதானத்தாலேயே அவனைக் கொல்ல எண்ணி. ஒரு வேதியச் சிறு குறளாய் வடிவெடுத்துப்
பூதானம் வாங்க அவனிடத்தில் போய்த் தமது சிற்றடியால் மூவடி மண் தானம் கேட்டார்.
மாயவன் மாயம் உணராத மாபலி, அதற்கு உடன்பட்டுக்
கரக நீரைத் தாரை வார்க்கப் போனான். அது தெரிந்த சுக்கிரன் (மாபலியின் குலகுரு)
கரகநீர் ஒழுக்கத்தைத் தடுக்க எண்ணி,
வண்டாய்
வடிவெடுத்து, நீர்த் துவாரத்தை
அடைத்தான். அது கண்ட மாயவன் ஒரு சிறு துரும்பு எடுத்துக் குத்தினான். அதனால்
சுக்கிரனுக்குக் கண் குருடாயிற்று. அது கண்ட தேவர்கள் சுக்கிரனை நோக்கி, "ஏ சுக்கிராசாரி, பொட்டைக் கண்ணா, கொடுத்ததைத் தடுத்த குருடா" என்று
இகழ ஆரம்பித்தார்கள். அதுவே இங்குக் குறிக்கப்பட்டது.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....
அழுக்கு
அகலா அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும்
கேடு ஈன்பது எனலால் என் மனத்து அழுக்காற்று
இழுக்கு
அறுதற்கு உன் இணையடி ஏத்தி இறைஞ்சுதற்கு
முழுக்கதி
எய்துதற்கு என்றோ தினம்,
புல்லை
முன்னவனே.
இதன்
பொருள் ---
திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி இருக்கும் முதற்பொருளே! குற்றம் நீங்காத பொறாமைக் குணம் உடையவருக்கு, கேடு விளைவித்தற்கு அதுவே போதும், பகைவர் வேண்டாம்
என்று அறிவுறுத்தப்பட்டு இருத்தலால், எனது மனத்திலே பொறாமை என்னும் குற்றம்
நீங்கவேண்டி,
உனது
திருவடியை வழிபடுவதற்கும், பரிபூரண கதியாகிய வீடு பேற்றை அடைவதற்கும் ஏற்ற
நாள் என்று வருமோ?
அழுக்கு அகலா --- குற்றம் நீங்காத. அழுக்காறு
--- பொறைமையின். இழுக்கு அறுதற்கு ---
குற்றம் நீங்குதற்கு. முழுக்கதி ---
வீடுபேறு.
மாங்கனி
வாயில் கவ்வி
மரத்திடை இருக்கும் மந்தி,
பாங்கர்
நீர் நிழலை வேறு ஓர்
பழம் உணும் குரங்கு என்று எண்ணித்
தாங்க
அரும் அவாவில் தாவிச்
சலத்திடை இறந்தது ஒப்ப,
நீங்க
அரும் பொறாமை உள்ளோர்
நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே. --- நீதிநூல்.
இதன் பொழிப்புரை ---
குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு
மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு
பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து
இறந்தது. இதைப் போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.
‘அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும்
அல்லர்
கொடுப்பவர்
முன்பு ‘கொடேல் ‘என நின்று
தடுப்பவரே
பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை ‘என்றான்.
--- கம்பராமாயணம், வேள்விப் படலம்.
இதன்
பதவுரை ---
அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர் --- பிறர்
அழியும்படி பழிச்செயல்
செய்யும் தீத்தொழில் உடையோர் பகைவரல்லர்; கொடுப்பவர்
முன்பு --- கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு; கொடேல்
என நின்று தடுப்பவரே பகை --- கொடுக்காதே என்று
கூறித்
தடுப்பவரே பகைவர் ஆவார்; அன்னார் தம்மையும் கெடுப்பவர் --- அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையும்
அல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர்; அன்னது ஓர் கேடு இலை என்றான் ---
(ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.
No comments:
Post a Comment