021. தீவினை அச்சம் - 06. தீப்பால தான்பிறர்




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 21 - தீவினை அச்சம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "துன்பம் தன்னை வந்து சேராமல் இருக்கவேண்டும் என்று எண்ணுபவன், துன்பம் தரும் செயல்களைப் பிறன் ஒருவனுக்குச் செய்யாது இருக்கவேண்டும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

தீப்பால தான் பிறர்கண் செய்யற்க, நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் --- துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்,

     தீப்பால தான் பிறர்கண் செய்யற்க --- தீமைக் கூற்ற ஆகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.

      (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)

     இதற்கு ஒப்பாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளதைக் காணலாம்...

தாம்தாம் முன் செய்தவினை தாமே அநுபவிப்பார்,
பூந்தா மரையோன் பொறிவழியே, --- வேந்தே!
ஒறுத்தாரை என்செயலாம்? ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.  ---   நல்வழி.

இதன் பதவுரை ---

     வேந்தே --- அரசனே, தாம் தாம் முன் செய்த வினை --- தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே --- தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் --- தாமே அனுபவிப்பார்கள்; ஒறுத்தாரை என் செயலாம் --- (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ --- ஊரிலுள்ளார் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

         தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...