022. ஒப்புரவு அறிதல் - 01. கைம்மாறு வேண்டா





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     ஒப்பு + உரவு = உலக நடை. பெரியோரால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஞானம். லௌகிகம் --- உலக நடை; உலக ஒழுக்கம்.

     உலக நடை என்னும் உலக ஒழுக்கமானது, வேத சாத்திரங்களில் சொல்லப்பட்ட ஒழுக்கங்கள் போல் அல்லாமல், தாமே அறிந்து செய்யப்படுவதாகும். வேத நடை என்பது அறநூல்களில் சொல்லப்பட்ட ஒழுக்கம்.

     இந்த அதிகாரத்தில் வரும், முதல் திருக்குறள், "முறை அறிந்து கடமையைச் செய்யும் உதவிகள் கைம்மாறுகள் வேண்டாதன. "நீர் இன்றி அமையாது உலகு" என முன்னர் நாயனார் கூறியிருப்பது பற்றி, உலக உயிர்கள் தமக்கு நீரைத் தந்து உதவுகின்ற மேகத்திற்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? செய்கின்றன இல்லை" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

கைம்மாறு வேண்டா கடப்பாடு, மாரி மாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     மாரிமாட்டு உலகு என் ஆற்றும் --- தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன,

     கடப்பாடு கைம்மாறு வேண்டா --- ஆகலான், அம் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.

       ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், உலக உயிர்களுக்கு, சுந்தரமூர்த்தி சுவாமிகள், தீதிலாத் திருத்தொண்டத் தொகை பாடி, அருள் வாழ்வைத் தந்த செய்த உபகாரத்தினை வைத்துப் பாடப்பட்ட பாடல்...

தூயதிருத் தொண்டத் தொகை தந்து, சுந்தரர்தாம்
மா இருஞாலத்தோரை வாழ்வித்தார், - ஆயது எவன்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.               

         பரிசுத்தமாகிய "திருத்தொண்டத் தொகை" என்னும் தேவாரத் திருப்பதிகத்தினைத் திருவாரூரிலே வன்மீகநாதர் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுக்க, பதினொரு திருப்பாட்டினாலே முற்றுவித்துச் சமயகு ரவர்கள் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் மிகப் பெரிய உலத்திலுள்ள ஆன்மாக்கள் உய்யும்படி செய்தருளினார். அத்தகைய பரமோபகாரியாகிய அந்த ஆசாரியருக்கு நாம் செய்யக்கடவதாகிய பிரதி உபகாரம் யாதுளது? அங்ஙனம் வாழ்வித்ததனால் அவர்க்காகிய பயன்தான் என்னை? என்றபடி. தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன. ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல என்றவாறு.
                                                              
ஆராஆசை ஆனந்தக் கயலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீர்ஆர் வண்ணப் பொன்வண்ணத் திருஅந்தாதி திருப்படிக்கீழ்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவமழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்கையர் கழறிற்றறிவார் தாம்.
                                                                             --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

      நிறைவு பெறாத ஆசை மிகுதியால், ஆனந்தமான கடலுள் முழுகி அதில் விரும்பி இருந்து, இறைவர் திருவருளால் பருவம் தவறாது, வேண்டும் மழையைப் பொழியும் மேகமும் ஒப்பாகாத கைகளையுடைய கழறிற்றறிவார், சிறப்பு நிறைந்த வண்ணத்தையுடைய பொன்வண்ணத்தந்தாதியினைத் திருப்படியின் கீழ், உலகம் அன்புடன் ஏத்தி இன்பம் அடையுமாறு பாடிப் போற்றிப் பரவினார்.

பருவக் கொண்மூப் படி எனப் பாவலர்க்கு
ஒருமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க...   ---  பதினோராம் திருமுறை.


எல்லோர் தமக்கும் இனிது உதவல் அன்றியே
நல்லோர் தமக்கு உதவி நாடாரே ---  வல்லதரு
நாமநிதி மேகம் நயந்து உதவல் அன்றியே
தாம் உதவி நாடுமோ சாற்று.                 ---  நீதிவெண்பா

இதன் பொழிப்புரை ---

     விரும்பியவற்றை விரும்பியபடியே கொடுக்கக் கூடிய கற்பக மரமும், புகழ்மிக்க சங்கம் பதுமம் என்னும் இருநிதிகளும், மேகமும் பிறர்க்குத் தாமே விரும்பி உதவுமே அல்லாமல், பிறரிடம் இருந்து பதில் உதவி ஏதேனும் எதிர்பார்க்குமோ ?  பார்க்கா. அவைபோல், நல்லவர்கள் மற்றைய எல்லாருக்கும் மகிழ்ச்சியோடு உதவுவார்களே அல்லாமல், அவர்களிடம் இருந்து தங்களுக்கு எந்த ஒரு பதில் உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.


பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.  --- புறநானூறு.

இதன் பதவுரை ---
    
    பாரி பாரி என்று --- பாரி பாரி யென்று சொல்லி; பல ஏத்தி --- அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் --- அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவையுடைய அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் --- பாரியாகிய ஒருவனுமே அல்லன்; மாரியும் உண்டு --- பழையைப் பொழியும் மேகமும் உண்டு; ஈண்டு உலகு புரப்பது --- இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு.

         உலககைப் புரத்தற்கு மாரியும் உண்டாயிருக்க, பாரி ஒருவனைப் புகழ்வர் செந்நாப் புலவர் எனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியில்
கேட்பின் அல்லது காண்பறி யலையே;
காண்டல் வேண்டினை ஆயின், மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையில் காண்வர இயலி
மாரி அன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே. ---  புறநானூறு.

இதன் பதவுரை ---

    மெல்லியல் விறலி --- மெல்லிய இயல்பினையுடைய பாணர் குலப் பெண்ணே!  நீ நல்லிசை செவியில் கேட்பி னல்லது --- நீ ஆயெ வேளின் நல்ல குணநலன்களைக் காதால் கேட்டு இருப்பாயே, தவிர, காண்பறியலை --- அவன் வடிவைக் கண்டு இருக்க மாட்டாய்; காண்டல் வேண்டினை யாயின் --- அவனை நீ நேரில் காண விரும்பினால்; மாண்ட நின் விரைவளர் கூந்தல் வரைவளி உளர --- சிறந்த உனது மணம் வளரும் கூந்தல் மலைக் காற்றிலே அசைய, கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி --- தோகையினை உடைய மயில் போல நடந்து சென்றாயானால்; மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயை --- மழைமேகம் போல வரையாது வாரி வழங்கும் கொடைத் தனம்மையை உடை, தேரினையுடைய வேள் ஆயை; காணிய சென்மே --- காணச் செல்வாயாக.

ஆரியன் அவனை நோக்கி,
     ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
     கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை
     ஊதியம் பிடித்தும் என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு
     இயற்றுமோ, வையம்? என்றான்.  --- கம்பராமாயணம், நாகபாசப் படலம்.

இதன் பதவுரை ---

    ஆரியன் --- இராமபிரான்;  அவனை நோக்கி --- அந்தக்  கருடனைப் பார்த்து;  ஆர் உயிர் உதவி --- (நாகக் கணையால் விழுந்து இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்து உதவி;  யாதும் காரியம் இல்லாமல் போனான் --- (நம்மிடத்தில்) எந்தக்  காரியத்தையும் (கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் --- அருளுடையவர்களுடைய    செய்கை இதுதான் (போலும்);  பேர்  இயலாளர் --- பெருந்தன்மை உடைவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் --- செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று  எண்ண மாட்டார்கள்;   (இது எவ்வாறு எனின்) வையம் --- இவ்வுலகில் வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ --- மழை (தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக்  கைம்மாறு செய்ய வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ?  என்றான் --- என்று கூறினான்.
 
    கைம்மாறு கருதாது நாகக் கணையால் விழுந்து கிடந்தவர்களை உயிர்ப்பித்துக் காரியம் இல்லான் போன கருடனது செயல், உலகத்தவர் எவ்வித் கைம்மாறு செய்யாத இடத்தும் அவர்களுக்குப்  பெய்து உதவும் மழையின் செயல் போன்றது என்றார்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு.
                               
என்ற திருக்குறளின் கருத்து முழுவதும் இப்பாடலில் அமைந்து உள்ளமை நோக்குக.


தேன்செய்த கொன்றைநெடுஞ் சடையார்முன்
     தாழ்ந்து எழுந்து செங்கை கூப்பி
யான்செய்யும் கைம்மாறாய் எம்பிராற்கு
     ஒன்று உண்டோ? யானும் என்னது
ஊன்செய் உடலும் பொருளும் உயிரும் எனின்,
     அவையாவும் உனவே ஐயா!
வான்செய்யும் நன்றிக்கு வையகத்தோர்
     செய்யும் கைம்மாறு உண்டேயோ. --- தி.வி.புராணம். மாணிக்கம் விற்ற படலம்.

இதன் பதவுரை ---

     தேன் செய்த கொன்றை நெடுஞ் சடையார் முன் --- தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை அணிந்த நீண்ட சடையையுடைய சொக்கலிங்கக் கடவுளின் திருமுன், தாழ்ந்து எழுந்து செங்கை கூப்பி --- வீழ்ந்து வணங்கி எழுந்து சிவந்த கைகளைத் தலைமேற் குவித்து, எம்பிராற்கு --- எம் பெருமானாகிய நினக்கு, யான் செய்யும் கைம்மாறாய் ஒன்று உண்டோ  --- அடியேனாற் செய்யப்படும் எதிருதவியாக ஒன்றுண்டோ, யானும் என்னது ஊன் செய் உடலும் பொருளும் உயிரும் எனின் --- யானும் என்னுடைய தசையமைந்த உடலும் பொருளும் ஆவியும் என்றால், ஐயா அவையாவும் உனவே --- ஐயனே அவை முற்றும் உன்னுடையனவே, வான் செய்யும் நன்றிக்கு --- முகில் செய்த உதவிக்கு, வையகத்தோர் செய்யும் கைம்மாறு உண்டோ --- நிலவுலகத்தார் செய்கின்ற கைம்மாறு உண்டோ (இல்லை என்றபடி).

     யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையானாகிய சிவபெருமான், யாவர்க்கும் கீழாகிய என்னை ஆட்கொண்ட பெருங்கருணைக்குக்  கைம்மாறாவது யாதொன்றும் இல்லை என்பான், 'யான் செய்யுங் கைம்மாறாய் எம்பிராற்கு ஒன்று உண்டோ' என்றும், யானும் என் உடல் முதலியவும் நின் உதவிக்கு ஈடாகாவேனும் அவற்றை அளித்து ஒருவாறாக என் கட்டுப்பாட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்னின் அவை எல்லாம் நின்னுடையவே ஆகலின் யான் என்றும் என்னுடையது என்றும் கூறுதற்கு ஒன்றுமில்லை என்பான், 'அவை யாவும் உனவே' என்றும் கூறினானென்க;

"பண்டாய நான்மறையும் பால்அணுகா, மால் அயனும்
கண்டாரும் இல்லை; கடையேனைத்-தொண்டாகக்
கொண்டு அருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு உரை"

"அன்றே என்றன் ஆவியும்
    உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய்! என்னைஆட்
    கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ?
    எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய், பிழைசெய்வாய்,
    நானோ இதற்கு நாயகமே "

என்னும் திருவாசகத் திருப்பாட்டுகள் இங்குச் சிந்திக்கற்பாலன. யானும் உயிரும் என வேறு கூறியது முதலும் சினையுமாகக் கொண்டென்க; "ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு, ன் எள்ளமும் போய், நான் கெட்ட வா பாடி" என்பதும்
நோக்குக. "வான் செய்யு நன்றிக்கு வையகத்தோர் செய்யுங் கைம்மாறுண்டேயோ" என்றது இறைவன் பிறர்பால் உதவிபெறுதற்கோர் குறைபாடு உடையனல்லன் என்பதும், அவன் உயிர்களுக்குச் செய்யும் உதவியெல்லாம் கைம்மாறு கருதியன அல்லவென்பதும் தோன்ற நின்றமையால் பிறிது மொழிதல் என்னும் அணி.

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

என்னும் திருக்குறள் நோக்குக.

புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி, வான்,
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின-மேகமே.   ---  கம்பராமாயணம், ஆற்றுப்படலம்.

இதன் பதவுரை ---

    புள்ளி  மால்வரை --- பெருமை மிகுந்ததும் பெரியதுமான இமயமலை; பொன் எனல் நோக்கி --- பொன்மயமாய்  இருப்பதைக் கருதி; வான் --- விஷ்ணு உலகத்தவர்கள்;  வெள்ளி  வீழ் இடை வீழ்த்தென --- வானத்துக்கும் மலைக்கும் இடையே  வெள்ளி விழுதுகளை வீழ்த்தியது போல;  உள்ளி ---எண்ணிப் பார்த்து; உள்ள எல்லாம் --- தம்மிடத்துள்ள எல்லாவற்றையும்: உவந்து ஈயும் --- மனம் மகிழ்ந்து பிறர்க்கு வழங்கும்; அவ்வள்ளியோரின் --- வள்ளல்களைப்  போல;  மேகம் வழங்கின --- மேகங்கள் மழைத் தாரைகளைப் பொழிந்தன.

கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்
     கருணை செய்து, கோடி கோடி
யான்செய்த வினை அகற்றி நன்மைசெய்தால்
     உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர்வளர, தவம்தானம்
     நடந்து ஏற, உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம் என்
     செய்யும்? அதை மறந்திடாதே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

     ஊன் செய்த உயிர் வளர --- இவ்வுடம்பிலை குடிகொண்டு இருக்கும் உயிர் வளரவும்;  தவம்  தானம்  நடந்து ஏற --- துறந்தோரின் தவமும் இல்லறத்தாரின் கொடையும் வளர்ந்து ஓங்கவும், உதவி ஆக வான் செய்த நன்றிக்கு --- இரண்டிற்கும் உதவியாக வானமானது பெய்து செய்த நன்மைக்கு, வையகம் என செய்யும் --- இந்த உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? என்றால், அதை  மறந்திடாது --- அந்த நன்றியை மறவாமல்  இருக்கும். அதுபோலவே, கூன்  செய்த பிறை அணியும் தண்டலையார் கருணை செய்து --- வளைந்த்துள்ள பிறைச் சந்திரனை முடியிலே சூடியுள்ள தண்டலை நீள்நெறி இறைவர் இன்னருள் புரிந்து, கோடி கோடி யான் செய்த வினை அகற்றி --- கோடி கோடியாக, அளவில்லாமல் நான் செய்து சேர்த்த வினைகளை அகற்றி, நன்மை செய்தால் என்னால் உபகாரம் உண்டோ --- எனக்கு நலம் புரிவாரானால், அதற்கு மாறாக என்னால் என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை. அவன் திருவடியை மறவாமல். இருப்பதே சிறந்த கைம்மாறு ஆகும்)



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...