திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற
இயல்
அதிகாரம்
22 - ஒப்புரவு அறிதல்
இந்த
அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "உலக
மக்கள் விரும்புகின்ற சான்றோரின் செல்வமானது, ஊரார் உண்ணுகின்ற
நீர்நிலை நிறைந்து இருப்பது போன்றது" என்கின்றது.
ஊரால்
உண்ணப்படுவதால் ஊருணி ஆயிற்று.
உலக நடையை விரும்பிச் செய்யும் பேரறிவாளது
செல்வமானது, ஊருணி நீர் போல்
பாழ்போகாது நெடுங்காலம் நின்று எல்லோருக்கும் அவர் விரும்புவதைத் தப்பாது
வழங்கும்.
திருக்குறளைக்
காண்போம்...
ஊருணி
நீர் நிறைந்து அற்றே, உலகு அவாம்
பேர்
அறிவாளன் திரு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு ---
உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம்,
ஊருணி நீர் நிறைந்தற்று --- ஊரின்
வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும்.
(நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின்
தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும்
வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு"
என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தருவும்
வரிசைபெறும் சங்கரனுக்கு அன்பர்
ஒருவர்
திருஉடையர் ஆகத் --- தெருநடுவே
ஊருணி
நீர் நிறைந்து அற்றே, உலகு அவாம்
பேர்
அறிவாளன் திரு.
தருவும் வரிசை பெறும்
--- மரமும் பல சிறப்புக்களை அடையும். அன்பர் ஒருவர் --- வரகுண பாண்டியன். திருவிடைமருதூரில் உதிர்ந்த வேப்பங்கனிகள்
அவருக்குச் சிவலிங்க வடிவமாகத் தோன்ற, வேப்ப
மரங்கள் வெயிலில் உலராவண்ணம் அவற்றிற்குப் பந்தல்கள் போட்டு மேல் கட்டிகளும் கட்டுவித்தார்.
'காம்பு அவிழ்ந்து
உதிர்ந்த கனிஉருக் கண்டு
வேம்புகட்கு
எல்லாம் விதானம் அமைத்தும்'
எனவரும்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவைப் பாடல் வரிகளைக் காண்க. வரகுண பாண்டியன் வள்ளலாகத்
திகழ்ந்தார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...
மூரி
முழங்குஒலிநீர் ஆனான் கண்டாய்
முழுத்தழல்
போல்மேனி முதல்வன் கண்டாய்
ஏரி
நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கு
இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன்
கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணாமலை
உறைஎம் அண்ணல் கண்டாய்
வாரிமத
களிறே போல்வான் கண்டாய்
மறைக்
காட்டுஉறையும் மணாளன் தானே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும்
முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய
முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை
ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும்
தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப்
பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான் .
கார், அணி கற்பகம், கற்றவர் நல்துணை, பாணர் ஒக்கல்,
சீர்அணி
சிந்தாமணி, அணிதில்லைச் சிவன்
அடிக்கு
தார்
அணி கொன்றையன், தக்கோர்தம் சங்க நிதி, விதி, சேர்
ஊருணி
உற்றவர்க்கு, ஊரன், மற்று யாவர்க்கும்
ஊதியமே. --- திருக்கோவையார்.
இதன்
பொழிப்புரை ---
தலைவன் கைம்மாறு கருதாது கொடுத்தலால் மேகத்தை
ஒத்தவன். விரும்பியதைக் கொடுத்தலால், கற்பக
மரத்தை ஒத்தவன். கற்றவர்க்கு நல்ல துணை ஆனவன். பாணர்களுக்கு சுற்றத்தை ஒத்தவன்.
நினைத்தது எல்லாம் கொடுத்தலால் சிந்தாமணியினை ஒத்தவன். தில்லையில் விளங்கும்
சிவபெருமானது கொன்றைப் பூவின் தன்மையை ஒத்தவன். சான்றோர்களுக்குச் சங்க நிதியினை
ஒத்தவன். தப்பாது பயன் கொடுத்தலால் விதியினை ஒத்தவன். சுற்றதார்க்கு ஊருணியை
ஒத்தவன். இவ்வாறு அனைவருக்கும் பெரும்பயன் ஆனவன்.
ஊருணி
நிறையவும், உதவும் மாடு உயர்
பார்
கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,
கார்
மழை பொழியவும், கழனி பாய் நதி
வார்
புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.? --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
ஊருணி நிறையவும் --- ஊராரால் உண்ணுதற்குரிய நீர்நிலை
நீரால் நிறையவும்; உதவும் மாடு உயர் --- பலர்க்கும் உதவத்தக்க
இடத்தில் வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் --- உலகத்தார் விழையும்
பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் --- பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் --- மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி --- வயல்களில் பாய்கிற ஆறு; வார்புனல் பெருகவும் ---
மிக்க நீர் பெருகவும்; மறுக்கின்றார்கள் யார் --- வேண்டாம் என்று
தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’
இவ்வெடுத்துக்காட்டுகளால் இராமன் பிறர்க்கு நன்மை
செய்யும் ஒப்புரவாளன் என்பது தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் குறளில் (215) வரும் உவமையினை ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்,
நயனுடையான்கண்படின்” (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகை யான்கண் படின்“(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழுபயன்மரம்” என்றும் சுருங்கச்
சொல்லியுள்ள
திறம் எண்ணி மகிழ்தற்குரியது.
மடல்பெரிது
தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய
ரென்றிருக்க வேண்டா --- கடல்பெரிது
மண்
நீரும் ஆகாது, அதன் அருகே சிற்றூறல்
உண்
நீரும் ஆகி விடும். --- மூதுரை.
இதன்
பதவுரை ---
தாழை மடல் பெரிது --- தாழம்பூ இதழ்களினாலே
பெரிதாய் இருக்கின்றது, மகிழ் கந்தம் இனிது ---
மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாய் இருக்கின்றது, கடல் பெரிது --- சமுத்திரம் பெரிதாய் இருக்கிறது, மண் நீரும் ஆகாது --- ஆயினும் அதிலுள்ள
நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீரும் ஆகாது; அதன் அருகு சிற்றூறல் --- அதன் பக்கத்தே
சிறிய மணற்குழியில் சுரக்கும் ஊற்று நீர், உண் நீரும் ஆகும் --- குடிக்கத் தக்க
நீரும் ஆகும்; (ஆதலினால்) உடல்
சிறியர் என்று இருக்க வேண்டா --- (ஒருவரை) உருவத்தினாலே சிறியவர் என்று (மதியாமல்)
இருக்க வேண்டா.
உருவத்தாற் பெரியவர் குணத்தாற்
சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு.
தாழை என்பது தென்னையையும் குறிக்கும். தென்னை
மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும் மணமில்லை.
No comments:
Post a Comment